தமிழ் வழி மருத்துவ மாணவர்கள்... வழிகாட்டுகிறது மருத்துவக்குழு!



இன்றைய சூழ்நிலையில் மருத்துவப் படிப்பு எவ்வளவு சிரமமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். மாணவ - மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவதே அத்தனை கஷ்டம். இதில், தமிழ் வழியில் படித்து உள்நுழையும் மாணவ - மாணவிகளின் நிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. 
இதில், அவர்கள் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் எதிர்கொள்ளும் முதல் பிரச்னை ஆங்கில வழிக் கல்வி.மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அந்த மாணவர்கள் இரண்டாம் ஆண்டிற்குச் செல்லமுடியாது. அடுத்த செட் மாணவர்களுடன் முதலாம் ஆண்டு படித்து தேர்ச்சி பெற்ற பிறகே செல்லமுடியும்.

ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் பிரச்னை தமிழ் வழி மாணவர்களுக்கு ஏற்படவில்லை என்பதுதான் சிறப்பு. இதற்குக் காரணம், ஒரு வழிகாட்டி மருத்துவக் குழு. அதுவும், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மருத்துவர்களால் நடத்தப்படும் குழு. இதன்பெயர், ‘தமிழ் உறவுகள் வழிகாட்டி மருத்துவக் குழு’!  

‘‘எங்க வழிகாட்டிக் குழுவுல இருக்கிற எல்லா மருத்துவர்களும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிச்சவங்க. நாங்க மருத்துவம் படிக்கும்போது படிப்பில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டே தேர்ச்சி பெற்றோம். அதனால, இப்ப தமிழ் வழியில் படிச்சிட்டு வருகிற மாணவர்கள் அந்தச் சிரமங்களைப் படக்கூடாதுனு நினைக்கிறோம். அதற்காகவே இப்படியொரு வழிகாட்டும் குழுவினை உருவாக்கினோம்...’’ இயல்பாய் பேசுகிறார் மருத்துவர் திருவேங்கடம்.

இந்த வழிகாட்டிக் குழுவிற்கான முதல் விதையை விதைத்தவர். இந்தக் குழுவின் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் வேலை இவருடையது. தற்போது தேனி மருத்துவக் கல்லூரியின் சமூகம் சார்ந்த மருத்துவப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 ‘‘முதல் விதையை நான் தூவியிருந்தாலும் இது ஒரு கூட்டு முயற்சிதான். எங்க குழுவுல தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் இருக்காங்க. இவர்களுடன் ஓய்வுபெற்ற துறை சார்ந்த நிபுணர்களும், தற்போதைய மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் இருக்காங்க. அதனாலயே இந்தப் பணி சாத்தியமாகுது.

தனிநபராக நான் எதையும் செய்யல. அவங்க வழிகாட்டுதலிலும், வகுப்பு எடுப்பதிலுமாகவே எங்கள் குழு சிறப்பாக இயங்கிட்டு இருக்கு. இப்ப எங்கள் குழுவின் தலைவராக திருச்சி மருத்துவக் கல்லூரியில் உடலியங்கியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் சரயு மேடமும், பொருளாளராக மருத்துவர் அன்பு செந்திலும் இருந்து வழிநடத்துறாங்க...’’ என்கிறவரிடம் இந்த ஐடியா உருவானது பற்றிக் கேட்டோம்.  

‘‘எனக்கு சொந்த ஊர் திருச்செங்கோடு. நான் பத்தாம் வகுப்பு வரை திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்தான் படிச்சேன். பிறகு, மேல்நிலைக் கல்வியை அதே அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் முடிச்சேன். 

அப்படியிருந்தும் நான் எம்பிபிஎஸ் படிக்கிறப்ப முதலாம் ஆண்டு கஷ்டமாக இருந்துச்சு. இது 1990கள்ல நடந்தது. நான் எம்பிபிஎஸ்ஸை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் படிச்சேன். பிறகு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரசு இடஒதுக்கீட்டில் எம்.டி பண்ணினேன். படிப்பில் தங்கப்பதக்கமும் வாங்கினேன்.

ஆனாலும், நான் எதிர்கொண்ட சிரமங்களை இப்போதைய மாணவர்கள் படக்கூடாதுனு தோணுச்சு. ஏற்கனவே, நான் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறதால தமிழ் வழியில் படித்துவரும் மாணவர்கள் படும் சிரமங்கள் பற்றி நல்லாவே தெரியும். அதனால், என்னால் எந்தளவுக்கு இவர்களுக்கு சேவை செய்ய முடியும்னு யோசிச்சேன். அந்நேரம், என்னை மாதிரி ஒரே சிந்தனையுள்ள நண்பர்களிடம் பேசிட்டு இருக்கும்போது நிதியுதவி பெரிதாக செய்யமுடியாது. ஆனா, அறிவைப் பகிரலாம்னு சொன்னாங்க.

அப்படியாக, தமிழ் வழியில் இருந்து வரும் மாணவர்களுக்கு இந்த அறிவைப் பகிரும் பணியைத் துவக்கினோம். இதற்கு, நான் முன்னாடியே சொன்னமாதிரி மருத்துவர்களும், துறை சார்ந்த நிபுணர்களும் உறுதுணையாக இருந்தாங்க. தவிர, என் மனைவி உமாவும் சப்போர்ட் கொடுத்தாங்க. 

அவங்க தேனி அரசு செவிலியர் கல்லூரியில் பேராசிரியராக இருக்காங்க.
கடந்த 2021ல் இருந்து இந்தப் பணியை முன்னெடுக்கிறோம். அதாவது தமிழ்நாடு அரசு 7.5 சதவீத ஒதுக்கீடு தமிழ் வழி மாணவர்களுக்கு அறிவித்ததிலிருந்து இதைச் செய்றோம்.

இந்த மாணவர்களை ‘தமிழ் உறவுகள் வழிகாட்டி மருத்துவக்குழு’ என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ஒருங்கிணைத்தோம். இப்ப ஒவ்வொரு ஆண்டும் ஐந்நூறு மாணவ - மாணவிகள் பயனடைஞ்சிட்டு வர்றாங்க. இது மூன்றாவது ஆண்டு. வகுப்புகள் போயிட்டு இருக்கு...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.

 ‘‘பொதுவாக, மருத்துவக் கல்லூரி வந்ததும் பாடங்கள் எல்லாம் கண்ணைக் கட்டிவிட்டமாதிரிதான் இருக்கும். இதுல பிரேதத்தை வைத்து மாணவர்களுக்கு பாடம் எடுப்போம். அந்தப் பிரேதத்தைப் பார்த்ததும் சில மாணவர்களுக்கு அயர்ச்சியோ அல்லது ஒவ்வாமையோ கூட ஏற்படும்.

இதற்காக மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர்ந்ததும் மூத்த மருத்துவ பேராசிரியர்களை வச்சு வழிகாட்டுறோம். எங்க வழிகாட்டிக் குழுவுல மருத்துவர் அமலோற்பவநாதன் சார், தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் சார், திருப்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் முருகேசன் சார், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி மேடம், வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாப்பாத்தி மேடம் உள்ளிட்டவர்கள் இருக்காங்க.

இவங்க மாணவ - மாணவிகளிடம் மருத்துவப் படிப்பில் என்னவெல்லாம் இருக்கும், எப்படி படிக்கணும் உள்ளிட்ட விஷயங்களை ஊக்கப்படுத்தும் உரையாடலாக நிகழ்த்துவாங்க.  
அதேபோல இந்தக் குழுவில் தமிழ் வழியில் படித்த மாணவ - மாணவிகள் மட்டுமில்லாமல் மற்ற மாணவர்களும் இஷ்டப்பட்டால் சேர்ந்துக்கலாம். 

யாருக்கும் இதில் தடை கிடையாது. இந்தக் குழுவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்களும் இருக்காங்க...’’ என அவர் நிறுத்த, உமா திருவேங்கடம் தொடர்ந்தார். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், இணைய வழியில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் இணைக்கும் பணி இவருடையது.

‘‘இந்தக் குழுவுல அனாடமி, பிஸியாலஜி, மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட துறை சார்ந்த மருத்துவர்கள் இருக்காங்க. இவங்க ஓய்வுநேரத்தைப் பொருத்து இணைய வழி வகுப்புகளை எடுப்பாங்க. நாங்க வாரத்துல மூணு நாட்கள் ஷெட்யூல் போடுவோம். திங்கள்கிழமை பிஸியாலஜி வகுப்பு இருக்கும். செவ்வாய்க்கிழமை பயோகெமிஸ்ட்ரி வகுப்பும், புதன்கிழமை அனாடமி வகுப்பும் நடக்கும். இந்த மூணு பாடம்தான் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடங்கள்.

இதுல ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு ஆசிரியர்கள் இருப்பாங்க. அவங்க நான்கு பேரும் ஒவ்வொரு வாரம்னு பிரிச்சிருப்பாங்க. எல்லோருமே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னார்வமாக இந்தப் பணியை மேற்கொள்றாங்க. 

ஓய்வுபெற்ற மருத்துவர்களும் தன்னார்வமாக வந்து வகுப்புகள் எடுக்குறாங்க. மாணவர்ளுக்கு தெளிவாகப் புரியும்படி வகுப்புகளை நடத்துவாங்க. பொதுவாக, கல்லூரிகளில் ஆங்கிலத்துலதான் வகுப்புகள் நடக்கும். அதனால, தமிழ் வழி மாணவர்கள் பயத்தில் சந்தேகங்கள் கேட்க மாட்டாங்க. தயக்கப்படுவாங்க. எப்படி படிக்கிறதுனு யோசிப்பாங்க.

ஆனா, இங்க அந்தத் தயக்கம் இருக்காது. தமிழ்ல புரியும்படி சொல்வாங்க. வகுப்பு எடுக்கும் மருத்துவர்களிடம் எங்களுக்குப் புரியல. சொல்லித்தாங்கனு தைரியமாக கேட்பாங்க. இந்த சேப்டர் எடுங்கனு குரூப்ல சொல்வாங்க. பேராசிரியர்களும் சலிப்பு இல்லாமல் பிபிடி எல்லாம் போட்டு சொல்லித் தருவாங்க. அது ஆங்கிலத்துல இருந்தாலும் மாணவர்களுக்குப் புரிகிறமாதிரி தமிழ்ல எளிமையாக விளக்குவாங்க.

தினமும் கூகுள் மீட்லதான் வகுப்புகள் நடக்கும். இதை குறைஞ்சது 200 மாணவர்களாவது அட்டெண்ட் பண்ணுவாங்க. இப்ப முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்கும் பண்றோம். முதலாம் ஆண்டு முடிச்சிட்டாலே எளிதாக பிக்அப் பண்ணிடுவாங்கதான். இருந்தும் நாங்க வகுப்புகள் எடுக்குறோம்.

இப்ப எங்க குரூப்ல இருக்கிற எல்லா மாணவர்களும் முதலாம் ஆண்டு தேர்ச்சி பெற்றிருக்காங்க. சிவரஞ்சனினு ஒரு பொண்ணு மூணு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற்றிருக்காங்க. அந்த பொண்ணை அழைச்சு பாராட்டினோம்.  

எங்க குரூப்ல உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், ‘முன்னாடி இந்த 7.5 ஒதுக்கீட்டுல வந்த மாணவர்கள் எப்படி பிக்அப் பண்ணுவாங்களோனு கவலையா இருக்கும். இப்ப அவங்கதான் நல்லா படிக்கிறாங்க. 

நிறைய ஆர்வம் வந்திருக்கு’னு சொல்றாங்க. இது எங்கள் மருத்துவக் குழுவிற்குக் கிடைச்ச பெருமையாக நினைக்கிறோம். இந்த ஆண்டு சில மாணவர்கள் ஆங்கிலம் ரொம்ப சிரமமாக இருக்குனு சொன்னாங்க. அதனால, ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கும் ஏற்பாடு செய்திருக்கோம்...’’ என்கிற உமாவைத் தொடர்ந்தார் மருத்துவர் திருவேங்கடம்.

‘‘எங்க வழிகாட்டி மருத்துவக் குழுவின் நோக்கம், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சரியாக வழிநடத்தி அவங்களுக்கு பிடிச்ச மேற்படிப்பை எடுக்க வச்சு தலைசிறந்த மருத்துவர்களாக மாற்றணும்னு நினைக்கிறோம். ஏன்னா, எங்க காலத்துல அந்தத்துறையை எடுத்தால் சம்பாதிக்கலாம்னு இருந்தது. அதனால, அதை நோக்கியே போனாங்க.

ஆனா, ஒவ்வொரு மாணவர் உள்ளேயும் ஓர் ஆசை இருக்கும். அது பெற்றோருக்கு தவறாகப் படலாம். ஆனா, பிடிச்ச துறையை எடுத்தால்தான் நிறைய சாதனைகளைச் செய்வாங்க. சமூகத்திலும் சிறந்த மாற்றத்தை உருவாக்குவாங்க. அதனால, மாணவர்கள் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு அதை நேர்வழியில் அடைய வழிகாட்டுவதே எங்கள் நோக்கம்...’’ என்கிறார் மருத்துவர் திருவேங்கடம்.

மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்..?

‘‘இப்பதான் முதலாம் ஆண்டு தேர்வு எழுதப் போறேன். நான் சேலத்துல அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிச்சேன். ஆரம்பத்துல தெரியாம எம்பிபிஎஸ் சேர்ந்துட்டோமோனு கூட தோணுச்சு. அந்தளவுக்குப் படிக்க சிரமமாக இருந்தது. இந்த குரூப்ல சேர்ந்தேன். இப்ப எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு. 

கல்லூரியில் எல்லோருக்கும் பொதுவாக நடத்துவாங்க. அங்க சந்தேகம் கேட்க சிரமமாக இருக்கும். தவிர, வகுப்புகள் ஆங்கிலமாக இருக்கும். இங்க அதை தமிழ்ல சொல்லி புரிய வைக்கிறாங்க. பிறகு, ஆங்கிலத்துலயும் சொல்வாங்க. இதனால, அதை எளிதாக புரிய முடியுது...’’ என்கிறார் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மாணவர் தினேஷ்.

மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்..?

‘‘நான் சென்னை செங்குன்றம். இப்ப கே.கே.நகர்ல உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். செங்குன்றத்துல கே.பி.சி அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிச்சேன். பிளஸ் டூ முடிச்சதும் நீட் தேர்வுக்குத் தயாரானேன். அப்பவும் இதேபோல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து கோச்சிங் தந்தாங்க. அதன்மூலம் நீட்ல பாஸாகி இந்தக் கல்லூரியில் சேர்ந்தேன்.  

என் பள்ளியில் படிச்ச ஃப்ரண்ட், ‘யார் யாரெல்லாம் 7.5 ஒதுக்கீட்டுல வந்திருக்காங்களோ அவங்க இந்தக் குழுவுல சேர்ந்து படிக்கலாம்’னு சொன்னாங்க. அப்படியாக இந்தக் குழுவுக்குள்ள வந்தேன். அறிமுக வகுப்புல தமிழ் ப்ளஸ் ஆங்கிலம் ரெண்டிலும் சொல்லித் தந்து என்னை நல்லா பிக்அப் பண்ண வச்சுட்டாங்க. கல்லூரியில் இப்ப என்னால் நல்லா கவனிக்க முடியுது. முதலாம் ஆண்டுல எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் வாங்கினேன். இப்ப இரண்டாம் ஆண்டு தேர்வுக்காகப் படிக்கிறேன்.

இப்ப போர்ஷன்ஸ் முடிச்சு, ரிவிஷன் வகுப்புகளும் தொடங்கிட்டாங்க. சந்தேகங்கள் இருந்து கேட்டாலும் தெளிவுபடுத்துறாங்க. குரூப்ல கேட்க தயக்கம் இருந்தால் தனியாக என் நம்பருக்கு போன் பண்ணிக்கேட்கலாம்னு வகுப்புகள் நடக்கும்போதே குழுவுல உள்ள ஆசிரியர்கள் சொல்லிடுவாங்க...’’ என்கிறார் வரலட்சுமி.   

பேராச்சி கண்ணன்