நீல நிலவே! நிலவின் அழகே!!



இன்ஸ்டாகிராம் துவங்கி யூடியூப் வரை எங்கு இணையத்தைத் திறந்தாலும் ‘நீல நிலவே... நிலவின் அழகே...’ பாடல்தான் டிரெண்டிங். ‘சாட்டை’ படத்தில் அப்பாவி மாணவியாக என்ட்ரி கொடுத்தவர் மஹிமா நம்பியார். இதோ தமிழ், மலையாளம் என எங்கு பார்த்தாலும் புரமோஷன்கள், வாரா வாரம் பட வெளியீடுகள்... என மஹிமாதான் வைரல்.

அதிலும் ‘ஆர்டிஎக்ஸ்’ மலையாளப் படத்தின் இந்த ‘நீல நிலவே...’ பாடலுக்காக இளைஞர்கள் அத்தனை பேரும் ரீல்ஸிலேயே வாழ்கிறார்கள்.

டிரெண்டிங் ஸ்டார்... எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன். ஆக்சுவலி இப்ப வெளியாகும் நான் நடிச்ச சில படங்கள் எல்லாமே லாக்டவுனுக்கு முன்பு அல்லது லாக்டவுன் நாட்களில் எடுத்த  படங்கள்தான். இப்ப ரிலீஸ் ஆகும்போது எல்லாமே ஒரே நேரத்தில் வரிசையாக ரிலீஸ் ஆகறதுனால நிறைய படங்கள் ஒரே சமயத்தில் எடுத்த மாதிரி பிம்பம் உண்டாகிடுச்சு.
நானும் ‘சாட்டை’ வந்த வேளை கொஞ்சம் அசால்ட்டா நடிப்புன்னா கொடுத்த கேரக்டரில் நடிச்சிட்டு அடுத்தடுத்த வேலையைப் பார்க்கறதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். நடிக்கற ஆர்வம், கூடவே அப்போது நான் +2தான் படிச்சிட்டு இருந்தேன். அதனால் படிப்புக்கு இடையிலே நடிப்பு ஒரு பார்ட்தான்னு நிறைய பிரேக் எடுத்து எடுத்து நடிச்சதால நிறைய படங்களில் நடிக்க முடியலை.

படிப்பெல்லாம் முடிஞ்சபிறகுதான் எனக்கு ஒரு நடிகையாக என்னை நானே எப்படி தயார் செய்துக்கணும், என் லுக் உட்பட எப்படி பொது இடத்தில் தோற்றம் கொடுக்கணும்னு எல்லாத்தையும் ஃபாலோ செய்யத் துவங்கினேன். ஹேர்ஸ்டைல் கூட எவ்வளவு முக்கியம்னு புரிய ஆரம்பிச்சது. அதெல்லாம் சேர்ந்துதான் சில உயரங்களுக்குக் கூட்டிட்டுப் போனது.

‘ஆர்.டி.எக்ஸ்’ மலையாள ரிலீசுக்கு முன், ரிலீசுக்குப் பின்... என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கு?

முதலில் நான் ஒரு மலையாளி என்கிறதே மலையாள சினிமா மக்களுக்கு இப்பதான் தெரிய வந்திருக்கு. காரணம், நான் தொடர்ச்சியா நிறைய தமிழ்ப் படங்களில் நடிச்சதும், சரளமா தமிழ் பேசுவதும்தான். இதனாலயே என்னை தமிழ்ப் பெண் என நினைச்சிருக்காங்க. ஏன்... ‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் இன்னொரு நாயகனான ஆண்டனி வர்கீஸே ‘நீங்க மலையாளியா’னு ஆச்சர்யப்பட்டார்னா பார்த்துக்குங்க. மலையாளப் படங்களில் வாய்ப்பு முன்பைக் காட்டிலும் இப்ப அதிகமா வரத் துவங்கியிருக்கு.

எதன் அடிப்படையில் இப்போதெல்லாம் கதைத் தேர்வு செய்கிறீர்கள்?

நடித்தால் நாயகி என்கிறதெல்லாம் கிடையாது, ‘ரத்தம்’ படத்தின் வில்லி கேரக்டர் போல ஒரு ரோல் என்றாலும் நடிக்கத் தயார். ஒரு குழந்தைக்குத் தாய் என்றாலும் ஓகே. எனக்கான கேரக்டர் வலிமையா இருக்கணும். அதுதான் என்னுடைய டார்கெட். அதேபோல வருஷத்துக்கு பத்து படங்கள் என்கிற மனநிலையும் இல்லை. நல்ல கதை, நல்ல
கேரக்டர்ன்னா நடிக்க ரெடி.

‘ஆர்.டி.எக்ஸ்’ ஃபீவர் குறைவதற்குள் ‘சந்திரமுகி 2’, ‘800’, ‘ரத்தம்’ என தமிழில் அடுத்தடுத்து டிரெண்டிங்கில் இருக்கீங்களே?

அதேதான்! முன்பு சொன்னபடி இந்த மூணு படங்களுமே வெவ்வேறு காலகட்டங்களில் படப்படிப்பு நடந்த படங்கள்தான். என்னுடைய லக் எல்லாமே ஒரே சமயத்தில் ரிலீசுக்கு வந்திடுச்சு. இதில் மலையாளப் படமும் கைகொடுக்க ஐஸ் க்ரீம் மேல் வைத்த செர்ரி போல் எனக்கு மேலும் ஸ்பெஷல் மொ மெண்ட்களா மாறிடுச்சு. மூணு படங்களிலுமே மூணு விதமான கேரக்டர்கள் அமைஞ்சது இன்னொரு ஸ்பெஷல்.

‘800’ பயோபிக், ‘ரத்தம்’ படத்தில் வில்லி கேரக்டர்... இப்படியான கேரக்டர்களில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?  

எனக்கு என்னுடைய கேரக்டர் வலிமைதான் முக்கியம். ‘ரத்தம்’ படத்தில் ஒரு நடிகையாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கறதிலே எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. அந்தக் கதையில் என்னுடைய கேரக்டர்தான் அது. ஆனா, வில்லியா நடிக்க எனக்கே கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. காரணம், என்ன முயற்சி செய்தாலும் என் முகத்திலே ஒரு அப்பாவித்தனம் இருக்கும். இந்த மூஞ்சியிலே எப்படி வில்லி கேரக்டர் செட் ஆகும்னு தோணுச்சு.

ஆனா, அமுதன் சார் ஒரு ஆங்கிளில் முகத்தைக் காண்பிச்சு, ‘இந்த லுக்கை மெயின்டெயின் செய்தீங்கன்னா உங்களுக்குள்ள இருக்க டெவில் வெளிப்படும்’னு சொன்னார். அப்பதான் நானே அதை நோட் செய்தேன். எல்லோருடைய முகத்திலும் ஏதோ ஒரு ஆங்கிளில் இந்த நெகட்டிவ் லுக் இருக்கும்னு அப்பதான் புரிஞ்சது.

‘800’ படம் மாநிலம் தாண்டி, மொழி தாண்டி எனக்கு வேறு ஒரு வகையான ஆடியன்ஸைக் கொடுத்திருக்கு. இந்தப் படம் மூலமா இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா சாரின் வாழ்க்கை. படத்துல அவர் மனைவி மதி மலர் மேடம் கேரக்டரில் எனக்கு கொஞ்ச நேரம்தான் நடிக்க ஸ்கோப். ஆனாலும் முத்தையா சார் வரலாற்றை மதிமலர் மேடம் இல்லாம எழுத முடியாது இல்லையா... அப்படித்தான் இந்த பயோபிக் படமும் நான் இல்லாம எங்கேயும் பேசப்படாது.

மதி மேம் மற்றும் முத்தையா சார் வீட்டில்தான் ஷூட்டிங் நடந்தது. நிறைய கத்துக்கிட்டேன். முத்தையா சார் மூலமா நிறைய கிரிக்கெட் வீரர்களை சந்திக்க முடிஞ்சது. சச்சின் சார், ஜெயசூர்யா சார், கங்குலி சார், வீரேந்திர சேவாக் சார் எல்லாருடைய சந்திப்பும் சாத்தியமானது.

இப்ப நினைச்சாலும் கனவுப் படம்தான். அதே போல் ‘ சந்திரமுகி 2’ படம்  மாதிரி ஒரு பெரிய பிராண்ட் படத்தில் என்னை யோசிச்சதையே நான் அதிர்ஷ்டமா நினைக்கிறேன்.

உங்க அடுத்தடுத்த படங்கள்..?

மலையாளத்தில் ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன். தமிழில் ரெண்டு பெரிய படங்கள் பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு. கூடிய விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்.  

ஷாலினி நியூட்டன்