ஏ.ஆர்.ரஹ்மான் என் உறவினர்தான்... அதற்காக சொந்தத்தை தொழிலுடன் இணைக்க முடியாதே!
அமிதாப்பச்சன், டைகர் ஷெராப் நடித்துள்ள படம் ‘கண்பத்’. பான் இந்தியா சினிமாவாக வெளிவரவுள்ள இதில் நம்மூர் ரகுமான் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ரெட்ரோ ஹீரோவான ரகுமான் இந்தி, தமிழ், மலையாளம் என செம பிஸி. தமிழில் ‘சமரா’ வெளியாகியுள்ள நிலையில் ரகுமானிடம் பேசினோம்.
 இந்தியில் தாமதமாக என்ட்ரி கொடுத்ததாக நினைக்கிறீர்களா?
சினிமாவுக்கு வந்து முப்பது, நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது. அப்போதிலிருந்து இந்தியில் படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தும், நேரம் கிடைக்காமல் இருந்ததால் இந்திக்குப் போகவில்லை. ‘புதுப்புது அர்த்தங்கள்’ வெளிவந்த சமயத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் இந்தியில் கே.சி.பொக்காடியா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது.கிட்டத்தட்ட அதே சமயத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சாரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ வாய்ப்பு வந்தது. நான் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தை தேர்வு செய்தேன்.
இப்படி சில சமயம் இந்திப் படங்கள் என் கையைவிட்டுப் போயுள்ளது. சில படங்களின் கதை, கேரக்டர் பிடிக்காமல் இருந்ததால் பண்ணவில்லை. சிலர் என்னை ஹீரோவாக வைத்து, ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்கச் சொல்லி பிசினஸ் கண்ணோட்டத்துடன் வந்தார்கள். அதை ஏற்க எனக்கு விருப்பமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் என் உறவினர்தான். அதற்காக சொந்தத்தை தொழிலுடன் இணைக்க முடியாதே!
இப்பொழுது நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியில் ‘கண்பத்’ படம் வந்தது. ஒருவேளை இது பான் இந்தியா சீசன் என்பதாலும் என்னிடம் வந்திருக்கலாம்.இந்தப் படத்தோட டைரக்டர் விகாஸ் பால் சினிமாவுக்கு புதியவர் கிடையாது. ‘குயின்’, ‘சூப்பர் 30’ போன்ற ஹிட் படங்கள் எடுத்தவர். சிறந்த எழுத்தாளர். இயக்குநர் விகாஸ் என்னிடம் கதை சொன்னதும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காதுனு தோணுச்சு.
ஏனெனில், படத்தில் ஹீரோ டைகர் ஷெராப்புக்கு அடுத்து என்னுடைய கேரக்டர் வலுவாக இருந்துச்சு. என்னுடைய காட்சிகள் குறைவாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்திலிருந்துதான் கதை ஆரம்பமாகும்.இந்தப் படத்தை நான் பண்ணுவதற்கு நூறு சதவீத காரணம் இயக்குநர்தான்.
இன்னொரு கேரக்டர் பற்றி டைரக்டர் சொன்னார். அதுதான் அமிதாப்பச்சன் கேரக்டர். படத்தில் என்னுடைய அப்பாவாக அமிதாப் வர்றார். அமிதாப் சார் படத்தில் இருக்கிறார் என்று தெரிந்ததும் கதையே சொல்ல வேண்டாம்னு ஓகே சொல்லிவிட்டேன்.
இதுல என்னுடைய அதிர்ஷ்டம்னு நான் சொல்ல வருவது... இந்தப் படத்தோட தயாரிப்பாளர் பூஜா என்டர்டெயின்மென்ட். இந்தியாவில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனம் அது. சல்மான்கான், அக்ஷய் குமார் என பெரிய ஸ்டார்களை வைத்துப் படம் பண்ணியவர்கள். அந்த நிறுவனத்தின் படங்கள் எல்லாமே நூறு கோடி பட்ஜெட் படங்கள்.
அவர்களுக்கு லண்டனில் பிரம்மாண்டமான ஸ்டூடியோ உள்ளது. அப்படி அருமையான பேக்கேஜ் கிடைத்தது. படத்தில் எனக்கு அழுத்தமான வேடம். சொல்லப்போனால் இயக்குநர் தென்னிந்தியாவிலிருந்து ஒரு சில ஹீரோக்களை மைண்ட்ல வைத்திருந்ததாகவும் கேள்விப்பட்டேன். பிக் பி அமிதாப்பச்சனுடன் நடித்த அனுபவம் எப்படி?
அவருக்கு கேமியோ ரோல். ஆனால், எனக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அமிதாப் சார் என்னைப் பற்றி தெரிஞ்சு வெச்சிருந்தது ஆச்சர்யமாக இருந்துச்சு.
அமிதாப் சாரிடம், ‘உங்களுடைய பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். நான் நடித்த ‘குற்றப்பத்திரிகை’ படத்தைப் பற்றி சொன்னார். அப்போது அவர் சென்சார் போர்டுல இருந்தார். ஜாலியாகப் பழகுவார்.
‘கண்பத்’ அப்பா - மகன் கதை என்பதால் அவரைக் கட்டிப்பிடித்து நடித்தது மறக்க முடியாது. Father in Hat என்பது போல் அமிதாப் சார் என்னுடைய கேரியரை அலங்கரித்தது சிறப்பு. வயது வித்தியாசங்களைக் கடந்து இப்போதும் பிஸியாக இருக்கிறீர்கள்.
உங்கள் வெற்றி ரகசியம் என்ன?
நான் செய்யும் வேலை. நான் பண்ணிய படங்கள் ஃபுட் பிரிண்ட் போல் இருந்திருக்கலாம். என்னுடைய படங்கள் சென்சிபிளாகவும் இருந்திருக்கலாம். இன்னும் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் அந்தப் படங்கள் ரசிக்கும்படியாக இருக்கும். அலட்டிக்கொள்கிற மாதிரியான படங்களை நான் பண்ணுவதில்லை.
காலத்துக்கு ஏற்றமாதிரி நடிப்பிலும் சரி, கதை கேட்பதிலும் சரி என்னை நான் மாற்றிக்கொண்டே இருக்கிறேன். நடிப்பிலும் மாறி இருக்கிறேன். காலத்துக்கு ஏற்ற மாதிரி நடிகன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்போது ஆடியன்ஸ் சினிமாவை நுட்பமாக கவனிக்கிறார்கள்.
ஓடிடி வந்த பிறகு உலகளவில் வந்த படங்களை வைத்து ஒப்பீடு செய்கிறார்கள். அந்த ஒப்பீடு இருப்பதால் அதற்கு ஏற்றவகையில் நம்முடைய படங்கள் இருக்க வேண்டும்.அது நடக்காமல் போனால் டிரோல், மீம்ஸ் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்து, என்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
என்னுடைய கேரக்டர் மட்டுமில்லாமல் மொத்தப் படமும் சரியாக வருவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். புதிய இயக்குநர்களின் படத்தில் ஆர்வத்துடன் நடிக்கிறேன். புது இயக்குநர்கள் புதிய சிந்தனை, புதிய கருத்துகளுடன் வருகிறார்கள். உங்கள் பார்வையில் வெற்றிப்பட நடிகருக்கான இலக்கணம் எது?
கலையைப் பொறுத்தவரை இலக்கணமோ, குறிப்பிடத்தக்க விதிகளோ கிடையாது. அப்படி இருந்தால் எல்லா படங்களும் வெற்றியடைந்திருக்கும். வெற்றி, தோல்வி என மாறி மாறித்தான் படங்கள் வந்துள்ளது.சினிமா என்பது டீம் ஒர்க்.
நடிகர்கள், டெக்னீஷியன்கள் என எல்லோரும் சேர்ந்துதான் நல்ல படத்தைக் கொடுக்க முடியும். மற்றபடி வெற்றிக்கான இலக்கணம் என்று எதுவும் கிடையாது. பெரிய நடிகர் படமாக இருந்தாலும் சரி, கமர்ஷியல் படமாக இருந்தாலும் சரி, கதை, திரைக்கதை முக்கியம். கன்டன்ட் இல்லையென்றால் ஆடியன்ஸ் யோசிக்காமல் ரிஜெக்ட் பண்ணி விடுவார்கள்.
உங்கள் வாழ்க்கையை மாற்றியவர் யார்?
அப்படி யாரும் இல்லை. அகம் சந்தோஷமாக இருந்தால் வெளிப்புற வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அந்த அர்த்தத்தில் சொல்வதாக இருந்தால், என்னுடைய மனைவி மெகரூனிசா; அவர்தான் என்னுடைய முதுகெலும்பு. சினிமா மட்டுமல்ல, வாழ்க்கை என்றால் ஏற்றம், இறக்கம் இருக்கும். நாம் சரியும்போதுதான் அதிகம் உலகத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். அது நமக்கான பாடம்.
அந்த மாதிரி சரிவில் இருக்கும்போது எல்லாம் நம் கையை விட்டுப்போய்விடும். அந்த மாதிரி சமயத்தில் என்னோட இருந்தது என் மனைவி.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பது பழைய டயலாக்தான். அது என்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ளது. எப்போதும் சுக, துக்கங்களில் கூடவே இருந்துள்ளார்.
இன்றைய தேதியில் நீங்கள் செய்யாத கேரக்டர் எதாவது இருக்கிறதா?
இருக்கிறது. பல நடிகர்கள் அப்படி நடித்துள்ளார்கள். மாஸ் டயலாக், மாஸ் ஸ்டைல் என சூப்பர் ஹீரோ மாதிரியான கேரக்டர் பண்ணணும்.சமீபத்தில் மலையாளத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக ‘கிங் ஆப் கோதா’ வெளிவந்தது. மலையாளப் படங்கள் யதார்த்த சினிமாவிலிருந்து விலகி இருப்பதாக நினைக்கிறீர்களா?
மலையாளத்தில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களும் வருகின்றன. கமர்ஷியல் படங்களும் வருகின்றன. ஒன்று நிச்சயம். எந்தப் படமும் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. ஹிட் படமாக இருந்தாலும் தொண்ணூறு சதவீத மக்களுக்கு படம் பிடித்திருக்கும். பத்து சதவித மக்களுக்கு படம் பிடிக்காமல் போகும்.
‘கிங் ஆப் கோதா’ மாதிரி படம் பரீட்சார்த்த ரீதியிலான படம். முன்பு மலையாளத்தில் அப்படிப் பண்ணியது இல்லை. சல்மான்கான், விஜய் படம் மாதிரி மலையாளத்தில் மாஸ் படம் பண்ணினால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற டெஸ்ட் அண்ட் டிரையல் பிராசஸ் அது.சமீபத்தில் ‘போர்தொழில்’ பார்த்தேன்.
சரத்குமார், அசோக் செல்வன் பிரமாதமாக பண்ணியிருந்தார்கள். படம் பார்த்ததும் படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். தமிழிலும் அப்படி படங்கள் வருகின்றன.அந்தப் படம் பெரிய கமர்ஷியல் படம் இல்லை. ஆனால், ஆடியன்ஸ் அதை ஏற்றுக்கொண்டார்கள். அந்தவகையில் ரசிகர்களுக்கு வித்தியாசமாகக் கொடுக்கவேண்டியது சினிமாவின் வேலை. ஒரு ஹீரோ, நெகட்டிவ் கேரக்டர் பண்ணுவதை எப்படி நியாயப்படுத்தலாம்?
ஹீரோவாக நடிக்கும் சமயத்தில் நெகட்டிவ் ரோல் பண்ண யோசித்திருக்கிறேன். இந்தியில் ஹீரோ நெகட்டிவ் ரோல் பண்ணும் படங்கள் ரொம்ப காலத்துக்கு முன்பே வந்துள்ளது. அப்படி நடித்தால் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். சமீபத்தில் ‘மாமனிதன்’ படத்தில் ஃபகத் பாசில் கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ரசிகர்கள் ஒரு நடிகரை பல்வேறு கேரக்டர்களில் பார்க்கத் தயாராக இருப்பார்கள்.
ஆனால், இண்டஸ்ட்ரியில் ஒரு கேரக்டர் பண்ணினால் முத்திரை குத்திவிடுவார்கள். நெகட்டிவ்வோ, பாசிட்டிவ்வோ ஒரு கேரக்டர் பண்ணி ஜெயித்துவிட்டால் அதேமாதிரி கேரக்டர் வரும்.
‘துருவங்கள் பதினாறு’ படத்துல போலீஸ் ஆபீசர் கேரக்டர் பண்ணினேன். அதன்பிறகு பத்து பதினைந்து படங்கள் அப்படியே வந்தது.மாதவனின் ‘எதிரி’ படத்தில் முதன் முறையாக வில்லனாக நடித்தேன். அதன்பிறகு எல்லோரும் வில்லன் ரோலில் நடிக்க கூப்பிட்டார்கள். இதுதான் இண்டஸ்ட்ரியில் நடக்கிறது. ரசிகர்களைப் பொறுத்தவரை நம்முடைய நடிப்பு நன்றாக இருந்தால் பாராட்டு கிடைக்கும்.
நம்பியார் சார் காலத்தில் சினிமாவைப் பற்றிய புரிதல் வேறு. அப்போது நல்லவராக நடித்தால் அவர் தெய்வம்; கெட்டவராக நடித்தால் அவர் ராட்சசன் என்ற தோற்றம் இருந்தது. இப்போது ரசிகர்களின் மனநிலையும் பார்வையும் மாறியுள்ளது.
ரகுமான் என்றாலே ‘புதுப்புது அர்த்தங்கள்’ ஞாபகத்துக்கு வராமல் இருக்காதே?
அது என்னுடைய கேரியரில் மைல் கல். என்னுடைய கேரியரை மலையாளத்தில் ஆரம்பித்திருந்தாலும் தமிழில் எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்த படம் ‘புதுப்புது அர்த்தங்கள்’.
அதுவரை மலையாளத்தில் ஒரு கால், தமிழில் ஒரு கால் என்றுதான் இருந்தேன். ‘நிலவே மலரே’, ‘வசந்த ராகம்’ போன்ற படங்கள் நூறு நாள் படங்கள். ஆனாலும், நான் வெளியே இருந்து நடிக்கும் நடிகனாகவே இருந்தேன். தமிழ் மக்கள் எப்போதும் எனக்கு அன்பும், ஆதரவும் கொடுத்து வருகிறார்கள். கே.பாலசந்தர் சாருக்கு எப்போதும் என்னுடைய நன்றி இருக்கும். உங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்குமிடையே இருக்கும் ரிலேஷன்
ஷிப் எப்படி?
எல்லோரும் கேட்கும் கேள்விதான். பதில் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எங்கள் ரிலேஷன்ஷிப் ஃபேமிலி ரிலேஷன்ஷிப்பாக மட்டுமே இருக்கும். நான் அவரை தொந்தரவு பண்ணமாட்டேன். அவர் என்னைத் தொந்தரவு பண்ணமாட்டார். அவரைவிட எனக்குதான் பிரஷர் அதிகம். என்னை கமிட் பண்ண வருபவர்களில் பத்து படங்களில் மூன்று படங்கள் ரஹ்மான் மியூசிக் பண்ண வேண்டும் என்ற நோக்கத்துடன் வருவார்கள்.
நான் கேட்டால் அவர் பண்ணமாட்டேன் என்று சொல்லமாட்டார். என்னுடைய படங்களில் பாடல்கள் பெரிதாக இருக்காது. பின்னணி இசைக்காக மட்டும் அவரைக் கூப்பிட்டால் பணம்தான் விரயமாகும். நான் முன்பு மாதிரி டான்ஸ் பண்ணுவது கிடையாது.
எஸ்.ராஜா
|