பல்லவ மன்னர்களின் வரலாறுதான் இந்தப் படம்!



படம் முழுக்கவே பல்லவர்களின் வரலாறு நிறைய இருக்கும்...’’ படத்தின் அடிப்படை இதுதான் என்னும் கதைக் கருவுடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் ஜிவி பெருமாள் வரதன். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சுரேஷ் ரவி நடிக்கும் அடுத்த திரைப்படம் ‘நந்திவர்மன்’. 
உடன் ஆஷா கௌடா இணைந்து நடிக்க படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஜிவி. பெருமாள். ஏகே ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் அருண்குமார் தனசேகரன் படத்தைத் தயாரிக்கிறார். ‘நந்திவர்மன்’ வெற்றியில் உறுதியாக இருக்கும் இயக்குநர் ஜிவி.பெருமாளை சந்தித்தோம்.

சினிமா ஆர்வம் எங்கு, எப்போது உங்களுக்கு ஏற்பட்டது?

எனக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டம், இப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கேன். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘முதலிடம்’ என ரெண்டு திரைப்படங்களிலும் அசிஸ்டெண்ட் இயக்குநராக வேலை செய்திருக்கேன். பிறகு ‘புரூஸ்லீ’, ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ உள்ளிட்ட படங்களிலும் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கேன்.
சின்ன வயதில் எனக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர் தியேட்டர் ஆபரேட்டர். அப்போது இருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகம். மேலும் சினிமாவில் இயக்குநராகணும்னு எல்லாம் யோசிக்கலை. வேறு ஒரு வேலைக்காக சென்னை வந்தவன் எதிர்பாராத விதமாக அசிஸ்டெண்ட் இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தது.

என்னுடைய சினிமா ஆசையும் கை கொடுக்க, தொடர்ந்து அதிலேயே பயணிக்க ஆரம்பிச்சிட்டேன். ஏதாவது ஒரு வழியில் சினிமாதான் என் வாழ்க்கைன்னு முடிவெடுத்தேன். இதோ இப்போது இயக்குநராக முதல் படம்.

‘நந்திவர்மன்’ கதை எங்கே, எப்படி துவங்கியது?

ஆரம்பத்தில் ஒரு பாக்ஸிங் கதைதான் எழுதிட்டு நிறைய தயாரிப்பாளர்கள், ஹீரோக்களிடம் கூட சொல்லியிருந்தேன். ரெண்டு நடிகர்கள் கூட நடிக்கறதா இருந்தது. கொரோனா இடையில் இடையூறாக மாற அதற்கப்புறம்  தொடர்ந்து அசிஸ்டெண்ட் கேமரா மேனாக பயணம் துவங்கிடுச்சு. இதற்கு மேலும் அந்த பாக்ஸிங் கதையை எடுத்தால் இப்போதைய காலகட்டத்திற்கு சரியாகப் பொருந்துமான்னு தெரியலை. அதனால்தான் இந்தக் கதை எழுதினேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நடிகர் சுரேஷ் ரவி மற்றும் தயாரிப்பாளார் அருண்குமார் கிடைச்சாங்க.  

படத்தின் கதைக்களம் என்ன?

படம் முழுக்க முழுக்க காவல்துறையும் காவல்துறை சார்ந்ததாகவும்தான் இருக்கும். அதற்குள்ளே சிலை கடத்தல்தான் கதை. அதில் பல இடங்களில் பல்லவ மன்னர்கள், அவர்களின் வரலாறும் பின்னிப்பிணைந்து கதையோடு வரும்.

படத்தின் கதைக்களம் செஞ்சியில்தான் நடக்குது. முதலில் எழுதிய கதைக்காகத்தான் செஞ்சிக்கு லொகேஷன் பார்க்கப் போயிருந்தோம். அங்கே சட்டென ஸ்பார்க் ஆன கதை இது.
பல்லவ மன்னர்களின் வரலாறும் கதைக்குள் வரும். நந்திவர்மன் என்கிற பல்லவ மன்னனின் கதை பற்றி எனக்குத் தெரிய வந்தது... அதையும் மையக்கருவாக வைத்து இந்த சிலை கடத்தல் கதையை உருவாக்கி இருக்கேன். அதனால்தான் கதைக்கும் ‘நந்திவர்மன்’ என்னும் பெயரையே வைத்து விட்டோம்.

‘ஜெயிலர்’, ‘பரம்பொருள்’ என தொடர்ச்சியாக சிலை கடத்தல் பற்றி சினிமா பேசத் துவங்கியிருக்கிறது. இந்தப் படம் எப்படி வேறுபடும்?

சொல்லப்போகும் வரலாறு தான் படத்தின் அடித்தளம். இன்னைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் பல குடவரைக் கோயில்களை உருவாக்கியவர்கள் பல்லவர்கள்தான். அங்கே இருக்கும் சிலைகள் பலவும் கூட நடந்த போர்களால் மறைக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டு அல்லது மண்ணில் புதைந்து கிடக்கிறது. அப்படிப்பட்ட சிலைகள் கயவர்கள் கைகளில் கிடைத்தால் என்ன ஆகும். அப்படி கிடைக்கும்  பட்சத்தில் காவல்துறை என்ன செய்கிறது என்பதுதான் கதை.

இன்றும் சென்னையைச் சுற்றி எத்தனையோ குடவரைக் கோயில்கள், பழங்கால சிலைகள் நிறைய இருக்கு. அதெல்லாம் நமக்கு நின்று பார்க்கக் கூட நேரமில்லை. ஏன்... செஞ்சியில் ஒரு பகுதியில் ஒரு குடவரைக் கோயில் இருக்கு. அங்கே உள்ளே சென்றால் எதிரில் வருபவர் தெரியமாட்டார். உள்ளே போனால் திரும்பி வரமாட்டோம் என்கிற பயமும் கூட மக்கள்கிட்ட இருக்கு.

ஆனால், வருஷத்துக்கு ஒருதடவை அந்தக் கோயில் சிலையை எடுக்க மட்டும் குடவரைப் பாதை வழிவிடுவதாகவும் கூட சொல்கிறார்கள். இதெல்லாம் கதையில் ஆங்காங்கே வரும்.  
படத்தின் மற்ற நடிகர்கள்... டெக்னீஷியன்கள் குறித்து சொல்லுங்க..?

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடிகர் சுரேஷ் ரவிக்கு போலீஸ்காரர்கள்தான் வில்லனாக இருந்தார்கள். இந்தப் படத்தில் இவரே போலீஸ் ஹீரோவாக இருக்கிறார். சுரேஷ் ரவி, ஆஷா கௌடா தவிர போஸ் வெங்கட், நிழல்கள் ரவி சார், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ்... இவங்களுக்கெல்லாம் படத்தில் மிக முக்கியமான பாத்திரங்கள் இருக்கு.

கனிராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ரெண்டு பேரும் படத்திற்கு சினிமாட்டோகிராபர்கள். ‘அயோத்தி’, ‘சிவப்பு பச்சை மஞ்சள்’ உள்ளிட்ட பல படங்களின் எடிட்டர், சான் லோகேஷ் இந்தப் படத்திற்கு எடிட்டர். ஜெரால்டு பெலிக்ஸ் இந்தப் படத்திற்கு இசை. பேக்ரவுண்ட் ஸ்கோர் அற்புதமா செய்து கொடுத்திருக்கார். அவருக்கு இது முதல் படம். தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் இதுதான் முதல் படம். என்னை விட சினிமா ஆர்வம் அதிகம் உடையவர்.

‘நந்திவர்மன்’ கதை மூலம் என்ன கருத்து சொல்லப் போகிறீர்கள்?

தமிழ்நாட்டைப் பொருத்தவரை எத்தனையோ மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சில மன்னர்களின் வரலாறு மட்டும்தான் ஆவணப்படுத்தப்பட்டிருக்கு. மற்றவை எல்லாமே வெறும் காகிதங்களில் கூட நமக்கு கிடைக்கலை. இதற்கிடையில் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் வரலாற்றை சொல்லக்கூடிய சிலைகளை ஒரு கும்பல் எங்கேயோ கடத்தி பெரும் பணம் செய்கிறார்கள். இதைத்தான் சொல்ல முயற்சித்திருக்கேன்.

நம்ம நாட்டுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழல் அதிகமாகிடுச்சு. நிச்சயமா மற்ற படங்களில் இருந்து இந்தப் படம் வேறுபடும். மேலும் தமிழ் மொழியே வாசிக்கத் தெரியாது என்னும் தலைமுறை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நம் தமிழ் பொக்கிஷங்கள் பற்றி இக்கால இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கு. அதைத்தான் நான் கருவாக எடுத்திருக்கேன்.  

ஷாலினி நியூட்டன்