சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்ட்ரெஸ்...என்ன செய்யவேண்டும்...



இன்று மனஅழுத்தம் நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவருகிறது. ‘ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு...’ என்பது இப்போது அடிக்கடி கேட்கும் வார்த்தையாகிவிட்டது. சமீபத்தில்கூட பிரபல இசையமைப்பாளரும், நடிகரும், இயக்குநருமானவரின் மகள் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. உலகளவிலும் இன்று மனஅழுத்தம் பெரிய பிரச்னையாக உருெவடுத்திருப்பதாகவும், அது ஒருவரை தற்கொலை வரை அழைத்துச் சென்றுவிடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக இந்தியாவில் கோவிட் தொற்றுக்குப்பிறகு மனஅழுத்தம் அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் மனஅழுத்தம் குறித்தும், அதைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை குறித்தும் மனநல மருத்துவர் ராமானுஜம் கோவிந்தனிடம் பேசினோம்.    ‘‘மனம் என்பதே நம் மூளையின் இயக்கம்தான். அதனால் மனதையும், உடலையும் பிரிக்கமுடியாது. நம் சிந்தனை, நம் உணர்வு, நம் நடவடிக்கை இந்த மூன்றும் சேர்ந்ததே மனம். இதை எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள்னு சொல்லலாம். அதனால், மனம் பாதித்தால் அது உடலை பாதிக்கும். உடலில் பிரச்னை என்றால் அது மனதை பாதிக்கும்.

இந்தக் காலக்கட்டத்தில் மனம், உடல் இரண்டையும் பாதிக்கிற காரணிகள் நிறைய இருக்குது. பெரும்பாலும் மனஅழுத்தம் ஏற்படக் காரணம், அதிக எதிர்பார்ப்புதான். நம்மிடம் அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கும்போது மனஅழுத்தம் தானாகவே உண்டாகுது. நம்மால் முடியாத ஒரு விஷயம், நாம் நினைத்ததை செய்ய முடியாதபோது ஓர் அழுத்தத்தை உண்டாக்குது. படிக்க முடியாதவனைப் படினு சொன்னால் அது ஓர் அழுத்தம். நாளைக்கு இவ்வளவு படிச்சே ஆகணும் எனும்போது அழுத்தம் இயல்பாகவே வந்திடும்.

கிரிக்கெட்ல ஒரு ஓவருக்கு பத்து ரன்கள் அடிக்கலாம். ஆனா, ஒரு ஓவருக்கு 20 ரன்கள் அடிக்கணும்னா அது அழுத்தத்தை ஏற்படுத்தும் இல்லையா... அதுபோல எது நம்மால் முடியலையோ அது அதிகமாகி மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இந்த அழுத்தம் உடலில் இருக்கிறபோது அது மருத்துவரை அணுகுகிற அளவுக்கு நோயாக மாறுது. தொடர்ச்சியான ஸ்ட்ரெஸ்  மனநோயாக மாறும். அதேபோல, உடல்லயும் பல்வேறு நோய்களை உண்டாக்கும்.

இதுக்குத் தீர்வுனு பார்க்கிறப்ப ரெண்டே வழிகள்தான். ஒண்ணு அழுத்தத்தை நிறுத்தணும். இல்லனா சம்பந்தப்பட்ட அந்த நபர் தன்னை மாற்றிக்கணும்...’’ என்கிறவர், அது
குறித்து விரிவாகத் தொடர்ந்தார்.  ‘‘பொதுவாக மனஅழுத்தமாகும்போது எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்பாடுகள் இந்த மூன்றிலும் மாற்றங்கள் ஏற்படும். எண்ணங்கள்னு எடுத்துக்கிட்டால் நிறைய எதிர்மறையான எண்ணங்கள் வரும். ‘என்னால் ஒண்ணும் முடியாது. எனக்கு யாருமே உதவி செய்யமாட்டேங்கிறாங்க. நீங்கள் எல்லாம் எனக்கு எதிராக இருக்கீங்க...’ இப்படி எதிர்மறையான எண்ணங்கள்ல இருப்பாங்க.

இந்த எதிர்மறை எண்ணங்கள் அவங்களைப் பற்றியும், அவங்க எதிராளிகளைப் பற்றியும், சுற்றியுள்ளவங்களைப் பற்றியும் வரும். இந்த உலகமே மோசமாக இருக்குனு நினைப்பாங்க.
அதேமாதிரி உணர்வுகள்ல மனச்சோர்வு, பதட்டம், எரிச்சல், கோபம் இந்தமாதிரி நிறைய வரும். அப்புறம், செயல்பாடுகள்னு எடுத்துக்கிட்டால் மாற்றங்கள் நிறைய இருக்கும். யார்கிட்டயும் பேசாமல், பழகாமல் இருப்பாங்க. இல்லனா வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடப்பாங்க.

முன்பு சந்தோஷமாக நிறைய விஷயங்கள் செய்திருப்பாங்க. இப்ப அதையெல்லாம் பண்ணாமல் ஒருகட்டத்துல தற்கொலைக்கு முயற்சி செய்வாங்க. இதேபோல மனஅழுத்தம் உடல்லயும் பிரதிபலிக்கும். பசி எடுக்காது. தூக்கம் வராது. உடல் சோர்வாக இருக்கும். குழந்தைகளிடம் கவனக்குறைபாடு நிறைய இருக்கும். நன்றாக படிச்சிட்டு இருந்த குழந்தைக்குக்கூட படிப்பு குறைஞ்சிடும். சோர்வினால் முயற்சி செய்யமாட்டாங்க.

அதனால எண்ணம், உணர்வு, செயல்பாடு இந்த மூன்றிலும் மாற்றங்கள் ஒரு குழந்தையிடமோ அல்லது ஒரு நபரிடமோ தெரிந்தால் அவங்ககிட்ட பேச வேண்டியது அவசியம். கவுன்சிலிங் கொடுப்பது அத்தியாவசியம். இதுல முதல்ல அவங்க மனஅழுத்தத்தை சரிபண்ணணும். அது பெரும்பாலும் முடியாது. ஏன்னா, படிப்பில் பிரச்னையுள்ள குழந்தையிடம் படிக்க வேண்டாம்னு சொல்லமுடியாது. வேலையில் இருப்பவரிடம் வேலையை ராஜினாமா செய்திடுங்கனும் கூறமுடியாது. ரெண்டுமே அவரவர்க்கு அவசியமானது.  

ஆனா, சில இடங்களில் அழுத்தத்தை சரி செய்யமுடியும். அதாவது சில சூழல்களை மாற்றமுடியும்னா மாற்றிக்கலாம். அது முடியாதபோது ரெண்டாவது ஆப்ஷனை கையிலெடுக்கணும். அதாவது நாம் மாறிக்கணும். இதில் முதல்ல மாற்றவேண்டியது நம் மனப்பான்மையைத்தான். எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறப்பதானே அழுத்தம் வருது. எந்தப் பிரச்னையையும் நாம் அழுத்தமாகப் பார்த்தால்தானே அது அழுத்தமாக மாறுது. அதனால், பிரச்னையை அழுத்தமாகப் பார்க்காமல் நம் மனதை மாற்றும்போது பல விஷயங்களைக் கடந்து போகமுடியும்.

இப்ப மார்க் நிறைய வாங்கலனா என்ன... அடுத்த தேர்வில் வாங்கிக்கிறது. இந்த மேட்ச் ஜெயிக்கலனா அடுத்த மேட்ச்ல ஜெயிச்சிக்கலாம். அதாவது இந்தமுறை இல்லனா அடுத்தமுறை என்கிற எண்ணத்தை மேலோங்கச் செய்யணும். இப்படியான மனப்பான்மையைக் கொண்டு வர்றப்ப அந்த அழுத்தத்தை நாம் குறைக்க முடியும். அதேநேரம் உடல்ரீதியாக உடற்பயிற்சியும், நல்ல உணவுப்பழக்கமும், நிறைவான தூக்கமும் முக்கியம். இந்த விஷயங்கள் அந்தப் பிரச்னையை மாற்றாது. 
ஆனா, அதை எதிர்கொள்ள நமக்கு தைரியம் கொடுக்கும். ‘வா பார்த்துக்கலாம்’னு சொல்ல வைக்கும். இதுவே சரியாக தூங்காமல், சரியாக சாப்பிடாமல், உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் மனமும் சோர்வடையும். மனம் சோர்வடைந்தால் தானாகவே உடலும் சோர்வாகிடும்.

அதனால உடற்பயிற்சி, உணவு, உறக்கம்... இந்த மூன்று ‘உ’க்களும் முக்கியம்னு இப்ப நாங்க வலியுறுத்திட்டு வர்றோம். பிரச்னை அப்படியேதான் இருக்கும். அதைச் சமாளிக்கும் தைரியத்தை இந்த மூன்று ‘உ’க்களும் நமக்குக் கொடுக்கும். பிரச்னையை சமாளிக்கும் தைரியம் வந்திடுச்சுனா மனஅழுத்தம் தானாகவே குறைஞ்சிடும்...’’ என நம்பிக்கையளித்தவர், தொடர்ந்து பேசினார்.
‘‘அதேபோல எல்லோரும் ஒரேமாதிரியான அழுத்தத்தை எதிர்கொள்றதில்ல. ஒருத்தருக்கு அழுத்தமாக இருப்பது இன்னொருவருக்கு சாதாரண விஷயமாக இருக்கும். இதற்கு முதல் காரணம், அகக் காரணி. அதாவது சிலருக்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் அதிகமாக இருக்கலாம். பதட்டம் அடையும்போதும், சோர்வடையும்போதும் சில ரசாயன மாற்றங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும். இது பாரம்பரியமாகக்கூட வரும்.

ரெண்டாவது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆளுமை. சிலர் சாதாரண விஷயத்தைக்கூட பெரிசாக நினைச்சுக் கவலைப்படுவாங்க. இதுக்கு அவங்க ஆளுமையும், வளர்ந்தவிதமுமே காரணம்.
வளரும்போதே நிறைய எதிர்மறையான மனிதர்களைப் பார்த்து வந்தால் அவங்களுக்கு வாழ்க்கை மேல் நம்பிக்கை வராது. சகமனிதர்கள் மீதும் நம்பிக்கை இருக்காது. சின்ன விஷயங்களுக்குக்கூட பதட்டமடைவாங்க.

அதனால ஒருத்தருக்கு மனச்சோர்வு அதிகமாக இருப்பதும், இன்னொருவருக்கு வராமலேயே இருக்கிறதுக்கும் அவரவரின் ஆளுமையே காரணமாக இருக்குது. அதுமாதிரி மனஅழுத்தம் வராமல் இருக்க சோஷியல் சப்போர்ட்டும் முக்கியமான காரணம். குழந்தைக்கு ஆசிரியர்களும் பெற்றோரும் சப்போர்ட்டிவ்வாக இருந்தால் அந்தக் குழந்தைக்கு மனஅழுத்தம் வராது. அதேபோல வேலைக்குப் போகிற பெண்ணுக்கு அவங்க தாய், தந்தையோ, மாமனார், மாமியோரா சப்போர்ட் செய்தால் அவங்களுக்கும் அழுத்தம் இருக்காது. இதைத்தான் சோஷியல் சப்போர்ட்னு சொல்றோம். இந்த சோஷியல் சப்போர்ட் உள்ளவங்க மனஅழுத்தத்திற்கு ஆட்படமாட்டாங்க.

ஆனா, இன்னைக்கு இந்த சோஷியல் சப்போர்ட்டும் குறைஞ்சிட்டே வர்றதுதான் வேதனையாக இருக்கு. மனிதன் ரொம்ப தனிமையானவனாக ஆகிட்டே வர்றான். நண்பர்கள்கூட குறைஞ்சிட்டே வர்றாங்க. செல்போன் உள்ளே தனக்குத்தானே ஒரு உலகமாக வாழ்ந்திட்டு வர்றான். இதெல்லாம் மனஅழுத்தத்தை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது...’’ என்கிறவர், இளம்தலைமுறையினரிடம் மனஅழுத்தம் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்.  

‘‘இன்னைக்கு விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின்படி பதின்மவயதினரின் மனஅழுத்தம் அதிகமாகித்தான் இருக்கு. முன்னாடி  உள்ள தலைமுறையைவிட இப்ப மனஅழுத்தம் கூடியிருக்கு. 

இதுக்கு முக்கியமான காரணம், குடும்ப அமைப்பு குலைந்துபோனதும், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கலால் போட்டி அதிகமானதும்தான். அதேமாதிரி பெற்றோரின் வளர்ப்பும் குழந்தைகளின் மனஅழுத்தத்திற்குக் காரணமாக இருக்கு. முன்னாடி ஒரு குடும்பத்துல நிறைய குழந்தைகள் இருக்கும். அதனால், ரொம்ப கவனம் எடுத்துக்கமாட்டாங்க. ஆனா, இப்ப ஒன்றிரண்டுதான்.அதனால, ரொம்ப கேர் எடுக்குறாங்க.

பெற்றோர் ரொம்ப கேர் எடுத்துக்கிறதால குழந்தைங்க ரொம்ப சென்சிட்டிவ்வாக வளர்றாங்க. ஏமாற்றங்களை தாங்கிக்கொள்கிற மனப்பக்குவம் இன்றைய குழந்தைகளிடம் இல்லை.
இதுவும் அவர்களிடம் மனஅழுத்தம் அதிகரிக்க ஒரு காரணம். குழந்தைகளைக் கண்டிக்கக்கூடாதுனு சொல்லல. 

அதுக்காக கண்டிக்காமலே வளர்க்கவும் கூடாது. ரெண்டும் பேலன்ஸாக இருக்கணும். ஏமாற்றங்களை எதிர்கொள்ளாமல் வளரும்போது குழந்தை சென்சிட்டிவ்வாகத்தான் வளரும். அதனால, குழந்தைகளிடம் எல்லா விஷயங்களிலும் பேலன்ஸாக இருக்கணும்.

அப்புறம், இந்தத் தலைமுறையையும் குற்றம் சொல்லமுடியாது. முன்னாடி இருந்ததைவிட இன்னைக்கு கல்வியிலும், வேலையிலும் பலமடங்கு அதிகமான போட்டியை எதிர்கொள்றாங்க. அதேமாதிரி வாழ்ற சூழலும் கஷ்டமாகி இருக்கு. அதனால, மனஅழுத்தமும் அதிகமாகியிருக்கு.

இதுதவிர, போதைப் பழக்கங்களும் மனஅழுத்தத்திற்கு ஒரு காரணம். இது எல்லா வயதினரிடமும் அதிகரித்து காணப்படுது. இதுவும் மாறணும். அதேமாதிரி குழந்தைகளுக்கு அவங்க தனித்தன்மையை வெளிப்படுத்துகிற வாய்ப்புகளை உருவாக்கக்கணும். கல்வி நிலையங்கள் வெறும் மதிப்பெண் சார்ந்தே இயங்காமல் ஒவ்வொருவரின் திறமையை வெளிப்படுத்துகிற சூழலை உருவாக்கணும்.
 
பள்ளிக்குப் போறது வெறும் படிப்புக்காக மட்டும் இருக்கக்கூடாது. நல்ல நண்பர்களை சேகரிக்கவும், ஆளுமையை வளர்ப்பதாகவும் இருக்கணும். நல்ல பேச்சாளனாக, நல்ல ஓவியனாக, நல்ல கவிஞனாக உருவாவது பள்ளியிலிருந்துதான். அந்தச்சூழலை நாம் உருவாக்கினாலே போதும் குழந்தைகளின் மனஅழுத்தத்தைத் தவிர்க்கமுடியும்...’’ என்கிறார் மருத்துவர் ராமானுஜம் கோவிந்தன்.  

பேராச்சி கண்ணன்