கின்னஸில் கில்லியாக நிற்கும் இந்திய நடிகர்கள்!



நம் இந்திய சினிமா கின்னஸ் வேர்ல்ட் ரெகார்ட் வரை சென்று எந்த அளவிற்கு சாதனைகளை முறியடித்தன என்பதை சில வாரங்களுக்கு முன் பார்த்தோம்.ஆனால், இந்த சாதனைகள் வெறும் திரைப்படங்களோடு மட்டும்தான் நின்று விட்டதா..?இல்லை. கின்னஸ் வரை சென்ற நம் இந்திய திரைப்படக் கலைஞர்களும் பலர் உள்ளனர்; உலக சாதனைகளை படைத்துள்ளனர்! கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது ‘செல்பி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் வெறும் மூன்று நிமிடங்களில் உலகிலேயே அதிக செல்ஃபி எடுத்த நடிகராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். அன்றைய தினம் முழுக்கவே தன்னை சந்திக்க வந்த அத்தனை ரசிகர்களுக்கும் நோ சொல்லாமல் செல்ஃபி எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

2016ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினச் சிறப்பாக ஒரே நேரத்தில் 1300 பெண்கள் ஒன்றிணைந்து விரல் நகங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ளும் நிகழ்வு ஒன்றை நடத்தினர்.
இதில் கலந்துகொண்டு நிகழ்வைத் துவக்கி வைத்தார் சோனாக்‌ஷி சின்ஹா. 1300 பெண்களும் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் நெயில் பாலிஷ் அணிந்து கொள்ளும் தருணத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவும் கலந்துகொண்டதில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

2009ம் ஆண்டு வெளியான ‘டெல்லி 6’ படத்திற்காக அபிஷேக் பச்சன் 12 மணி நேரத்தில் 12 நகரங்களுக்கு பயணித்து குறைந்த நேரத்தில் அதிகமான பொது நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் என்ற விதத்தில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதற்கு முன் ஜெர்மன் நடிகர்களான ஜார்ஜில் வோகெல் மற்றும் டேனியல் ப்ரோஹ்ள் இந்த சாதனையைச் செய்திருந்தார்கள். அதைத்தான் அபிஷேக் பச்சன் முறியடித்தார்.

வாரிசுகளின் சினிமா வருகை காரணமாகவே பாலிவுட்டின் ஒரு பெரிய குடும்பமே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. புகழ்பெற்ற ராஜ்கபூர் குடும்பத்திலிருந்து இதுவரையிலும் 25 நடிகர்கள் இந்திய சினிமாவில் நடித்திருக்கிறார்கள்; நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விதத்தில் கபூர் குடும்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது.
பாலிவுட் ‘கிங் ஆஃப் மெலடி’ என செல்லமாக அழைக்கப்படும் பாடகர் குமார் சானு உலகிலேயே அதிகமாக ஒரே நாளில் அதிக பாடல்களை பாடி ரெகார்ட் செய்த விதத்தில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

அதாவது 24 மணி நேரத்தில் 28 பாடல்களை இவர் பதிவு செய்திருக்கிறார். இந்திய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற பாடகியான ஆஷா போஸ்லே தன் வாழ்நாளில் உலகிலேயே அதிக பாடல்களைப் பாடிய பாடகியாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். 1947ல் இருந்து இவர் 11 ஆயிரம் பாடல்களை பதிவு செய்திருக்கிறார். ‘ஹனுமன் சாலிசா...’ என்னும் பக்திப் பாடலைப் பாடிய விதத்தில் அமிதாப் பச்சன் உலகிலேயே பக்திப் பாடலை சொந்தக் குரலில் பாடிய நடிகர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சேகர் ராவ்ஜியானி.

பிரபல பாலிவுட் நடிகர் ஜெகதீஷ் ராஜ் உலகிலேயே அதிகமாக திரைப்படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்தவர் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்; இவர் இதுவரையில் 140 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்த ஹீரோவாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் ஷாருக் கான். 2012ல் இவர் நடித்த ‘ஜப் தக் ஹை ஜான்’ திரைப்படம் ரூ.220 கோடியை வசூலித்து முதல்முறையாக ரூ.100 கோடி கிளப் என்னும் மார்க்கெட்டை ஓபன் செய்தது. மட்டுமின்றி முதல் முறையாக ஒரு இந்திய சினிமா ரூ.200 கோடி வசூலை தாண்டியது அதுவே முதல் முறை.

இப்போதும் கூட ‘பதான்’ வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கும் ‘ஜவான்’ வரையிலும் ஷாருக் கானின் சாதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதே வருடத்தில் - அதாவது 2012ல் - ஷாருக்கானுடன் ஜோடியாக இணைந்து ‘ஜப் தக் ஹை ஜான்’ படத்தின் வசூல் சாதனை வேட்டையில் படத்தின் நாயகியாக தன்னையும் இணைத்துக் கொண்ட விதத்தில் முதல் பாலிவுட் நடிகை; அதிக வசூல் மற்றும் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்  கத்ரீனா கைஃப்.

அதிக அளவில் ஒரே நேரத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை முன்னேற்பாடு செய்து அதில் வெற்றியும் கண்ட விதத்தில் நடிகர் ஆரியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
மறைந்த மகா நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் மொத்தமாக 1000 படங்களில் நடித்த அபூர்வ நடிகையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரரும் மனோரமா ஆச்சியே.

அதிக படங்களில் நடித்து சாதனை செய்த வாழும் நடிகராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார் காமெடி நடிகர் பிரம்மானந்தம். 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களில் நடித்திருக்கிறார். அதற்காக கின்னஸ் அவரை கெளரவப்படுத்தியுள்ளது.

நடிகர், இயக்குநர் மற்றும் பல்வேறு கலைகள் பயின்ற நடிகர் கோகுல் நாத், குழந்தைகளுக்கான பயிற்சிப் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். அதன் மூலம் அவரது மாணவ மாணவிகளே 15 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர். அதில் நான்குபேர் கோகுல் நாத் நிகழ்த்திய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினி நியூட்டன்