ஓடிடி வழியாகவே பிரபலமாகிட்டேன்! சொல்கிறார் நிமிஷா சஜயன்...



லாக்டவுன் ட்ரீம் கேர்ள் என்றாலும் தகும். தமிழில் எவ்வித படங்களும் வெளியாகவில்லை. மற்ற மொழிகளிலும் கூட அப்படித்தான். மலையாள உலகில் இருந்தே தன்னுடைய நடிப்பால் மற்ற மொழி ரசிகர்களையும் ஈர்த்தவர் நிமிஷா சஜயன். கொரோனா ஊரடங்கு காலங்களில் இவர் நடிப்பில் ‘சோலா’, ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘நயட்டு’, ‘மாலிக்’ என அத்தனையும் மலையாளம் தாண்டி மற்ற மொழிகளிலும் மாஸ் ஹிட். ‘எப்போ தாயி தமிழுக்கு வருவே?’ என வாயைத் திறந்து கேட்காத குறைதான். அப்படி ஒரு அசாத்திய நடிப்புத் திலகியாக அவரின் ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நம் தமிழுக்கும் ரீமேக் ஆனதை நம்மால் மறக்க முடியாது.

இதோ நிமிஷா சஜயன் தமிழில் அறிமுகம். வந்தால் ராணியாதான் வருவேன் பேர்வழியாக எடுத்த எடுப்பிலேயே மூன்று படங்கள்... சித்தார்த்துடன் ‘சித்தா’, கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் XL’, இயக்குநர் விஜய் மற்றும் அருண் விஜய்யின் ‘மிஷன்: சாப்டர் 1’ என கெத்து காட்டுகிறார்.

வெல்கம் டூ தமிழ் சினிமா?

நன்றி... என்னை தமிழ் மக்களுக்கு முதலில் தெரியுமான்னே தயக்கம் இருந்துச்சு. ஆனால், என்னுடைய படங்கள் எல்லாம் இங்கே இருக்கும் மக்களும் பார்த்திருக்காங்கன்னு தெரிஞ்சப்ப சந்தோஷமா இருக்கு. ‘சித்தா’ பட ஷூட்டிங் பழனியிலேதான் நடந்துச்சு. கேரளா அருகேதானே பழனி... அதனால் சில கேரள மக்கள் என்கிட்டே பேசினாங்க, பாராட்டினாங்க. ஆனால், அதே அளவுக்கு தமிழ் மக்களும் என்னைப் பாராட்டிப் பேசினப்பதான் எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.

ஓ மை காட்... தமிழ் மக்கள் வரவேற்பே தனி ஸ்டைல்தான். எவ்ளோ நல்லவங்களா இருக்காங்க! ஒரு ராணி மாதிரி ஃபீல் செய்ய வெச்சிடுறாங்க. நல்ல கதை, நல்ல கேரக்டருடன்தான் இங்கே அறிமுகம் ஆகணும்னு காத்திருந்தேன். இதோ நேரம் வந்திடுச்சு.

துருதுருன்னு இருக்கீங்களே... ஆனால், படத்திலே செம சீரியஸ் கேர்ள்?

நான் கடைக்குட்டி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பைலதான். சொல்லப் போனால் மலையாளம் கூட கொஞ்சம் கொஞ்சமாதான் கத்துக்கிட்டேன். முழுமையான மும்பைப் பொண்ணாதான் கேரளா வந்தேன். அப்பா சஜயன், இன்ஜினியர். அம்மா பிந்து சஜயன், எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. நான் மும்பையிலேயே ஜர்னலிஸம் படிச்சேன். ஸ்கூல் முடிச்சிட்டு எதாவது டிகிரி செய்யணும்னு ஆரம்பிச்சது... அப்படிதான் ஜர்னலிஸம் படிச்சேன்.

சின்ன வயதிலிருந்தே சினிமா ஆர்வம் அதிகம். அப்பா, அம்மாவும் உனக்கு என்ன பிடிக்குதோ அதைச் செய்னு சொல்லிட்டாங்க. சினிமாவிலே எதாவது ஒரு பார்ட்டா இருக்கணும்னு நினைச்சேன். அப்பறம்தான் முதல் படம் ‘தொண்டிமுத்தாலும் திரிக்ஷாக்ஷியும்’ல நடிக்கும் வாய்ப்பு வந்தது. நடிப்புன்னு வந்தப்பறம் சும்மா இருக்கக் கூடாதுன்னு முறைப்படி நடிப்பும் கத்துக்கிட்டேன். தொடர்ந்து சில படங்கள், ஓடிடி மூலமா என்னுடைய சில படங்கள் மொழி தாண்டியும் பேசப்பட்டிருப்பது சந்தோஷமா இருக்கு.

சினிமா மற்றும் நடிப்பு என்றால் என்ன?

ஸ்கூல் கேள்வி மாதிரி இருக்கு! சினிமாதான் எனக்கு எல்லாம். அதுதான் வாழ்க்கை. ஒரு படைப்பாளியின் காகிதக் கற்பனைக்கு உயிர் கொடுப்பதுதான் என்னைப் பொருத்தவரை நடிப்பு. அதிலே என்னால் எவ்வளவு சிறப்பு கொடுக்க முடியுமோ கொடுக்கறேன்.  

எந்த அடிப்படையிலே கதைகளையும், பாத்திரங்களையும் தேர்வு செய்கிறீர்கள்?

நடிச்சா மெயின் ரோல் எல்லாம் என் டார்கெட் இல்லை. என்னைப் பொருத்தவரைக்கும் நல்ல கேரக்டர், எனக்கான ரோல் எவ்ளோ நேரம், சின்ன மொமெண்டாக இருந்தாலும் அது கதையிலே எவ்ளோ தாக்கம் உண்டாக்குது... இதெல்லாம்தான் பார்ப்பேன். இப்பவும் நான் சம்பள அடிப்படையிலே கதைகள் தேர்வு செய்யறதில்லை. என் மேலேதான் படம் பயணிக்கப் போகுதுன்னா சம்பளத்தைக் கூட எவ்வளவு முடியுமோ குறைச்சிப்பேன். கனவுப் பட்டறை, கலர்ஃபுல் கதாநாயகிகள்... இதற்கு இடையிலே எதார்த்த நாயகி...

இதனால் இழந்தது என்ன... பெற்றது என்ன?

இழந்தது ஒண்ணே ஒண்ணுதான். பொதுவாக கமர்ஷியல் படங்கள் அவ்வளவு சுலபமாக நம்மகிட்டே வராது. ஆனால், நடிக்கணும். வலிமையான கேரக்டர்னாலே நம்ம பெயர் சாய்ஸ்ல இருக்கும். கமர்ஷியல் படங்களிலும் கூட இப்போதெல்லாம் எதார்த்த நடிப்பை பயன்படுத்தும் சூழல் வந்திடுச்சு. நான் நடிச்ச ‘மாலிக்’ படத்தையே அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
ஃபகத் ஃபாசில் படம், தாதா, டான் கதை... அதிலே எனக்கும் சரிசமமான கேரக்டர். இதோ தமிழில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.எல்’, ‘மிஷன்: சாப்டர் 1’ கமர்ஷியல் படங்கள் கூட அதற்கு எடுத்துக்காட்டுதான்.  

முன்பைக் காட்டிலும் அதிகமான படங்கள் வந்தாலும் நடிகர், நடிகைகள் 50 படங்கள், 100 படங்கள் எல்லாம் அடைய முடியவில்லையே?

திறமைசாலிகள் பெருகிட்டாங்க. இப்போதெல்லாம் பிடிச்ச நடிகை கான்செப்ட் கிடையாது, பிடிச்ச கேரக்டர்தான். ஒரு படம், அதிலே ஒரு கேரக்டர் சூப்பராக இருந்தால் கொண்டாடுவாங்க. அடுத்து ஒரு படம், அதிலே வேறு ஒரு நடிகை அருமையா நடிச்சிருந்தா இந்தக் கேரக்டரை மறந்திடுவாங்க. அன்னைக்கு மொத்தமாவே ஒரு மொழிக்கு 20 நாயகிகள் கூட இருந்திருக்க மாட்டாங்க. எடுக்கும் அத்தனை படங்களிலும் அவங்கதான் நாயகிகள். இப்ப அப்படியில்லை. ஏகப்பட்ட ஹீரோயின்ஸ். மொழிகள் கடந்து இவங்களுக்கு மார்க்கெட் இருக்கறதால பான் இந்தியா படங்களுக்கு எல்லா லேங்வேஜிலும் தெரிஞ்ச நடிகைகளை ஃபிக்ஸ் செய்து பொறுமையா, குவாலிட்டியோட எடுக்கறாங்க.

ஆடிஷன் முறைகளே கைகள்ல இருக்கற மொபைலில் வந்திடுச்சு. யாரு வேண்டுமானாலும் நடிக்கலாம் என்கிற சூழல் உண்டாகிடுச்சு. திறமை போதும். ஒரு படம் ஆரம்பிக்கும் போது அப்போதைக்கு டிரெண்டிங்கில் யார் இருக்காங்களோ அவங்கதான் முதல் சாய்ஸில் இருப்பாங்க. இதற்கு சோஷியல் மீடியாக்களும் கூட சப்போர்ட்டா இருக்கு.

‘ஜிகர்தண்டா டபுள் XL’ படத்தின் படக்குழுப் பட்டியலில் உங்களை மறைத்து வைத்துவிட்டார்களே..?

அப்படியா!? அட நானே இதைக் கவனிக்கலை பாருங்களேன். கார்த்திக் சுப்புராஜ் என் கிட்டே சொல்லும் போதே ‘உங்க கேரக்டர் ரொம்ப சர்ப்ரைஸ்’னு சொன்னார். என் சினிமா கரியரிலேயே, இதுவரையிலும் நான் நடிச்ச கேரக்டர்களிலேயே இது ரொம்ப ஸ்பெஷல். என்னால மறக்கவே முடியாத கேரக்டர். டீம் பட்டியலில் கூட என்னை மறைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்காருன்னா... அப்போ ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். ஹையோ எஸ்.ஜே சூர்யா சார்... என்ன மாதிரி நடிகர் அவர்! அவர்கூட ஸ்க்ரீன் ஷேரிங் நல்ல அனுபவம். ‘மிஷன் : சாப்டர் 1’ படத்தில் எனக்கு ஒரு மலையாள நர்ஸ் கேரக்டர்.

பிடித்த தமிழ்ப் படம், பிடித்த நடிகர், ட்ரீம் ரோல், ட்ரீம் இயக்குநர்..?

வெற்றிமாறன் சார், பா.இரஞ்சித் சார் மாதிரியான இயக்குநர்கள் படங்களில் நடிக்கணும். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் எனக்கு ட்ரீம் ரோல்களா அமைஞ்சதுதான்.
சமீபத்தில் ‘விடுதலை’ படம் பார்த்தேன். இப்படி ஒரு படத்திலே நடிக்கணும்ன்னு தோணுச்சு. பிடித்த நடிகர்னு சொல்வதை விட பிடித்த கதாபாத்திரங்கள்தான் என்னுடைய சாய்ஸ். அப்படி அதிகமா விஜய் சேதுபதி சாருடைய கேரக்டர்களை ரசிச்சிருக்கேன்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்