சமுத்ராயன்!



நிலவுக்கு சந்திராயன் 3, சூரியனுக்கு ஆதித்யா L1 போல கடலுக்குள் ஆராய்ச்சி செய்ய இந்தியா தயார். அதுதான் சமுத்ராயன்! ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டுமானத்தில் உள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலை ஆறு கிமீ கடல் ஆழத்துக்கு மூன்று பயணிகளுடன் அனுப்புவதே திட்டம்.  

உண்மையில் இந்தத் திட்டம், ஆழ்கடல் இயக்கத்தின் ஒரு பகுதி. இது நீலப் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கிறது. இந்தக் கொள்கையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
 ஆழ்கடல் ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஐந்தாண்டு காலத்தில் 4,077 கோடி ரூபாய் செலவழிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சமுத்ராயன் திட்டம் 2026ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் திட்டத்தின் மூலம் ரஷ்யா, ஃபிரான்ஸ், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆழ்கடல் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேருகிறது.

காம்ஸ் பாப்பா