ராக்கி அவுர் ராணி கீ பிரேம் கஹானி



திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்திப்படம், ‘ராக்கி அவுர் ராணி கீ பிரேம் கஹானி’. ‘அமேசான் ப்ரைமி’லும் காணக்கிடைக்கிறது.  பெரிய கோடீஸ்வர வீட்டுப் பையன், ராக்கி. ரொம்பவே பகட்டானவன். பெரிதாக படிப்பறிவு இல்லை. தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் பேசுபவன். பாட்டியோட கட்டுப்பாட்டில் ராக்கியோட குடும்பம் இருக்கிறது. ரொம்பவே பாரம்பரியத்தைப் பின்பற்றும், பெண் அடிமைத்தனம் நிலவுகின்ற குடும்பம்.

இன்னொரு பக்கம் ராக்கியைப் போலவே வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண், ராணி. புத்திசாலியான பெண். தொலைக்காட்சி சேனலில் வேலை செய்கிறாள். ரொம்பவே நவீனமான குடும்பம். குடும்ப உறுப்பினர்கள் எல்லாமே ஆங்கிலத்தில்தான் உரையாடிக் கொள்வார்கள். சமத்துவம் நிலவுகிற குடும்பம்.

ராக்கியும், ராணியும் எப்படிச் சந்திக்கின்றனர்... எதிரும் புதிருமான இருவருக்குள்ளும் எப்படி காதல் மலர்கிறது... ராணி குடும்பத்தினரின் மனதில் ராக்கியும்; ராக்கி குடும்பத்தினரின் மனதில் ராணியும் எப்படி இடம் பிடிக்கின்றனர்... என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை. ராக்கியாக ரன்வீர் சிங்கும், ராணியாக ஆலியா பட்டும் கலக்கியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் கரன் ஜோஹர்.

ஜானே ஜான்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் இந்திப்படம், ‘ஜானே ஜான்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. ஒரு மலைப்பிரதேசத்தில் உணவகத்தை நடத்தி வருகிறாள் மாயா. துணை சப் - இன்ஸ்பெக்டரான கணவர் அஜித்தை பிரிந்து, மகள் தாராவுடன் தனியாக வசிக்கிறாள்.

மாயாவின் வீட்டுக்கு அருகில் வசித்து வருகிறார் கணித ஆசிரியர் நரேன். ஒரு நாள் திடீரென மாயாவின் கடைக்கு வருகிறார் அஜித். பதறிப்போகிறாள். இனிமேல் இங்கே வரக்கூடாது என்று அஜித்தை அனுப்பி வைக்கிறாள். அடுத்த நாள் மாயாவின் வீட்டுக்கு வருகிறார் அஜித். அப்போது வீட்டில் தாராவும் இருக்கிறாள். மாயாவுக்கும் அஜித்துக்கும் இடையில் சண்டை ஏற்படுகிறது. மாயாவும், தாராவும் சேர்ந்து அஜித்தைக் கொன்றுவிடுகின்றனர்.

இந்தக் கொலையை மறைக்க மாயாவுக்கு ஆசிரியர் நரேன் உதவி செய்கிறார். காவல்துறைக்கு மாயாவின் மீது சந்தேகம் எழ, சூடுபிடிக்கிறது திரில்லிங் திரைக்கதை. ‘The Devotion of Suspect X’ என்ற நாவலை வைத்து ‘திருஷ்யம்’, ‘பாபநாசம்’ உட்பட ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. அந்த வரிசையில் தரமான படமாக மிளிர்கிறது ‘ஜானே ஜான்’. படத்தின் இயக்குநர் சுஜாய் கோஸ்.

த பிளாக் புக்

நல்ல விறுவிறுவென்ற ஆக்‌ஷன் படம் பார்க்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘த பிளாக் புக்’ எனும் ஆங்கிலப்படம்.
நைஜீரியாவின் ஆயில் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார் பேராசிரியர் கிரேக். ஆயில் துறையைச் சார்ந்த அமைச்சகத்தின் ஊழல்கள் கிரேக்கிற்குத் தெரிய வருகிறது. அதனால் ஒரு கும்பல் கிரேக்கின் கணவரையும், குழந்தையையும் கடத்தி, கொலை செய்துவிடுகிறது.  

இன்னொரு பக்கம் தேவாலயத்தில் பிரசங்கம் செய்துகொண்டிருக்கிறார் பால். அவருக்கு இளம் வயதில் ஒரு மகன் இருக்கிறான். கிரேக்கின் குடும்பத்தினரைக் கடத்தியவர்களைப் பிடிக்கச் சொல்லி காவல்துறைக்கு நெருக்கடி அதிகமாகிறது. பாலின் அப்பாவி மகனைப் பிடித்து, அவன்தான் கடத்தல்காரன் என்று பொய்க்குற்றம் சொல்லி, சுட்டுக் கொன்றுவிடுகிறது காவல்துறை.

மகனின் மரணத்துக்கான நீதியை வேண்டி காவல்துறையை அணுகுகிறார் பால். அங்கே அவருடைய வேண்டுகோளுக்கு யாருமே செவி சாய்ப்பதில்லை. வெகுண்டு எழும் பால், சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு, எப்படி தன் மகனின் மரணத்துக்கான நீதியைப் பெறுகிறார் என்பதே மீதிக்கதை.படத்தின் இயக்குநர் எடிட்டி எஃபியோங்.

ஹாஸ்டல் ஹு டுகாரு பெககிட்டரே

‘ஜீ5’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் கன்னடப் படம், ‘ஹாஸ்டல் ஹு டுகாரு பெககிட்டரே’. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன், அஜித். சினிமா இயக்குநராக வேண்டும் என்பது அவனது கனவு. நண்பர்களுடன் ஆண்களுக்கான ஒரு விடுதியில் தங்கியிருக்கிறான். விடுதி காப்பாளரான ரமேஷ்குமார் மாணவர்களிடம் ரொம்பவே கடுமையாக நடந்துகொள்வார். அவரை மையப்படுத்தி அஜித் ஒரு குறும்படம் எடுத்திருக்கிறான். அப்படத்தில் கதை எதார்த்தமாக இல்லை என்று நண்பர்கள் விமர்சிக்கின்றனர்.

தன்னுடைய படத்துக்கான கதையை அஜித் யோசித்துக்கொண்டிருக்க, அடுத்த நாள் நடக்கவிருக்கும் தேர்வுக்காக நண்பர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரமேஷ்குமார் தற்கொலை செய்துகொள்கிறார். மட்டுமல்ல, தன்னுடைய தற்கொலைக்கு அஜித்தும், அவனுடைய நண்பர்களும்தான் காரணம் என்று கடிதம் வேறு எழுதி வைத்திருக்கிறார்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். மாணவர்கள், விடுதி வாழ்க்கை, கல்லூரி என கலகலப்பாகச் செல்லும் திரைக்கதை நிறைய டுவிஸ்ட்களை வைத்திருக்கிறது. படத்தில் நடித்தவர்கள் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் நிதின் கிருஷ்ணமூர்த்தி.

தொகுப்பு: த.சக்திவேல்