மக்களுக்கு நல்லது செய்ய சாதி அவசியமில்லை!



‘‘பான் இந்திய சினிமாவாக வெற்றி பெற்ற ‘காந்தாரா’வில் அதிகம் அறியப்படாத கிராம மக்களின் வாழ்க்கையை சொல்லியிருந்தார்கள். அதுபோல் வட மாவட்டங்களின் அதிகம் சொல்லப்படாத வாழ்க்கையை ‘சீரன்’ படத்தில் சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் இது தமிழ் சினிமா சொல்ல மறந்த கதை...’’ உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் துரை கே.முருகன். இவர் பிரபல இயக்குநர் எம்.ராஜேஷிடம் சினிமா கற்றவர்.

‘சீரன்’...?

சிறப்பானவன். சீர்படுத்துபவன் என்று பொருள். இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை கிடையாது. என்னுடைய சொந்த மாவட்டம் திருவண்ணாமலை. அந்த மாவட்டத்துக்கு என நேட்ட்டிவிட்டி இருக்கிறது.ஓர் உதவி இயக்குநராக பல கம்பெனிகளுக்கு கதை சொல்வற்காக பலமுறை அலைந்திருக்கிறேன். 
என்னுடைய முதல் படத்தை க்ரைம் த்ரில்லர் ஜானர்ல பண்ணலாம்னு கதை ரெடி பண்ணியிருந்தேன்.எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் அழகு கார்த்திக் மூலம் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக் அறிமுகம் கிடைச்சது. என்னுடைய கதையை சொல்லி முடிச்சதும்,  தயாரிப்பாளர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை சொல்லி ‘அதைப் பண்ணலாமா’னு கேட்டார்.

அவர் தனிப்பட்ட முறையில் பல சாதிய கொடுமைகளை சந்தித்ததாகச் சொன்னார். அவரும் எங்க கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது அந்த சந்திப்பில்தான் தெரிஞ்சது. அவர் சொன்ன ஒவ்வொரு சம்வங்களையும் என்னால் சுலபமா புரிஞ்சுக்க முடிஞ்சது, என்னுடைய தாத்தா ஊர்ல செல்வாக்கான மனிதராக வாழ்ந்தவர். அவர் முரண்பாடுகளின் மூட்டையாகவும் சாதிய வன்மத்தோடும் வாழ்ந்தவர்னு அறியாப் பருவத்துல எனக்கு புரியலை.

தயாரிப்பாளர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்லும்போதுதான் அதை முழுமையாக என்னால் புரிஞ்சுகொள்ள முடிஞ்சது. சொல்லப்போனால் அந்த மாதிரியான கொடுமைகளை செஞ்சவர்களில் என்னுடைய தாத்தாவும் ஒருவர் என்று நினைக்கும்போது எனக்கே என் மீது வெறுப்பு வந்துச்சு.அந்த வகையில் இது பதிவு செய்யப்பட வேண்டிய கதையா தெரிஞ்சது. அது எந்த சாதிய குறியீடும் இல்லாமல் எல்லோருக்குமான படமாக வந்துள்ளது.

குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை ஊர் மக்கள் ஒதுக்கி வைக்கிறார்கள். அந்தக் குடும்பம் உலகமே வியக்குமளவுக்கு சாதனை படைக்கிறது. அந்தக் குடும்பத்தை ஊர் ஏற்றுக்கொண்டதா, இல்லையா என்பதை யதார்த்தமாக சொல்லியுள்ளேன்.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

இது வாழ்வியல் சார்ந்த கதை. ஆரம்பத்தில் சில ஹீரோக்களை அப்ரோச் பண்ணினேன். ஆனால், கதை சொல்ல வரும் விஷயத்தை நேரில் பார்த்து அனுபவிச்சவர் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக். முதலில் இந்தப் படத்தை ஒரு தயாரிப்பாளராகத்தான் தயாரிக்க முன் வந்தார்.கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தயாரிப்பாளரே பொருத்தமாக இருப்பார்னு தோணுச்சு. டெஸ்ட் ஷூட், மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் அவர்தான் ஹீரோனு முடிவு செஞ்சுட்டேன். 

படக்குழு சைட்லயிருந்தும் பாசிடிவ்வா சொன்னாங்க.ஜேம்ஸ் கார்த்திக், முதல் பட ஹீரோ போல் இல்லாமல் நான்கைந்து படங்களில் நடித்தவர்போல் தேர்ந்த நடிப்பைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். இளம் வயதுக்காரர், நாற்பது வயதுகாரர் என படத்தில் பலவிதமான பரிமாணங்களில் நடிக்க வேண்டும். எல்லா பரிமாணங்களுக்கும் பொருந்தும் உடல்மொழியுடன் அசத்தினார்.

நாயகியாக இனியா. அவர் நடித்தால் கதைக்கு கூடுதல் பலம் கிடைக்கும்னு கதை உருவாகும்போதே தெரிஞ்சது. ‘வாகைசூடவா’, ‘மெளன குரு’ போன்ற படங்களுக்காக எப்போதும் பேசப்படுபவர்.நாயகிக்கும் மூன்று பரிமாணங்களில் நடிக்கக் கூடிய கேரக்டர். அதற்கு சீனியரான அவர் சரியாக இருப்பார்னு தோணுச்சு.

 இனியாவை அவருடைய  ஆபீஸில் சந்தித்து கதை சொன்னேன்.கதை அவருக்கு பிடிச்சது. அதன் பிறகுதான் ‘யார் ஹீரோ’னு கேட்டார். அதுவரை ஹீரோ யார்னு தெரியாமல்தான் கதை கேட்டார். ‘கதை எனக்கு பிடிச்சதால நான் இந்தப் படம் பண்றேன்’னு சொன்னார்.

பூங்கோதை என்ற கேரக்டர்ல வர்றார். ஹீரோவுக்கு இணையான பவர்ஃபுல் கேரக்டர். பெர்ஃபாமராக பல இடங்களில் ஸ்கோர் பண்ணியிருப்பார். ஒரு காட்சியில் பல பேர் முன்னிலையில் அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கணும். அந்த காட்சியில் டயலாக் இருக்காது. 

அவர் கொடுத்த எக்ஸ்பிரஷனுக்கு யூனிட்ல இருந்தவர்கள் கண் கலங்கிவிட்டார்கள். ‘பருத்திவீரன்’ மாதிரியான லவ் போர்ஷனும் இருக்கு.சோனியா அகர்வால் ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட். தான் உண்டு, தன் வேலை உண்டு என வேலையில் கவனமாக இருப்பார். சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற முறையில் எனக்கே அவர் சில ஆலோசனை சொல்லியிருக்கிறார். அது யூஸ்ஃபுல்லா இருந்துச்சு.

‘ஆடுகளம்’ நரேன் முக்கியமான கேரக்டர்ல வர்றார். அருந்ததி நாயர், ‘போக்கிரி’ ஆர்யன், சென்றாயன், ஆஜித், சூப்பர்குட் சுப்பிரமணி, ‘பரியேறும் பெருமாள்’ வெங்கடேஷ், கிருஷா குரூப் என எல்லோருக்கும் ஸ்கிரீன் ஸ்பேஸ் இருந்ததால் கேரக்டரை பிரமாதப்படுத்தினார்கள்.இதுல நடித்துள்ள நடிகர், நடிகைகள் பல படங்கள் பண்ணியவர்கள். எனக்கு இது முதல் படம். படப்பிடிப்பில் எப்படிப்பட்ட ஒத்துழைப்பு கிடைக்கப்போகிறது என்ற சந்தேகம் இருந்துச்சு.

நான் அசோசியேட்டாக வேலை பார்த்த படங்களில் நடிகர், நடிகைகளின் பாடிலேங்வேஜ், ஒத்துழைப்பை கவனிச்சு இருக்கேன். இயக்குநர் விஷயம் உள்ளவர்னு தெரிஞ்சால் மட்டுமே புரிதலோட வேலை செய்வார்கள்.இயக்குநர் ராஜேஷ் சாரைத் தவிர்த்து சில இயக்குநர்களுடனும் வேலை செய்திருக்கிறேன். அப்போது டைரக்டர்களிடம் விஷயம் இல்லையென்றால் நடிகர்கள் இன்வால்வ்மென்ட்டுடன் வேலை செய்யாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

அந்த வகையில் படப்பிடிப்பு ஆரம்பிச்ச முதல் நாளிலிருந்து நடிகர், நடிகைகளிடமிருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது. அந்த மாதிரி ஒத்துழைப்பு இயக்குநர் தன் வேலையை சரியாக செய்தால் மட்டுமே கிடைக்கும். ஒரு இயக்குநரிடம் சரக்கு இல்லை என்றால் ஆர்ட்டிஸ்ட்டுகளிடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.

பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு பண்ணியுள்ளார். சந்தானம் நடிச்ச ‘சபாபதி’ பண்ணியவர். ரிச்சர்ட் எம்.நாதன் உதவியாளர். நாங்கள் உதவியாளராக இருக்கும்போதே நண்பர்கள். அவருக்கு என தனித்துவமான லைட்டிங் ஸ்டைல் இருக்கு. அந்த வகையில் விஷுவல்ஸ் பேசப்படும். நான் காம்ப்ரமைஸ் இல்லாமல் படம் பண்ணணும்னு நினைப்பேன். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதுல மூணு மியூசிக் டைரக்டர்கள் வேலை பார்த்துள்ளார்கள். பாடல்கள் ஜெரால்ட், சசிதரன். பின்னணி இசை ஜுபின். பாடல்களும், பின்னணி இசையும் பேசப்படுமளவுக்கு வந்துள்ளது.
நான்கு பாடல்கள். சிநேகன், கு.கார்த்திக் எழுதியுள்ளார்கள். ‘வேட்டையாடும் கருப்பசாமி...’ பாடல் பேசப்படுமளவுக்கு பிரம்மாண்டமாக வந்துள்ளது.

ஹீரோ தயாரிப்பாளர் என்பதால் படத்தை சுதந்திரமாக எடுக்க முடிஞ்சது. படம் ஆரம்பிச்ச சில நாட்களில் பட்ஜெட் நோக்கத்தோடுதான் ஷூட்டிங் நடந்துச்சு. என்னுடைய வேலை தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்ததால் டைரக்டர் கேட்பதை கொடுத்துவிடுங்கள்னு புரொடக்‌ஷன் ஹவுஸ்ல சொல்லிட்டார்.

நன்மை செய்வதற்கு சாதி தேவையில்லை என்பதுதான் மக்களுக்கான மெசேஜ். அதை வெகுஜன மக்கள் ரசிக்கும்படி கமர்ஷியல் ஃபார்முலாவில் சொல்லியுள்ளேன்.

உங்கள் இயக்குநர் ராஜேஷ்.எம் என்ன சொன்னார்?

சினிமாவுக்கு வரும் உதவி இயக்குநர்களில் யார் வீட்டில் சொல்லிவிட்டு வருகிறார்கள்..? நானும் அப்படிதான். அப்படி வீட்டை விட்டு ஓடி வந்த என்னை என்னுடைய அப்பா பல நாட்கள் தேடி அலைந்த சம்பவம் உண்டு.ராஜேஷ் சார் ஃப்ரெண்ட்லியான டைரக்டர். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ முதல் ‘கடவுள் இருக்கான் குமாரு’ வரை சாரிடம் இருந்தேன். 

அவரிடம் நான் கற்றுக்கொண்டது பொறுமை. இடியே வீழ்ந்தாலும் பதட்டமடைய மாட்டார். நான் டென்ஷன் பார்ட்டி. எனக்கிருக்கும் டென்ஷனுக்கு என்னால் படமே எடுக்க முடியாது என்பதுதான் நிஜம். நான் படம் முடித்திருக்கிறேன் என்றால் அது ராஜேஷ் சாரிடமிருந்து கற்று கொண்டவை.

ஆர்ட்டிஸ்ட்டை எப்படி டீல் பண்ணணும், தயாரிப்பாளரை எப்படி சேஃப்  பண்ணணும், யூனிட்டை எப்படி வழிநடத்தணும், ஒரு கதையை எப்படி வெகுஜனத்துக்கான சினிமாவாக மாத்துவது என மொத்த சினிமாவையும் அவரிடமிருந்துதான் கத்துக்கிட்டேன்.ராஜேஷ் சார் ஸ்டூடண்ட் என்பதால் அவர் படங்களில் இருக்கும் காமெடியை இதுல எதிர்பார்க்க வேண்டாம். என்னுடைய இயக்குநருக்கு பெருமை சேர்க்கும்படியான படமாக இருக்கும் என்பதை அழுத்தமாக என்னால் சொல்லமுடியும்.

எஸ்.ராஜா