சிறுகதை - நீலகண்டம்



குன்னூருக்குச் செல்லும் பிரதான சாலையிலிருந்து விலகி, ஒரு ஒற்றையடிப்பாதையில் கார் சற்றே குலுங்கித் திரும்பியபோது தூக்கத்திலிருந்து விழித்தேன். மழைச்சாரல் நனைத்த ஒரு குறுகிய புற்பாதை அது. இருபுறமும் நெடிய மரங்கள் வளர்ந்து மழைக் குளுமையை இரட்டிப்பாக்கிக் கொண்டிருந்தன. ஸ்வெட்டர் போட்டிருந்தும் குளிர் தாக்கியது. சற்று நகர்ந்து டிரைவ் செய்துகொண்டிருந்த அவன் தோளில் சாய்ந்துகொண்டேன்.

‘மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே...’ என்று ஸ்பீக்கரில் வழிந்துகொண்டிருந்த பாடல், இயல்பாகவே அவன் நெருக்கத்தை வேண்டியது. சற்றுத்தள்ளி அமர்ந்து, எனக்கு மிகவும் பிடித்த அவன் கழுத்தோரத்தில் அழுந்த முத்தம் வைத்தேன்.நீல் என்ற கார்ப்பரேட் பெயரால் வழங்கப்படும் நீலகண்டனை இவ்வளவு ஆழமாகக் காதலிப்பேன் என்று ஒருவருடம் முன்பு என்னிடம் யாரேனும் சொல்லியிருந்தால் அவர்களைக் கொன்றேயிருப்பேன்.அவனைப் பார்த்திராத நாள்களுக்கு முன்னால், ‘ப்ளூஃபாக்ஸ்’ என்ற சக பணியாளர்களின் வழங்குபெயரால்தான் அவனை அறிந்திருந்தேன். அதி தீவிர முசுடு. யார் அவன் ப்ராஜெக்ட்டுக்கு போனாலும் மன அழுத்தமின்றி திரும்பியதில்லை.

ஏதேனும் கோடிங் பிரச்னையென்றால் தாட்சண்யமேயின்றி ப்ராஜக்ட்டை விட்டு வெளியேற்றும் குரூரன். கார்ப்பரேட்டின் நகாசுகள் தெரியாத கோபக்காரன் என்றெல்லாம்தான் அவனைப்பற்றிய செய்திகள் எங்கெங்கும் விரவியிருந்தன. ஒருவகையில் எனக்கும் அவன் குணங்களில் பாதி உண்டென்பதால், இயல்பாகவே அவனைப்பார்க்கும் ஆர்வமும் இருந்தது. 

ஒரே கார்ப்பரேட்தான் என்றாலும், எங்களின் இரண்டு அலுவலகங்களுக்கும் சில கிலோமீட்டர்கள்தான் தூரம் என்றாலும், அவனைச் சந்திக்கும் வாய்ப்பு வாய்த்ததில்லை.
ஒரு பெரிய பன்னாட்டு ஃபைனான்ஸ் ப்ராஜக்ட்டின் மாட்யூல்களைச் சேர்ந்து மேலாண்மை செய்யும் பொறுப்பில் அவனுடன் சேர்த்து நியமிக்கப்பட்டபோதுதான், அவனின் அறிமுகமும், அணுக்கமும் கிடைத்தது.

அதுவரையில் கேள்விப்பட்டிருந்ததை வைத்து அவனைப்பற்றி கருப்பாய், குண்டாய், சொட்டைத்தலையாய் ஒரு கிழம் போன்ற தோற்றம்தான் மனதில் இருந்தது. அவனைப்
பார்த்த கணம், அவன் தோற்றத்தினாலேயே இந்த மனத்தடை உடைந்தது.“ஹாய், ஐ’ம் நீல்...”என்று கைகுலுக்கியபோது, அந்தக் கையின் மென்மை என்னைத்தாக்கியது. 

தினமும் ஜிம்முக்கு போகிறேன் என்று பார்த்தவுடனேயே சொல்லிவிடும் உடல்வாகு, ஈரானியச்சிவப்பு, இன் செய்யாது அலட்சியமாக விடப்பட்ட சட்டை, நீள் நாசி, சிறிய உதடுகள், கூர் கண்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக்கழுத்து... எல்லோருக்கும் இருக்கும் சராசரி கழுத்தை விட சற்றே உயரம் கூடிய, முறையாக மழிக்கப்பட்ட, ஒரு  மென் - வெண்வாழைத்தண்டு போன்ற நீள்கழுத்து.  

ஒரு சண்டைக்கோழியோடு சேர்ந்து முழுநேரமும் சவடாலாகத் தெரியலாம் என்றிருந்த அவனுக்கு அவன் தோற்றம் தந்த ஈர்ப்புதான் முதல் சுமையாக இருந்தது. போலவே இன்னொரு சக முசுடு என்ற வகையிலோ என்னவோ அவனுடன் எனக்கு எந்தப்பிரச்னையுமே எழவில்லை.

இயல்பாகவே எரிச்சலுடன் திரியும் எனக்கு அவனின் அர்த்தமுள்ள கோபங்களும், மிகத் தேர்ந்த வார்த்தைகளில் தவறுகளைக் கண்டிக்கும் பாணியும், ஏதேனும் பொறுக்கவே முடியாத குறையென்றால் மட்டுமே கீபோர்டை விட்டெறிவதும், காலால் சிபியூவை எட்டி உதைத்தலுமாக கார்ப்பரேட்டின் எந்தவித டெட்டால் தடவலுமற்ற எதேச்சாதிகாரத்தை பெருமளவு ரசித்தேன்.

அதுவுமில்லாமல் குரூரம் மிகும்போதெல்லாம் அதனைத் தொட்டுத்தழுவிக்கொண்டு வெளிவரும் நகைச்சுவை உணர்வு ஒன்று இருக்கிறது. அதுதான் என்னை அவன் பக்கம் ஈர்த்த பெருங்காரணி. அங்கேதான் விழுந்தேனா தெரியவில்லை.

அதிசீக்கிரமே அவன் மேல் காதலில் விழுந்தேன்.நாங்கள் எடுத்துக் கொண்டிருந்த ப்ராஜக்ட் பெரிய வெற்றி பெற்றது. அமெரிக்க விற்பனையாளன், தன் மொத்த வணிகத்தையும் எங்கள் நிறுவனம் சார்ந்து கவனிக்கச் சொல்லிப் பணித்தான். பெரும்பணம். கார்ப்பரேட் எங்களை தலை மேல் தூக்கிவைத்தது. அந்த வெற்றியைக்கொண்டாட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைத்தபோது அவனை மட்டும் காணவில்லை.

எனக்கு அவனோடு கொண்டாட வேண்டும் என்பதுதான் பேரவாவாக இருந்தது. பொதுவாக அவனை யார் அழைத்தாலும் போனை எடுக்க மாட்டான் என்பதே வழக்கம். எங்கே என்று ஒரு மெசேஜ் அனுப்பினேன். நெடுநேரம் கழித்து ‘தனித்த கொண்டாட்டத்தில் இருக்கிறேன்’ என்று ரிப்ளை வந்திருந்தது. ‘நான் வரலாமா’ என்ற கேள்விக்கு அதன்பின்பு சற்றேறக்
குறைய இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பதிலின்றி ஒரு லொகேஷன் மட்டும் வந்திருந்தது.எல்லாவற்றையும் அப்படியே நிராகரித்துக் கிளம்பினேன். கிழக்குக்கடற்கரைச்சாலையின் ஒரு முனையில், கூட்டமே இல்லாது இருந்தது அந்த க்ளப். ரூஃப் டாப்பின் ஒரு மூலையில் கடல் பார்த்து அமர்ந்திருந்தான்.

‘‘உங்க தனிக் கொண்டாட்டத்துல கரடி போல நுழைஞ்சுட்டேனா..?” என்றேன்“திருத்தம், நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள்...” என்றான்.‘நீ இப்படியெல்லாம் பேசி நான் கேட்டதே இல்லையேப்பா’ என்று மனதுக்குள் சினிமா வசனம் ஓடியது. அன்று இரவு வெகுநேரம் அவனுடன் பேசினேன். உள்ளே சென்றிருந்த ஆல்கஹால் பேச வைத்ததா தெரியாது. அப்போதும் அந்த சீரியசான முகத்துடன்தான் கேட்டுக்கொண்டிருந்தான். எந்த வித்தியாசமும் தெரியாத, எந்த தொந்தரவும் செய்யாத அதே ‘நான் நீ பேசுவதைக் கேட்கிறேன்’ முகம்.

ஒரு கட்டத்தில் அவன் சிறிய உதடுகள் செய்த மெளனப் புரட்சிதாளாது நெருங்கி அதனை முத்தமிட்டேன். அவன் அதை எதிர்பார்த்திருந்ததாகவே தோன்றியது. அந்த இரவின் முடிவில் நிகழ்ந்த சங்கமம் எங்களின் நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. உலகிற்கு எங்கள் இணைவை அறிவிக்கத் தயாரானேன்.பால்யத்திலிருந்தே தோழியும் ஹெச் ஆர் மேனேஜருமான சிநேகிதியிடம்தான் அதை முதலில் சொன்னேன். 

அவள் அதிர்ந்தாள். திட்டினாள். இதெல்லாம் ஒருவாரத்துல சரியாகிடும் என்று ஆறுதல்படுத்தினாள். ஆனால், அது சரியாகவில்லை என்றவுடன் கவலைப்பட்டாள். நான் உறுதியாய் இருப்பதைப்பார்த்தவுடன், “இது ஒரு கான்ஃபிடன்ஷியல் விஷயம்.  பெரும்பாலும் எங்கயும் சொல்லிடக் கூடாதுங்கறதுதான் கார்ப்பரேட் விதி. ஆனா, உனக்கும் தெரியாமப் போகக்கூடாதுங்கறதுக்காக சொல்றேன்...” என்று ஆரம்பித்தாள்.

கூர்ந்து கவனித்தேன்.‘‘நீல் வந்த புதுசுல அவன் மேல தொடர்ந்து புகார்கள் வந்துட்டு இருந்ததால ஒரு பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன் பண்ணோம். அதுல ஒரு திடுக்கிடும் விஷயம் தெரியவந்தது. இவன் சென்னை வர்றதுக்கு 4 வருஷத்துக்கு முன்னாடி நீலகிரி சேலாஸ் போலீஸ் ஸ்டேஷன்ல, அவன் மனைவி காணாமப் போயிட்டாங்கன்னு ஒரு புகார் கொடுத்திருந்தான்.
அந்த கேஸ் விசாரணை நடந்தப்ப,  ஒரு இன்ஸ்பெக்டர் இவன் மேலயும் சந்தேகம் இருக்குன்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்காரு.

அது நடந்த மூணு மாசத்துல அந்த இன்ஸ்பெக்டரும் காணாமப்போயிட்டாரு. அந்த கேஸ் காணாமற்போனவர்கள் லிஸ்ட்ல ரெண்டு பேரைச் சேர்த்ததோட முடிஞ்சுபோச்சு.
ஆனா, அந்த ஊர்ல அரசல் புரசலா இவனே இவன் மனைவியையும், அது கண்டுபுடிச்ச கோபத்துல இன்ஸ்பெக்டரையும் கொன்னிருப்பான்னு நிறைய பேர் பேசிக்கிட்டதாவும் சொல்றாங்க...” என்றாள் கவலையும், திகிலும் அப்பியிருந்த முகத்தோடு.அத்தனை நேரம் உறைந்துபோய்க் கேட்டுக்கொண்டிருந்த பின்னர், “இன்ட்ரஸ்ட்டிங்...” என்றேன்.

‘‘எத்தனை சுவாரசியமான ப்ரொஃபைல். முசுடு, கோபக்காரன், இப்போ கொலைகாரன். வாழ்க்கையில் சுவாரசியம் வேண்டாமோடி...” என்றேன் சிரிப்போடு.தலையில் அடித்துக்கொண்டு “உன்ன மாதிரி முசுட்டுக்கிறுக்குக்கு கொலைகாரப்பயதான் கிடைப்பான், ஒழி...” என்றாள்.

‘‘ஊர் சொல்றதையெல்லாம் நம்பணும்னா நீ ஒரு ஓடுகாலி... நான் புருஷனைக் கொன்னுட்டு அவன் சொத்தை எடுத்துக்கிட்ட திருடி. இது ரெண்டும் சரியா? நம்ம நியாயங்கள் நமக்குத்தானே தெரியும்...” என்றேன்.முறைத்தாள், பின்னர் யோசித்தவாறே திரும்பிவந்து, ‘‘அவனோட எங்க போனாலும் எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போ...” என்றுவிட்டுப்போனாள்.

ஆனால், அப்படியொன்றும் நீல் என்னை பயமுறுத்தவில்லை. அவன் வாழ்க்கைக்குள் நான் போனபிறகு மிகுந்த கனிவுடன்தான் இருந்தான். என்ன, எதுவுமே பேசமாட்டான். மற்றவர்களுக்கு இரண்டு வார்த்தை என்றால், எனக்கு 10 வார்த்தை. அவ்வளவே. உறவு கனிந்து அவன் அபார்ட்மெண்ட்டுக்கு போக வரத்தொடங்கி, உடல்கள் திறம்பட பேசிக்கொள்ளத் தொடங்கிய காலத்திற்குப் பிறகுகூட அதேதான். புன்னகை, பாவனை, கூடிப்போனால் நான்கைந்து வாக்கியங்கள், இவ்வளவுதான் உரையாடலின் மொத்த வடிவமே.

மற்றபடி எனது வாரயிறுதி இரவுகள் அவனால் வண்ணமயமாக்கப்பட்டன. அவனின் தனித்த உலகத்தில், அவனைத் தொந்தரவு செய்யாது நான் வந்துபோவதை அவன் ரசித்தான் என்பதை உணர்ந்துகொண்டேன். எப்படி அவன் என்னைப்பற்றிய எந்த கடந்தகால விபரங்களும் கேட்கவில்லையோ, நானும் அந்த எல்லையிலேயே நின்றுகொண்டு அவன் பிரியங்களில் கால் நனைத்துக்கொண்டிருந்தேன்.அவனாகவே போனவாரம் மெசேஜ் செய்தான்.

“வரும் நீண்ட வாரயிறுதிக்கு ஏதேனும் திட்டமிருக்கிறதா?”குறுகுறுப்பு ஓங்க, “ஆமாம், மிகப்பிடித்த ஒருவருடன், ஹனிமூன் போகலாம் என்று திட்டம்...” என்று மறுமொழி அனுப்பினேன்முதன்முறையாக அவனிடமிருந்து ஒரு சிரிப்பான பதிலாக வந்திருந்தது. கூடவே ‘‘வெள்ளி இரவு 11 மணிக்கு கிளம்பலாம்...” என்ற செய்தியும்.எங்கே போகிறோம் என்று நானும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. நள்ளிரவில் கிளம்பி, இதோ காலையில் நீலகிரி மலையேறிவிட்டோம். இந்தப்பயணம் இனிமையாகவே இருக்கிறது.

‘எண்ணம் மீறுது, வண்ணம் மாறுது கண்ணோரம்...’ என்று ஜானகியோடு இணைந்து பாடினேன். அதே மில்லிமீட்டர் புன்னகை தந்துவிட்டு மீண்டும் டிரைவ் செய்துகொண்டிருந்தான்.
தோளில் சாய்ந்தவாறே, “இப்பவாவது சொல்லுவியா... என்ன எந்த அதிதீவிர ரகசிய இடத்துக்கு கடத்திட்டுப்போறேன்னு...” என்றேன்.

தோள்களைக் குலுக்கி என்னை உசுப்பினான். நிமிர்ந்து பார்த்தபோது, சுட்டுவிரலை இடது பக்கம் நீட்டினான். சட்டென சிலிர்த்தது. ஒரு வினாடி நான் கனவில் இருப்பதாகவே நினைத்தேன்.ஓங்கி நெடிந்திருந்த பெருமலைகளுக்குக் கீழே ஒரு பெரிய நீரோடை, அதனை ஒட்டிய பெரும்புல்வெளி, அதன் ஓரத்தே ஒரு ஈரடுக்கு மரவீடு. ஒட்டி நீண்டு வளர்ந்த பெருமரங்கள். விழிக்குப் பெருஞ்சுவை கொடுத்த காட்சி.

“அது...”
“அதுதான் என் வீடு, ஹூம்ம், நம்ம வீடு...” என்றான்.ஆச்சர்யமும், மகிழ்வும் ஒரு சேர எகிற, காரின் மேற்பக்க சிறு கதவைத்திறந்து தலையை வெளியே விட்டு, கைகளை அகல விரித்து “ஊ...” என்று கத்தினேன். அது மலையெங்கும் எதிரொலித்தது. நெருங்க, நெருங்க மனதின் குதூகலம் அதிகரித்தது.கீழே ஒரு சிறிய சமையலறையும், கழிவறையும் இருந்தன. படியேறி மேலே சென்றால் ஒரு பெரிய படுக்கையறை. 

சுற்றிலும் கண்ணாடி ஜன்னல்கள். ஜன்னலுக்கு வெளியே இயற்கையின் பச்சையாவர்த்தனம். மிகவும் ரசனை மிகுந்து வீட்டையும் அதன் உட்புறத்தையும் உருவாக்கியிருந்தான்.  “ஒரு எளிய சமையல் பண்ணிட்றேன், சாப்பிடலாம்...” என்றான் பாதி வார்த்தைகளாகவும், மீதி ஜாடைகளாகவும். கட்டை விரலைத்தூக்கிக்காட்டினேன்.

ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே வந்தபோது, சமையல் மேடையில் இருந்த அந்தப் பெரிய பெரிய கத்திகள் கொண்ட ஸ்டாண்ட் கவனத்தை ஈர்த்தது.

“வெஜிட்டேரியன் சமையலுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய அசைவ கத்திகள்...” என்றேன், சிரிப்பை சற்று கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொண்டே.“யாரேனும் எதிரிகள் வந்தால்...” என்று சொல்லி, ஒரு கத்தியை வெளியில் இழுத்து, அவன் கழுத்தை வலது புறத்திலிருந்து இடதிற்கு பாவனையாக இழுத்து ‘‘க்ரீச்ச்...” என்று சொல்லி அவனது வழக்கமான மில்லிமீட்டர் புன்னகையைச் சிந்தினான். மேலும் கஷ்டப்பட்டு சிரித்தேன்.

அடி மனதிற்குள்ளும்,
அடிவயிற்றிற்குள்ளும் ஏதோ ஒன்று உருண்டது.
“நான் கொஞ்சம் வெளிய போய் சுத்திட்டு வரேனே...” என்றேன்.
“ஆல் யுவர்ஸ்...” என்றான் எதையோ காய்கறி பேடில் வெட்டிக்கொண்டே.

வெளியில் வந்தவுடன்தான், அந்த வீடு சவுண்ட்ப்ரூஃப் கொண்டிருக்கிறது என்பது உரைத்தது. சட்டென இயற்கையின் ஓசையும், ஸ்பரிசமும் வந்து தாக்கியது.
ஈரமும், குளிரும், நீரோடையின் ஒலியும், சுற்றிலும் சூழ்ந்திருந்த பறவை, பூச்சிகளின் ஒலிகளும் என்னவோ செய்தன. அத்தனை செளந்தர்யங்களும் ஒருசேர விழிகளைத் தாக்கின. எத்தனையோ கோடானு கோடி மகிழ்வுப்பாடல்கள் மனதிலிருந்து ஓடிவந்தன. கால்களுக்கு புது உத்வேகம் கிடைத்து உடனே அதன் அத்தனை சக்திகளையும் வெளிக்கொணரத் துடித்தது.

நடந்தேன், ஓடினேன், அந்த ஓடையின் ஒலிச்சேர்க்கையை மனது அத்தனை விரும்பியது. அதன் கரையில் நீண்டு விரிந்த புற்படுக்கையில் உடல் சாய்த்தேன். மனம் அதுநாள்வரை காணாத மகிழ்வுடன் ஆனந்தக்கூத்தாடியது. விழிகளை மூடி அந்தக்குளிரையும், ஓசைகளையும் உள்ளூர ஊற்றிக் கொண்டேன்.எவ்வளவு நேரம் அப்படி இருந்தேன் என்று தெரியவில்லை.

“சாப்பிடலாமா...”
என்ற குரல் கேட்டுத்தான் விழித்தேன். ஒரு ஆழ்கனவின் ஆக்கிரமிப்பிலிருந்து சட்டென்று தூக்கி வெளியே விட்டாற்போல திடுக்கிட்டு விழித்தேன். நீல் கைகளை நீட்டிக்கொண்டிருந்தான். அவன் கைகளைப்பிடித்து எழுந்தேன்.மிளகும், சீரகமும் தட்டிப்போட்டு, பூண்டும் கொத்தமல்லியும் மணக்கும் ரசமும், நுனி நாக்கில் உறைத்து தொண்டையில் இறங்கும்போது லேசாக இனித்த பருப்புத்துவையலும் அத்தனை நேர உடற்களைப்புக்கு மிகவும் ஏதுவாக இருந்தது அந்த உணவு. சாப்பிடும்போது அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. நிமிர்ந்து, வலது கை கட்டைவிரலையும், ஆட்காட்டி விரலையும் இணைத்து இதயம் போல மாற்றிக் காட்டினேன். கண் சிமிட்டினான்.நெருங்கி அணைத்துக்கொண்டேன்.

என் கண்களின் செருகலுக்குப்பொருள் தூக்கமா, காமமா என்பதை அவன் ஆலோசித்தான்.அப்படியே தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் தள்ளினான். நெகிழ்ந்த உடைகளினூடே, முகம் புதைத்தான். மென்மையாய், மிக மென்மையாய் அவன் முகம் பரவியது. அவன் சட்டையை அவிழ்த்தேன். எங்கும் சதை சேராது மிகத் தீர்க்கமாய் வடிவமைந்த உடல். மேலேறிப்பார்வையை என் ஆதர்ச கழுத்தில் வைத்தேன்.சில விநாடிகள் அதனையே உற்றுப்பார்த்தேன். மெல்லிய வாழைத்தண்டு, வளைவு நெளிவுகள் இல்லாத நீண்ட சங்கு, சற்றே அகலமான முள்ளங்கி, அத்தனை வெண்மையான நீண்ட கழுத்து அது. இடது கையால் அதனை வருடினேன்.

என் பார்வையின் லயம் புரியாது, புருவங்களை உயர்த்தி என்னவென்று பாவனையாய்க் கேட்டான். சிரித்தேன். சிரித்தான்.என் சிரிப்பின் ஓசையின் டெசிபல் உயர்ந்தபோது, புரியாது யோசனையாய்ப் பார்த்தான். அந்த மில்லிமீட்டர் புன்னகை அப்படியே இருந்தது.ஒளித்து வைத்திருந்த, அந்தப்பெரிய கத்தியை, மிக லாகவமாக அவன் கழுத்தில் இறக்கினேன். அந்த வாழைத்தண்டு கழுத்தை மிக அழகான ஒரு ரத்தக்கோடு கிழித்திருந்தது. கண்கள் செருகி இறந்து விழுமுன், ஏனோ ஒருமுறை வாய்கொள்ளாது சிரித்தான்.

சிவராமன் கணேசன்