மீண்டும் ஒரு டைட்டானிக்..?



மலைகள், கடல்கள், காடுகள், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த கட்டடங்கள்... என உலகில் இருக்கும் முக்கியமான இடங்களையெல்லாம் பார்த்துச் சலித்தவர்கள், ஒரு மாறுதலுக்காக முற்றிலும் புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவார்கள். அப்படி சுற்றுலா சென்ற உலகின் முன்னணி பணக்காரர்கள் 5 பேர் இப்போது தலைப்புச் செய்தியாகி இருக்கிறார்கள்.இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் (58), இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத் (48), அவரது மகன் சுலைமான் தாவூத் (19), ஃபிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிகாரி பால் ஹென்றி (77), ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) ஆகியோர்தான் அந்த சுற்றுலாப் பயணிகள்.

கடந்த 1912ம் ஆண்டில் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக அவர்கள் சென்ற நீர்மூழ்கிக் கப்பல், தொடர்பை இழந்தது. தேடுதலுக்குப் பின் அனைவரும் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கிடக்கும் பகுதியில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அகழ்வாராய்ச்சியாளர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு புறம் இந்தக் கப்பலின் எஞ்சிய பாகங்களைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் கடலின் ஆழம் வரை சென்று வருகிறார்கள்.

ஆனால், மற்ற இடங்களைப் பார்ப்பதுபோல், இந்தக் கப்பலை அத்தனை எளிதில் பார்க்க முடியாது. அதற்கு நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல வேண்டும். அதில் பல நாட்களுக்கான பிராண வாயு உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். அதற்கு பணம் ஏராளமாகத் தேவைப்படும் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே அங்கு சுற்றுலா செல்ல முடியும்.இந்தச் சூழலில்தான் டைட்டானிக் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங், இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத், ஃபிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிகாரி பால் ஹென்றி, ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் ஆகியோர் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள்.

கடலுக்குள் இறங்கிய ஒரு மணி 45 நிமிடங்களுக்குப் பிறகு, கடலுக்கு அடியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது அதன் தொடர்புகள் அறுந்தன.
உடனடியாக, சுற்றுலா நிறுவனம் இதுபற்றிய அபாய அறிவிப்பை வெளியிட்டது. என்ன இருந்தாலும் காணாமல் போனவர்கள் உலகின் பெரும் பணக்காரர்கள் அல்லவா? உடனே சர்வதேச அளவில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பாஸ்டன் நகரை மையமாகக் கொண்டு, அமெரிக்க கடலோர காவல் படையால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலைப் பொறுத்தவரை அதில் 65 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் எப்போதும் இருக்கும். ஆனால், கப்பல் காணாமல் போய் இரண்டு - மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், ஆக்சிஜன் முழுமையாகத் தீரும்முன் கப்பலைக் கண்டுபிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்னும் சில மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், கப்பல் மூழ்கிய இடத்துக்கு அருகில் இருந்து சில சத்தங்கள் கேட்டதாக சோனோகிராம் கருவி மூலம் செய்த ஆய்வில் தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து அந்த சத்தம் வந்த திசையில் சென்று நீர்மூழ்கிக் கப்பலைத் தேடியபோதுதான் ஐந்து பேரும் சடலமாகக் கிடைத்திருக்கிறார்கள்.

என்ன நடந்தது..?

ஒரேயொரு கண்ணாடி ஜன்னல், உட்கார்வதற்கு கொஞ்சம் இடம், சின்னதாக ஒரு கழிப்பறை, ஜில்லென்று குளிர்... அட்லாண்டிக் கடலடியில் காணாமல்போன டைட்டன் என்ற குட்டி நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிய வர்ணனைதான் இது.1912ம் ஆண்டு, அட்லாண்டிக் பெருங்கடலில் ஐஸ்பெர்க் எனப்படும் மிதக்கும் பனிப்பாறை மோதி டைட்டானிக் உல்லாசக் கப்பல் மூழ்கிப்
போனது. ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் வரும் காதலர்கள் ரோஸ், ஜேக் போலவே இந்தக் கப்பல் இப்போது 2 தனித்தனி துண்டுகளாக கடலின் அடியாழத்தில் கிடக்கிறது.
கடலில் மூழ்கிக்கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் கண்டுவர, ஓசன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம் நீர்மூழ்கிச் சேவையை நடத்தி வருகிறது.

12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் இருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்த்துவிட்டு திரும்பி வர 8 மணிநேரம் ஆகும். இதற்கான கட்டணம் 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். நம்மூர் கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்!இந்தமுறை டைட்டானிக் கப்பலைப் பார்த்துவர, ஓசன்கேட் நிறுவனத்தின் நிறுவனர், 3 பெரும் பணக்காரர்கள், கூடவே பைலட் ஒருவரும் சென்றிருந்தனர். எம்.வி.போலார் பிரின்ஸ் கப்பல்மூலம், டைட்டானிக் மூழ்கிக் கிடக்கும் கடற்பரப்பில் இந்த ஐந்து பேர்களும் டைட்டன் என்ற குட்டிநீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடலுக்குள் இறக்கிவிடப்பட்டனர்.

சரியாக ஒரு மணிநேரம் 45 நிமிடம்! 4 ஆயிரம் மீட்டர் ஆழம்! அதுவரை டைட்டன் குட்டி நீர்மூழ்கிக் கப்பல் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. பிறகு திடீரென தொலைத்
தொடர்பு அறுந்து போக,  ஒரு திகில் நிறைந்த திரைப்படம் போல பரபரப்பு தொடங்கி விட்டது.22 அடிநீளமுள்ள டைட்டன், 5 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சிறிய கடற்கலம். அதன் உள்ளே இருப்பில் இருக்கும் ஆக்சிஜன் காற்றை வைத்து 96 மணிநேரத்துக்கு மட்டுமே சுவாசிக்க முடியும்.

டைட்டன், ஏற்கெனவே 50 முறை சோதனை செய்யப்பட்ட கப்பல்தான். பலமுறை 13 ஆயிரத்து 123 அடி ஆழத்தை எல்லாம் தொட்டுவிட்டுத் திரும்பிய கப்பல்தான். ஆனால், விபத்து நடந்த பிறகுதான் இந்த குட்டிநீர்மூழ்கிக் கலத்தைப் பற்றிய பல தகவல்கள் வெளியே கொட்ட ஆரம்பித்திருக்கின்றன.‘டைட்டன் கலம், 5 அங்குல கனத்தில், வழக்கத்துக்கு மாறாக, மலிவான கார்பன் நாரிழை கூடவே டைட்டானியம் தகடுகளை கூட்டுச் சேர்த்து கட்டப்பட்ட கப்பல். போதாக்குறைக்கு, கோள வடிவத்துக்கு பதிலாக குழாய் வடிவமைப்பில் கட்டப்பட்ட கலம் இது. இந்த வடிவமைப்பு, கடலடி அழுத்தத்தை சமமாகப் பகிர்ந்து பரவச் செய்யாது.

டைட்டனில் உள்ள ஜன்னல் கண்ணாடி 1,300 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடியது. டைட்டன் கலத்துக்குள் கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரிக்காற்றை நீக்குவதற்கான ஸ்கிரப்பர் கருவி எதுவும் இல்லை...’ இப்படி கப்பல் கட்டுமான வல்லுநர்கள் குறை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.சரி.

டைட்டனுக்கு என்னதான் நடந்திருக்கும்? ஒருவேளை தொலைத் தொடர்பு கருவி பழுதாகி இருக்கலாம். அல்லது மின்சக்தி போயிருக்கலாம். மின்சக்தி போய்விட்டால் ஆக்சிஜன் காற்றின் அளவு குறைந்து, கரிக்காற்றை அதிகம் சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி சுவாசித்தால் அறுவை சிகிச்சைக்கு முன் அனஸ்தீசியா தருவார்களே, அதைப்போல மயக்கநிலை ஏற்படும். ரத்தநாளங்களில் கரிக்காற்று ஏறி ஹைபர்கேப்னியா என்ற நிலை ஏற்படும்.

டைட்டன் குட்டி நீர்மூழ்கிக்குள் ஏற்கெனவே குளிர் கொட்டமடித்தபடி இருக்கும். அந்தக் கலம் ஒருவேளை கடலடியில் தரைதட்டியிருந்தால், குளிர் அதிகமாகி உள்ளே இருப்பவர்களுக்கு ஹைப்போதெர்மியா நிலை ஏற்பட வாய்ப்புண்டு. மின்சக்தி இல்லாவிட்டால் இந்த குட்டி கலத்துக்குள் ஹீட்டர் வேலை செய்யாது. அது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். தவிர டைட்டனில் நீர்க்கசிவு ஏற்பட்டு அதனால்கூட விபத்து நேரிட்டிருக்கலாம்.

2014ம் ஆண்டு, மலேசிய பயணிகள் விமானமான எம்.எச்.370 காணாமல் போனபோது ஏற்பட்ட பரபரப்பு, 2000ம் ஆண்டில் ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான குர்ஸ்க் விபத்தில் சிக்கியபோது ஏற்பட்ட அதே பரபரப்பு, இப்போது டைட்டன் குட்டி நீர்மூழ்கிக் கப்பல் சம்பவத்திலும் ஏற்பட்டுள்ளது.

ஜான்சி