டார்க்நெட்



03. இணையம் Vs ரகசிய இணையம்

நீங்கள் ஒரு நல்ல ஷூ வாங்கலாம் என கூகுளில் தேடுகிறீர்கள். உடனே நாம் எந்த வலைத்தளம் சென்றாலும் ஷூ பற்றிய விளம்பரங்கள் வரும்.  எந்த செயலியைத் திறந்தாலும் ஷூ பற்றிய விளம்பரங்கள் குவியும். 
இதுதான் இணையத்தில் உள்ள சிக்கல்.நாம் பயன்படுத்தும் இணையம் என்பது முழுக்க முழுக்க நம் அடையாளங்களை, நம்மைப் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டே இருக்கும். திரட்டப்பட்ட தகவல்கள் இணைய நிறுவனங்களுக்கு பகிரப்படும்.  அப்படித்தான் நீங்கள் ஷூவைப் பற்றி இணையத்தில் தேட அந்தத் தகவல் பிற இணைய தளங்களுக்கும், செயலிகளுக்கும் பகிரப்பட்டுவிடும். இல்லை... இல்லை விற்கப்பட்டுவிடும்.  

அதாவது இணையத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளைக் குறித்து தேடும்போது நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் ஆரம்பித்து எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பது வரை பல்வேறு தகவல்களை சம்பந்தப்பட்ட பொருளின் நிறுவனங்கள் திரட்டிவிடும்.நீங்கள் ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப்  பயன்படுத்துகிறீர்கள்தானே? அதை எல்லாம் பணம் கொடுத்தா பயன்படுத்துகிறீர்கள்?  

இல்லை. அப்படி என்றால் அந்நிறுவனங்கள் பல கோடி பயனாளர்களின் தகவல்களைச் சேமித்து வைக்க பல லட்சம் டாலர்களை ஏன் செலவு செய்ய வேண்டும்..? அவர்களுக்கு வருமானம் எப்படிக் கிடைக்கிறது / வருகிறது..?

நீங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலியைப் பயன்படுத்தும் போது உங்களுக்கு காட்டப்படும் விளம்பரங்களில் இருந்து அந்நிறுவனங்களுக்கு வருமானம் வருகிறது.  
ஆனால், விளம்பரங்கள் கொடுக்கும் நிறுவனங்கள் தாங்கள் காண்பிக்கும் பொருளை கட்டாயம் வாங்க வைக்க அவர்களுக்கு உங்களைப் பற்றிய பல்வேறு தகவல்கள் தேவைப்படும். உங்களைப் பற்றி எவ்வளவு தகவல்கள் கிடைக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய தேவை என்ன என்பதை  கணிக்க முடியும்.  

இதற்காக டேட்டா சயின்ஸ் என்னும் ஒரு துறையே உருவாகி இருக்கிறது. அப்படி என்றால் உங்களைப் பற்றிய தகவல்களை சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம். இப்போது நீங்கள் பயன்படுத்தும் இணையம் என்பதை இப்படித் தகவல்களைச் சேகரித்து அதன் மூலம் லாபம் பார்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மட்டும்தான் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இணையத்தில் உள்ள தகவல் அரசியலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு இரண்டு அடிப்படையான விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

1. அனானிமிட்டி

2. பிரைவசி

இதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் பார்ப்போம். உங்கள் வீட்டினுள் நுழைந்து விடுகிறீர்கள். உள்ளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் தெருவில் இருப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால், வீட்டினுள் இன்னார்தான் தங்கியிருக்கிறார் என்ற தகவல் அவர்களுக்குத் தெரியும்.  இதை பிரைவசி எனலாம். அதாவது நீங்கள் யார் என்று தெரியும். ஆனால், வீட்டினுள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தெரியாது.

இப்போது நீங்கள் ஒரு முகமூடியைப் போட்டுக்கொண்டு உங்கள் தெருவில் நுழைகிறீர்கள். ஓடுகிறீர்கள், ஆடுகிறீர்கள்... இவை அனைத்தையும் தெருவில் இருக்கும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதாவது யாரோ ஒரு முகமூடி அணிந்த மனிதர் என்ன செய்கிறார் என்பது அவர்களுக்குத் தெரிகிறது; ஆனால், இந்த மனிதர் யார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.இதைத்தான் அனானிமிட்டி என்கிறோம்.

அதாவது நீங்கள் இணையதளத்தில் நுழைந்தவுடன் உங்களுடைய அடையாளங்கள், தகவல்கள், அந்தரங்க தகவல்கள் எதையுமே அந்த இணையத்தால்  சேகரிக்க முடியவில்லை... ஆனால், அந்த இணையத்தில் நுழைந்து நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்பதை அது சேகரிக்கும்... இதைத்தான் அனானிமஸ் ஆக இணையத்தில் இருப்பது என்று புரிந்து கொள்ளலாம்.

இணையம் என்பது முழுக்க முழுக்க தனியார் பெரு நிறுவனங்களால் நடத்தப்படுவது; அதேநேரம் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு லாபம் மட்டும்தான் குறி. அரசாங்கத்துக்கோ அரசுக்கு எதிரான எந்தக் கருத்தும் சமூகத்தில் பரவிவிடக்கூடாது என்பதில் குறி.

பெரு நிறுவனங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அறிவியல்பூர்வமாக, உளவியல் ரீதியாக உங்கள் கவனத்தை ஈர்க்கும். எதற்குத் தெரியுமா? தொடர்ந்து பணத்தைச் செலவழிக்கும் ஒரு  எந்திரமாக உங்களை மாற்ற. நீங்கள் எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்களோ அவ்வளவு அவர்களுக்கு லாபம். இணையத்தை உங்கள் தேவைக்காக நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று நம்பினால் இந்த உண்மை உங்களுக்கு கசப்பாக இருக்கும்.

உண்மையில் பெரு நிறுவனங்களின் லாபத்திற்காகத்தான் நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள்! இணையத்தில் நுழைந்த அடுத்த நொடியில் இருந்தே உங்கள் பணத்தை நீங்களே செலவு செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யும். உங்களைப் பற்றிய பல புதிய தகவல்களைச் சேகரித்து விற்று லாபம் பார்க்கும் பல கணினி நிழல்கள் உங்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.  

அப்படி என்றால் நமக்கு ஒரு பிரைவசியும் நம் தகவல்களுக்கு பாதுகாப்பும் தேவைதானே?

இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில்தான் இணையத்தில் நம் அடையாளங்களைக் கொடுக்காமல் ரகசியமாகப் பயன்படுத்தும் முறையை / தொழில்நுட்பத்தை பலரும் உருவாக்கினார்கள். 

அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த ரகசிய இணையமான டார்க் நெட் உருவானது. ஒருவிதத்தில் பார்த்தால் நல்ல நோக்கம் என்று தோன்றும். ஆனால், தவறான நபர்களிடம் அது சிக்கியிருப்பதால் அதன் நோக்கம் முழுவதும் தவறாகி விட்டது. “ஒவ்வொரு மனிதனுக்கும் பொது வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ரகசிய வாழ்க்கை என மூன்று வாழ்க்கைகள் உள்ளன...’’ என்கிறார் பிரபல எழுத்தாளரான மார்க்கோஸ்.

ஒரு மனிதனுக்கு எப்பொழுது தன் அடையாளங்கள் மறைந்து விட்டன எனத் தெரிகிறதோ அப்பொழுது உளவியல் ரீதியாக தன் அந்தரங்க ஆசைகளை செயல்படுத்தத் தொடங்கிவிடுவான்.அப்படித்தான் அடையாளங்கள் மறைய மறைய இந்த டார்க் நெட்டில் பலரது ரகசிய ஆசைகள் வெளிப்படத் தொடங்கின. பின்புதான் தெரிந்தது... ஒரு மனிதனின் ரகசிய வாழ்க்கை என்பது அவன் பொது வாழ்க்கையை விட பல மடங்கு லாபம் தரக்கூடியது என்பது!

போதாதா..? சைபர் கிரிமினல்கள் தங்கள் புதிய வியாபாரத்தளமாக இந்த ரகசிய இணையத்தை பயன்படுத்தத் தொடங்கினார்கள். டார்க் நெட் என்று வந்துவிட்டபின் சில்க் ரோடு எனும் டார்க் வெப்பைப் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. ஆனால், பேசத்தான் மிகவும் பயமாக உள்ளது.

(தொடரும்)

வினோத் ஆறுமுகம்