இது ஃப்ரெண்ட்ஷிப் மக்கா..! அஸ்வின் - முகென் ஜாலி டாக்



ரீல்ஸ், யூடியூப், டப்ஸ்மாஷ் என ‘மக்கா மக்கா...’ பாடல் டிரெண்டிங்கில் எங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பம்பா பாக்யா, சத்யபிரகாஷ் குரலில் கிட்டத்தட்ட ஃபிரெண்ட்ஷிப் ஆன்தமாக இளசுகள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘‘இந்தப் பாட்டுதான் எங்களை இன்னும் நெருக்கமா மாத்திடுச்சு. நல்ல நண்பன் கிடைச்ச ஃபீல்...’’ டிஜிட்டல் சென்சேஷன், இளம்பெண்களின் ட்ரீம் பாய்ஸ், கிரஷ் என ஆல்டைம் டிரெண்டிங் ஸ்டார்ஸ் அஸ்வின் குமார் மற்றும் முகென் ராவ் இருவரும் ஜாலியாக பேசத் தொடங்கினர்.  
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்..?

அஸ்வின்: செம ஹேப்பியா இருக்கு. அவர் சாங்ஸ்லாம் நாங்க ஸ்கூல் டேஸ்ல இருந்து கேட்டுட்டு இருக்கோம். அவர் பாடலுக்கே இப்போ நாங்க டான்ஸ் ஆடியிருக்கோம்ன்னு நினைக்கும் போது... என்ன சொல்ல... நோ வோர்ட்ஸ்.முகென் ராவ்: சந்தோஷம், துக்கம்... இப்படி எனக்கு எல்லாமே மியூசிக்தான். அதிலும் ஹாரிஸ் சார் பாட்டுக்கெல்லாம் தனி ஃபோல்டரே போட்டு வெச்சிருந்தேன். இன்னைக்கு அவர் மியூசிக்கில் நாங்க சூப்பர்ல மச்சி.  

‘மக்கா மக்கா...’ பாடலின் தீம் என்ன?

அஸ்வின்: ‘முஸ்தபா முஸ்தபா...’, ‘ஃபிரெண்ட்ஷிப்தான் சொத்து...’ இப்படி ஃபிரெண்ட்ஷிப்புக்கான பாடல்கள் குறைவாதான் இருக்கு. ரொம்ப அதிகமா இல்ல. அதிலும் சமீபத்திலே ஒரு பாட்டுக் கூட பெரிதா இல்லை. அந்த கேப்பை இந்தப் பாடல் சரி செய்யும். கொஞ்சம் நேட்டிவிட்டியா, லோக்கலா ஒரு ஸ்டைல் பாடல். திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை பக்கம் எல்லாம் இந்த ‘மக்கா’ வார்த்தை ரொம்ப ஃபேமஸ். அதனால் இந்த வார்த்தையிலே ஆரம்பம்.

முகென் ராவ்: பாடல் முழுக்க ஜாலியான ஃபிரெண்ட்ஷிப்தான். பா.விஜய் சார் வரிகளும் சூப்பர். ரெண்டு தீமா ஒண்ணு கிராமத்து கானா கெட்டப், இன்னொண்ணு சிட்டி லுக்ன்னு இந்தப் பாட்டில் நடனம் ஆடியிருக்கோம். எங்கே ஆரம்பித்தது இந்த ‘மக்கா...’ பயணம்..?

முகென்: நாங்க இப்போ மக்கா கேங் ஆகிட்டோம்! எனக்கு இந்த பாடல் பற்றி சொன்னது அஸ்வின்தான். அவர்கிட்டேதான் முதல்ல கேட்டிருக்காங்க. பாடல் தீம் கேட்டுட்டு என்னுடைய பெயரை அஸ்வின் சொல்லியிருக்கார். அதுவரைக்கும் ‘ஹாய்’, ‘பை’ல இருந்த எங்களுடைய நட்பு, இந்தப் பாடலுக்கு அப்பறம் நாங்க ரொம்ப நெருக்கமா ஆகிட்டோம். எனக்கும் பாடல் தீம் கேட்டதும்

பிடிச்சிருந்தது. மேலும் ஹாரிஸ் சார், சாண்டி மாஸ்டர், பா.விஜய் சார், டைரக்டர் கார்த்திக் அரசகுமார்னு டெக்னிக்கல் டீம் எல்லாமே டபுள், ட்ரிபிள் ட்ரீட்டா இருந்துச்சு.
அஸ்வின்: எப்பவுமே புதுசா எதாவது செய்யணும்னு தேடிட்டே இருப்பேன். அப்படித்தான் இந்தப் பாடலும் ஒரு புது முயற்சியா இருந்துச்சு. ஏன் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு.
ரெண்டு மெயின் கேரக்டர் பாடல்ல தேவைன்னு தெரிஞ்சதும், இன்னொருத்தரா முகென் சரியா இருப்பார்ன்னு தோணுச்சு. அப்படித்தான் ‘மக்கா மக்கா...’ நடந்தது. நிஜமாகவே நல்ல நண்பனா முகெனை பார்க்கறேன். எம்.எம் ஒரிஜினல்ஸ்தான் பாடலை ரிலீஸ் செய்யறாங்க. அவங்க கூட ஏற்கனவே சில டிவி ஷோக்கள் எல்லாம் வேலை செய்திருக்கேன்.  
அஸ்வினுடன் முகென் - முகெனுடன் அஸ்வின்..?

முகென்: வெளியே இருந்து பார்க்கற அஸ்வின் வேற, நெருங்கினதுக்கு அப்பறம் பார்த்த அஸ்வின் வேற. அவ்ளோ ஃபிரெண்ட்லி, செம ஜாலியான பெர்சன். எல்லாருக்கும் நல்லது நினைப்பார்.
அஸ்வின்: முகென்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் பின்னாடி ஒண்ணு, முன்னாடி ஒண்ணுன்னு பேசவே மாட்டார். அவருக்கு என்ன கிடைக்குதோ அதை கொண்டாடுகிற மனுஷன். எல்லாத்தையும் ஈஸியா எடுத்துப்பார். அதெல்லாம் நான் ரசிச்சேன். அவர் கூட பாஸிட்டிவ்வான ஃபீல் வந்திச்சு.

சின்னத்திரை டூ டிஜிட்டல் டூ வெள்ளித்திரை... என்னக் கத்துக்கிட்டீங்க?

அஸ்வின்: சினிமா முழுமையா வேறு விதமானது. சின்னத்திரை, டிஜிட்டல் இரண்டுமே ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் நம்மை மெனக்கெடாம கூட்டிட்டுப் போயிடும்.
ஆனால், சினிமா அப்படியில்லை. இந்த ஃபேமஸ் எல்லாம் அங்கே வேலைக்கே ஆகாது. நிறைய மெனக்கெடணும். திறமைய வெளிப்படுத்தணும். நல்ல கதையிலே நல்ல நடிப்பையும், திறமையையும் கொடுத்தாத்தான் மக்கள் நம்மை ஏத்துப்பாங்க. இன்னும் நிறைய பயணம் போக வேண்டியிருக்கு.

முகென்: என்னுடைய கரியர் முதல்ல ஆரம்பிச்சது மியூசிக்கில்தான். ரியாலிட்டி ஷோ வேறு. நாம யாரு, நம்ம ஒரிஜினல் கேரக்டர் என்னன்னு காட்டதான் சின்னத்திரை பயன்படும்.
ஆனால், சினிமாவிலே நான் யார் என்கிறதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். திறமை இருந்தா மக்கள் ஏத்துப்பாங்க. அங்கே இயக்குநர் என்ன கேரக்டர் கொடுக்கறாரோ அதைத்தான் நான் எடுத்து அதிலே வாழணும். அதனால் இன்னும் நாங்க கத்துக்கிட்டுதான் இருக்கோம், நிறைய கத்துக்கணும்.  

நடனம்... உங்க பாய்ஸ் கேங் சாண்டி... ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது?

அஸ்வின்: அதை ஏன் கேட்கறீங்க... செம ஃபன். அவர்கிட்டே எப்பவுமே ஒரு எதார்த்தமான குணம் இருக்கும். அந்தப் பக்கம் கமல் சார்கூட வேலை செய்வார், இங்கே எங்ககூடவும் வேலை செய்வார். ஆனால், அந்த பந்தா அவர்கிட்டே கொஞ்சம் கூட இருக்காது. ஸ்டெப்ஸ் கூட எனக்கு என்ன வருமோ அந்த ஸ்டெப், முகெனுக்கு என்ன ஸ்டெப் வருமோ அதுதான். அவங்கவங்க ஸ்டைலை டான்ஸில் கொண்டு வருவதில் கில்லாடி சாண்டி மாஸ்டர். என்னைவிட முகென், சாண்டி மாஸ்டர் கூட அதிகம் பழக்கம். நீ சொல்லு மச்சி.

முகென் ராவ்: அவர்கூட நிறைய நாட்கள் ஒண்ணா சுத்தியிருக்கேன். ரியல்லி அஸ்வின் சொன்ன மாதிரி செம ஃபிரெண்ட்லி. ஈஸியா யாரையும் தன்னுடைய ஸ்டைலுக்கு ஜாலியா மாத்திடுவார். அவருடைய கமிட்மெண்ட் ரொம்ப பிடிக்கும். பேக்ரவுண்ட்ல இருக்கவங்க கூட அவருக்கு சரியா ஆடணும்ன்னு கவனமா இருப்பார்’.
ரெண்டு பேருக்குமே ஆன்லைன், ஆஃப்லைன் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. ஏன் படங்கள் வெளியாக தாமதமாகுது?

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே -முகென்: நல்ல கேள்வி... ஆனால், சினிமாவைப் பொறுத்தவரை எங்க கையிலே எதுவுமே இல்லை. அமையணும். குறிப்பா ஒரு கதைக்கு நாங்க பொருத்தமா இருக்கணும். நாங்க நிறைய மியூசிக் பாடல்கள் செய்யறதுக்குக் காரணம் எங்களை நாங்க ஆக்டிவ்வா வெச்சுக்கணும். இன்னைக்கு நம்மை நாமே பிஸியா வெச்சிக்கிட்டாதான் மக்கள் மறக்காம இருப்பாங்க. மியூசிக் வீடியோக்கள் மேக்கிங் சினிமாவைக் காட்டிலும் சுலபம். நம்மை நாமே ஆக்டிவ்வா வெச்சுக்க உதவியா இருக்கும். மக்கள்கிட்டே கனெக்ட்டா இருக்க முடியும்.  

அஸ்வின்: சினிமாவிலே எடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவு எடுக்க முடியாது. பார்த்துதான் எடுத்து வைக்கணும். அதேபோல ஒரு படம் கமிட் ஆகிட்டு, ஷூட் எல்லாம் முடிச்சிடுவோம். ஆனால், போஸ்ட் ப்ரொடக்‌ஷன், ரிலீஸ் எல்லாம் கொஞ்சம் டைம் எடுக்கும். அதற்கிடையிலே அப்பப்போ மியூசிக் வீடியோக்கள் செய்யும்போது ஆக்டிவ்வா இருப்போம்.
மியூசிக்தான் எல்லாருக்கும் கனெக்ட் ஆகும். சினிமா நம்ம கையிலே இல்லை. எங்களால் முடிஞ்ச பெஸ்ட் கொடுக்க முயற்சிக்கிறோம்.  

ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்து என்னென்ன படங்கள் இருக்கு?

அஸ்வின்: ஒரு படம் முழுமையா முடிஞ்சிடுச்சு. தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் சீக்கிரம் வரும். இடையிலே எனக்கு ஒரு சின்ன விபத்திலே அடிபட்டிருந்து சரியாகிடுச்சு. அதெல்லாம் முடிஞ்சு பேட்ச் ஒர்க் எல்லாம் முடிச்சு அடுத்த படம் சீக்கிரம் ஷூட் ஆரம்பிக்கப் போறேன். முகென்: ‘ஒத்தத் தாமரை’ மியூசிக் வீடியோ செய்த இயக்குநர் டி.ஆர்.பாலா இயக்கத்தில் ‘ஜின்’ அப்படின்னு ஒரு படம் முடிச்சிட்டேன். அடுத்து ‘வேலன்’ பட டீம் கூட இன்னொரு படம் இருக்கு. சீக்கிரம் அறிவிப்பு வரும்.  

நெகட்டிவ் கருத்துகள், சர்ச்சைகளை எப்படி பார்க்கறீங்க?

அஸ்வின்: யாரும் யாருடைய வாழ்க்கையையும் வாழ முடியாது. ஒவ்வொருத்தரும் என்னென்ன வாழ்க்கையிலே சந்திக்கிறோம், போராட்டங்களை கடக்கறோம்னு இருக்கு. சொல்றவங்க ஆயிரம் சொல்லலாம். ஆனால், அதனால் நடக்கற பிரச்னைகளை சந்திக்கப் போறது நாமதான். அதேபோல ஒரு செய்தி பரவினாகூட அதற்குப் பின்னாடி இருக்கற அடிப்படை என்ன, உண்மை என்னன்னு கூட பலரும் பார்க்கறதில்லை. இன்னைக்கு நான் இங்கே இந்த இடத்திலே நிற்கக் காரணம் என் அப்பா, அம்மா சொன்ன நோ வார்த்தையைக் கூட உடைச்சிட்டு, எந்த சப்போர்ட்டும் இல்லாமதான் இங்கே நிற்கறேன்.

இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. விமர்சனங்களில் நல்லது இருந்தா நிச்சயம் மாத்திக்கலாம். ஆனால், சும்மாவே டிரெண்டிங்காக சொல்ற கருத்துகளுக்கெல்லாம் நாம ரியாக்ட் செய்திட்டே இருந்தா நமக்குதான் மன அழுத்தம் அதிகமாகும். கொஞ்சம் மக்களும் அடிப்படை உண்மைகளைத் தெரிஞ்சு ரியாக்ட் செய்தா யாருக்குமே பிரச்னைகளும், மன அழுத்தமும் இருக்காது.   

ஷாலினி நியூட்டன்