தெய்வத் திருமகள்!



கேரளாவில் உள்ள திருச்சூரில் வசித்து வரும் ஓர் அழகான குடும்பத்துக்குச் சொந்தக்காரர், பிரதீஷ். அவருக்கு தன்யா என்ற மனைவியும், தேவானந்தா என்ற மகளும், அதிநாத் என்ற மகனும் உள்ளனர்.
உள்ளூரிலேயே ஒரு கடையைக் குத்தகைக்கு எடுத்து, இன்டர்நெட் மையத்தை நடத்தி வந்தார் பிரதீஷ். கடந்த அக்டோபர் வரையிலும் மகிழ்ச்சியாலும், அமைதியாலும் நிரம்பியிருந்தது அவரது குடும்பம். வெளிச்சம் மட்டுமே ஊடுருவியிருந்த பிரதீஷின் வீட்டுக்குள் மெல்ல, மெல்ல இருள் கசியத் தொடங்கியது.

அடுத்த சில நாட்களில் நிலைகுலைந்துபோனது பிரதீஷின் குடும்பம்.ஆம்; அக்டோபர் மாதத்தின் ஒரு நாள். இரவு தூக்கத்திலிருந்து காலையில் எழுந்தார் பிரதீஷ். அவரால் சரியாகப் பேசமுடியவில்லை. பேச முயன்றும் வார்த்தைகள் வெளிவரத் திணறியது. எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர் அவர். அன்று நாள் முழுவதும் சோர்வாக இருந்தார். முன்பு போல எந்த வேலையையும் அவரால் செய்ய இயலவில்லை. சில நேரங்களில் அவரது உணர்வுநிலைகூட சரியாக இயங்கவில்லை. மட்டுமல்ல, இரண்டு கால்களும் வீக்கமடைந்தன. எழுந்து நடக்கவே கடினப்பட்டார்.

தனது உடலுக்கு என்ன நேர்ந்தது என்று அவராலும், குடும்பத்தினராலும் யூகிக்கக்கூட முடியவில்லை. இத்தனைக்கும் அவரது வயது 48தான். மதுப்பழக்கம் இல்லாதவர்.உடனடியாக கொச்சியில் உள்ள ராஜகிரி மருத்துவமனைக்கு விரைந்தது அவரது குடும்பம். ராமச்சந்திரன் நாராயணமேனன் என்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரின் தலைமையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலில் துரித நேரத்தில் பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவருக்குக் கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மட்டுமல்ல, கல்லீரலைச் சுற்றி கொழுப்பு வேறு படிந்திருந்தது. பிரதீஷின் வருமானத்தையும், ஆதரவையும், இருப்பையும் நம்பியிருந்த குடும்பம் முழுவதுமாக இருளில் மூழ்கியது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே பிரதீஷின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. அதையும் விரைவில் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிகபட்சமாக ஆறு மாதங்கள் மட்டுமே பிரதீஷால் உயிருடன் இருக்க முடியும்.பிரதீஷின் குடும்பம் இருளிலிருந்து வெளிச்சத்துக்குத் திரும்ப வேண்டுமானால், அவர்கள் இரண்டு போராட்டங்களை வெற்றிகொள்ள வேண்டும்.

முதலாவது, பிரதீஷுக்குப் பொருத்தமான கல்லீரலை தானமாகக் கொடுக்க முன்வருபவரைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் ஒரு சில நாட்களில். பொதுவாக வெளியாட்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களைவிட குடும்ப உறுப்பினர்ளில்  ஒருவர்தான் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வருவார்கள்.

பிரதீஷின் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அவரது மனைவியின் இரத்த வகை பொருந்தவில்லை. அதனால் மனைவியின் கல்லீரலை தானம் செய்ய முடியாது. குழந்தைகள் இருவரும் மைனர்கள். இந்தியச் சட்டத்தில் மைனர்களால் உறுப்பு தானம் செய்ய முடியாது. உறவினர் ஒருவர் கல்லீரல் தானம் செய்ய முன் வந்தார். அவரும் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டார். இதுபோக கல்லீரல் தானத்துக்காகக் காத்திருப்பவர்களின் பட்டியல் நீளம். கல்லீரல் தானத்துக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அளவுக்கு பிரதீஷின் உடலில் சக்தியில்லை. இப்படியான இக்கட்டான சூழலில் கல்லீரல் தானம் செய்பவரைத் தீவிரமாகத் தேட ஆரம்பித்தது பிரதீஷின் குடும்பம்.

இரண்டாவது, அறுவை சிகிச்சைக்கான பணத்தைத் தயார் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஐம்பது லட்ச ரூபாயாவது கையில் இருக்க வேண்டும். இன்டர்நெட் மையத்தில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்த மட்டுமே போதுமானதாக இருந்தது. பெரிதாக சேமிப்பு எதுவும் இல்லை. வீட்டை அடமானம் வைப்பது மட்டுமே பணத்துக்கான ஒரே வழி. ஒருவேளை சிகிச்சையின்போது எதிர்மறையாக ஏதாவது நிகழ்ந்துவிட்டால் மனைவியும், குழந்தைகளும் எப்படி வீட்டை மீட்டெடுப்பார்கள் என்ற பயத்தினால் வீட்டை அடமானம் வைக்க பிரதீஷ் சம்மதிக்கவில்லை.

இந்த இரண்டு போராட்டங்களையும் வெற்றிகொண்டு எப்படி பிரதீஷின் குடும்பம் வெளிச்சத்துக்குத் திரும்பியது என்பது மிகவும் நெகிழ்ச்சியான கதை.மட்டுமல்ல, இந்த நவீன வாழ்க்கையிலும் குடும்ப உறவுகள் எவ்வளவு முக்கியமானது என்பதையும் நிரூபித்திருக்கிறது பிரதீஷின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள். ஒரு பக்கம் சிகிச்சைக்கான பொருளாதாரத் தேவை பிரதீஷின் குடும்பத்தை நொறுக்கிக் கொண்டிருந்தது; இன்னொரு பக்கம் உறுப்பு தானம் கிடைக்காத மன நெருக்கடி.

இதற்கிடையில் தந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது மகள் தேவானந்தாவை மிகவும் பாதித்தது. இன்னும் கொஞ்ச நாட்கள்தான் கைவசம் இருக்கின்றன. தந்தையின் இழப்பை குடும்பத்தினரால் தாங்க முடியாது. அதற்குள் தந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று மகளின் ஆழ்மனம் துடித்தது.‘‘உங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஏதாவது பிரச்னைகள் ஏற்படும்போது, அதை தீர்ப்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வீர்கள். அப்படித்தான் நானும்...’’ என்கிற தேவானந்தா, தந்தைக்குக் கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார்.

இதைப்பற்றி தந்தையிடம சொன்னபோது அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதுகுறித்து அம்மா யோசிக்கக்கூட இல்லை.பலவித பாசப்போராட்டங்களுக்குப் பிறகு, எல்லோரையும் சமாளித்து தந்தைக்குக் கல்லீரல் தானம் செய்ய குடும்பத்தினரிடமிருந்து அனுமதி பெற்றார் தேவானந்தா. அவரது இரத்த வகை தந்தைக்குக் கல்லீரல் தானம் செய்ய பொருத்தமாக இருந்தது.
இன்னொன்று, கல்லீரலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே தந்தைக்கு தானமாகக் கொடுக்கப் போகிறார். அப்படி தானமாகக் கொடுக்கப்பட்ட கல்லீரலும் கொஞ்ச நாட்களில் வளர்ந்துவிடும்.

தந்தைக்குக் கல்லீரல் தானம் செய்வதற்காக பல தடைகளை உடைத்த தேவானந்தாவுக்கு சட்டம் தடை விதித்தது. ஆம்; தேவானந்தாவின் வயது 17. இந்தியச் சட்டத்தில் 17 வயதுடையவர்கள் உறுப்பு தானம் செய்ய அனுமதியில்லை. மீண்டும் நிலைகுலைந்துபோனார் தேவானந்தா. குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. ஆனால், தேவானந்தா துவண்டு விடவில்லை. அன்பின் சட்டத்தின் முன்பு இந்தியச் சட்டம் அடிபணிந்தது.ஆம்; வழக்கறிஞர் ஷாஜியின் ஆலோசனைப்படி, கடந்த டிசம்பர் 20ம் தேதியன்று தந்தைக்கு உறுப்பு தானம் செய்ய அனுமதி வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தார் தேவானந்தா.

இது குறித்து முடிவு செய்வதற்காக மூன்று சிறப்பு மருத்துவர்கள் உட்பட ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ விசாரணைகளுக்குப் பிறகு தேவானந்தாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் விடுவதாக இல்லை. ஷாஜியின் உதவியுடன் தேவானந்தாவும், அம்மாவும் நிபுணர் குழுவிடம் மறுபடியும் முறையிட்டனர். பிரதீஷைக் காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி. குறுகிய காலமே இருப்பதால் பிரதீஷின் மகளால் மட்டுமே கல்லீரலை தானமாகக் கொடுக்க முடியும் என்ற வாதத்தை முன்வைத்துப் போராடினார் ஷாஜி.

இறுதியில் தேவானந்தாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது சட்டம்.கல்லீரல் தானம் செய்வதற்கான மருத்துவப் பரிசோதனைகள் வேகமாக நடந்தன. தேவானந்தாவின் கல்லீரலில் கொழுப்பு படிந்திருந்தது. கொழுப்பு படிந்த கல்லீரலை தானமாக வழங்க முடியாது. பல தடைகளைத் தாண்டிவந்த தேவானந்தாவுக்குத் தானே தடையாக இருப்பது பெரும் வருத்தத்தை அளித்தது. இருந்தாலும் அவர் சோர்வடையவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடுமையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஒரே மாதத்தில் தன்னுடைய கல்லீரலில் படிந்திருந்த கொழுப்பைக் காணாமல் போகச் செய்துவிட்டார் தேவானந்தா. மருத்துவர்களே அதிசயித்துவிட்டனர்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. முதலில் தேவானந்தாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குறிப்பிட்ட பகுதி கல்லீரல் எடுக்கப்பட்டது.
தேவானந்தாவின் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்தது ராஜகிரி மருத்துவமனை. மகளின் கல்லீரல் தந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. தேவானந்தாவுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகான உணவுக் கட்டுப்பாடு மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மருத்துவக் கண்காணிப்புகளுக்குப் பிறகு பிப்ரவரி மாத இறுதியில் வீடு திரும்பினார் தந்தை. அடுத்த சில நாட்களில் அவரது வாழ்க்கை இயல்புக்குத் திரும்பியது. இருந்தாலும் மே மாதம் வரை அவரது மருத்துவப் பரிசோதனைகள் தொடர்ந்தன. மீண்டும் பிரதீஷின் குடும்பத்தினுள் வெளிச்சம் பாய்ந்தது. மருத்துவத்தின் உன்னதத்தை அருகில் இருந்து தரிசித்ததால் எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறார் தேவானந்தா. அத்துடன் இந்தியாவில் உறுப்பு தானம் செய்த இளையவர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்திவிட்டார் இந்த தெய்வத்திருமகள்.

த.சக்திவேல்