மாமன்னன் சீக்ரெட்ஸ்



சேலத்தில் நடக்கும் கதை... வேறு ஓர் அடையாளத்துடன் இருக்கும்...

சினிமா எனும் ஊடகத்தை பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் சமூக மாற்றத்துக்கானதாகவும் பார்க்கும் வெகு சில இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
சிறிய விதை எப்படி ஆலமரமாக பரந்து, விரிந்து பிரமிப்பை உண்டாக்குகிறதோ அதுபோல்தான் இவருடைய ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற படைப்புகள் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கின.

அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்திருக்கும் ‘மாமன்னன்’ மிகுந்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ளது என்பதை டிரைலருக்கான வரவேற்பு சொல்லாமல் சொல்லியுள்ளது.
‘மாமன்னன்’ என படத்துக்கு பெயர் வைக்க என்ன காரணம்?

கதைக்கு வலுவான தலைப்பு தேவைப்பட்டுச்சு. என்னுடைய முந்தைய படங்களான ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற படங்களுக்கான தலைப்பு கதைக்கான பொருத்தத்தோடு இருந்திருக்கும்.‘மாமன்னன்’ பொறுத்தவரை அதிகாரத்தைக் குறிக்கும் ஒரு பெயராக இருக்கணும் என்ற அடிப்படையில் வைக்கப்பட்ட தலைப்பு. வழக்கம்போல் இந்தப் படமும் சமூக நீதி பேசும் படமாக இருக்கும். நிச்சயமாக எளிய மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்கள், மனவேதனை, அவர்களுக்கும் அதிகாரத்துக்குமான இடைவெளி என எல்லாவற்றையும் படம் பேசும்.
உதயநிதி...?

உதய் சாருக்கு என்னுடைய படங்கள் பிடிக்கும். ‘பரியேறும் பெருமாள்’ வெளியான சமயத்திலேயே சேர்ந்து படம் பண்ணலாமானு அவரிடமிருந்து அழைப்பு வந்துச்சு. பொது வாழ்க்கையில்  தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டதால் தன்னுடைய சினிமா கரியரில் கடைசிப் படமாக என்னுடைய இயக்கத்தில் படம் பண்ணணும் என்ற அவர் என்னை தேர்வு செய்தது மகிழ்ச்சியைக் கொடுத்துச்சு.

நான் சொன்ன கதை அவருக்கு பிடிச்சது. எனக்கிருக்கும் அரசியல் புரிதலைப் பற்றி அவருக்குத் தெரியும். அதனால், அவரும் கதையை உள்வாங்கும் விதத்திலும், கதையைப் புரிந்து கொள்வதிலும் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்துச்சு.

நடிகர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல தளங்களில் இயங்கிவரும் அவர் கதையின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொண்டது என்னுடைய வேலையை சுலபமாக்கியது. அந்த புரிதல் மூலம் கதையில் இருக்கும் எமோஷனல், கேரக்டர்களை உள்வாங்கும் விதம் என எல்லாவற்றையும் எளிதாக்கியது.

உதய நிதிக்காக கதையில் சமரசம் செய்தீர்களா?   

நானும் சமரசம் செய்யவில்லை. அவரும் சமரசம் செய்யுமளவுக்கு கொண்டு வரவில்லை. இது மாரிசெல்வராஜ் படமாகவே வரட்டும்னு சொல்லிட்டார். நான் கதையில் என்னவெல்லாம் யோசிச்சு வெச்சிருந்தேனோ அதையெல்லாம் உதய் சார் ஏற்றுக்கொண்டார்.

ஒரு படைப்பாளியாக, சினிமாவில்  எல்லாத்தையும் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், கதைக்கு என்ன தேவை, வெகுஜன மக்களுக்கு எதை காட்சிப்படுத்த வேண்டும் என்ற தெளிவு இருப்பதால் ஒரு இயக்குநருக்கு என்று இருக்கும் கட்டுப்பாட்டுடன் அரசியல் சார்ந்ததாக இருந்தாலும் சரி, விஷுவல்ஸாக இருந்தாலும் சரி எல்லாமே வரைமுறைக்குள்தான் இருக்கும்.

வெகுஜன சினிமாவில் சென்சார் எதை அனுமதிப்பார்கள், எதை அனுமதிக்கமாட்டார்கள் என்ற அடிப்படையில் வேண்டுமானால் சமரசம் இருக்குமே தவிர இயக்குநர் - நடிகர் இடையே எந்த சமரசமும் ஏற்படவில்லை.உதய் சாரின் பொதுவாழ்க்கை படத்துக்கு பெரியளவில் உதவியிருக்கு. தினம் தினம் பல்வேறு மனிதர்கள், நிகழ்வுகளை சந்திப்பதால் சாமான்யர்களின் எமோஷ்னலை அவரால் சரியாக கவனிச்சு பிரமாதமான நடிப்பை வழங்க முடிஞ்சது.

ஒரு இயக்குநராக அவரிடம் நடிப்பை வாங்குவதில் எந்தவித பிரச்சனையும் இருந்ததில்லை. எல்லாத்தையும் கரெக்ட்டா ஹேண்டில் பண்ணினார். மற்ற படங்களைவிட இதில் அதிகமா மெனக்கெடல் போட்டு நடிச்சார்.

அவருடைய உழைப்பு, கால்ஷீட், ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு,  எனக்கான சுதந்திரம் கொடுத்தது... என அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அதிகம். உதயநிதி என்றால் இப்படித்தான் நடிப்பார் என்ற பிம்பத்தை அவர் முந்தைய படங்களிலேயே உடைத்திருப்பார். இதுல அது முழுமை அடைஞ்ச மாதிரி இருக்கும்.  

உதயநிதியின் அரசியலுக்கு படம் உதவுமா?

அதை மக்கள்தான் முடிவு பண்ணணும். இயக்குநரும், நடிகரும் சேர்ந்து பேசி இப்படி பண்ணினால் நல்லா இருக்கும்னு பண்ணிய படம் இது. எது ப்ளஸ், எது மைனஸ் என்று முடிவெடுக்கும் உரிமை ரசிகர்கள் கையில்தான் உள்ளது.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரியார் ஒன்றும் செய்யவில்லை எனும் உங்கள் கருத்து இந்தப் படத்திலும் இடம் பெறுமா?

நான் அப்படிச் சொன்னதில்லை. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ மாதிரியான படங்கள் பெரியாரின் லட்சியத்தைப் பேசிய படங்களாகத் தான் வந்தன.  அத்துடன் என்னுடைய முந்தைய படங்களின் கதை எங்கு நடந்ததோ அங்கிருந்த அரசியல் சூழ்நிலையைத்தான் பேசினேன்.

‘மாமன்னன்’ சேலத்தில் நடக்கும் கதை. இது வேறு ஒரு அடையாளத்துடன் இருக்கும். நீங்கள் கேட்கும் கேள்விக்கு படத்துல விரிவான பதில் இருக்கு.

மகிழ்திருமேனியைவிட அதிகமாக எடுக்கிறார் என உதயநிதி சொன்னது பற்றி?

அது அவர் ஜாலிக்காகச் சொன்னது. இது டீம் ஒர்க். படம் நல்லா வரணும்னு எல்லோரும் ஒரேவித மனநிலையில் வேலை செய்தோம். அவர் என்னை நம்பி வந்திருக்கிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. உதய் சார் நடிகராக மட்டுமல்ல, அமைச்சராக பொதுவாழ்க்கையிலும் பரபரப்பாக இயங்கக் கூடியவர்.

அவருக்கு என்று பல பொறுப்புகள், கடமைகள் உண்டு. சினிமா நடிகராக மட்டும் இருந்திருந்தால் அவருக்கு கூடுதலாக படமாக்குவது பெரிய விஷயமாக இருந்திருக்காது. சினிமா, அரசியல் என மாறி மாறி இயங்குவதால் பயணங்கள், கடமைகள் காரணமாக அவருக்குள் இப்படியொரு மனநிலை ஏற்படுவது இயல்பானது.

ஆனால், அவர் என்ஜாய் பண்ணி இந்தப் படம் பண்ணினார் என்று என்னால்  சொல்லமுடியும்.மாரி செல்வராஜ் படம் இப்படித்தான் இருக்கும் என்கிற முன் முடிவுக்கு வருகிறார்களே... இது சரியா?

இப்படித்தான் இருக்கும் என்ற பார்வையில் பிற்போக்குத்தனம் இருக்காது என்ற முடிவுக்கு வந்தால் அதில் எனக்கு சம்மதமே. என்னுடைய படங்களில் பிற்போக்கு விஷயங்கள், அவசியமற்ற விஷுவல்ஸ் இருக்காது. சமூகத்தை பின்னோக்கிக் கொண்டு செல்லும் கண்ணோட்டம் இருக்காது என்ற முடிவுக்கு வந்தால் அதுல எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

ஆடியன்ஸ் அப்படி நம்பினாலும் அவர்களை சர்ப்ரைஸ் பண்ணுவது இயக்குநராக என்னுடைய கடமை. நான் ஆடியன்ஸை எப்படி உள்வாங்குகிறேன், என்னுடைய படைப்புலகத்தை அவர்களுக்கு நான் எப்படி கடத்துகிறேன் என்பது படத்துக்கு படம் எனக்கு சேலஞ்ஜ்.

‘வாழை’ வேற ஒரு தளம். பிற்போக்குத்தனத்தை ஆதரிப்பது, ஊக்குவிப்பது மாதிரி சந்தைப்படுத்த மாட்டேன் என்று ஆடியன்ஸ் நம்புவது எனக்கு சந்தோஷம்.
கமல்ஹாசன் என்ன சொன்னார்?கமல் சாரும் நானும் சேர்ந்து படம் பார்த்தோம். கண் இமைக்காமல் அவர் படம் பார்த்த அந்த தருணம் சிலிர்ப்பைத் தந்தது. அவருக்கு படம் பிடித்திருந்தது. சின்னச் சின்ன கேரக்டர் பற்றியும் விரிவாகக் கேட்டார். உதய் சார் இந்தப் படத்தை செலக்ட் பண்ணியதற்கு பாராட்டினார்.  

வடிவேலு...?சில கேரக்டர்கள் நம்முடைய கதைக்குள் வந்தால் எப்படி இருக்கும்னு யோசிப்போம். அப்படி ரொம்ப நாளாக என்னுடைய கற்பனை உலகத்தில் வடிவேல் சார் வந்தாலும் அது அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய படங்களில் நடக்கும் காரியம் அல்ல என்பது எனக்கும் தெரியும். ஒருவேளை கமர்ஷியல் படங்கள் எடுக்கும்போது அது நடந்திருக்கலாம். உதய் சார் இருப்பதால் வடிவேல் சாரிடம் கேட்டேன். நானே எதிர்பார்க்காத விதமாக வடிவேல் சார் சம்மதம் சொன்னார்.

ரசிகர்களுக்கு வடிவேல் சாரின் பங்களிப்பு வியப்பூட்டும் அனுபவமாக இருக்கும். இயக்குநராக எனக்கும் பல ஆச்சர்யங்கள் கொடுத்தார். நடிகராக அவர் தரும் அவுட்புட் அதிகம். எவ்வளவு சவாலான காட்சிகளாக இருந்தாலும் மிக எளிமையாக செய்கிறார். பகத் பாசில் மாதிரி டிரெண்ட்ல உள்ள இளம் நடிகருடன் சேர்ந்து நடிக்கும்போது அதை சமன்படுத்தி நடித்தது அருமை.

என் மீதும் உதய் சார் மீதும் உள்ள  நம்பிக்கையும், கதையும்தான் பகத் பாசில் சாரை உள்ளே கொண்டு வந்தது. பகத்தின் தனித்துவம், கதையை உள்வாங்கும் விதம். அவர் வாழாத வாழ்க்கையாக இருந்தாலும் அந்த கேரக்டரைப் புரிஞ்சு அதன் அடிமட்டம் வரை டிராவல் பண்ணி சிறந்த நடிப்பு வழங்கினார்.

ஆண்கள் பக்கம் எப்படி வலுவான நடிகர்கள் இருக்கிறார்களோ அது மாதிரி அவர்களுக்கு இணையாக இருக்குமளவுக்கு பெண் கேரக்டர் வலுவாக இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அதை கீர்த்தி சுரேஷ் அற்புதமாக  நியாயப்படுத்தியிருப்பார்.ஏ.ஆர்.ரஹ்மான்...?ரஹ்மான் சார் மியூசிக் என்பது நான் நினைத்துப் பார்க்க முடியாதது. உதய் சார் கொடுத்த பரிசு. படத்தை என்னுடன்தான் பார்ப்பேன் என்று ‘வாழை’ லோகேஷனுக்கு வந்து படம் பார்த்தார். ‘நல்ல படம். உங்களுடன் பணிபுரிவது சந்தோஷம்’னு கிளம்பிப் போனார்.

என் தயக்கத்தை எளிதாக்கி, அவருடன் நெருக்கமாக பழகும்படி செய்தபிறகே வேலையை ஆரம்பிச்சார். அவரின் அந்த அப்ரோச் மனதைத் தொட்டது. அவர் லெஜண்டாக இருந்தாலும் இயக்குநரிடம் ஒரு வார்த்தை கேட்பார். அதுதான் அவரிடம் எனக்கு பிடிச்சது. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். ‘கர்ணன்’, ‘வாழை’ சேர்ந்து பண்ணினோம். 

இது மூன்றாவது படம் என்பதால் எங்கள் புரிதல் எப்படி இருக்கும்னு சொல்ல வேண்டியதில்லை.‘வாழை’ எப்போது சாகுபடி?படப்பிடிப்பு முடிந்தது. இந்த வருட கடைசியில் வெளியீடு. துருவ் விக்ரம் படம் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அது முடிந்ததும் தனுஷ் சார் படம்.

எஸ்.ராஜா