நடிகைகள் வாழ்க்கை அவ்வளவு ஈஸி இல்ல!



‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவின் தங்கையாக சினிமாவிற்குள் என்ட்ரீ, ‘மாமா டவுசர் கிழிஞ்சிச்சு...’ என ஜாலி கேலியாக ‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் சினிமா நெஞ்சங்களைக் கவ்விக் கொண்ட கண்மணி சஞ்சிதா ஷெட்டி.
பத்து வருடங்களுக்கு மேல் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இப்போது முழுக்க முழுக்க எந்த மேக்கப்பும் இன்றி கிராமத்து அழகியாக ‘அழகிய கண்ணே’ படத்தில் நடித்திருக்கிறார். ‘‘ஐ’யம் லக்கினுதான் நினைக்கிறேன். இப்பவும் எனக்குன்னு ஒரு இடத்தை தமிழ் சினிமாவும்,  தமிழ் ரசிகர்களும் கொடுத்திருக்காங்க...’’ புன்னகைக்கிறார் சஞ்சிதா.

15 வருடங்கள் பயணம்... கற்றுக்கொண்டது என்ன?

இந்த வருஷம் மூணாவது படம் தியேட்டரில் ரிலீஸ் ஆயிருக்கு. 15 புது இயக்குநர்கள் கூட வேலை செய்திருக்கேன். அதனாலேயே ஒவ்வொரு படமும் ஒரு பாடமாதான் இருந்துச்சு. எல்லாமே பயிற்சிகள், அனுபவங்கள்.
மோகன்ராஜா சார், நலன் குமாரசாமி சார், வெங்கட் பிரபு சார், சமுத்திரக்கனி சார் இப்படியான இயக்குநர்கள் கிட்டே வேலை செய்யும்போது சினிமாவின் இன்னொரு அழகியலைக் கத்துக்க முடிஞ்சது. இதோ இப்ப அமீர் சார் கூட அடுத்த படம். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு பாடம்தான்.

‘அழகிய கண்ணே’ பட அனுபவம் குறித்து சொல்லுங்க? எப்போதும் இல்லாத சஞ்சிதாவைப் பார்க்க முடிந்ததே?

ஆக்சுவலி என்னுடைய ரியாலிட்டி லுக் அதுதான். வீட்டில் கூட சல்வார், சேலை இப்படித்தான் இருப்பேன். இந்தப் படத்தில் மேக்கப்பே எனக்கு கிடையாது. நான் நானாகவே நடிச்சிருக்கேன். படம் முழுக்க என் கேரக்டரும் ரொம்ப முக்கியத்துவமா நகரும். கையிலே ஆறு மாசக் குழந்தையை வெச்சிட்டே அழணும், சிரிக்கணும். குழந்தைய தூக்கவே நிறைய பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

நிறைய புது இயக்குநர்கள் கூட வேலை செய்திருக்கேன், அதனாலேயே ‘அழகிய கண்ணே’ ரொம்ப நெருக்கமான கதையா இருந்தது. ஒரு அசிஸ்டெண்ட் இயக்குநருடைய வாழ்க்கையிலே இருக்க சவால்கள்தான் கதை. அதனாலேயே பிடிச்சது.

வெளியிலிருந்து பார்த்தால் ஹீரோயின் வாழ்க்கை கலர்ஃபுல்லான, ஜிகினா வாழ்க்கை போல் இருக்கும். ஆனால், உண்மையில் இருக்கும் சவால்கள் என்ன?

நம்மை நாமே நிரூபிக்க ஓடணும். இதற்கு இடையிலே ஈஸியா கேரக்டர் ஜட்ஜ்மெண்ட் வேறு. தொடர்ந்து நமக்கான ஒரு இடத்தை பிடித்து நிற்கிறதே இங்கே பெரிய சவால்தான்.
அந்த விஷயத்தில் நான் ரொம்ப லக்கி.

ஆரம்பமே ‘தில்லாலங்கடி’ மாதிரியான ஒரு படம், தொடர்ந்து ‘சூது கவ்வும்’, ‘பீட்சா 2’, இதோ இப்ப ‘அழகிய கண்ணே’ படம் வரையிலும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. நாங்க எங்களை நிரூபிக்கறதுக்கான காலமும் ரொம்பக் கம்மி. இதற்கிடையிலே சர்ச்சை, பிரச்னைகள் எல்லாத்தையும் சந்திச்சு ஓடணும். நடிகைகள் வாழ்க்கை அவ்வளவு ஈஸி கிடையாது.

எதிர்மறையான சர்ச்சைகள்..?

நம்ம கூட இருக்கிறவங்களுக்கு தெரியும் நாம யாருன்னு. அப்பாவோ, அம்மாவோ, அண்ணன், தங்கச்சிகளோ, நெருங்கின நண்பர்களோ நம்ம கிட்ட ஒரு கருத்து வைக்கும் போது அதில் ஒரு அக்கறை இருக்கும். சம்பந்தமே இல்லாம ஒரு மூணாவது நபர் போகிற போக்கில் நான் என்ன நினைப்பேன், என் மனநிலை எப்படி மாறும், இதையெல்லாம் கூட பொருட்படுத்தாம கொடுக்கிற விமர்சனமா இருக்கட்டும் அல்லது சர்ச்சையான கருத்துகளாகட்டும் இதெல்லாம் காதிலே வாங்காம போறது நல்லது.

சர்ச்சையான கருத்துக்கள், விமர்சனங்கள் இதெல்லாம் என்னுடைய நடிப்புக்கும் நான் நடிக்கிற படத்துக்கும் வந்தால் ஓகே. ஆனால், என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றியோ அல்லது என் சார்ந்தோ சர்ச்சையான கருத்துக்கள் வந்தா அத முடிஞ்சவரைக்கும் மைண்டுக்கு எடுத்துக்கவே மாட்டேன். நானும் யாரோ ஒருத்தருக்கு மகளாகவும் யாரோ ஒருத்தருக்கு சகோதரியாகவும்தான் இருக்கேன். எனக்கு பின்னாடியும் ஒரு குடும்பம் இருக்கு. கமெண்ட் பண்றதுக்கு முன்னாடி அதை ஒரு முறை யோசிச்சாலே பலருக்கும் தவறான கமெண்ட் செய்யத் தோணாது.

பத்து வருடங்களுக்கு முன் சினிமாவிற்குள் வரும்போது சினிமா எப்படி இருந்தது... இப்போ எப்படி இருக்கு?

இப்ப திறமைக்கு அங்கீகாரம் நிறைய கிடைக்குது. நிறைய புதுப்புது இயக்குநர்கள், கிரியேட்டர்களை மக்கள் வரவேற்கறாங்க. இன்னைக்கு வாய்ப்புகள் நிறைய கிடைக்குது. குறிப்பா வெறும் மொழிப் படங்களா, மாநில படங்களா இல்லாம இந்திய படங்கள் நிறைய வர ஆரம்பிச்சிருக்கு. பெரிய பெரிய கலைஞர்கள், சின்னப் படங்கள், சின்ன கலைஞர்களை வாயாரப் பாராட்டத் தொடங்கி இருக்காங்க. கமல் சார் மாதிரியான ஒரு லெஜண்ட் நடிகர் ‘சூது கவ்வும்’ படம் மாதிரியான ஒரு அறிமுக டீமை சந்திக்கணும்ன்னு அவசியமே கிடையாது.
ஆனால், எங்களைக்  கூப்பிட்டு பாராட்டினார். சினிமாத்துறை ஆரோக்கியமா செயல்படுவதைப் பார்க்க முடியுது.

ட்ரீம் ரோல்..?

படம் முழுக்க நான், என்னைச் சுற்றி மட்டுமே நடக்கக்கூடிய கதையா ஒரு பயோபிக் கதையில் நடிக்கணும்னு ஆசை இருக்கு.

உங்க அடுத்தடுத்த படங்கள்..?

அமீர் சார் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவா ஒரு படம் நடிக்கிறார். அந்தப் படத்தில் நான் மெயின் லீட். படத்துக்கு மியூசிக் யுவன் சங்கர் ராஜா சார். அமீர் சாரும், யுவன் சாரும் சேர்ந்துதான் இந்தப் படத்தை தயாரிக்கிறாங்க. அந்தப் படம் முடிஞ்சிட்டு ரெண்டு மூணு கதைகள் கேட்டிருக்கேன். அதுல ஒரு படம் ஷூட் ஆரம்பிக்கப் போகுது. ஓடிடி பிளாட் ஃபார்ம்களிலும் சில கதைகள் சொல்லி இருக்காங்க. சரியான ரோல் அமைஞ்சா நிச்சயம் அங்கேயும் நடிப்பேன்.

படங்கள்: Aaron Prince Photography  

ஷாலினி நியூட்டன்