பட்டினி இல்லாத சென்னையை உருவாக்கணும்..!



கனவினை விவரிக்கும் நோ ஃபுட் வேஸ்ட் இயக்குநர்


‘‘நம் இந்தியாவில் ஒருபுறம் தேவைக்கு அதிகப்படியான உணவு தயாரிக்கப்படுது. அதேசமயம் இன்னொருபுறம் உணவு கிடைக்காமல் ஏங்கும் மக்களும் அதிகளவில் இருக்காங்க. நாங்க இதற்கிடையில் ஒரு பாலமாக இருந்து செயல்பட்டுட்டு வர்றோம். அதாவது, அதிகப்படியாக மீதமாகும் உணவை சேகரிச்சு, பசியோடு இருக்கும் மக்களுக்குக் கொடுக்குறோம். அதுமட்டுமல்ல; இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு நபர் 75 கிலோ உணவை தெரிந்தோ, தெரியாமலோ வீணடிக்கிறார்னு ஓர் ஆய்வு சொல்லுது.

இன்னொரு ஆய்வு, ‘உலகில் தயாரிக்கப்படும் உணவில் பத்து சதவீதம் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுது. இதற்கு செலவாகும் நீரானது இரண்டு நாடுகள் பயன்படுத்தும் அளவுக்
கானது’னு கணக்கிடுது. ஆக, உணவை வீணடிக்கும்போது அது தொடர்புடைய நீரும் வீணாகுது. அதனால, உணவை வீணடிக்கக்கூடாதுனு தொடர்ந்து விழிப்புணர்வும் செய்திட்டு வர்றோம்...’’ அத்தனை இயல்பாகப் பேசுகிறார் அருண்குமார்.

‘No Food Waste’ என்கிற தன்னார்வ அமைப்பின் சென்னை இயக்குனர் இவர். திருமணங்கள், விருந்துகள், நிகழ்வுகள், நிறுவனங்கள் போன்றவற்றில் மீதமாகும் அதிகப்படியான உணவை பசியுடன் இருப்பவர்களுக்கு மறுவிநியோகம் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு இது.
2014ல் கோவையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் சென்னை சேப்டரை 2017ல் சென்னையில் தொடங்கி அதன்வழியே சிறப்பான செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் இளைஞர் அருண்குமார். மக்கள் யாரும் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்கிற உயரிய நோக்கத்திற்காக தன் சொந்தப் பணியைத் துறந்துவிட்டு மற்றவர்களின் பசியைப்போக்க ஓடிக்கொண்டே இருப்பவர்.

‘‘சின்ன வயசுல இருந்தே வீட்டுல பெரியவங்க உணவை வீணடிக்கக் கூடாதுனும், உணவு விலை மதிப்பு இல்லாததுனும் சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. அந்த வார்த்தைகளே எனக்குள் உணவு பற்றின விழிப்புணர்வு விதையைத் தூவியது. பிறந்து வளர்ந்து படிச்சதெல்லாம் கரூர்ல. படிக்கிறப்பவே சமூக சேவை சார்ந்த வேலைகள்ல ஈடுபட்டேன்.

ஓய்வுநேரங்கள்ல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினேன். ஆதரவற்ற இல்லங்களுக்கு போய் என்னாலான சேவைகளைச் செய்தேன். வீட்டுல உள்ள ரேசன் பொருட்களை சேமிச்சு தேவையான நபர்களுக்கும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் கொடுத்திட்டு வந்தேன். அது இன்னமும் தொடர்ந்திட்டு இருக்கு.

பிறகு, பி.டெக் முடிச்சேன். அப்ப என் உறவினரின் வீட்டுல துக்க நிகழ்விற்கான காரியம் நடந்தது. அங்க சாப்பாடு மீதமாச்சு. அவங்க என்னை தொடர்பு கொண்டு ஆதரவற்ற இல்லத்துல போய் கொடுக்க முடியுமானு கேட்டாங்க. நான் ஒரு பாலமாக இருந்து உணவைக் கொடுத்திட்டு வந்தேன். அதிகப்படியான உணவை இப்படி மற்றவர்களுக்கு வழங்கி, அவர்களின் பசியைப் போக்கலாம் என்கிற சிந்தனை அங்கிருந்தே என்னுள் உருவாச்சு.

அப்புறம், வேலைக்காக சென்னைக்கு வந்துட்டேன். இங்கே பசி, பட்டினியை எல்லாம் சந்திச்சேன். ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டே என்னுடைய சமூக சேவை பணியையும் தொடர்ந்தேன். இங்கேயும் ஒரு நண்பர் மீதமான உணவைக் கொடுக்கணும்னு என்னிடம் சொன்னார். அவருக்கு உதவிகள் செய்தேன். அப்பதான் சில நண்பர்கள் மூலம், ‘No Food Waste’ பற்றித் தெரியவந்தது. உடனே, சென்னையில் தலைமையேற்று நடத்த ஆரம்பிச்சேன்...’’ என்கிறவர், செய்யும் ஒவ்வொரு பணியும் உன்னதமானது.   

‘‘விழாக்கள்ல ஐம்பதுக்கும் மேல் கைப்படாத உணவுகள் இருந்தால் அதை சேகரிச்சு வேண்டியவர்களுக்குக் கொடுக்குறோம். அதுக்குத் தேவையான வண்டி உள்ளிட்ட உதவிகளை அப்போது உணவுப் பாதுகாப்பு ஆணையராக இருந்த அமுதா ஐஏஎஸ் மேடம் அவங்க சொந்த செலவில் வாங்கித் தந்தாங்க. நிறைய சப்போர்ட்டும் செய்தாங்க.

பிறகு, உணவுப் பாதுகாப்புத்துறை மூலம் ஸ்பான்சர்கள் கார்ப்பரேட் சமூக பொறுப்புத் திட்டம் வழியே கிடைச்சது. அப்படியாக முதல்கட்டமாக தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்கள்ல ஒரு பைலட் வெர்ஷன் மாதிரி தொடங்கினோம்.  

அதாவது, இந்த ஏரியாக்கள்ல உள்ள திருமண மண்டபங்கள் உள்பட எந்தெந்த இடங்கள்ல உணவு வீணாகுமோ அதை கண்டறிந்து உணவை சேகரிக்க ஆரம்பிச்சோம். இதுக்கு சென்னை மாநகராட்சியும் சப்போர்ட் செய்தாங்க.

அப்புறம், ஆன்லைன்ல கேன்சலான ஆர்டர்ஸ் உணவை சேகரிச்சோம். பிறகு, சின்னச் சின்னதான சாய் கிங்ஸ் மாதிரி உள்ள கடைகள்ல தினமும் சமோசா, பப்ஸ் உள்ளிட்ட ஐட்டங்கள் மிச்சமாகும். இது எப்படியும் ஒரு பத்து பதினைந்தாவது வரும். அதையும் சேகரிச்சோம்.  

2019ல் ஐபிஎல் போட்டிகள் நடந்தப்ப அங்கிருந்த கேன்டீன்ல நிறைய உணவு தேவைக்கு அதிகமாக இருந்தது. அங்க உணவுப் பாதுகாப்புத்துறை மூலம் தகவல் கிடைச்சு போய் சேகரிச்சோம். அப்போதிலிருந்தே ஐபிஎல் போட்டிகள் நடக்கிறப்ப எல்லாம் அதிகப்படியாக மிச்சமாகும் உணவுகளைச் சேகரிக்கிறோம்.

இதை கோயம்பேடு, மெரினா பீச் உள்ளிட்ட இடங்கள்ல உள்ள துப்புரவுப் பணியாளர்கள், நள்ளிரவு நேர ஆட்டோ ஓட்டுநர்கள், தினக்கூலிகள், உணவுக்காக தவிப்பவர்கள் உள்ளிட்டவங்களுக்கு வழங்குவோம். இந்த உணவுகளைக் கொடுக்கும்போது உணவுப் பாதுகாப்புத்துறை வழிகாட்டுதல்படியே செய்வோம். அதேபோல, கெட்டுப்போகாத உணவுகளாகப் பார்த்து தரம் பிரிச்சே வழங்குவோம்.

இதுமட்டுமில்லாமல், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்ல உள்ள கேன்டீன்களுக்குப் போய் அதிகப்படியான உணவுகளைச் சேகரிக்கிறோம். அப்புறம், பெரிய மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களுக்கான உணவில் மீதமானவற்றைச் சேகரிக்கிறோம். அதாவது, வேலை பார்க்கிறவங்களுக்கு உணவு ஆர்டர் பண்ணும்போது தேவைக்கு அதிகமாகவே பண்ணுவாங்க. அதுல நிறைய மிச்சமாகும்.

உதாரணத்திற்கு, கடந்த வாரம் தொடர்ந்து ரெண்டு நாட்கள் மழை பெய்தது. அப்ப அலுவலகத்திற்கு சிலர் வராமல் இருந்தாங்க. அவங்க உணவு மீதமாகும் இல்லையா? அதை போய் நாங்க சேகரிப்போம். எங்களிடம் ஏழு ஆம்னி வண்டிகள் இருக்கு. நூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இருக்காங்க.

அவங்களால்தான் என்னால் எல்லாவற்றையும் எளிதாக செய்யமுடியுது. தவிர, என் குடும்பத்தினரும் என்னுடைய இந்தப் பணிக்கு பக்கபலமாக இருந்து நிறைய சப்போர்ட் செய்றாங்க. இப்ப அவங்க எல்லோருமே உணவை வீணடிக்கக்கூடாதுனு நினைக்கிறாங்க. என்னுடைய குழந்தையும் அதை உள்வாங்கி இருப்பதுதான் என்னுடைய வெற்றியாக நான் பார்க்கிறேன்...’’ என்கிறவர், வீணாகும் உணவை மட்டுமில்லாமல் புதிதாக உணவு தயாரித்தும் பலருக்கு அளிக்கிறார்.  

‘‘இது இல்லாமல் நாங்க பள்ளிக்கரணையில் சென்டர் கிச்சனும் வச்சிருக்கோம். இதை கோவிட் சமயத்துல ஆரம்பிச்சோம். அப்ப எல்லா நிறுவனங்களும் மூடிட்டாங்க. அதனால, நாங்களே உணவை சமைச்சு எடுத்திட்டுபோய் கொடுத்தோம். முதல்ல மாநிலம் விட்டு மாநிலம் வந்தவர்களும், தினக்கூலிகளும் ரொம்ப அவதிப்பட்டாங்க. அப்புறம், பள்ளிக்குப் போகமுடியாத பசங்க உணவில்லாமல் கஷ்டப்பட்டாங்க. எல்லோருக்கும் உணவு வழங்கினோம். இப்ப இதை ஸ்பான்சர் வாங்கி செய்றோம்.

தவிர பிறந்தநாள், திருமண நாளுக்கு யாராவது உணவளிக்கணும்னு நினைச்சால் எங்களை அணுகினால் போதும். நாங்களே சமைத்து ஆதரவற்ற இல்லங்கள்ல போய் கொடுத்திடுவோம். உரியவங்க நேர்ல வந்தால் அவங்க மூலம் தருவோம். இல்லனா நாங்களே வழங்கிடுவோம். அந்த செயல்பாடும் இப்ப போயிட்டு இருக்கு. எங்க சென்டர் கிச்சனுக்கு மளிகைப்பொருட்களாகவும் ஸ்பான்சர் தரலாம். அதில் சமையல் செய்து கொடுத்திடுவோம்.

இப்ப நாங்க பண்ற இந்த செயல்பாட்டைப் பார்த்து ஒருத்தங்க ரெகுலராக உணவு தயாரிச்சே தர்றாங்க. முதல்ல அவங்களுக்கு எங்கே போய் யாரிடம் கொடுக்குறதுனு தெரியாது. அதனால எங்களிடம் வந்தாங்க. எங்களுக்கு சென்னையில் ஹங்கர் ஸ்பாட் இடங்கள் எவைனு தெரியும். அவற்றை அடையாளம் கண்டிருக்கோம்.

அதாவது, மக்கள் பசியோடு எங்கே இருப்பாங்க. யாருக்கு தேவைனு எல்லாம் இந்த ஃபீல்டுல இருக்கிறதால தெரியும். அதனால, உணவு தயாரிச்சுத் தர்றவங்ககிட்ட இருந்து வாங்கிட்டுப் போய் தேவையானவங்களுக்குக் கொடுக்குறோம்.

இதை சென்னை மட்டுமில்லாமல் திருப்போரூர் அருகே உள்ள பழங்குடி மக்கள் வசிக்கிற பகுதிகள், செங்கல்பட்டு ஏரியா, காஞ்சிபுரம் பகுதியில்கூட போய் வழங்குறோம். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கும், அவங்க குடும்பத்தினருக்கும் கொடுக்குறோம்.

இதுல ஒரு பிரியாணி கடை தினமும் நானூறு சாப்பாடு பண்ணிக் கொடுக்கிறாங்க. இதில்லாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு வீட்டுல இருந்து குடும்பமாக சேர்ந்து வாரத்துக்கு 150 பேருக்கு பண்ணித் தர்றாங்க. அப்புறம், மயிலாப்பூர்ல ஒரு கேட்டரிங் நிறுவனம் திருமணத்துக்கு வர்றவங்களைத் தவிர்த்து அதிகமாக 40 பேருக்கு உணவு தயார் பண்ணி எங்களிடம் வழங்குறாங்க.

இவற்றையெல்லாம் நாங்க எடுத்திட்டுபோய் பசியானவர்களுக்கு வழங்குறோம். இந்தமாதிரி நம்மூர்ல பல நல்லுள்ளங்களும் இருக்காங்க. அவங்களால்தான் இன்னமும் இந்த உலகம் அற்புதமாக இயங்கிட்டு இருக்கு...’’ என்கிறவரின் கனவு, பசி, பட்டினியில்லாத சென்னை மாநகரம்.

‘‘எங்க இலக்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார  மாவட்டங்களில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதுதான். குறிப்பாக பட்டினியில்லாத சென்னை மாநகரை உருவாக்கணும் என்பதே எங்கள் கனவு. அதேபோல உணவையும் யாரும் வீணடிக்கக்கூடாது. இதுக்கான வேலைகளைத் தொடர்ந்து செய்திட்டு இருக்கோம்.

அப்புறம், சென்னையில் உள்ள 15 மண்டலத்திற்கும் ஒரு வண்டி இருக்கிறமாதிரி செய்யணும்னு ஆசையிருக்கு. அதன்வழியாக நிறைய உணவுகளை சேகரித்து தேவையானவர்களுக்கு வழங்கமுடியும். ஆனா, அதுக்கு ஸ்பான்சர்ஸ் வேணும். அந்த சப்போர்ட் மட்டும் கிடைத்தால் 200 கிமீ தூரம் போய்க்கூட உணவைக் கொடுக்க நாங்க ரெடி...’’ நம்பிக்கை மிளிர உற்சாகமாகச் சொல்கிறார் அருண்குமார்.

மீதமாகும் உணவுகளை என்ன செய்யலாம்?

‘‘இப்ப சென்னைக்கு, 99627 90877 என்ற ஹெல்ப் லைன் எண் வச்சிருக்கோம். இதுல யார் வேணாலும் எங்களை அழைக்கலாம். மீதமாகும் கைப்படாத உணவுகளை அளிக்கலாம். அல்லது புதிதாக தயாரிச்சு வழங்கவும் கேட்கலாம். எல்லாவற்றுக்கும் எங்களிடம் தன்னார்வலர்கள் இருக்காங்க. எல்லாவற்றையும் பண்ண நாங்களும் தயாராக இருக்கோம்...’’ என்கிறார் அருண்குமார்.

பேராச்சி கண்ணன்