சிறுகதை - அடையாளம்



அந்த வங்கியின் ஜலந்தர் கிளையின் இண்டர்னல் ஆடிட் இன்றோடு முடிந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் ஜலந்தர் கிளையின் மேலாளர் பிரதாப்பும் தமிழன்... ஆடிட் பண்ண வந்த அதிகாரி ஜகனும் தமிழன். இரண்டுபேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். நாற்பத்தைந்தை தாண்டாது. இரண்டு பேருமே வேலையில் ரொம்பவே நேர்மையாக சிரத்தை காட்டுபவர்கள். மிச்ச நேரத்தில் ஜாலியாக பேசிக் கொள்வார்கள்.

பிரதாப்பின் ஆட்கள் திறமைசாலிகளாக இருக்கவே அந்தக் கிளையில் அதிகம் பிரச்னை இருக்கவில்லை. கேட்ட விவரங்கள் எல்லாம் உடனே கிடைக்கவே ஜகனின் வேலையும் சுலபமாக முடிந்தது.இறுதியாக ஒரு ஸ்டேட்மெண்ட் தயார் செய்து அதில் பிரதாப்பின் கையெழுத்தைக் கோரினான் ஜகன்.காகிதத்தை வாங்கின பிரதாப் திரும்பத் திரும்பப் படித்தான். அதைப் பார்த்து ஜகனுக்கு சிரிப்பு வந்தது.
ஒரு வாரமாக பிரதாப்பை அவன் கவனித்துக்கொண்டிருக்கிறான். எதிலும் சந்தேகம். யாரையும் எதிலும் எளிதில் நம்ப மாட்டான் என்பது அவன் மற்றவர்களிடம் கேட்கும் கேள்விகளிலிருந்தே ஜகன் புரிந்து கொண்டான். பேங்க் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான். ஆனால், அதற்காக எதற்கெடுத்தாலும் இப்படி சந்தேகப்படுவது...

ஒரு வழியாக ஸ்டேட்மெண்டில் பிரதாப் கையெழுத்துப் போடவே ஜகன் அதை வாங்கி பையில் பத்திரப் படுத்திக் கொண்டான்.ஜகன் கிளம்பத் தயாரானவுடன், “ஜகன்... மறந்துடாதீங்க. ஏற்கனவே சொன்ன மாதிரி இன்னிக்கு நைட் உங்களுக்கு எங்க வீட்டுலதான் டின்னர். நான் ஹோட்டல் வந்து உங்களைப் பிக் அப் பண்ணிக்கறேன்...” பிரதாப் சொன்னவுடன் ஜகன் கொஞ்சம் தயங்கினான்.“எதுக்கு வீண் சிரமம்... இன்னிக்கு ஒரு நாள்தானே... ஹோட்டல்லயே...”ஜகன் முடிப்பதற்குள் பிரதாப் பிடிவாதமாக, “நோ நோ. எந்த சிரமமும் கிடையாது. என் வைஃப்கிட்ட காலைலயே நீங்க வரப்போறதா சொல்லிட்டேன்.

அவ எல்லா ஏற்பாடுகளும் பண்ணியிருப்பா. ஷி இஸ் எ வெரி குட் குக். அதனால நீங்க தைரியமா வந்து சாப்பிடலாம்...”‘‘அதுக்கில்லை...”“நோ நோ... எதுவும் நடக்காது. நீங்க வரீங்க. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் வைஃப்புக்கும் உங்க திருநெல்வேலிதான். அவகிட்ட உங்களைப் பத்திச் சொன்னவுடனே ஷி வாஸ் எக்ஸைடட். யாரு யாருன்னு கேட்டு துளைச்சு எடுத்திட்டா. எனக்கு சரியா சொல்லத் தெரியலை. அப்புறம் நேத்து நாம ஹோட்டல்ல லஞ்ச் சாப்பிடும்போது எடுத்த உங்க போட்டோவைக் காட்டினேன். ஆனா, அவளுக்கு அடையாளம் தெரியலை. இருந்தாலும் ஒரு எக்ஸைட்மெண்ட். என்னதான் இருந்தாலும் மண்வாசனை மண்வாசனைதான்...”இதைக் கேட்டு ஜகன் அலுத்துக் கொண்டான்.

“என்ன மண்வாசனை... சொந்த மண்ணை விட்டு மேல் படிப்புக்காக சென்னை வந்தேன். பேங்க் வேலை கிடைச்சு மொதல்ல பாம்பே... அப்புறம் தில்லி... இப்ப சண்டிகர். அதுவும் ஆடிட் அப்படிங்கறதுனால பஞ்சாப்ல அங்க இங்கச் சுத்திட்டிருக்கேன். உண்மையைச் சொல்லப் போனா மண்வாசனை சுத்தமா மறந்து போச்சு...”“ஏன் உங்களைச் சேர்ந்தவங்க இப்ப யாரும் திருநெல்வேலில இல்லையா?”‘‘அதான் ஏற்கனவே சொன்னேனே... பெத்தவங்களும் போயாச்சு. வேற உறவுன்னு சொல்லிக்க யாரும் கிடையாது...”‘‘நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒரு விஷயம் கேட்கலாமா? நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?”பதில் எதுவும் சொல்லாமல் ஜகன் லேசாக சிரித்தான். அதில் கொஞ்சம் விரக்தி தெரிந்தது.

ஹோட்டல் அறைக்கு திரும்பியவன் ஷூவைக் கழட்டிவிட்டு கட்டிலில் சாய்ந்தான்.“நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?”பிரதாப் கேட்டது மறுபடியும் மறுபடியும் அவன் செவிகளில் எதிரொலித்தது.‘‘ஆமாம்... கல்யாணம் பண்ணிக்கலை. கல்யாணம் பண்ணிக்கலை...”   மனம் ஓலமிட கண்களை மூடிக் கொண்டான்.அப்போது திருநெல்வேலி கல்லூரியில் ஜகன் பி.காம் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் கல்லூரி லைப்ரரியில் சில புத்தகங்களை ஆராய்ந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.

“எடுத்துக்குங்க...”இனிய குரல் கேட்டு தலை நிமிர்ந்தான். அவன் முன் அழகு தேவதையாக  அவள் படிய வாரிய இரட்டை ஜடையுடன் நின்றிருந்தாள். அழகான நெற்றியில் சிவப்புத் திலகம். காதுகளில் தொங்கிய தங்க டோலக்கு. கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி. பச்சை கலர் பட்டுப் பாவாடை. இளஞ் சிவப்பு கலர் சிந்தடிக் தாவணி. ஒடிசலாகவும் இல்லாமல் பூசினது போலவும் இல்லாமல் பார்ப்பவர்களின் பார்வையை தக்க வைத்துக் கொள்ளும் வசீகரம்.

ஜகன் அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..“ஹலோ... ஸ்வீட் எடுத்துக்குங்க...”மறுபடியும் அவள் குரல் கொடுத்தாள். அவனுடைய செவிகளில் அது தேவ கானமாக ஒலித்தது.மென்று விழுங்கி, “வந்து... எதுக்கு ஸ்வீட்?”பளிச்சென்று சொன்னாள். “எனக்குப் பிறந்த நாள். கிளாசுல எல்லாருக்கும் கொடுத்தாச்சு. லைப்ரரியனுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன். நீங்க கண்ணுல பட்டீங்க... அதான்... எடுத்துக்குங்க...”வழக்கமாக எல்லோரும் பிறந்த நாளுக்கு சாக்லெட்தான் கொடுப்பார்கள். ஆனால், அவள் நீட்டிய டப்பாவில் தேங்காய் பர்ப்பி இருந்தது.

“தேங்காய் பர்ப்பியா?”‘‘ஏன் உங்களுக்குப் பிடிக்காதா?”“நீங்க வேற... ரொம்பப் பிடிக்கும். சொல்லப் போனா எனக்குப் பிடிச்ச ஒரே ஸ்வீட் தேங்காய் பர்ப்பிதான்...”‘‘அப்படின்னா ரெண்டு எடுத்துக்குங்க...”இரண்டு கட்டிகளை எடுத்து அவன் கையில் திணித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ஜகன் சில விநாடிகள் பிரமிப்போடு உட்கார்ந்திருந்தான். ‘இதுவரை இவளை இந்தக் கல்லூரியில் பார்த்ததாக நினைவில்லையே. எந்த வகுப்பில் படிக்கிறாள்? இவள் பெயர் என்ன? எப்படி இவளை இதுவரை பார்க்காமல் மிஸ் பண்ணினேன்?’மறுநாளிலிருந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்ததுமே அவனுடைய கண்கள் அவளைத் தேடி அலைபாய்ந்தன.
மெதுவாக நண்பர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது... அவள் பெயர் மீனா. பி.எஸ்ஸி முதல் வருடம். அவன் பி.காம் மூன்றாம் வருடம்.அடுத்த ஒரு வாரத்தில் மறுபடியும் கல்லூரி லைப்ரரியில் அவளை சந்தித்தான். வலுக்கட்டாயமாகப் போய் பேசினான். அவளும் தயக்கமில்லாமல் பேசினாள். அதன் பிறகு அடிக்கடி சந்திப்புகள் நிகழ்ந்தன. பிறகு தினமும். கொஞ்சம் கொஞ்சமாக நட்பு அடுத்த கட்டத்துக்குத் தாவியது.

இதற்கிடையே ஜகன் பி.காம் முதல் வகுப்பில் பாஸ் பண்ணி அதே கல்லூரியில் எம்.காம் சேர முடிவு பண்ணியிருந்தான்.இந்த சமயத்தில் ஒரு நாள் தாமிரபரணி கரையோரம் ஜகனும் மீனாவும் இணைந்து உட்கார்திருந்தது மீனாவின் அப்பாவின் பார்வையில் பட... அவள்  வீட்டில் பிரளயம் வெடித்தது.ஜகனின் வீடு வரை அது தொடர்ந்தது. அக்கம் பக்கத்துக்கு முன்னால் மீனாவின் அப்பா தரக்குறைவாக பேசிய பேச்சில் ஜகனின் அப்பாவும் அம்மாவும் கூனிக் குறுகிப் போனார்கள்.அவமானம் தாங்காமல் அன்று இரவே இரண்டு பேரும் அரளி விதையின் உபயத்தை நாட... ஜகன் தனிமரமானான்.

பெற்றவர்களின் இறப்புக்குக் காரணமான மீனாவின் அப்பாவை கண்டம் துண்டமாக வெட்டிப் போட வேண்டும் என்று அவன் மனதில் வெறி. ஆனால், கட்டுப்படுத்திக்
கொண்டான்.மீனாவின் நினைப்பு கொஞ்சம் அலைக்கழிக்கத்தான் செய்தது. ஆனால், ரொம்பவே மெனக்கெட்டு அவளை மனதிலிருந்து ஒதுக்கினான். தொடர்ந்து அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் அப்பாவின் வீட்டை விற்றான். இருந்த நிலத்தை விற்றான்.

சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி எம்.காம் படித்தான். அவனுடைய அதிருஷ்டம் அவன் எம்.காம் முடிக்கும் தருவாயில் அவனுக்கு பேங்கில் ஆபீசர் வேலை கிடைத்தது.
ஆனால், மும்பையில் போஸ்டிங். யோசிக்காமல் போய் சேர்ந்தான். வேலையில் சேர்ந்த பிறகு பழசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனது. ஆனால், இதுவரை கல்யாணம் பண்ணிக் கொள்ளும் எண்ணம் மட்டும் அவன் மனதில் எழவில்லை. ஒரு வேளை இன்னும் அவன் மனதில் மீனா ஒட்டிக் கொண்டிருக்கிறாளோ என்று கூட சில சமயம் அவனுக்குத் தோன்றும். உடனே அந்த எண்ணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவான்.

இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதாப்பின் உபயத்தில் மீண்டும் மீனாவைப் பற்றின சிந்தனை.ஜகன் குளித்து உடை மாற்றி ரெடியாவதற்கும் பிரதாப் வருவதற்கும் சரியாக இருந்தது.

பிரதாப்பின் தனி வீடு ஒரு ஹவுஸிங் காலனிக்குள் கச்சிதமாக இருந்தது. வாடகை வீடுதான். வீட்டுக்கு முன்னால் சிறு தோட்டம். விளக்கு வெளிச்சத்தில் ரோஜா மலர்கள் ஜகனை சிரித்து வரவேற்றன.காலிங் பெல் அழைத்தவுடன் கதவு திறந்தது.பதினேழு பதினெட்டு வயதில் இளைஞன் நின்றிருந்தான்.‘‘மை ஒன்லி சன் அநிருத்... அநி திஸ் இஸ் ஜகன்...”
‘‘ஹாய்...”இந்தக் காலத்து இளைஞர்கள் பாணியில் கையசைத்து உடனே உள்ளே மறைந்தான்.வீடு ரொம்பவே நேர்த்தியாக இருந்தது.“ரேவதி... கெஸ்ட் வந்தாச்சு பாரு...”
பிரதாப் குரல் கொடுத்த சில விநாடிகளில் அவன் மனைவி ரேவதி உள்ளிருந்து வந்தாள்.

அவளைப் பார்த்த ஜகனுக்கு அதிர்ச்சி. மீனா... இவள் மீனாவா..? மீனாவேதான்.“ஜகன் என்ன அப்படிப் பார்க்கறீங்க? என் வைஃப் ரேவதி...”
ரேவதியா? இல்லை. இவள் ரேவதி இல்லை. மீனா. என்னுடைய மீனா.‘‘வாங்க வாங்க...உட்காருங்க...”ஜகனின் குழப்பம் புரியாமல் ரேவதி சாதாரணமாகச் சொன்னாள். அவளுக்கு ஜகனை தெரிந்ததாகவே படவில்லை.

“உங்களுக்கும் திருநெல்வேலியாமே? இவர் சொன்ன உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்தது. நம்ம ஊருலேர்ந்து ஒரு மனுஷரை எவ்வளவு நாள் கழிச்சு சந்திக்கப் போறோம்னு ஒரே பரபரப்பு...’’பிரதாப் சிரித்தான். “நான் சொல்லலை... மண்வாசனை...”“இருக்காதா பின்ன... என்ன இருந்தாலும் தாமிரபரணி தண்ணி குடிச்சு வளர்ந்தவங்களாச்சே... அந்த பாசம் இல்லாம போகுமா?”

ஜகனுக்கு இன்னும் குழப்பம் தீர்வில்லை. அச்சு அசல் மீனாவைப் போல் இருக்கும் இவள் மீனா இல்லையா? இல்லை. இவள் மீனாவேதான். என்ன... அப்போது பாவாடை தாவணி. இப்போது சூரிதார். அப்போது ரெட்டை ஜடை. இப்போது பார்லருக்குக் கட்டுப்பட்ட முடி. அப்போது போலவே இப்போதும் தயக்கமில்லாத பார்வை. பேச்சு.
ஜகன் தயக்கத்தோடு கேட்டான். “திருநெல்வேலில எந்த காலேஜுல படிச்சீங்க?”
“பாளையங்கோட்டை காலேஜுல...”

உடனே பிரதாபுக்கு சந்தேகம். “பாளையங்கோட்டையா? நீ   திருநெல்வேலிலனா படிச்சதா சொன்னே?”ரேவதி உடனே சலித்துக் கொண்டாள். ‘‘ஆமா. உங்களுக்கு எதுலயும் சந்தேகம்தான். கொஞ்சம் விட்டா நான் காலேஜ் போனேனா இல்லையான்னே சந்தேகம் வந்துருமே... திருநெல்வேலிலேர்ந்து எட்டிப் பார்த்தா பாளையங்கோட்டை. அதுவும் திருநெல்வேலிதான். அதான் சொன்னேன்...”பாளையங்கோட்டை காலேஜா? அப்ப ஒரு வேளை இந்த ரேவதி மீனாவின் அக்காவோ தங்கையாவோ? அச்சு அசல் அப்படியே இருக்கிறாளே...
‘‘உங்களுக்கு அக்கா தங்கை யாராவது இருக்காங்களா?’’

ரேவதி பளிச்சென்று சொன்னாள். “இல்லையே... பெத்தவங்களுக்கு நான் ஒரே வாரிசு...”ஜகனின் குழப்பம் இன்னும் அதிகமானது.உலகத்தில் ஒரே சாயலில் ஏழுபேர் இருப்பார்கள் என்று படித்திருக்கிறான். ஒரு வேளை...“நேரமாச்சு. சாப்பிட வாங்க...” ரேவதி சொன்னதும் பிரதாப்பும் ஜகனும் டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

‘‘உங்க மகன் சாப்பிடலையா?’’“ அவன் எப்பவும் தனியா தான் சாப்பிடுவான். அதுவும் காதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டு மொபைலை பார்த்திட்டே. இவர்தான் கத்துவார். ஏன்னா அவன் ஒழுங்கா சாப்பிடறானா இல்லையான்னு சந்தேகம் வந்துரும். இதை வெச்சு தினம் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் தகராறு...”பிரதாப் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

அதன் பிறகு சாப்பிட்டு முடிக்கும் வரை பொதுவான விஷயங்கள் பேசினார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக இது மீனா இல்லை... அவள் சாயலில் இருக்கும் ரேவதி என்று ஜகனும் நம்ப ஆரம்பித்தான்.சாப்பிட்டு முடித்ததும் ஜகன் கை அலம்பிக் கொண்டே, “சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது. இதுக்காகவே அடிக்கடி ஜலந்தருக்கு ஆடிட் பண்ண வரலாமோன்னு தோணறது...” என்றான்.“வாங்களேன்.

நீங்க ஆடிட் பண்ண வரீங்களோ இல்லையோ தாராளமா எங்க வீட்டுக்கு சாப்பிட வரலாம்...”ரேவதி இதைச் சொன்னவுடன் பிரதாப்பின் முகம் லேசாக சுருங்கியதை ஜகன் கவனிக்கத் தவறவில்லை.‘‘சரி... அப்ப நான் கிளம்பறேன்...”ஜகன் எழுந்ததும் ரேவதி ஒரு காகிதப் பையை நீட்டினாள்.“மொத தடவையா வீட்டுக்கு வந்திருக்கீங்க...”ஹோட்டல் அறைக்கு வந்து ஜகன் காகிதப் பையைப் பிரித்து அதிலிருந்த பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்தான்.
தேங்காய் பர்ப்பி.

எஸ்.எல்.நாணு