92 ஆண்டுகளில் முதல் பெண் நடுவர்!
உலகக் கோப்பை கால்பந்தில் போட்டிகளைப் போலவே ஸ்டெபானி ஃப்ராபார்ட்டின் பெயரும் பரபரப்பாகி இருக்கிறது. 92 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஜெர்மனி, கோஸ்டா ரிகா போட்டி முழுவதையும் பெண்களே நடுவர்களாக இருந்து நடத்தி முடித்துள்ளனர்.
 இதில், போட்டியின் நடுவராக ஸ்டெபானி இருக்க, பிரேசிலைச் சேர்ந்த நியூசா, மெக்சிகோவைச் சேர்ந்த கரன் டயஸ் இருவரும் அவருக்கு துணை புரிந்தனர். பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டெபானி ஃப்ராபார்ட் 2009ல் இருந்தே ஃபிபா சர்வதேச நடுவர்கள் பட்டியலில் உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஆண்கள் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் நடுவராகப் பணியாற்றி சாதனை செய்தவர். ஐரோப்பிய சாம்பியன்லீக், பெண்கள் உலகக் கோப்பை எனப் பலவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தன் தந்தையைப் பார்த்து கால்பந்தில் ஆர்வம் கொண்ட ஸ்டெபானி, சர்வதேச கால்பந்து வரலாறு மற்றும் புள்ளியியல் கூட்டமைப்பு (IFFHS) வழங்கும் உலகின் சிறந்த பெண் நடுவர் விருதினை மூன்று முறை பெற்றவர். இப்போது ஆண்கள் உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் பெண் நடுவர் என்கிற பெயரையும் பெற்றிருக்கிறார் 38 வயதே நிரம்பிய ஸ்டெபானி!
பி.கே.
|