மூர்க்கமாய் தாக்கும் கரடி மனித மூளையைத் தின்னுமா?
அந்தி நேரம். பாங்காடு. இடையே கொஞ்சமாய் ராகி வயல். நடுவே ஒற்றயடிப்பாதை. அது மண்சுவரால் ஆன ஒரு கூரை வீட்டின் முன்னே முற்றுப் பெற்றது. சூம்பிப் போன ஒரு காலையும், வளைந்த இன்னொரு காலையும் மாறி மாறி தூக்கி வைத்து விந்தி விந்தி நடந்து வருகிறார் ஈரய்யா. அவ்வப்போது கைத்தடி ஊன்றிக் கொள்கிறார்.
 இத்தனைக்கும் அவருக்கு 45 வயதுதான். நெற்றி முகமெல்லாம் குழி, குழியாய் தழும்புகள். ‘மறுபடி மாடு மேய்க்கப் போகலையா’ என்று கேட்டால் ‘இல்லைங்க அய்யா, போறதில்லை’ என்கிறார். ‘மறுபடி கரடி வந்து கடிச்சிடுமோ’ன்னு பயமோ என்று கேட்டால் தலையைச் சொறிந்து கொண்டு சிரிக்கிறார்.  ஐந்தாறு மாதங்கள் முன்பு இவரையே சந்தித்திருக்கிறோம். அப்போது தலை மொட்டையடித்து, இரண்டு கால்களிலும், கைகளிலும் கட்டுப் போட்டு, கரடி ஒன்று கடித்ததில் ரொம்ப பயங்கரமாக இருந்தார். அந்தியூர் பர்கூர் மலைகளில் பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு வாகன வசதியற்று காட்டுக்குள் ஒளிந்து கிடக்கும் பழங்குடி கிராமம் இது.
 ஒன்பது மாதங்களுக்கு முன் இங்கே காட்டுக்குள் மாடு மேய்க்கப் போனார். திரும்பி வரும்போது எதிர்ப்பட்டது ஒரு கரடி. இவரைப் பார்த்ததுமே பாய்ந்து வந்து பிடுங்கியெடுத்து விட்டது. அதில் ஒரு காலில் கெண்டைக்கால் தசை இல்லை. இன்னொரு காலில் நரம்புகள் சின்னாபின்னமாகி விட்டன. முகம், தலையெல்லாம் எத்தனை பிராண்டல்கள் என எண்ண முடியவில்லை. ஒரு கண்ணில் சரியான அடி.
 மிகவும் ஆபத்தான நிலையில்தான் அவரைக் காப்பாற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். அங்கே கைவிரித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏழெட்டு அறுவை சிகிச்சைகள் செய்த நிலையில் சில நாட்கள் கழித்துத்தான் பேசவே ஆரம்பித்தார். அப்போது அவர் முகமெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. இரண்டு மாதம் கழித்துத்தான் ஓரளவு தெளிவு பெற்றிருந்தார்.
 அப்போது அவரைச் சந்தித்துப் பேசினோம். 06.05.2022 தேதியிட்ட ‘குங்குமம்’ இதழில், ‘கரடியோடு கட்டிப்புரண்டு சண்டையிட்டேன் - ஒரு பழங்குடிக்கு ஏற்பட்ட அனுபவம்’ என்ற தலைப்பில் அந்தக்கட்டுரை வெளியானது. அப்போது ஈரய்யா நமக்களித்த பேட்டியில், ‘கரடி என்னை தவ்வி நெஞ்சோடு கட்டிப்பிடிச்சு என் நெஞ்சு மேல ரெண்டு காலையும் தூக்கி வச்சு, வாயை என் தலையில வச்சுக் கவ்விடுச்சு. அதோட திறந்த வாயை அப்படியே என் இரண்டு கையாலயும் புடிச்சிட்டேன். என் வலது காலால் ஓங்கி உதைச்சேன்.
அது என் காலை வெறுவெறுன்னு புடிச்சுக் கடிச்சிருச்சு. அப்பவும் உதறி, என் கையிலிருந்து தூரத்தில் போய் விழுந்திருந்த கத்தியை எடுத்துப் போட்டேன் ஒரு போடு. அப்புறம்தான் அது என்னை விட்டுட்டு ஓடுச்சு. எப்பவும் எதிராளியின் தலையைப் பொளந்து மூளையைத்தான் திங்குமாம் கரடி. இதை ஊர்க்காரங்க பேசிக்குவாங்க. அதுக்காகத்தான் அது என் பின்னந்தலைல வாய் வச்சிருக்கு. என்கிட்ட வெட்டுக்கத்தியிருந்ததால பொழைச்சேன்!’’ என்று சொல்லியிருந்தார்.
சமீபத்தில் சோளகனை கிராமத்திற்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘இப்ப நினைச்சாலும் பயமா இருக்குங்க அய்யா. அது அடிச்ச அடியில மண்டை கிழிஞ்சு ஊளை (மூளை) வெளிய வந்துடுச்சுன்னுதான் நினைச்சேன். எப்படியோ டாக்டர்கள் மூணு மாசம் என்னை படுக்கையிலயே வச்சு கவனிச்சு காப்பாத்திட்டாங்க.
இப்பகூட தலை முழுக்க மரக்கட்டை மாதிரி மரமரன்னுதான் இருக்கு. கரடி கடிச்சதுல ஒரு கண் பார்வையே போயிருச்சு. ஒரு கால்ல கெண்டைக்கால் தசையே இல்லை!’’ என்றவர் சூம்பிப் போய் தழும்புகளுடன் காட்சியளித்த தனது இடது காலைக் காட்டினார். ‘‘கரடி மூளையை மட்டுமில்லீங்க அய்யா, இப்படி மனுசன் கிடைச்சா கறியைக்கூட திங்குமாம். அப்படித்தான் இந்த கெண்டைக்கால் சதையையும் (தசை) தின்னு போடுச்சுன்னு நினைக்கிறேன்!’’ என்றார்.
கரடிகள் பொதுவாக தேன் அடைகளைப் பதம் பார்க்கும். காய்கனிகள் கிடைத்தால் தின்னும். குன்னூர், கோத்தகிரியில் பேரிக்காய்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடும் கதைகளைக்கூட செய்திகளாக எழுதியிருக்கிறோம். அப்படிப்பட்ட கரடி உண்மையிலேயே மனித மண்டையைப் பிளந்து மூளையைத் தின்னுமா?
‘‘அது நிஜந்தான் சார். இந்த ஊருக்குள்ளே நிறைய பேரை கரடி துரத்தியிருக்கு. பல பேரை கடிச்சிருக்கு. எல்லோருமே ரத்தக்காயத்தோடதான் வந்திருக்காகங்க. சிலபேர் சின்னச் சின்ன காயத்தோட தப்பிச்சிருக்காங்க. அதுல மூணு பேர்தான் ரொம்பவும் பாதிக்கப்பட்டவங்க. அதுல ரெண்டு பேர் மாதேவ், முத்ரா. இரண்டு பேரும் கரடிகிட்ட கடிபட்டு மூணு நாலு வருஷம் இருக்கும். அவங்க ரெண்டு பேரும் நாட்டு மருந்தை வச்சே கரடிக்காயத்தை சரி பண்ணீட்டாங்க. இந்த ஈரய்யாதான் ஆச்சோ போச்சோன்னு ஆயிட்டார்!’’ என்றார் இதுபற்றிப் பேசிய ஈரய்யாவின் உறவுக்காரர் சின்னராஜ் என்பவர்.
‘‘ இப்பவும் கரடிகள் இங்கே அதிகம். இங்கிருந்து ரெண்டு மைல் மேலே ஒரு கரடு இருக்கு. அதுலதான் கரடிகள் இருக்கு. ராத்திரியில் இந்த நேரத்துக்கு மேல போனா ஏதாவது புதர்ல இருக்கும். பாய்ஞ்சு வந்துடும். இங்கே கரடி மட்டுமல்ல, யானை, சிறுத்தை எல்லாம் இருக்கு. ஒரு ஆள் யானை மிதிச்சு இறந்திருக்கார்!’’ என்கிறார் சின்னராஜ்.
கரடி கடித்து சிகிச்சை பெற்றபோது வனத்துறையினர் ஈரய்யாவுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்திருக்கிறார்கள். அது வாங்கின கடனுக்கே போதவில்லையாம். இப்போதும் பழங்குடிகள் தயாரிக்கும் மூலிகை எண்ணெயை தலைக்கு, காலுக்கு எல்லாம் போட்டு வருகிறார்‘‘இங்கே கொன்னைக்காய், கரியான், தேனு, நகாப்பழம், உண்ணிச் செடிப் பழமெல்லாம் கரடிக்கு ரொம்பப் பிடிக்கும். கரையானை புடிச்சுத் திங்கும். மனுசனைக் கடிச்சா அதுல கொஞ்சமாவது சாப்பிடும். மூளையக் கடிச்சா தின்னு துப்பிடுமோ என்னவோ தெரியலைங்க அய்யா.ஆனா, அது உண்மைங்க.
அதேபோல இந்தக் காலைக் கடிச்சு ஒரு வாய் சாப்பிட்டிருக்கு. அதுவும் நிஜம்தான். அதுலதான் இந்தக் கெண்டைக்கால் சதை அப்படியே போயிருச்சுங்கய்யா. அது தசையைக் கவ்வினத கண்ணுக்கு நேராப் பார்த்தேன். இப்படி மனுசக் கறி சாப்பிட்டு பழகின கரடி மறுபடியும் அதே கறிக்கு அலையுமாம். ஊர்ல சொல்லுவாங்க. அதனால நான் கொஞ்சம் உஷாராவே இருக்கேன்!’’ என்றார் ஈரய்யா.
ஈரய்யா சொல்வது எந்த அளவு உண்மை..? வனத்துறையில் பல ஆண்டுகள் வனவிலங்குகளுக்கு சிகிச்சை செய்து அனுபவம் பெற்ற கால்நடை மருத்துவர் அசோகனிடம் இதுபற்றி கேட்டோம்.
‘‘கிராமத்துக்காரங்க சும்மா கரடி விடறாங்க. அவங்க அப்படி நம்பறதுக்குக் காரணம், புலி, சிறுத்தை அடியைவிட கரடி அடிக்கும் அடி பயங்கரமாக இருக்கும்.
புலி, சிறுத்தை போன்ற மிருகங்களாவது மனுஷ வாடை பட்டாலே அவன் எதிரில் வராது. நம்மளைப் பார்த்தாலும் ஒரே செகண்ட்ல காட்டுக்குள்ளே ஓடிடும். திரும்பிப் பார்க்கக்கூட செய்யாது. அதே சமயம் அதை நேருக்கு நேர் நாம பார்த்துட்டோம்ன்னா சும்மா விடாது.
அதனால வனவிலங்குகளை எதேச்சையாக எங்காவது பார்த்தோம்ன்னா அதோட கண்களைப் பார்க்காம திரும்பி வந்துடணும். இல்லே, நின்னு அதோட கண்ணைப் பார்த்துட்டோம்ன்னா விடாது. இவன் என்னவோ நம்மளை செய்யப்போறான்னு நம்ம மேலயே பாய்ஞ்சுடும். அதேபோலத்தான் கரடியும். நாம் அதை எதிர்ல பார்த்துட்டா, அதோட முகத்தை, குறிப்பா கண்களைப் பார்க்காம வந்துடணும். அதை மீறிப் பார்த்துட்டா போச்சு. பாய்ந்து முதலில் மண்டையைத்தான் அடிக்கும். அடின்னா அடி... சாமான்யமாய் இருக்காது.
கரடிகிட்ட சிக்கினா தப்பிக்கவே முடியாது. அதிலும் குட்டியோட இருக்கும் கரடி நம்மைப் பார்த்துட்டா அதுகிட்ட அடிபட்டு, கடிபட்டு நம்ம மீள்றதுங்கிறது தெய்வாதீனம். அதுவும் அது முதல்ல நம்ம மண்டையோட்டைத்தான் அடிக்கும். நான் அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடான்னு ஏதோ ஒரு படத்துல வீரவசனம் வருமே. அந்த வசனத்திற்கு பொருத்தமான ஒரு வனவிலங்குன்னு கரடியைத்தான் சொல்லணும். அப்படி தலையிலேயே அடிச்சுக் கொன்னுபோடும்.
அதுகிட்ட மாட்டிகிட்டு உயிர்மீள்றது கஷ்டம். வடநாட்டுல ஒரு மனுசனை கரடி அடிச்சு ரெண்டு கண்ணும் வெளியே வந்துடுச்சு. அப்படியே மூர்க்கமா அது தாக்கினாலும் மனுசக் கறியை மட்டுமல்ல, வேற எந்த இறைச்சியையும் வாய்கூட வைக்காது. அது ஒரு சைவ விலங்கு!’’ என்றார்.
கா.சு.வேலாயுதன்
|