கோண மூக்கு காக்கா குஞ்சுக்கு கரன்ட் மரத்துல பள்ளிக்கூடம்!
கதைசொல்லி வனிதாமணியின் வித்தியாசமான முயற்சி
‘‘க்யான் க்யான் குருவி நான். க்யான், க்யான்டோய்... மழை வருது, மழை வருது சின்னக்குருவி நான்... வாழை மரமே வாழை மரமே இடம் தருவாயா? தரமாட்டேன்... தரமாட்டேன்... தரமாட்டேன்... க்யான், க்யான் குருவி நான்... க்யான் க்யான்டோய்... பனைமரமே பனைமரமே இடம் தருவாயா?
 தரமாட்டேன், தரமாட்டேன்... ஆலமரமே ஆலமரமே இடம் தருவாயா... தருவேனே... தருவேனே..!’’
யூ டியூப்பில் வரும் குழந்தைகளுக்கான பாடல்தான். அந்த சிறிய ஹாலில் கோரஸாய் அதன் வரிகள் ஒலிக்கின்றன. அந்த அறை முழுக்க குழந்தைகளின் துள்ளாட்டம். குதூகலம். நடுநாயகமாக ஒரு பெண்மணி அதை ஆடிப் பாடுகிறார். சற்றுநேரம்தான் பாட்டும், ஆட்டமும். பிறகு அந்தக் குழந்தைகளை அமர வைத்து விட்டு, தானே ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கிறார். ‘‘ஒரே ஒரு காக்கா கூட்டுல கோண மூக்கு காக்கா குஞ்சு. அது பண்ற சேட்டைக்கு அளவேயில்லை. மத்த குஞ்சுக கூட எல்லாம் சரியான வம்பு வளர்த்துட்டே இருக்குமாம். அது முட்டைக்குள்ளேயிருந்து வெளிய வந்ததிலிருந்தே சேட்டையே சேட்டை..!’’‘‘அய்யய்யே... நீங்க தப்பா சொல்றீங்க அம்மா!’’ என கத்துகிறான் ஒரு சிறுவன்.
 ‘‘நான் எங்கடா தப்பா சொன்னேன்...’’ ‘‘ஆமாம் அந்தக் கோணமூக்கு காக்காக்கு மூக்கு இப்படி கோணையா இருக்கும்..!’’ தன் மூக்கை வலக்கையால் பிடித்து வளைத்து அபிநயித்துக் காட்டுகிறான் சிறுவன். ‘‘இப்படிக் காட்டணும்!’’ என்கிறான். குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களுடனே அமர்ந்திருந்த அத்தனை பெரியவர்களும் சிரிக்கின்றனர்.‘‘ஆமாம்ல, சரிதான்..!’’
என்று மூக்கை அதே மாதிரி அபிநயித்து, கதையைத் தொடர்கிறார் அப்பெண். அவர் பெயர் தேன்மொழி. அவரின் கதை சொல்லலை திருத்திய சிறுவன் அவர் பிள்ளை நகுலன். தொடர்ந்து அந்தக் கோணமூக்குக் காக்கா கதை மட்டும் பத்து நிமிடங்கள் நீளுகிறது.அந்தக் கதையை கடைசியில் முழுசாகப் பார்க்கலாம்.
முதலில் இது என்ன நிகழ்வு என்பதைப் பார்த்து விடுவோம்.பொதுவாக எதையும் வித்தியாசமாகச் செய்து பார்த்தால் அதில் புதுமை கலந்து அடுத்த இடத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். கதை சொல்லல் நிகழ்வுகளும் அப்படித்தான். ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
அப்படித்தான் ஈரோடு திண்டலைச் சேர்ந்த கதைசொல்லி வனிதாமணி (இதுவரை ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட சிறுவர் கதை சொல்லல் நிகழ்ச்சிகளை நடத்தியவர்) வித்தியாசமாக ஒன்றை நினைத்தார். தன் வீட்டிலேயே குழந்தைகளை அமர்த்தி கதை சொன்னோம்... அதே போல் பள்ளிகள் தோறும், கல்லூரிகள்தோறும் போய் கதை சொன்னோம்... அதற்குப்பிறகு கிராமங்கள்தோறும் போய் கதை சொல்லல் நிகழ்ச்சி நடத்தினோம்...
அதையும் தாண்டி பழங்குடி கிராமங்களுக்கு எல்லாம் சென்று அந்தக் குழந்தைகளோடு கதை சொல்லி கொண்டாடினோம்... நம்மிடம் கதைகேட்ட குழந்தைகளை விட்டு மேடைதோறும் கதை சொல்ல வைத்தோம்... இதையெல்லாம் தாண்டி தன்னிடம் கதைசொல்லக் கேட்ட குழந்தைகளின் பெற்றோரையே கதை சொல்லவைத்தால் என்ன... என்று யோசித்தார். இப்போது இவரிடம் 25 குழந்தைகளுக்கு மேல் கதைகேட்க வருகின்றார்கள். அவர்களின் பெற்றோர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்தார். ‘ஒரு நாள் உங்க குழந்தைகளுக்கு நீங்களே கதை சொல்லுங்களேன்’ என்று கேட்டுக் கொண்டார்.
முதலில் தயக்கம் காட்டின அவர்கள் ஒவ்வொருவராக சம்மதம் தெரிவித்து 12 பேர் சேர்ந்தனர். அவர்கள் கதை சொல்லல் நிகழ்வை தன் கதைக்களம் அரங்கிலேயே நடத்த ஏற்பாடு செய்தார்.
பல நூறு கதை சொல்லி நிகழ்ச்சிகளை நடத்தின வனிதாமணி இந்த நாளில் மட்டும் கதை சொல்லவில்லை.
பெற்றோர் கதை சொல்ல குழந்தைகள் கேட்க ஆரம்பித்தனர். கேட்க ஆரம்பித்தனர் என்பது தவறு. குழந்தைகள் தன் தந்தை, தாய்க்கு இன்ன கதைதான் சொல்ல வேண்டும்; இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து, ஒத்திகை பார்த்து அழைத்து வந்திருந்தனர். அதனால் இங்கே நிகழ்ந்த கலகலப்புக்கு பஞ்சமில்லை. ஒரு தாய் இந்த நிகழ்வுக்காகச் சொல்ல இருந்த கதையை ஸ்கிரிப்ட் வடிவில் தயார் செய்து ஒத்திகை பார்த்துவிட்டும் வந்திருக்கிறார். ஆனால், ஸ்கிரிப்ட்டை மறதியாக வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டார். அதைத் தெரிந்துகொண்ட பிள்ளை, தன் தாய்க்கு அந்தக்கதையை அடிமாறாமல் டூவீலரில் வரும்போதே சொல்லிக் கொடுத்திருக்கிறார். அப்பவும் கதை சொல்லும்போது தாய் சொதப்பல். உடனே தலைதலையாய் அடித்துக்கொண்டு, ‘‘அப்படியில்லம்மா, இப்படித்தான் கதை!’’ என்று எடுத்துக் கொடுக்க, ஒரே சிரிப்பலை.
இப்படி ஒவ்வொரு பெற்றோர் கதை செல்லலிலும் ஒவ்வொரு சுவாரஸ்யம். அதில் ஒரு கதை சொல்லாடலின் தொடக்கப் பகுதியைத்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு கதை சொன்ன அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் வனிதாமணி.‘‘இப்ப உள்ள யங் பேரன்ட்ஸ் வீட்ல அன்றாடப் பணிகளே சரியாக இருக்கு. அல்லது கணவன் - மனைவி இரண்டு பேருமே டியூட்டிக்குப் போறாங்க. அதையெல்லாம் தாண்டி இவர்களுக்கு முந்தைய தலைமுறைகள்தான் பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்ட அனுபவம் உண்டு. இடையில் ஒரு தலைமுறைக்கே அது கிடைக்காமல் போய் விட்டது.
எங்களிடம் குழந்தைகளை கதைகேட்க அனுப்பும் பெற்றோரிடம் நான் அனுபவபூர்வமாக இதைக் கண்டேன். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நான் சொல்லும் கதைகளைக் கேட்க குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் சிலர், குழந்தைகளை திரும்ப அழைத்துச் செல்லும்போது சற்றுநேரம் குழந்தைகளுடன் குழந்தையாக நின்று கதை கேட்பது வழக்கம்.
அதேபோல் ஒருசிலர் குழந்தையை அறையில் விட்டுவிட்டு வெளியே திரும்ப அழைத்துப் போகும் வரை காத்திருப்பார்கள். அவர்களும் கதை கேட்டுப் பழக்கப்பட்டு விட்டதனால் இப்படியொரு நிகழ்ச்சியை உங்கள் குழந்தைகளுக்காக நீங்களே செய்யலாமே என்று கேட்டுக் கொண்டேன்.
‘எங்களுக்கு கதை சொல்லவே வராது, பாடவே வராது’ என்று சொன்னவர்களையெல்லாம் அவர்களின் குழந்தைகளே தயார் பண்ணி, ‘எங்க மம்மி பாடுவார்கள். எங்க டாடி கதை சொல்லுவாங்க!’ என அழைத்து வந்தாங்க. அப்படி வந்தவங்கதான் பதிமூணு பதினாலு பேர். இவங்க பதினாலு பேர்ன்னாலும் குழந்தைகளோட சேர்த்து நாற்பது பேருக்கு மேல ஆயிடுச்சு. இரண்டரை மணி நேரம் போனதே தெரியலை.
அத்தனை குழந்தைகளும் நான் கதை சொல்றதை விட அவங்க அப்பா அம்மா கதை சொல்றதை ரொம்ப ரசிச்சாங்க. அவங்களே அப்பா அம்மாவுக்கு இந்தக் கதையைச் சொல்லணும்ன்னு சொல்லிக் கொடுத்துக் கூட்டி வந்ததாலே, கதை சொல்ற இடத்தில் ஏதாவது வார்த்தை மாறிப்போனா சிரிப்பா சிரிச்சுட்டு, இப்படியில்லம்மான்னு சரியானதை மாத்தி சொல்ல வச்சாங்க... இதெல்லாம் நானே எதிர்பாராதது!’’என்ற வனிதாமணி, இதில் பெற்றோர்கள் மட்டுமல்ல, தானும் குழந்தைகள் மூலமாகக் கற்றுக் கொண்ட விஷயத்தை விளக்கினார் ‘‘பொதுவா நம்ம குழந்தைகள் தப்பு செஞ்சா ரொம்ப கோபப்படறோம். ‘இதுகூட உனக்குத் தெரியலையா? எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தேன்’ என்கிறோம்.
உதாரணமா இதுபோல ஸ்டேஜ் புரோக்கிராமையே எடுத்துக்குங்க. நாம பல தடவை சொல்லிக் கொடுத்த கதையா இருக்கும். அதைப் போய் ஸ்டேஜில் சொல்லும்போது குழந்தை குழம்பிடுவான். நாம தலை, தலையா அடிச்சிட்டு இது கூட சொல்ல வரலையான்னு திட்டுவோம். ஆனா, அதே இடத்தில் நாம இருந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது.... எத்தனை தடவை ஒத்திகை எடுத்துட்டு ஸ்டேஜ் ஏறினாலும் அங்கே நமக்கு கற்றதெல்லாம் மறந்து போகிறதே என்று.
அப்போது நம் குழந்தைகள் அதை எப்படி சிரிச்சுகிட்டே சொல்லித் தர்றாங்க. துளி கோபப்படறதில்லையே. இதை நாம குழந்தைகள்கிட்ட கத்துக்க வேண்டும். அதை இங்கே பல பெற்றோர்கள் என்னிடம் மனம் விட்டே சொல்லிச் சென்றார்கள். அதேபோல் சில பேரன்ட்ஸ் இரண்டரை மணிநேரம் டிவி பார்க்கலை. மொபைல் நோண்டலை. ஒட்டுமொத்தமா சந்தோஷமா குழந்தைகளோட குழந்தைகளா இருந்தது இங்கே மட்டும்தான்னும் பூரிச்சுப் போனாங்க!’’ என்றார்.அதெல்லாம் சரி, நகுலனின் அம்மா தேன்மொழி சொன்ன கோண மூக்கு காக்கா கதை எப்படி முடிந்தது?
கோண மூக்குக் காக்கா குஞ்சோட இருந்த எல்லா குஞ்சுகளுக்கும் இறகு முளைக்கிறது. தன் இரையைத் தானே தேடி சாப்பிடுகிறது. மனிதர்கள் மீதி வைக்கும் உணவுகள் எல்லாம் வீதியில் கொட்டும்போது கா கா என்று தன் இனத்தையே கூட்டி சாப்பிடுகிறது. இதனால் ஊரெல்லாம் அழுகல் பொருட்கள் சுத்தமாகிறது. அப்பவும் கோணமூக்குக்காக்கா மற்ற காக்காக்களுடன் வம்பு செய்கிறது.
இந்த கோணமூக்குக் காக்காவின் வம்பு தாங்க முடியாமல் அல்லாடுகிறது காக்கா கூட்டம். இந்த சூழ்நிலையில் காக்கா கூட்டம், தான் பாடம் கற்றுக் கொள்ள ஓர் ஆசிரியரை அமர்த்துகிறது. அப்படி ஆசிரியராய் வந்தது ஒரு தாத்தா காக்கா. அவர் பாடம் நடத்திய பள்ளிக்கூடம் ஒரு கரன்ட் கம்பம். ஒரு சேர கா கா என்று அந்த மின்கம்பத்தின் வயர்களில் உட்கார்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட காக்கா கூட்டம் பாடம் கற்கிறது.
அதில் பாட்டிகிட்ட காக்கா வடை திருடிய கதை, பானையில் கீழே இருந்த தண்ணியை கற்களைப் போட்டு நிரப்பி நீர் அருந்திய புத்திசாலிக் காக்கா கதை எல்லாம் வருகிறது. அங்கும் வம்பே செய்கிறது கோணமூக்குக் காக்கா. இவன் எத்தனை தாத்தா காக்காக்கள் வாத்தியாரா வந்து பாடம் எடுத்தாலும் திருந்த மாட்டான் என்று இது வந்தாலே ஓடிப் போயிடும்.
ஒரு தடவை இந்தக் கோணமூக்குக் காக்கா ஒரு வடை சாப்பிட்டுட்டு இருந்த வாண்டுகிட்ட வடைய பிடுங்கிடுச்சு. அதில் அந்த வாண்டுப் பையன் அழு, அழுன்னு அழுதான். ரொம்ப தூரம் போன கோணமூக்குக் காக்காவுக்கு மனசு கேட்கலை. அந்த வாண்டுப் பையன் அழுததே காதில் கேட்டுகிட்டு இருந்தது. ஆயிரந்தான் இருந்தாலும் நாம அந்தக்குழந்தைப் பையன்கிட்ட இருந்து வடைய பறிச்சுட்டு வந்தது தப்புன்னு தோணுச்சு.
அதனால அந்த வடையை அந்த வாண்டுப்பையன் இருந்த இடத்துக்கே கொண்டு போய் கொடுத்திடுச்சு. அந்த வாண்டுப் பையன் அடடா இந்தக் காக்கா இவ்வளவு நல்ல காக்காவா இருக்கேன்னு நினைச்சுட்டு, தன் வடையில பாதிய பிச்சு காக்காவுக்கு கொடுத்தான். அதுவும் சாப்பிட்டுது. இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டதுல காக்கா மனசு நிறைஞ்சு போச்சு. அப்புறம்தான் கோணமூக்கு காக்காவுக்கு சட்டுனு ஒரு புத்தி வந்தது.
ஒரு குழந்தைப்பையன்கிட்ட சேர்ந்து சாப்பிடும்போதே இப்படி ஒரு மகிழ்ச்சி இருக்குதே... நம்ம கூட்டத்தோட இதே மாதிரி இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்ன்னு நினைச்சுது. அதுக்கப்புறம் போய் தன் கூட்டத்தோட சேர்ந்துகிச்சு. வம்பு ஏதும் பண்ணாம தாத்தா காக்கா சொன்ன பாடத்தையெல்லாம் கேட்டுது. மற்ற காக்கா கூட வம்பு பண்ணாம பொறுப்பா நடந்துச்சு. எல்லா காக்காவும் இப்ப சந்தோஷமா இருந்துச்சு!
கா.சு.வேலாயுதன்
|