இந்தியாவின் ஒரே சமஸ்கிருத படத்தை இயக்கிய ஜி.வி.அய்யரின் குடும்பத்தைச் சேர்ந்தவ நான்!
பெருமையுடன் சொல்கிறார் விஜயானந்த் பட இயக்குநர் ரிஷிகா ஷர்மா
‘‘கொள்கையே இல்லாம வாழ்ந்தா அது அந்த வாழ்க்கைக்கே அவமானம். இது எங்க அப்பா எனக்கு சொன்னது...’’ டிரெய்லரிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது கன்னடத்தின் பான் இந்தியா மற்றும் பயோபிக் படமான ‘விஜயானந்த்’. ரிஷிகா ஷர்மா இயக்கத்தில், நிஹல் ராஜ்புட், சிரி பிரஹலாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படம், கர்நாடகாவின் மாபெரும் லாஜிஸ்டிக் மற்றும் டிரான்ஸ்போர்ட் துறையின் ஜாம்பவானான வி.ஆர்.எல் குரூப் உரிமையாளர் மற்றும் நிர்வாகி ஆனந்த் ஷங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாறு.
 ‘‘கனவிலே கூட நினைச்சுப் பார்க்கலை ரெண்டாவது படம் பான் இந்தியா படமா இருக்கும்னு...’’ படபடப்பும், மகிழ்ச்சியும் கண்களில் மின்ன பேசத் தொடங்கினார் இயக்குநர் ரிஷிகா ஷர்மா. இயக்குநர் ரிஷிகா ஷர்மா? நீங்க என் முன்னாடி உட்கார்ந்து கேள்வி கேட்கறீங்கன்னு என்னால நம்பவே முடியல. தினம் தினம் ஒரு குரல். நான் தமிழ் நாட்டிலே இருக்கேனா, என் படத்துக்காக நான் ஹைதராபாத் போறேனா, ஒவ்வொரு மாநில ஜர்னலிஸ்ட்டும் என்னை மதிச்சுக் கேள்வி கேட்கறாங்களான்னு மனசுக்குள்ள அவ்வளவு சந்தோஷம்!
 இன்னொரு பக்கம் கனவு மாதிரி ஒரு ஃபீல். தூக்கத்திலே ஏதும் இருக்கேனானு தோணுது. என்னுடைய முன்னோர்கள், பூர்வீகம் எல்லாம் மைசூர். இப்ப பெங்களூரு. நான் படிச்சது எம்.ஏ ஜர்னலிஸம், மற்றும் சைக்காலஜி. அப்பா வெங்கடேஷ் ஷர்மா பிஸினஸ்மேன். இப்போ உயிரோடு இல்ல. அம்மா பத்மா கவர்ன்மெண்ட் ஸ்டாஃபா இருந்து இப்ப ரிடையர்ட். என் அண்ணன் டிஜிட்டல் மார்க் கெட்டிங்ல இருக்கார். அண்ணி ஜாப்பனீஸ் டிரான்ஸ்லேட்டர் மற்றும் டீச்சர்.
 ‘கன்னட பீஷ்மா’ ஜி.வி.ஐயர், மாபெரும் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர். இந்தியாவின் ஒரே சமஸ்கிருத படத்தை இயக்கினவர் இவர்தான். ‘ஆதி சங்கராச்சார்யா’, ‘பகவத் கீதா’, ‘ராமானுஜாச்சார்யா’, ‘மத்வாச்சார்யா’, ‘சுவாமி விவேகானந்தா’ உட்பட பல படங்களை டைரக்ட் செய்திருக்கார்.அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு நான். சின்னக் குழந்தையா இருக்கும் போது என்னையதான் இந்த கிளாப் போர்டு எல்லாம் அடிக்க சொல்வாங்க. ரெடி, டேக் எல்லாம் கூட சொல்லியிருக்கேன்.
 அவர் மடியிலே வளர்ந்த பொண்ணு நான். எனக்கு உலகமே சினிமாதான். அதனாலேயே பல மொழிகளையும் விரும்பிக் கத்துக்கிட்டேன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் எல்லாமே நல்லா பேசுவேன். காரணம் சினிமா ஆசை மட்டும்தான். ‘விஜயானந்த்’ எங்கே... எப்படி உருவானது?
 அதுக்கு நான் படத்தின் ஹீரோ நிஹல் சாருக்குதான் நன்றி சொல்லணும். கமர்சியல், ஆக்ஷன் மோட்ல ‘டிரங்க்’ முதல் படமா இயக்கினேன். அடுத்த படமும் கமர்சியல், ஆக்ஷன் கதைகளாதான் எழுதிட்டு இருந்தேன். அப்போதான் நிஹல் ‘இந்த ஆக்ஷன், கமர்சியல் எல்லாம் தூக்கி ஓரமா வையுங்க... பயோபிக் படம் பண்ணலாம்’னு சொன்னார். அவருக்கும் இது ரெண்டாவது படம். அதிலும் வி.ஆர்.எல் குரூப் ஓனர் ஆனந்த் ஷங்கேஸ்வர் சாரைக் கேட்கலாம்னு சொன்னார்.
 பயந்து நடுங்கி, ‘சார் என்ன சொல்லப் போறாரோ’ன்னு யோசிச்சிட்டேதான் கால் செய்தோம். ‘சார், உங்க வாழ்க்கைய படமா எடுக்கணும்னு நினைக்கிறோம்’னு சொல்லி வாய மூடலை... அந்தப் பக்கம் அப்படி ஒரு சிரிப்பு.‘ஏன்மா... நான் என்னம்மா அப்படி செய்துட்டேன். என் வாழ்க்கை வரலாறு பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகுற அளவுக்கு என்ன சுவாரஸ்யம், தியாகம் எல்லாம் இருக்கப் போகுது’ அப்படின்னு கேட்டார். விளக்கமா சொன்னோம். ‘சரி வாங்க பேசுவோம்’னு கூப்பிட்டார்.
 வாழும் ஜாம்பவான்களின் கதைகளை பயோபிக் செய்யறப்போ போதிய சுதந்திரம் கிடைக்காதே?
நீங்க சொல்றது சரி. உண்மைதான். ஏன்... இறந்தவங்க கதைகளையே நாம படமாக்கும் போது சம்பந்தப்பட்டவங்களுடைய குடும்பம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் பாலிடிக்ஸ்ன்னு நமக்கு இடைஞ்சலா வந்து நிற்கும். ஆனால், ஆனந்த் சார் செம டைப். அவருடைய வாழ்க்கையிலே ஒரு ரகசியமும் விடாம சொன்னார். சில சம்பவங்கள் எல்லாம் கேட்டுட்டு எனக்கே அதிர்ச்சி. ‘சார், இதெல்லாம் படமாக்கினால் அரசியல் பிரச்னைகள் வரும் போலவே... உங்களுக்கு ஓகேவா’ன்னு கேட்டேன்.
சார், ‘என் வாழ்க்கையிலே நடந்த எதையும் யாரும் மாத்த முடியாது. உள்ளதை உள்ளபடி நான் சொல்லத் தயார்’ அப்படின்னு அவர் வாழ்க்கையை அப்படியே கண் முன்னாடி எனக்கு விஷுவலாக்கிக் காண்பிச்சார். நான் படமாக்கிட்டேன். அதற்கும் அவரே தயாரிச்சு வெளியிட முன்வந்தார். அப்படித்தான் ‘விஜயானந்த்’ படம் உருவானது.
பான் இந்தியா படமாக உருவானபோது இன்னும் ஏதேனும் சேர்க்கணும்னு நினைச்சீங்களா?
என்னைப் பொறுத்தவரை எந்தக் கதையை, எந்தக் கன்டென்டை நாம பான் இந்தியாவுக்குக் கொடுக்கணும்ங்கறதிலே தெளிவு இருக்கணும். இந்தப் படத்தை நான் மொழி அடிப்படையிலோ, அல்லது மாநில அடிப்படையிலோ பார்க்கவே இல்ல. இன்னைக்கு எந்தப் படமும் எந்த மொழிக்காரங்களும், எங்கே இருந்தும் பார்க்கலாம். ரிலீஸ் தேதியிலே பார்க்க முடியலைன்னா கூட ஓடிடி பெருகிடுச்சு. என்னைக்கோ ஒருநாள் மத்த மொழி பார்வையாளர்களுக்கும் அது சேரத்தான் போகுது. அப்போ இனிமே முழு இந்தியாவுக்கும், உலகத்துக்குமான படமாதான் நாம உருவாக்கியாகணும்.
பான் இந்தியாங்கறது ஒரு புரமோஷனல் தீம்தான். இந்தப் படத்துக்கு பான் இந்தியா ரிலீஸ் கிடைச்சிருக்கு. படத்துக்கு மேலும் பிரம்மாண்டம் சேர்ந்திருக்கு. ஆனால், இந்தப் படம் பான் இந்தியா ரிலீஸே இல்லைன்னாலும் ரிலீசாகி ஒண்ணு ரெண்டு மாசத்திலாவது எல்லா மக்களுடைய மொபைலுக்கும் போய் சேர்ந்துதானே ஆகும்..? அதனால் நான் படமாக்கும் போதே இதை மொழி கடந்த ஒரு பயோபிக்கா இருக்கணும்னு நினைச்சுதான் எடுத்தேன். அதனால் பான் இந்தியாவுக்கான படமா எந்த மாற்றமும் எனக்குத் தோணலை.
இந்தக் கேள்வியே தேவையில்லைதான்... ஆனாலும் பெண் இயக்குநரா என்னென்ன சவால்களை சந்திச்சீங்க?
கேட்கலாம்... பேசப் பேசதான் மாற்றம் பிறக்கும். ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாடி ஒரு பெண் இல்ல, அம்மா, சகோதரி, தோழிகள், மனைவி இப்படி நிறைய பெண்கள் இருப்பாங்க. அதே மாதிரி ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாடியும் பல ஆண்களின் ஊக்கமும், உதவியும் இருக்கும். இந்த ரகசியம் புரிஞ்சிக்கிட்டாலே பெண்களும், ஆண்களும் சேர்ந்தே சமூகத்தை சிறப்பா கொண்டு போகலாம்.
என் வீட்டிலும் சரி, நான் வேலை செய்கிற சினிமா துறையிலும் சரி... எனக்கும் நிறைய ஆண்களின் ஆதரவும், உதவியும் கிடைச்சதால்தான் நான் இன்னைக்கு இங்கே இருக்கேன். அவங்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்லிக்கறேன். சவால்கள் கொடுத்த ஆண்களையும், பெண்களையும் கூட நான் என் வளர்ச்சிக்கான உந்துசக்தியாதான் எடுத்துட்டு போறேன். இவ்வளவு பேசுற அளவுக்கு நான் வளர்ந்திட்டேனானு தெரியலை.
‘விஜயானந்த்’ படம் எப்படிப்பட்ட உணர்வைக் கொடுக்கும்?
வாழணும்ங்கற உணர்வை ஒவ்வொரு மனுஷனுக்கும் கொடுக்கும். என்னவா வாழணும்னு, எப்படிப்பட்ட வாழ்க்கையா மாத்தணும்னு இன்ஸ்பிரேஷனா இருக்கும்.
ஷாலினி நியூட்டன்
|