இஸ்லாமியர், கிறிஸ்தவர், இந்து என்கிற பாகுபாடுகள் சினிமாவுல இல்ல...
ஜெயமோகனின் கதை, இப்போது ‘ரத்த சாட்சி’ படமாக வெளியாக இருப்பதில் ஏகோபித்த எதிர்பார்ப்புகள் இந்தப் படத்திற்கு எகிறியிருக்கிறது. ‘‘பல வருடங்களுக்கும் மேலான காத்திருப்பு. எங்க குடும்பத்திலே இருந்து சினிமாவுக்குள்ளே நுழைந்த ஒரே ஆள் நான்தான். இதோ இப்போ ’ரத்த சாட்சி’ மூலமா கனவு நினைவாகியிருக்கு...’’ காத்திருப்புக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பால் நிறைவான மனநிலையுடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில்.
 ஜெயமோகனின் எத்தனையோ கதைகள் இருக்க ஏன் இந்தக் கதை?
ஜெயமோகன் சாரை நல்லா தெரிஞ்சவங்க அவர் நேத்து எழுதி ரிலீஸ் செய்த கதைகளைக் கூட விடாம படிச்சிருப்பாங்க. அப்படியான ஒருத்தன்தான் நானும். அதிலே ‘கைதிகள்’ கதைதான் இந்த ‘ரத்த சாட்சி’. அவருடைய எல்லா கதைகளையுமே மேக்கிங்ல அருமையா கொண்டு வரலாம்.
 ஆனால், அத்தனையும் கனவு மாதிரியான கதைகளா இருக்கும். பட்ஜெட், டீம், ப்ரொடக்ஷன்... இப்படி எல்லாமே பெரிய அளவிலே இருக்கணும். நாம நினைக்கற மீட்டர்க்குள்ளே வேலை செய்யணும்னா இந்தக் கதைதான் என்னால செய்ய முடியும். என்னுடைய சக்திக்கு இந்தக் கதை சரியா இருந்துச்சு. யார் இந்த ரஃபீக் இஸ்மாயில்?

கவித்துவமான கேள்வியா இருக்கே! எப்படி எங்கே ஆரம்பிக்கன்னு தெரியலை. ஒரு கோர்வையா சொல்றேன். எனக்கு சொந்த ஊர் தென்காசி, வடகரை.
இந்த உலகத்திலேயே ரொம்ப அழகான ஊர் எதுன்னு கேட்டால் என் ஊரைத்தான் சொல்வேன். சின்ன அழகான கிராமம். டிப்ளமா இன் சிவில் இன்ஜினியரிங் படிச்சேன். அப்பறம் வேலைக்காக கல்ஃப் நாட்டுக்குப் பயணம். அங்கே ஓரிரண்டு வருடங்கள் ஓடுச்சு. அப்பறம் மீண்டும் சொந்த ஊர்.

சின்ன வயசிலே இருந்தே சினிமா ஆசை. நிறைய புத்தகங்கள் படிக்கற பழக்கமும் இருக்கறதால, கவிஞர் விக்கிரமாதித்தன் அண்ணாச்சியுடன் பழக்கம் உண்டாச்சு. அப்படியே நிறைய எழுத்தாளர்கள், இலக்கிய வட்டங்கள்னு நட்பு வளர்ந்துச்சு. தென்காசியிலேயே ‘சித்திரம்’ என்கிற திரைப்பட இயக்கம் உருவாக்கி, உலக சினிமாக்கள் குறித்த கலந்துரையாடல், ஸ்க்ரீனிங் இதெல்லாம் செய்ய ஆரம்பிச்சு நிறைய உலக சினிமாக்கள் அறிமுகமாச்சு.
திருவனந்தபுரம் திரைப்பட விழாவிலே கிம் கி டுக் படமான ‘ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்ட்டர் & ஸ்பிரிங்’ படத்தை ஒரு பெரிய கூட்டம் நிறைஞ்ச தியேட்டர்ல பார்த்தேன். தரையிலே எல்லாம் ஆடியன்ஸ். இன்னொரு சினிமா மேக்கிங் உலகம் எனக்குப் பரிச்சயம் ஆச்சு. சினிமாதான் என்னுடைய லைஃப் அப்படின்னு அங்கேதான் முடிவு செய்தேன். டாக்குமெண்டரி திரைப்படங்கள்லதான் ஆரம்பத்தில செய்ய ஆரம்பிச்சேன். ‘காஞ்சனை’ ஆர்.ஆர் சீனிவாசன், கவிஞர் குட்டி ரேவதியுடன் சேர்ந்து நிறைய டாக்குமெண்டரி படங்களுக்காக இந்தியா முழுக்க டிராவல் செய்தேன். இந்த அனுபவம்தான் சினிமாவுக்குள்ளே வர்றதுக்கு ஓர் ஒளியா எனக்கு தெரிஞ்சது.
அடுத்து சி.மோகன் சார், வசந்தபாலன் சார் கிட்ட அனுப்பினார். ‘அரவான்’ படத்துல வேலை பார்த்தது கிட்டத்தட்ட நாலு படங்களுக்கு சமம். அந்த அளவுக்கு வேலை வாங்குச்சு. அடுத்து பிரசாத் முருகேசன் கிட்ட ஸ்கிரிப்ட் வேலை செய்தேன். உலக சினிமா பார்வையிலேயே சினிமாவுக்குள்ளே வந்த எனக்கு கமர்சியல், பாக்ஸ் ஆபீஸ், கலர்ஃபுல் பாடல்கள் இவைகள் மேல ஒரு சின்ன ஒவ்வாமை இருந்துகிட்டே இருந்துச்சு.
ஆனால், தொடர்ந்து சில இயக்குநர்கள் கூட பயணிக்கும் பொழுது என்னுடைய பார்வை மாற ஆரம்பிச்சது. இந்த சினிமா மேக்கிங்தான் இங்கே இருக்கற பிராக்டிகல்ன்னு தெரிஞ்சது. இதையும் மதிக்க கத்துக்கணும்ன்னு புரிஞ்சுகிட்டேன். அடுத்தடுத்து ‘மூடர் கூடம்’ நவீன், லீனா மணிமேகலையின் ’மாடத்தி’ இப்படி வேலை செய்தேன். பின்னர் என்னுடைய சொந்த கதைகளை எடுத்துக்கிட்டு முயற்சி செய்ய ஆரம்பிச்சேன்.
ஆனா, என்னுடைய கதைகள் ரொம்ப ஆழமாகவும் ராவாவும் இருக்கிறதா சொன்னாங்க. ஜெயமோகன் சார் கதைகளை படமாக எடுத்தா ஆடியன்ஸுக்கும் எளிமையா இருக்கும்னு தோணுச்சு.
அங்கே உருவானது ‘ரத்த சாட்சி’.எத்தனையோ பெரிய ஜாம்பவான்கள் ஜெயமோகன் கதைகளை படமாக்க காத்திருக்கும்பொழுது உங்களுக்கு எப்படி இந்த வாய்ப்பு அமைந்தது? எங்கேயோ ஜெயமோகன் சாருக்கு இவன் ஒரு ஆளா ஆகிடணும், இவனுக்கு ஏதாவது செய்யணும்ன்னு தோணிருக்கும் போல. இந்த கதையும் பெரிய இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருந்த கதைதான். சம்பந்தப்பட்ட இயக்குநர்கிட்ட கேட்டு ஜெயமோகன் சார் இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் இந்தக் கதையை சினிமாவுக்கு ஏத்த மாதிரி காதல் காட்சிகள், ஹீரோவுக்கான சில காட்சிகள்... இப்படி நிறையவே சேர்த்து எழுதியிருந்தேன். ஒரு தயாரிப்புக் குழுவும் இந்த படத்தை இயக்க முன் வந்தாங்க. ஆனால், நடக்கலை. அப்போதான் ‘ஆஹா’ ஓடிடி தளத்துக்கு முயற்சி செய்தோம். உடன் ‘மகிழ் மன்றம்’ அனிதா மகேந்திரன் மேடம் கை கொடுத்தாங்க. ஆனா, அவங்க கதை எப்படி இருக்கோ அப்படியே உண்மைத் தன்மை மாறாமல் படமாக்கலாம் அப்படின்னு சொன்னாங்க.
எனக்கு ரொம்பவே சர்ப்ரைஸா இருந்துச்சு. அல்லு அரவிந்தும் இந்தக் கதையை முழுமையா கேட்டுட்டு அவரும் இந்தப் படத்தை அப்படியே எடுக்கலாம்ன்னு சொல்லிட்டார். படத்துக்கு ஏன் ‘ரத்த சாட்சி’ அப்படிங்கற தலைப்பு வச்சிருக்கீங்க?
கதையை நான் அப்படியே எடுத்து சினிமாவா மாத்தல. கதையை இன்னும் விரிச்சிருக்கேன். கதையை இன்னமும் ஆழமாக்கும்போது அதிலே போராளிகள், புரட்சி, கம்யூனிசவாதிகள்... இப்படி நிறைய விஷயங்களை கதை ஆழமா பேச ஆரம்பிச்சது. முழுக் கதையையும் முடிச்சிட்டு தலைப்பும் ‘ரத்த சாட்சி’ அப்படின்னு வச்சேன். இப்பவும் இந்த ரத்த சாட்சி என்கிற சொல்லாடல் கம்யூனிஸ தோழர்கள் மத்தியில பிரபலமா இருக்கு. ‘ரத்த சாட்சி’ தலைப்பிலேயே ஜெயமோகன் சாருக்கு கதையின் டிராஃப்ட் அனுப்பிச்சேன். அவரும் எவ்வித மாற்றுக் கருத்தும் சொல்லவே இல்ல.
பொதுவாகவே இயக்குநர் நாற்காலியில் ஒரு இஸ்லாமிய நபரின் பெயரைப் பார்ப்பது அரிதாகவே இருக்கே... இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
இஸ்லாமியர், கிறிஸ்தவர், இந்து என்கிற பாகுபாடுகளை சினிமா துறையிலே பெரிதா நான் பார்க்கல. திறமையைத்தான் முதல்ல மதிக்கிறாங்க. நான் என்னை வைத்து இந்த பிரச்னையை சொல்றேன். ஒரு கட்டத்துல நானே இஸ்லாமிய கோட்பாடுகளிலும் சித்தாந்தங்களிலும் ரொம்பவே ஊறிக் கிடந்தேன். அதை உடைக்க எனக்கு புத்தகங்கள்தான் திறவுகோலா இருந்துச்சு. வெளியே வந்தப்புறம்தான் திறமையும் என்னுடைய ஆர்வமும் எனக்கே தெரிய ஆரம்பிச்சது.
எந்த மதமா இருந்தாலும் சரி... அதை நாம தலைக்கு ஏத்திக்கக் கூடாது. என்னைப்போலவே இன்னமும் நிறைய பேர் திறமைகள், ஆர்வம் எல்லாம் இருந்தும் இந்த மதக்கட்டுப்பாட்டுகளுக்குள்ள இருக்காங்கன்னு தோணுது. அதை உடைச்சு திறமையையும் அறிவையும் அதிகமா நம்பணும்னு நினைக்கிறேன்.
படத்தின் கதைக்களம் என்ன?
நக்சலைட்டுகளுக்குள்ள இருக்கற மனிதத்துவத்தை இந்தப் படம் பேசும். வன்முறை வேண்டாம் அப்படின்னுதான் சொல்லும். அரசாங்கம், பொதுஜனம், தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், போராளிகள்... இப்படி யார் வன்முறையை கையில் எடுத்தாலும் அது ஆக்கபூர்வமான முடிவா இருக்காது அப்படின்னு சொல்லப் போற படம்தான் ‘ரத்த சாட்சி’.
படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் பற்றி சொல்லுங்க?
படத்தின் மெயின் லீட் கண்ணா ரவி. இதற்கு முன்னாடி வரை கைதி, மண்டேலா, சாணிக்காயிதம் உள்ளிட்ட நிறைய படங்களில் நடிச்சிருக்கார். ஒரு இயக்குனருக்கான நடிகர் கண்ணா. கடின உழைப்பாளி. போலவே இந்தக் காட்சிக்கு இவ்வளவு நடிப்பு இருந்தா போதும் அப்படின்னு நாம சொல்லும் போது அதை புரிஞ்சிக்கிற அளவுக்கு பக்குவமான நடிகர்.
இளங்கோ குமரவேல் சார் இன்னொரு மெயின் லீட் கேரக்டரில் நடிச்சிருக்கார். கல்யாண் மாஸ்டர், அர்ஜுன் ரான், மெட்ராஸ் வினோத், பிரவீன் இவர்களுக்கெல்லாம் முக்கியமான ரோல். ‘முதலும் நீ முடிவும் நீ’ படத்தில் சைனீஸ் கேரக்டரில் வந்து கலக்கிய ஹரிஷ் இக்பால் இந்தப் படத்திலே வேற மாதிரி வருவார்.
ஜெகதீஸ்வரன் படத்துக்கு சினிமாட்டோகிராபி. இளமையும் துடிப்பும் நிறைந்த, ஆர்வமான கேமராமேன். ஆர்ட் டைரக்ஷன் எழில். அவருக்கு இது முதல் படம். நிறைய படங்களில் எக்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசரா வேலை செய்திருக்கார். ‘மாநகரம்’ இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் இந்தப் படத்துக்கு மியூசிக். இந்தப் படத்தை 33 நாட்கள்ல முடிச்சதுக்குக் காரணம் இவங்க எல்லாரும்தான்.
ஷாலினி நியூட்டன்
|