நாம நடிச்ச படத்தின் பேரை நமக்குக் கொடுக்கவே பிரச்னை பண்ணா அது எப்படி சரியாகும்..? கேட்கிறார் வைகைப் புயல்
‘‘கால் வைக்கும் இடம் எல்லாமே கண்ணி வெடி... Controversyya தாண்டினேன் பிளான் பண்ணி...’’‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் இந்த ‘அப்பத்தா...’ பாடல் வரிகளுக்கேற்ப ஏகப்பட்ட தடைகள், நிறைய சர்ச்சைகள், பிரச்னைகள் என அத்தனையையும் கடந்து இப்போதும் கூட அந்த வெள்ளந்தி சிரிப்பும் அவருக்கே உரிய நகைச்சுவை மனமும் மாறாமல் நம்மை வரவேற்கிறார் வைகைப் புயல் வடிவேலு. ‘‘எல்லாரும் எப்படி இருக்கீங்கபா... வீட்ல குடும்பம் குழந்தைங்க எல்லாம் நல்லா இருக்காகளா?’’ அவருக்கே உரிய எதார்த்தமான நல விசாரிப்புடன் ஆரம்பித்தார் வடிவேலு. உடன் இயக்குநர் சுராஜும் மகிழ்வான மனநிலையுடன் இணைந்து கொண்டார்.
 ‘வி மிஸ் யூ தலைவா...’ ரசிகர்களின் இந்த வார்த்தைகளுக்கு உங்கள் பதில் என்ன?
வடிவேலு: என்னன்னு நான் சொல்றது... என் வாழ்க்கையே நீங்க கொடுத்ததுதான். நான் நடிக்கவே இல்லன்னாலும் என்னோட பழைய காமெடி, வீடியோ, மீம்ஸ்... இப்படி ஏதேதோ வழியில என்னை மறக்காம வச்சிருக்கிறதுக்கு நான்தான் முதல்ல நன்றி சொல்லணும். எவ்வளவோ பிரச்சனைங்க... எத்தனையோ தடைக... எல்லாத்துக்கும் எனக்கு பலமா இருந்தது இந்த புள்ளைங்க எல்லாம் எனக்கு கொடுத்த அன்புதான்.
 சுராஜ்: இதுக்கு ஒரு இன்சிடெண்ட் என்னாலயும் சொல்ல முடியும். ‘நாய் சேகர் கம் பேக்’ - இப்படித்தான் ஆரம்பத்தில் தலைப்பு வச்சோம். அப்போ ஒரு ரசிகர் என்கிட்ட சண்டைக்கு வந்துட்டார். அவர் எப்போ எங்களை விட்டு போனாரு... எதுக்கு கம்பேக்... அப்படின்னு போட்டு இருக்கீங்க. அந்தக் கேள்வியாலேயே ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’னு மாத்திட்டேன்.  நடிப்புதான் வாழ்க்கைன்னு நினைச்சு வந்த உங்களுக்கு நடிக்க தடை அப்படின்னு சொன்னபோது உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?
 வடிவேலு: ரொம்ப சங்கடமா இருந்துச்சு. சரி நாம நடிக்காம இருந்தா யாருக்கோ ஆதாயம்ன்னு நினைச்சுக்கிட்டேன்பா. நடிப்பு நடிப்புன்னு ரொம்ப வருஷமா இதுலயே கிடந்துட்டோம். நடிக்கக் கூடாதுன்னு சொன்னப்ப ரொம்ப வருத்தமாதான் இருந்துச்சு. ஆனால், என் குடும்பம், சாதி சனம், பிள்ளைக கூட கொஞ்ச காலம் வாழ்க்கையை ஓட்டுனேன். சரி இந்த கேப்பு கூட எதுவோ காரணத்துக்குதான்னு நினைச்சுகிட்டேன்.
 அடுத்த ரெண்டு வருஷமும் கொரோனா... கொத்து கொத்தா உசுருகள் போச்சு. அந்த சமயத்திலகூட இந்த இன்டர்நெட்ல என்னைய வச்சுதான் இந்த சின்னப் பிள்ளைக எல்லாம் அம்புட்டு காமெடிகளும் வீடியோக்களும் போஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதைவிட முக்கியமா டிவி சேனல், வீடியோ இப்படி... எனக்கு போன் பண்ணி ‘எப்படி இருக்கீங்க’ன்னு கேட்காத ஆளுங்களே இல்ல. நம்மள மறக்காம இருக்கறதே நமக்கு பெரிய பாக்கியம் இல்லையா?!‘நாய் சேகர்’ பெயரும் பிரச்சனையும்... அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க!
வடிவேலு: என் காமெடியை பூரா தலைப்பா வைக்கிறாக... வேற வேற படத்துல பயன்படுத்திக்கிட்டாக. அதெல்லாம் பிரச்னை இல்ல.
ஆனா, நாமளே நடிக்க வரும்போது, நாம நடிச்ச பேரை நமக்குக் கொடுக்கவே பிரச்னை பண்ணா அது எப்படி சரியாகும்..? அதுவும் இந்தப் படத்துக்கு, இந்த கதைக்கு அந்த தலைப்பு தேவையா இருந்துச்சு.
நம்ம படைப்புக்கு, நம்ம உருவாக்கத்துக்கே நாம மல்லு கட்டிக்கிட்டு நிக்கவேண்டியதாயிடுச்சு. சுராஜ்: ‘வக்கீல் வண்டு முருகன்’ - இந்தப் பெயரைச் சொன்னாலே வடிவேலு அண்ணன்தான் ஞாபகம் வருவாரு. அது மாதிரிதான் நாய் சேகர் அப்படின்னு சொன்னாலே அது அண்ணன்தான். அதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.இத்தனை வருஷமா எத்தனையோ தலைப்புகள் அண்ணன் நடிப்புலயும் அண்ணன் கேரக்டர்லயும் படங்களா வந்துகிட்டுதான் இருக்கு. அதெல்லாம் அண்ணன் என்னைக்காவது கேட்டிருக்காரா...
குறிப்பா இந்த தலைப்பு வேணும்னு கேட்கறோம். அப்படின்னா தேவைப்படறதாலதானே கேட்கிறோம். அதைத் தரமாட்டேன்னு சொல்லும் பொழுது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. வடிவேலு இப்படித்தான் திரும்பணும் அப்படின்னு யார் பிளான் பண்ணி பண்ணியது?
வடிவேலு: வேற யாரு... நம்ம பங்காளி சுராஜ்தான்! அதுக்கு பக்க பலமா லைக்கா கை கொடுத்தாக. லைக்கா தமிழ்க்குமரன் ஐயாவுக்கு நான் ரொம்ப பெரிய நன்றிக் கடன் பட்டுருக்கேன்.
அவருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னப்ப ‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல... உங்கள வச்சு படம் பண்றதுக்கு நானும் காத்திருக்கேன். கிளம்பி வாங்க’ன்னு சொன்னாருப்பா. அப்போ அவர் வேற வேலை விஷயமா பெங்களூர்ல இருந்தாரு. அங்கே நானும் நம்ம பங்காளி சுராஜும் போனா... கதை கேட்கறதுக்குன்னு ஒரு பெரிய மீட்டிங் ரூம். அதுல ஒரு பத்து பேர் உட்கார்ந்து இருந்தாங்கப்பா.
இப்ப கதை சொல்லுங்க அப்படின்னு சொன்னாங்க. அங்கன படம் ஆரம்பிச்சது. லண்டனுக்கெல்லாம் கூட கூட்டிட்டுப் போனாகப்பா. இந்தப் படம் நீங்க என்னவா யோசிச்சீங்களோ அப்படியே எடுங்க அப்படின்னு சொன்னாரு தமிழ்க் குமரன் ஐயா. சுராஜ்: இந்தப் படத்தை வடிவேல் அண்ணன் படம் அப்படின்னு இருக்குறத வச்சு, கிடைக்கிறத வச்சு செய்திடாதீங்க... ஒரு பெரிய ஹீரோவுக்கு எப்படி மேக்கிங் இருக்குமோ அந்த மாதிரி இருக்கணும்... அப்படின்னு தமிழ்க் குமரன் சார் சொல்லிட்டார்.
படத்துடைய ட்ரெய்லர்லையே பார்த்திருப்பீங்க... வடிவேல் அண்ணன் கூட இருக்கற நாய்கள்ல இருந்து ஆரம்பிச்சு, டெக்னீஷியன்கள், கூட நடிக்கிற நடிகர்கள்... இப்படி எல்லாமே எந்த அளவுக்கு பெரிய அளவில் செய்ய முடியுமோ செய்தோம். வடிவேலு: நானும் பங்காளி கிட்ட ஒரு விஷயம் கேட்டுக்கிட்டேன்.
இந்த வரலாறு மன்னர் காலம், ஆக்சன் இப்படி எதுவும் வேணாம். ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கேன்... மறுபடியும் |என்னைய தியேட்டர்ல பார்த்து மக்கள் எல்லாம் சந்தோஷமா சிரிச்சிட்டு போகணும். அதுக்கேத்த மாதிரி ஒரு காமெடி கதை ரெடி பண்ணு பங்காளி அப்படின்னு சொல்லியிருந்தேன். படத்துல என்கூட நிறைய நாய்கள் வரும். அத்தனை நாய்களுக்கும் கேரவன், ஏசி ‘ரெடி’ன்னு சொன்னாதான் கேரவன விட்டு அவிய்ங்க வந்து நிப்பாய்ங்க! எல்லாமே நான் ஒரு படத்துல சொன்ன மாதிரி பூரா பயலும் வெளிநாட்டுக்கார பயலுகளா இருந்தாய்ங்கப்பா!
படத்தில் உங்க கேரக்டர் என்ன?
(சுராஜிடம் திரும்பி) வடிவேலு: ஏப்பா நீ சொல்றியா இல்ல நான் சொல்லட்டுமா... சுராஜ்: சொல்லுங்கண்ணே... நீங்க சொன்னா நல்லா இருக்கும். உங்க பேச்ச கேட்கத்தான் காத்திருக்காங்க.
வடிவேலு: படத்துல நான் ஒரு நாய் திருடன். என் கூட ஒரு கூட்டம். எனக்கொரு வேலை வருது. அது என்னாங்கறது கதைப்பா. மியூசிக், கேமராமேன், செட்டிங் இப்படி படத்துல எல்லாமே பெரிய பெரிய ஆளுங்க. ஏப்பா பங்காளி... அவங்க பேர் எல்லாம் நீயே சொல்லிருப்பா.
சுராஜ்: ‘ரிட்டன்ஸ்’ - இந்த தலைப்புக்கு ஏத்த மாதிரியே அண்ணன் கூட ஏற்கனவே இருந்த எந்த டெம்ப்ளேட்டும் இல்லாமல் அத்தனையும் ஃபிரெஷ்ஷா புதுசா இருக்கணும்னு நினைச்சேன். சந்தோஷ் நாராயணன்கிட்ட கேட்டேன். கேட்ட உடனேயே அவ்வளவு சந்தோஷமாகி ‘அண்ணனுக்கு முதல்ல போன் போடுங்க’ அப்படின்னு குஷியா ஓகே சொன்னார்.
வடிவேலு அண்ணனையே ‘ஓ மை காட்... நாம பணக்காரன்...’, ‘அப்பத்தா...’, அப்புறம் ஒரு இங்கிலீஷ் பாட்டுனு எல்லாமே பாட வைத்தோம். பாட்டெல்லாம் செம ஹிட். வைரலாகி இருக்கு.
அண்ணன் கூட ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, முனிஸ் காந்த்... இப்படி புது டீம். ஆனந்தராஜ் சார் மாஸ் ஆன ஒரு கேரக்டர் செய்திருக்கார். இவங்க இல்லாம சிவானி நாராயணன், மனோபாலா சார், லொள்ளு சபா மாறன்... இப்படி படம் முழுக்கவே பயங்கர கலர்ஃபுல்லா இருக்கும்.
சினிமாட்டோகிராபி விக்னேஷ் வாசு, எடிட்டிங் செல்வா ஆர்.கே. பல போராட்டங்களுக்கு அப்பறம் இந்தப் படம் உருவாகியிருக்கு. படத்த தியேட்டர்ல பார்த்து சப்போர்ட் பண்ணுங்க. ‘உங்களால நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம்’னு பல இளைஞர்கள் சொல்றாங்களே... இதுக்கு உங்க பதில் என்ன?
வடிவேலு: உங்களால... இந்த வார்த்தைய அவங்கதான் சொல்றாங்க. ஆனா, உண்மையாவே அவுகளாலதான் நான் இன்னைக்கு வாழ்ந்துட்டு இருக்கேன்.
இன்னமும் மக்கள் என்னை மறக்கவே இல்லை. ‘ஓ மை காட்... நாம பணக்காரன்...’ அப்படின்னு ஒரு வயசு புள்ள உட்கார்ந்துக்கிட்டே டான்ஸ் ஆடுது. அந்த குழந்தை வரைக்கும் என்னையக் கொண்டு சேர்த்தது இந்த பசங்கதான்பா. உங்களாலன்னு அவக சொல்லலாம். நான் ‘என்னால’ன்னு சொன்னாதான்பா தப்பு. அந்த மண்டைக்கனம் மட்டும் வந்துடவே கூடாது. தமிழ் மக்களாலதான்பா நான் வாழ்றேன்.
ஷாலினி நியூட்டன்
|