சைபர் செக்யூரிட்டி துறையில் 5 லட்சம் வேலை வாய்ப்பு!



உலகப் புகழ் பெற்ற கணினி நிறுவனமான ஐபிஎம், ஆசியாவின் மிகப்பெரிய சைபர் செக்யூரிட்டி ‘ஹப்’ (Cybersecurity Hub) ஒன்றை இந்தியாவில் உள்ள பெங்களூருவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேருக்கு இத்துறையில் புதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.கணினித் துறைக்கு விதை போட்ட நிறுவனம் ஐபிஎம் (International Business machine). வயது 111.

ஆம். முதன் முதலில் தொழில்துறையில் கணினியைப் புகுத்தியது, இன்றைய நவீன கணினி யுகத்துக்கு வித்திட்ட நிறுவனம் இதுதான். இன்றும் இந்த நிறுவனம் கணினி தொடர்பான சேவைத் துறையில் முதல் பத்து இடங்களில் உள்ளது. நீண்ட நோக்கில் திட்டமிட்டுச் செயல்படும் நிறுவனம்.அந்நிறுவனம் இந்தியாவில் முன்பே காலூன்றிவிட்டது என்றாலும் 1990களுக்குப் பின் திட்டமிட்டு அவுட்சோர்ஸிங்கில் கால் பதித்தது. இந்தியாவில் ஐடி துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி சில லட்சம் பேருடன் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

அப்படிப்பட்ட நிறுவனம்தான் இன்று அடுத்த கட்ட பாய்ச்சலாக சைபர் செக்யூரிட்டி துறையில் கால் பதித்துள்ளது. அதன் விளைவாக இந்தியாவில் சுமார் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப்போகும் சைப ர்செக்யூரிட்டி ஹப் ஒன்றை பெங்களூருவில் அமைத்துள்ளது.  

சைபர் செக்யூரிட்டி ஹப் என்றால் என்ன..?

இன்று கணினி, மற்றும் இணைய உதவியுடன்தான் உலக வர்த்தகம் நிகழ்கிறது. அதாவது உலக வர்த்தகத்தில் மின்னணு வர்த்தகம் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. கணினி இல்லாத நிறுவனமோ, தொழிற்சாலையோ, தகவல் சேமிப்போ சாத்தியமில்லை. அவை அனைத்தும் இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இணையத் திருடர்கள் இந்த நெட்வொர்க்கில் உள்நுழைந்து (Hack) தகவல்களைத் திருடுவது, கணினி கட்டுமான அமைப்பைத் தகர்ப்பது, வைரஸ், மற்றும் ‘மால்வேர்கள்’ (Malware) உதவியுடன் ஹேக் செய்து தகவலை அழிப்பது, தகவல் மற்றும் உற்பத்தியை முடக்குவதன் (Denial of service) மூலம் பணம் கேட்டு மிரட்டுவது (Ransomware attack)... எனப் பல சைபர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.

இதன் நோக்கம் அந்நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நட்டத்தை ஏற்படுத்துவது, மிகப் பெரிய பண இழப்பை, உற்பத்தி இழப்பை, அவர்கள் ஈட்டிய நன்மதிப்பைக் குலைப்பது.
உலகம் முழுவதும் பல சைபர் கிரிமினல்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள். இதனால் சைபர் வெளி மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது, சாதாரண பயனாளர் முதல் பெரும் நிறுவனங்கள் வரை இந்த சைபர் தாக்குதலால் இழப்பைச் சந்திக்கிறார்கள்.

இந்த திட்டமிட்ட தாக்குதலை எதிர்கொள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பு தேவை. அதைத்தான் சைபர் பாதுகாப்பு - சைபர் செக்யூரிட்டி - என்கிறோம். சைபர் செக்யூரிட்டி என்பது தினம் தினம் மாறிக்கொண்டும், வளர்ந்துகொண்டும், விரிவாகிக்கொண்டும் இருக்கும் ஒரு துறை.ஒரு ஹேக்கர் பயன்படுத்தும் முறையை நீங்கள் கண்டறிந்துவிட்டால், உலகம் முழுவதும் இணைந்து செயல்படும் ஹேக்கர்கள் புதிய முறையை உருவாக்கி சைபர் தாக்குதலை மேற்கொள்வார்கள். இதனால் இந்தத் துறையை நொடிக்கு நொடி மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த சைபர் தாக்குதலை தடுப்பது, அதை முன்னரே கண்டறிவது, சைபர் தாக்குதல் நிகழ்ந்தால் அதை எதிர்த்து மீட்பது, புதிய தாக்குதல் நடக்காமல் இருக்க ஆய்வுகள் (Research & Development) செய்வது... என இந்த ஒட்டுமொத்த அமைப்பைத்தான் சைபர் செக்யூரிட்டி ஹப் என்கிறோம்.

இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்?

முதல் பயன் பெங்களூருவில் அமையப்போகும் இந்த சைபர் செக்யூரிட்டி ஹப் முழுக்க முழுக்க ஆசியாவை மையமாகக் கொண்ட நிறுவனங்களையும், அரசின் சைபர் கட்டமைப்பைப் பாதுகாக்கும் ப்ராஜக்ட்டுகளையும் கொண்டிருக்கும். இதற்கு சுமார் 5 லட்சம் பேர் வரை தேவை எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆக, இதில் 90 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.அடுத்து இங்கு உருவாகப் போகும் சைபர் செக்யூரிட்டி ஆய்வு நிறுவனம், இந்திய அரசுடன் ஒன்றிணைந்து வேலை செய்யப் போகிறது. அதனால், இந்தியாவின் சைபர் கட்டமைப்பு மேலும் வலுவாகும். இதனால் நாட்டின் சைபர் வணிகம் உயரும்.

மேலும் கணினி சேவைகளுக்கான வேலை வாய்ப்பும் உயரும். இந்திய அரசு இதைக் கச்சிதமாக பயன்படுத்தினால் சைபர் பாதுகாப்பு கருவிகளைச் செய்யும் தொழிற்சாலைகளை இந்தியாவில் அதிகரிக்கலாம். உலக சந்தையைக் கைப்பற்றலாம். இந்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது.

ஐபிஎம் நிறுவனம் தம் புதிய வேலையாட்களை உருவாக்க இந்தியாவிலுள்ள பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் ஒன்றிணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் நம் மாணவர்கள் அதி நவீன சைபர் செக்ரியூட்டி பற்றிய கல்வியைப் பெறுவதுடன், அதற்கான திறனையும் மேம்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்ல; இதன் காரணமாக இந்தியாவில் பலர் சைபர் செக்யூரிட்டி துறையில் மேம்பட்ட அறிவு பெற்று உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

ஐபிஎம்மின் நோக்கம் என்ன..?

2021ல் சைபர் செக்யூரிட்டி துறையில் ஆய்வு மற்றும் சேவைப் பிரிவில் ஐபிஎம் நிறுவனம் நஷ்டத்தையே சந்தித்தது. அதன் இப்போதைய வாடிக்கையாளர்கள் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஆனால், உலகம் முழுவதும் நடக்கும் சைபர் தாக்குதலில் சுமார் 26% ஆசியாவில்தான் நடக்கிறது. ஆசிய நிறுவனங்கள் மிகப்பெரும் பண இழப்பைச் சந்திக்கின்றன.

ஆக, இந்த சந்தையைக் கைப்பற்றுவது ஐபிஎம் நிறுவனத்தின் முதல் நோக்கம். அதற்கு அவர்கள் நம்புவது அவர்களின் இந்திய அனுபவம். பல பத்தாண்டுகளாக இந்தியாவில் கணினி சேவைத் துறையில் அதிக லாபமீட்டும் நிறுவனம் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இந்திய அரசு தனது சைபர் வெளியை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துகிறது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் பரவலும், அதிவிரைவில் வரப்போகும் 5ஜி நெட்வொர்க்கும் இந்தியச் சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுமார் 130 கோடி மக்களின் சைபர் சந்தை என்பது ஒரு நிறுவனத்தால் கனவிலும் எதிர்பார்க்க முடியாத சந்தை. அதில் சைபர்வெளி தாக்குதல் நிச்சயம் அதிகமாக இருக்கும். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் சைபர் நிறுவனங்கள் பெருகப் பெருக சைபர் செக்யூரிட்டிக்கான தேவையும் அதிகரிக்கும். இதைத்தான் ஐபிஎம் நிறுவனம் மிகப்பெரும் சந்தையாகப் பார்க்கிறது.

ஒரு எச்சரிக்கை:

இந்தியச் சந்தைகளில் வேலையாட்களைத் தேடுவதின் ஒரே நோக்கம், அதிகரித்த வேலைத் தேவை காரணமாக மிகக் குறைந்த சம்பளத்துக்கு இங்கு ஆட்கள் கிடைப்பார்கள் என்பது. மேலும் இந்தியாவில் பயிற்சிகளைப் பொறுத்தவரை மாணவர்கள் தம் சொந்தப் பணத்தில் படித்துவிடுவார்கள். அதனால் நிறுவனத்திற்குப் பயிற்சி செலவும் மிச்சம்.

இப்பொழுது 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்ற செய்தியைக் கேள்விப்பட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் சைபர் செக்யூரிட்டி கோர்ஸை தங்கள் சொந்த செலவில் படிப்பார்கள். மட்டுமல்ல... 5 லட்சம் வேலை வாய்ப்புக்கு 50 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள். இதனால் சம்பளத்தைக் குறைத்து ஆட்களை எடுக்க முடியும்.  

எனவே, மாணவர்கள் ஒரு விஷயத்தை உணர்வது நல்லது. எதிர்காலத்தில் சைபர் செக்யூரிட்டி, எத்திக்கல் ஹேக்கிங் (Ethical Hacking) போன்ற துறைகளில் வேலை வாய்ப்பு வரும். அவை முழுவதற்கும் உங்களைத் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்களே பயிற்சி கொடுக்க வேண்டும்.

எனவே, நீங்களாகக் கற்றுக்கொள்வதாக இருந்தால் ஆர்வத்தின் அடிப்படையில் கற்றுக்கொள்ளவும். இதைப் படித்தால் வேலை என விருப்பமில்லாமல், பல ஆயிரம் பணத்தைக் கொட்டிவிட்டு, புரியாமல் படித்து, பணத்தையும் இழந்து வேலையும் கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டாம்.இதை உங்கள் சீனியரின் அறிவுரையாக எடுத்துக்கொள்ளுங்கள்..

வினோத் ஆறுமுகம்