Must Watch



சுப்: ரிவெஞ்ஜ் ஆஃப் த ஆர்ட்டிஸ்ட்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிய இந்தி திரைப்படம், ‘சுப் : ரிவெஞ்ஜ் ஆஃப் த ஆர்ட்டிஸ்ட்’. ‘ஜீ5’ல் காணக்கிடைக்கிறது. மும்பையில் சினிமா விமர்சகர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு ஐஜி அரவிந்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

எதிரிகளோ, போட்டியாளர்களோ இல்லாத அந்த சினிமா விமர்சகரை யார் கொலை செய்திருப்பார்கள் என்று குழப்பமடைகிறார் அரவிந்த். அதற்குள் இன்னொரு சினிமா விமர்சகர் கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்படுகிறார்.இப்படி அடுத்தடுத்து சினிமா விமர்சகர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். தடயம் மட்டும் கிடைக்கவேயில்லை.

கொலைகாரன் யார் ? குறிப்பாக சினிமா விமர்சகர்களை அவன் ஏன் கொலை செய்ய வேண்டும்... போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதில் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.  
சினிமா போன்ற கலைத்துறைக்கு விமர்சனம் ரொம்பவே முக்கியம். ஆனால், அந்த விமர்சனம் பொய்யாக இருக்கும்போது அது கலைஞர்களை எப்படி பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லும் இப்படத்தில் துல்கர் சல்மான், சன்னி தியோல், பூஜா பட் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்கம் ஆர்.பால்கி.

ஸ்லம்பர்லேண்ட்

இந்த உலகிலிருந்து அழகான கனவுப் பிரதேசத்துக்குள் அழைத்துச் செல்லும் ஆங்கிலப்படம், ‘ஸ்லம்பர்லேண்ட்’.  ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் பார்க்கலாம். அதிசய சிறுமி நீமோ. அவளது தந்தை ஒரு தீவில் இருக்கும் கலங்கரை விளக்கத்தின் பொறுப்பாளராக இருக்கிறார். அம்மா இறந்துவிட்டார். அந்த தீவில் இருக்கும் ஒரெயொரு வீட்டில் அப்பாவும், மகளும் வாழ்ந்துவருகின்றனர்.

ஒரு நாள் கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் அப்பா புயலில் அடித்துச் செல்லப்படுகிறார். தனித்து விடப்படும் நீமோ, மாமாவின் வீட்டுக்குச் செல்கிறாள். மாமாவுக்கும் அவளுக்கும் எந்தவித பிணைப்பும் ஏற்படுவதில்லை. பள்ளிக்குச் செல்கிறாள். அங்கேயும் சக மாணவ - மாணவிகளுடன் நீமோவால் ஒன்ற முடிவதில்லை.

இந்நிலையில் அவளுக்கு ஒரு மேப் கிடைக்கிறது. அந்த மேப் மூலம் ஸ்லம்பர்லேண்ட் என்ற கனவுப் பிரதேசத்துக்குள் செல்கிறாள். அந்தக் கனவுப் பிரதேசத்தில் அவள் யாரைத் தேடுகிறாள்... அவள் தேடுவது கிடைத்ததா... என்பதே ஃபேன்டஸி திரைக்கதை. கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் அசர வைக்கின்றன. சிறுமியாக நடித்த மார்லோ தூள்கிளப்பியிருக்கிறார்.
குடும்பத்துடன் கண்டுகளிக்க ஓர் அழகான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரான்சிஸ் லாரன்ஸ்.

ஆப்டி தாப்டி

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மராத்தியப் படம், ‘ஆப்டி தாப்டி’. அந்த கிராமத்திலேயே மிகப்பெரிய கஞ்சன் சக்கராம் பட்டீல். அவனுக்கு மனைவி, மகள் என்று அழகான குடும்பம் இருக்கிறது. பிங்கு என்ற ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறாள் பட்டீலின் மகள்.

அதன் மீது உயிரையே வைத்திருக்கிறாள். பட்டீலின் கஞ்சத்தமான செயல்கள் அவரது மனைவிக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. அதனால் பட்டீலை ஒரு பொருட்டாக அவரது மனைவி மதிப்பதில்லை. மகளும் அப்பாவை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இருந்தாலும் பட்டீல் தன் போக்கிலே போய்க்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பிங்குவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மகள் உடைந்து போகிறாள். பிங்குவை குணப்படுத்த நகரத்துக்குக் கொண்டு செல்கிறாள் பட்டீல். தனது கஞ்சத்தனத்தால் பிங்குவைத் தொலைத்து விடுகிறார்.

பிங்கு இல்லாமல் வீடு திரும்பும் பட்டீலின் மீதான மதிப்பு இன்னும் குறைகிறது. பிங்குவையும், தன் மீதான மதிப்பையும் பட்டீல் எப்படி மீட்டெடுக்கிறார் என்பதே திரைக்கதை. ஒரு சிறுகதையைப் படிப்பதைப் போன்ற அழகான அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் ஆனந்த் கரிர்.

ஐராவதம்

அமானுஷ்யமும், திரில்லிங்கும் கலந்துகட்டிய தெலுங்குப்படம், ‘ஐராவதம்’. ‘ஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. ஒரு பிரபலமான பியூட்டி பார்லரில் முக்கியமான பியூட்டீஷியனாக இருக்கிறாள் ஸ்லோகா. அந்த பியூட்டி பார்லர் முதலாளியின் மகனுக்கும், ஸ்லோகாவுக்கும் இடையே காதல் வேறு.

ஸ்லோகாவின் பிறந்த நாளுக்கு காதலனிடமிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு கேமரா பரிசாகக் கிடைக்கிறது. தனது பிறந்த நாளுக்கு கிடைத்த சிறப்பான பரிசு இந்த கேமராதான் என்று ஒரு வீடியோவை அந்த கேமராவில் பதிவு செய்கிறாள்.தான் எடுத்த வீடியோவை டிவியில் ப்ளே செய்து பார்த்தால் ஸ்லோகாவுக்கு ஒரே அதிர்ச்சி.

ஆம்: அவள் எடுத்த வீடியோவுக்கு பதிலாக வேறு ஒரு வீடியோ ப்ளேயாகிறது. அதில் அச்சு அசலாக ஸ்லோகாவைப் போன்ற ஒரு பெண் தோன்றி தற்கொலை செய்துகொள்கிறாள்.  மகிழ்ச்சியான பிறந்த நாள் சோகத்தில் முடிய, ஸ்லோகா ஒரு மர்ம முடிச்சுக்குள் அகப்பட்டுக்கொள்கிறாள். உண்மையில் ஸ்லோகா யார்... அவளுக்கும் வீடியோவில் தோன்றிய பெண்ணுக்கும் இடையில் என்ன தொடர்பு... இந்த மர்மத்திலிருந்து ஸ்லோகா மீண்டாளா... என்பதே மீதிக்கதை. திரில்லிங் கதைப் பிரியர்கள் தவறவிடக்கூடாத இந்தப் படத்தை இயக்கியவர் சுஹாஸ் மீரா.

தொகுப்பு: த.சக்திவேல்