சமூகப் பிரச்னைகளை நீதிமன்றத்தில் தீர்க்கும் முன்னாள் லா காலேஜ் புரஃபசர்!



ஒன்றோ இரண்டோ அல்ல. பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்து வருபவர் பேராசிரியர் வழக்கறிஞர் விக்டர் தேவசகாயம். சில பிரச்னைகளுக்குக் கோரிக்கை மனுக்களை வழங்கியதன் மூலமே வெற்றியை எட்டியிருக்கிறார். சில பிரச்னைகளுக்கு வழக்குகளின் வழியே தீர்வு கண்டிருக்கிறார்.
சமீபத்தில் பழநியிலுள்ள பழநியாண்டவர் கலைக்கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஷிஃப்ட் முறையை மாற்றக் கோரியும், மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்க வேண்டியும், பதினான்கு ஆண்டுகளாக மூடிக்கிடந்த மாணவர் விடுதியைத் திறக்கக் கோரியும் ஐந்தாண்டுகளாக இவர் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இப்போதைய திமுக அரசு அவரின் மனுவை சட்டசபையில் பேசி 3 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டி வழங்க உத்தரவிட்டதுடன் மற்ற இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளது. ‘‘பழநியில்தான் படிச்சேன். நான் படிச்ச கல்லூரியைப் பார்க்கப் போனப்பதான் இந்தப் பிரச்னை தெரிய வந்தது. ஷிஃப்ட் முறையினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டாங்க. ஏன்னா, பழநியைச் சுற்றிலும் விவசாயக் குடும்பத்தினர் அதிகம்.

அந்த மாணவர்களின் பெற்றோர் காலையிலேயே விவசாய வேலைக்குப் போயிடுவாங்க. இவங்க கஞ்சியைக் குடிச்சிட்டு கல்லூரிக்குப் போவாங்க. மதியம் ஒன்றரை மணிக்கு கல்லூரி முடிஞ்சதும் மலைக்குப் போய் அங்க இருப்பாங்க. இதனால், மாணவர்களின் படிப்பு மோசமாகிடும்.

அதனால, கடந்த ஆட்சியிலேயே இதைப்பத்தி அரசின் கவனத்திற்குக் கொண்டு போனேன். ஆனா, நடவடிக்கை எடுக்கல. இப்ப திமுக அரசு என் கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்காங்க. அதுவும் கல்லூரிகளில் காலை உணவு என்பது இந்தியாவிலேயே எங்கும் கிடையாது. இதுவே முதல்முறை.ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு தனிமனிதன் கொடுத்த மனுவுக்கு மதிப்பளிப்பதுதாங்க திமுக அரசின் சாதனை...’’ என்கிறவர் தன் சமூக சேவைகள் பற்றித் தொடர்ந்தார்.

‘‘எங்க குடும்பமே திராவிடக் கொள்கையில் பிடிப்பு கொண்டது. நான் உடற்கல்வியியல் கல்வியில் மேற்படிப்பு முடிச்சிட்டு சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். பண்ணினேன்.
சின்ன வயசுலயே தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பேச்சுகளினால் ஈர்க்கப்பட்டேன். அந்தக் காலத்துல மாட்டுவண்டி கட்டிட்டுப் போய் கலைஞரின் பேச்சைக் கேட்டுட்டு வருவோம். அந்தத் தாக்கம் உண்டாக்கியதன் விளைவுதான் நாமும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யணும் என்கிற உணர்வை அடிப்படையில் ஏற்படுத்துச்சு.

அப்போது எம்ஜிஆரின் படங்களும் திராவிடக் கொள்கைகளுக்கு சப்போர்ட்டாக இருக்கும். நல்லதே செய்யணும்னு படங்கள்ல சிந்தனைகள் வைப்பார். இவையெல்லாம் நாம் நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை மனசுல வேரூன்றச் செய்தது.

படிப்பு முடிஞ்சதும் சென்னை அசோக் நகரில் ஒரு தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்க 1980ல் ஆசிரியர் சங்கம் ஆரம்பிச்சு ஊதிய உயர்வு கேட்டுப் போராடினேன். அவங்க என்னைக் கூப்பிட்டு, ‘ஊதியத்தை அதிகரிக்கிறோம். நீங்க வேலையைவிட்டுப் போறீங்களா’னு கேட்டாங்க. சரினு சொல்லிட்டு வெளியே வந்தேன். மற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகரிச்சுக் கொடுத்தாங்க.

நான் பி.எல் முடிச்சதால் வழக்கறிஞராகப் பணியாற்ற முடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. அப்படியே எனக்கும் அரசு சட்டக்கல்லூரியில் வேலை கிடைச்சது. மதுரையில் பணி செய்தேன். பிறகு, சென்னையில் 17 ஆண்டுகள் பணி செய்தேன்.

இங்கேயும் ஆசிரியர் சங்கம் இணைஞ்சு ஆரம்பிச்சோம். அதுவரை சட்டக்கல்லூரி பேராசிரியர்களுக்குத் தொடர் விடுமுறை என்பது கிடையாது. அதுக்காக போராடி 15 நாட்கள் தொடர்ந்து தடையற்ற விடுமுறை வழங்கக் கேட்டு வெற்றி பெற்றோம். பிறகு பல்வேறு சமூகப்பிரச்னைகளுக்காக குரல் எழுப்பினேன்.

குறிப்பா, தாம்பரத்தைச் சுற்றி இருந்த 2 லட்சம் மக்கள் வீடு மற்றும் பள்ளி, கல்லூரி கட்ட இருந்த தடையை நீக்க போராடி அரசாணை பெற்றேன். தாம்பரம் ஏர்ஃபோர்ஸைச் சுற்றி 900 மீட்டருக்கு வீடுகள் கட்டக்கூடாதுனு ஒரு சட்டம் 119 ஆண்டுகளுக்கு முன்னாடி போட்டிருக்காங்க. நான் கே.கே.நகர்ல இருந்து தாம்பரத்துல இடம் வாங்கி வீடு கட்டினப்ப அங்குள்ளவங்க
இந்தப் பிரச்னையை சொன்னாங்க.

உடனே, சட்டத்தை எடுத்துப் பார்த்தேன். அதுல அவங்களே அவங்க கட்டடத்திலிருந்து முந்நூறு மீட்டருக்கு அனுமதி தந்திருக்காங்க. அதுல பத்தடி உயரத்திற்கு கட்டிக்கலாம்னு இருக்கு. இதை சட்டத்துறையின் கவனத்துக்குக் கொண்டு போனேன். அவங்க அந்த ஃபைலை நிறுத்தி வச்சுட்டாங்க. இந்தச் சூழல்ல நான் தாம்பரம் விமானப்படை சுற்றுவாழ் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம்னு 2005ல் ஆரம்பிச்சேன். ஐந்தாண்டுகள் தொடர் போராட்டம் பண்ணி அந்தச் சட்டத்தை நூறு மீட்டராகக் குறைக்க வச்சோம். அதன்பிறகுதான் தாம்பரம் இவ்வளவு வளர்ச்சி அடைஞ்சது.

இதுக்காக என்னை விஜிலன்ஸ் துறையில் விசாரிச்சாங்க. எப்படி பாதுகாப்புத்துறைக்கு எதிரா சங்கம் ஆரம்பிக்கிறனு பல கேள்விகள். நம்பிக்கையா முன்னெடுத்து செய்து வெற்றி பெற்றேன்.
இதே 2005ம் ஆண்டுதான் தமிழக அரசு வெள்ளை ரேசன் கார்டுனு கொண்டு வந்தாங்க. நானும் உண்மையாக இருப்போம்னு வெள்ளை ரேசன் கார்டு வாங்கினேன். ஆனா, நிறைய பேர் ஓய்வு பெறும்போது பாதிக்கப்பட்டாங்க. பல சலுகைகள் இதுல கிடையாது. அதனால, மாற்றலாம்னு போனவங்களிடம் அது முடியாதுனு சொல்லியிருக்காங்க.

பொதுவா, எல்லா ரேசன் கார்டும் ஐந்தாண்டுகள்தான் செல்லுபடியாகும். அதன்பிறகு மாற்ற உரிமை உண்டு. இதுக்காக மனுகொடுத்தேன். சரியா பதில் சொல்லல. உடனே ஐகோர்ட்ல வழக்குத் தொடுத்தேன். அடுத்த நாளே, உணவுத்துறை செயலாளர் கூப்பிட்டார். ‘அய்யா, மாற்ற வழிவகை இருக்கு. தயவுசெய்து வழக்கை வாபஸ் வாங்குங்க’னு கேட்டார். நான், ‘ஒரு ஆர்டர் போடுங்க. ஆட்டோமெட்டிக்கா கேஸ் முடிஞ்சிடும்’னு சொன்னேன்.

உடனே அவர், ஒரு சுற்றறிக்கை போடுறேன். அது ஆர்டராகிடும்னார். இதனால, 10 லட்சத்து 52 ஆயிரத்து 302 பேர் பயனடைஞ்சாங்க. அப்புறம், 2012ல் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று முழுநேர சமூக சேவகராக மாறினேன்...’’ என்கிறவர், இப்போது அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் 7.5 சதவீத மாணவர்கள் சேர்க்கைக்கு அரசு கட்டணம் கொடுக்கத் தேவையில்லை என மனு அளித்து வருகிறார்.  

‘‘எல்லா பள்ளிகளும், கல்லூரிகளும் டிரஸ்ட் ஆக்ட்ல இருக்காங்க. ஒரு கோடி ரூபாய்க்கு அவங்க 40 லட்சம் ரூபாய் வரி கட்டணும். டிரஸ்ட் ஆக்ட்ல வர்றதால வரி கிடையாது. ஏன்னா, எல்லோருக்கும் இலவசக் கல்வி கொடுக்குறோம்னு சொல்லிேய கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்கிறாங்க.

ஆனா, இன்னைக்கு இந்த டிரஸ்ட் ஆக்ட்டை சுயநலமாக பயன்படுத்துறாங்க.
அதனாலதான் 7.5 சதவீத சேர்க்கைக்கு அரசாங்கம் பணம் கொடுக்கக்கூடாதுனு கோரிக்கை வச்சிருக்கேன். ஏன்னா, நூறு சதவீதம் இலவசக் கல்வினு சொல்லிட்டு ஒரு சீட், ரெண்டு சீட் கூட இலவசமா கொடுக்கலனா என்ன அர்த்தம்? அதனால் மனு அளிச்சிருக்கேன்.

அப்புறம், சமீபத்தில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா போயிருந்தேன். அங்க மாத்தூர் தொட்டிப் பாலத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். வறட்சியைப் போக்க இரண்டு மலைகளுக்கு இடையில் தொட்டிப் பாலத்தை உருவாக்கி தண்ணீர் போக வழி செய்திருக்கார் அன்றைய முதல்வர் காமராஜர். அதனால் அவர் பெயரை அந்தப் பாலத்திற்கு வைக்கணும்னு கோரிக்கை வச்சிருக்கேன்.

அடுத்து, டி.எஸ்.நகரா என்பவர்தான் பென்சன் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர். ஓய்வூதியத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றுத்தந்தவர். அவரின் சிலையை பென்சன் இயக்குனரகத்தில் வைக்க மனு அளிச்சேன்.

அதற்கு அனுமதி கிடைத்ததும் என் சொந்த செலவில் அவருக்கு அங்கே சிலை வச்சிருக்கேன். அதனால, ஓய்வூதியத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து பெற்ற டிசம்பர் 17ம் தேதியை ஓய்வூதியர் தினமாக அறிவிக்கணும்னு இப்ப கோரிக்கை வச்சிருக்கேன்...’’ என்கிற விக்டர் தேவசகாயம், ‘வெண்ணிலா கபடிக்குழு 2’, ‘கட்டில்’, ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ என மூன்று படங்களில் நடித்திருக்கிறார். இவர் தன் சொந்த செலவிலேயே இச்சேவைகளைச் செய்கிறார்.

பேராச்சி கண்ணன்