ஹன்சிகாவுக்கு டும் டும் டும்!



‘எங்கேயும் காதல்’ மூலம் தமிழில் களமிறங்கிய ஹன்சிகா என்னும் மும்பை புயல் தமிழ் சினிமாவையும், தமிழ் இளசுகளையும் வாரிச் சுருட்டி தன்னகத்தே வைத்துக்கொண்டது. தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு... என முன்னணி உச்ச நட்சத்திரங்களுடன் டூயட் பாடியவர் தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாகவே மாறிப்போனார்.  இப்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைக் கொடுத்துள்ளார் ஹன்சிகா மோத்வானி. அவரது தொழில் பார்ட்னரான சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ள ஹன்சிகா, அவருடன் இணைந்த புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இருவரும் கடந்த சில வருடங்களாகவே தொழில் நிமித்தமாக நட்பில் இருந்துள்ளார்கள். அதற்கு முன் ஹன்சிகாவின் 11வது வயதில் இருந்தே ஹன்சிகா - சோஹைல் இருவரின் குடும்பங்களும் நண்பர்களாகப் பழகி வருகின்றனர். குடும்ப நண்பர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து தொழில் பார்ட்னர்களாக மாறி , ஒரு கட்டத்தில் காதல் மலர இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது.

டிசம்பர் 4ம் தேதி ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் இந்தத் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஹன்சிகாவின் இந்த கிராண்ட் திருமணம் வட இந்திய இளவரசன் - இளவரசி தீமில் நடக்க இருப்பதாகவும், அதற்காக இரு குடும்பத்தாரும் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

இதற்காக 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரண்மனைகள் புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகின்றன.

ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்தத் திருமணம் நடைபெறவிருக்கிறதாம். இதில் பங்கேற்க உள்ள விருந்தினர்களுக்கு ஜெய்ப்பூர் அரண்மனைகள் தயார் செய்யப்பட்டு ஒரு ராயல் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை எப்படி உபசரிப்பார்களோ அப்படியான விருந்தோம்பல்களும் இருக்கப்போவதாகச் சொல்கின்றனர். மேலும் ஹன்சிகா பல்லக்கில் வரும்படியான ஏற்பாடுகளும் நடப்பதாகத் தெரிகிறது.

‘இன்றும், என்றென்றும்’ (Now & Forever) என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  குறிப்பிட்டு தனது காதல் கணவரை அறிமுகம் செய்திருக்கிறார் ஹன்சிகா. ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் அருகில் ‘என்னைத் திருமணம் செய்து கொள்’ என்ற ஆங்கில வாசகங்களுடன் சுற்றிலும் மெழுகுவர்த்தி, மத்தாப்பு ஆகியவற்றுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் ஹன்சிகா.

ஹன்சிகாவின் திருமண அறிவிப்புக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். திருமணத்திற்குப் பின் நிச்சயம் தனது நடிப்பில் தடை இருக்காது எனவும் முன்பே பல பேட்டிகளில் ஹன்சிகா கூறியிருக்கிறார். திருமணம் எக்காலத்திலும் ஒரு பெண்ணின் கரியரை நிறுத்தாது என முன்பே தெளிவுபடுத்தியிருக்கும் ஹன்சிகா மோத்வானி, திருமணத்திற்குப் பின்னர் தொடர்ந்து நடிப்பார் என்றே தெரிகிறது.

அதற்கேற்பவே ஹன்சிகா ‘பார்ட்னர்’, ‘ரெளடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஷ்ருதி’, ‘105’, ‘கார்டியன்’ மற்றும் ‘ MY3’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இதில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இன்னும் தலைப்பிடப்படாத இயக்குநர்கள் இகோர் மற்றும் கண்ணன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புக்கு இப்போது கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஹன்சிகா. வாழ்த்துகள் பேபிமா!

ஷாலினி நியூட்டன்