பிரைல் எழுத்து அவசியம் இல்லை; செல்ஃபோன் திரையே போதும்!
அரசுத் தேர்வுக்குத் தயாராகும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
அவர்கள் செல்ஃபோன் வைத்துத்தான் தொடுதிரையில் விரல் வைத்து நோண்டிக் கொண்டிருந்தார்கள். கூடவே காதில் வாக்மேனும். அத்தனை பேரும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள். அவர்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோயில், மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி என்று தமிழகத்தின் சகல மாவட்டங்களிலிருந்து யாருடைய துணையுமின்றி, தாமே பேருந்துகள் ஏறி பயணித்து கோவை வந்து ஹாஸ்டலில் தங்கி குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மட்டுமல்ல, ஐஏஎஸ் தேர்வுக்காகவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இல்லை?

இப்படியான பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் பயிற்சிகளை அளித்து வருகின்றன கோவையில் உள்ள தேசிய பார்வையற்றோர் இணையமும், அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மையமும். கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதி.
 இங்கே ஓர் ஒதுக்குப்புறமான தெரு. ஒரு ஷெட்டின் கீழ்தான் அவர்கள் குழுமியிருந்தார்கள். நாம் போனபோது பலர் அப்படி செல்ஃபோன்களை தடவிக் கொண்டிருக்க, அவர்கள் நடுவே ஒரு மாணவி இரண்டு அம்புபோல ஒரு பொருளை வைத்துக் கொண்டு, அதைத் தடவித் தடவி மற்றவர்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். இல்லையில்லை. அவரின் வர்ணிப்பில் இந்தியாவின் புவியியல் அமைப்பே விரிந்தது.  ‘‘இது நம் நாட்டின் வடக்கே அமைந்துள்ள இமயமலை. அதன் கிழக்கு முகம் இப்படித்தான் மேடாக ஏறி பிறகு பள்ளமாகக் குழியும். இந்த பள்ளமான பகுதிதான் பீடபூமி. பிறகு மேடாக எழும்பும் மேட்டுப்பகுதி மலைகள். இதன் நடுவே இப்படி நிறைய நிறைய மலைகள், மரங்கள், பனிப்பாறைகள். இதுல என்னென்ன நாடுகள், மாநிலங்கள், சிகரங்கள் இருக்கின்றன...’’ என்று அவர் விளக்கிச் சொல்லச் சொல்ல மற்ற மாணவர்கள் தம் நோட்டுப் புத்தகங்களில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இதைப் பற்றி நம்மிடம் விளக்கினார் இவர்களுக்கு பயிற்றுனராக இருந்த கணேஷ்.‘‘பார்வையற்றவர்கள் இமயமலை எப்படி இருக்கும்னு நம்மகிட்ட கேட்டா என்ன சொல்லுவோம்..? இரண்டு வில் வடிவில் இருக்கும்ன்னு சொல்லி வைப்போம். அப்ப, வில் எப்படி இருக்கும்ன்னு கேட்டா? உடனே வில்லையே செஞ்சு கொடுத்தா, அவங்க தடவிப் பார்த்துப் புரிந்து கொள்வார்கள் இல்லையா? அதுதான் இது.
இமயமலை இப்படித்தான் இருக்கும். இங்கே சரிவாக இருக்கும் பகுதி பீடபூமி. மலை உச்சியில் இருப்பது சிகரம். இப்படி சொல்லும்போது நம்ம கூடவே டிராவல் பண்றாங்க...’’ இதேபோல் பல்வேறு விஷயங்களுக்கு பல்வேறு முறைகளில் இவர்களுக்கு செயல்வடிவப் பாடம் நடக்கிறது. அதில் ஒன்று செல்ஃபோன் தொடு திரை.
இவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள விசேஷ செயலியை டச் செய்தால் போதும். இவர்களுக்கான பாடங்கள் ஆடியோ வடிவில் ஒலிக்கின்றன. அதை இயர்போன் வழியே கேட்டுப் புரிந்து படிக்கிறார்கள். இப்போது பிரைலி பாட முறை பார்வையற்றோர் பள்ளிகளில் கூட அருகி வருகிறது. இதுதான் இப்போதெல்லாம் அங்கும் புழக்கத்தில் வந்து விட்டது என்கிறார் கணேஷ்.
சரி, இந்தப் பயிற்சி மையம் எதற்காக, எந்த சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது என்பதைக் கேட்கும்போது ஒரு அரசியல் வரலாறே விரிகிறது.
மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. அதில், ‘பார்வையற்றவர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டார்கள். எனவே, உள் இட ஒதுக்கீடு கேட்டு போராடினார்கள். உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஒரு சதவீதம் உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைக் கணக்கெடுத்து நிரப்ப வேண்டும்’ என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 14,267 பணியிடங்கள் இருந்தன. இதில், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.அப்படி ஒதுக்கப்பட்டால் போதுமா? அவர்கள் தேர்வில் வெற்றி பெறும் அளவு தங்கள் தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டாமா? அதற்கான முயற்சியை முன்னெடுத்தது தேசிய பார்வையற்றோர் இணையம் என்ற தொண்டு நிறுவனம்.
1973ல் தில்லியில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தன்னை விரிவுபடுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 1976லும், 1979லும் வந்தது. இந்த தேசிய பார்வையற்றோர் இணையம் இதற்கான பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தது. அந்த வகையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது.
பயிற்சி பெறுபவர்களுக்கு தங்குமிடம், உணவு, போக்குவரத்துச் செலவு எல்லாமே இந்த அமைப்பு ஸ்பான்சர் மூலமே செய்தது. இதில் கோவையில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் இங்கே பயிற்சி பெற்றவர்கள் 120 பேர் வங்கி, டிஎன்பிஎஸ்ஸி, ரயில்வே, ரெவின்யூ, எல்ஐசி என பல்வேறு துறைகளின் பதவிகளுக்கு சென்றுள்ளனர்.
நாம் போனபோது 40 பேர் படித்துக் கொண்டிருந்தனர். 30 நாள் முதல் 45 நாட்கள் வரை பயிற்சி கொடுக்கிறார்கள். ‘‘தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பே அறிவிப்போம். அவர்கள் விண்ணப்பிப்பார்கள். இண்டர்வியூ மூலம் தேர்வு செய்வோம். எல்லாமே ஆன்லைன்லதான். இதற்கு ஒரே தகுதி பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள்தான்.
45 நாள் கிளாஸ். பத்தாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் பெற்றவர் வரை பயிற்சி கொடுக்கிறோம். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்குக் கூட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்!’’ என்றார் இதன் பயிற்றுநர் கணேஷ்.பயிற்சி பெறுபவர்கள் கோவை மண்டலத்திலிருந்து மட்டுமல்ல, தமிழகமெங்குமிருந்து வந்திருந்தார்கள். நாம் சென்றபோதுகூட தூத்துக்குடியிலிருந்து கஸ்தூரிப்பேச்சி என்பவர் பிஏ, பிஎட் படித்து முடித்து விட்டு இங்கே வந்து குரூப் 4 தேர்வுக்காக பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்.
‘‘வீட்டிலிருந்தா படிக்க மாட்டோம். பயிற்சி வகுப்புக்குப் போகலாம்ன்னு மூணு வருஷத்திற்கு முன்பே முடிவெடுத்தேன். கொரோனா வந்துட்டதால அது நடக்கலை. எங்களுக்குன்னு ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கு. அதுல கோயமுத்தூர் பயிற்சி மையத்தில் நல்லா சொல்லிக் கொடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். அப்பா அம்மா பஸ் ஏத்தி விட்டாங்க.
நானே வந்துட்டேன்!’’ என்கிறார் கஸ்தூரிப்பேச்சி. இதேபோல் திருப்பூர் கோகிலப்ரியா, தர்மபுரி மணிகண்டன், கிருஷ்ணகிரி விசுவநாத் என பலரும் இங்கே தங்கி படித்துக் கொண்டிருந்தார்கள். இதில் விசுவநாத் எம்பில் இசைத்துறை, சென்னை பாரீசில் உள்ள இசைக்கல்லூரியில் படித்துவிட்டு இங்கே பயிற்சி பெற வந்திருந்தார்.
இவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் குறித்து இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் (இவரும் பார்வையற்றவர்) பேசுகையில், ‘‘ஆரம்பத்தில் பார்வையற்றவர்களுக்கு கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களே கிடைக்கவில்லை. தனியார் பயிற்சி நிறுவனங்கள் எதுவுமே முன்வரவில்லை.
இந்நிலையில், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் அவர்களுக்கு இலவசமாக கற்றுத்தர முன்வந்தது. இதில்சிறப்பு என்னவென்றால் இந்த மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயின்று வரும் பட்டதாரிகளும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற பட்டதாரிகளும் வந்து பார்வையற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றனர்...’’என்றார். அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் கணேஷ் பேசும்போது, ‘‘பொதுவாக, சாதாரண மாணவர்கள், வகுப்பில் பாடத்தை கவனிக்கிறார்களா என்பதை அவர்களின் கண்ணைப் பார்த்து அறிவோம். ஆனால், இங்கு நாங்கள் கற்றுத் தருவதைக் கேட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் காட்டும் முகபாவனைகள் எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது. இந்த முயற்சிக்கு எங்கள் மையத்தில் பயின்ற மாணவ, மாணவிகளும் மனப்பூர்வமான ஒத்துழைப்பு தருவதால்தான் இந்த முயற்சி சாத்தியம் ஆகியுள்ளது...’’ என்றார்.
கா.சு.வேலாயுதன்
|