டிஜிட்டல் கரன்சி...
இந்திய அரசு இதை ஏன் கொண்டு வர விரும்புகிறது..?
உலக நாடுகள் ஏன் டிஜிட்டல் கரன்சியில் ஆர்வம் காட்டுகின்றன..?
பிட் காயினுக்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் என்ன வேறுபாடு..?
பிட்காயின், கிரிப்டோ கரன்சி போன்ற பெயர்கள் எல்லாம் சமீப காலம் வரை ஒரு சிறு ஆர்வலர் குழுவுக்குள் புழங்கிய வார்த்தைகளாக இருந்தவை. இப்போது அவை பொது வெளியிலும் ஊடகங்களிலும் சாதாரணமாக புழங்கும் வார்த்தைகளாக மாறிவிட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் பெயர்கள் பரிச்சயமான அளவுக்கு அவை செயல்படும் முறை குறித்த புரிதல் பரவலாக ஏற்படவில்லை.இந்த சூழலில் இந்திய அரசு CBDC எனப்படும டிஜிட்டல் கரன்சியை பரிசோதனை முயற்சியாக சிறு அளவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறது.
 உலகெங்கிலும் பல நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள் கடந்த 2 - 3 வருடங்களாக டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டை பரிசோதித்துக் கொண்டிருக்கின்றன . முதன் முதலில் பஹாமாஸ் தீவுகளில் ஆரம்பித்த முயற்சி பின்னர் பிற நாடுகளுக்கும் பரவி, இன்று சீனா உட்பட கிட்டத்தட்ட 100 நாடுகள் டிஜிட்டல் கரன்சியை ஏதோ ஒரு வகையில் பரிசோதித்தபடி உள்ளன. இரண்டு நாடுகளில் மட்டுமே தற்சமயம் இது தினப்படி புழக்கத்தில். இவை இரண்டுமே சிறு தீவு நாடுகள் - பஹாமாஸ் மற்றும் ஜமைக்கா.
 கான்செப்ட் அளவில் டிஜிட்டல் கரன்சி மிகவும் எளிமையானதே. டிஜிட்டல் கேமராக்கள் புகைப்படங்களில் நிகழ்த்திய மாபெரும் மாற்றத்தைப் போலவே டிஜிட்டல் கரன்சி, அச்சிட்ட நோட்டுகளில் மாற்றங்களை நிகழ்த்த வல்லது. பணத்தை டிஜிட்டலாக மாற்றிவிட்டால் அதை பயன்படுத்தும் விதத்தையும் தன்மையையும் பலவாறாக மாற்றிவிடலாம். இந்தியாவில் பணத்தை அச்சடிக்கும் உரிமை இந்திய ரிசர்வ வங்கியான RBIக்கு மட்டும்தான் உள்ளது. தான், அச்சடிக்கும் ஒவ்வொரு நோட்டுக்கும் ரிசர்வ் வங்கி உறுதியளிக்கிறது. இதை fiat curreny என்கிறார்கள். அதாவது அரசாங்கத்தால், ரிசர்வ் வங்கி மூலம் உறுதியளிக்கப்படும் கரன்சி.
 ரிசர்வ் வங்கியில் பொதுமக்கள் நேரடியாக கணக்கு வைத்திருக்க முடியாது. எனவே, இவ்வாறு அச்சிட்ட பணத்தை ஆர்பிஐயிடம் இருந்து பிற வணிக வங்கிகள் கடனாக வாங்கும். நாம் அந்த வங்கிகளிடமிருந்து இந்தப் பணத்தை பெறுகிறோம். இந்தப் பணத்தை நாம் செலவு செய்ய அது மீண்டும் ஏதோ ஒரு வடிவில் வங்கிகளுக்கு திரும்பப் போகிறது. இதுவே பணச்சுழற்சி. இதே நாம் டிஜிட்டல் கரன்சிக்கு மாறிவிட்டால் ஒரு வாடிக்கையாளராக நாம் நேரடியாக ரிசர்வ் வங்கியிடம் இருந்தே பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அதே போல தற்போது உள்ள முறையில் ஒருவருக்கு நாம் பணம் அனுப்ப வேண்டுமானால் அது நம் வங்கியில் இருந்து மற்றொரு வங்கியில் உள்ள ஒரு அக்கவுண்டுக்கு சேர (Settlement) பல தடைகளைத் தாண்டி வரவேண்டும். ஆனால், டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டுக்கு வந்தால் இந்த சிரமங்கள் ஏதும் இல்லாமல் நேரடியாக - வங்கிகள் உதவியின்றி - நம்முடைய டிஜிட்டல் வாலெட்டில் (Wallet / Purse) இருந்து அவரது டிஜிட்டல் வாலெட்டுக்கு போய்விடும்.
இதைச் செய்ய நமக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. மேலும் டிஜிட்டல் கரன்சி முறைக்கு மாறினால் ஒரு கரன்சிதான் இருக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. தற்சமயம் இரண்டு விதமான கரன்சிகளை ரிசர்வ வங்கி சோதிக்க விருக்கிறது.
ஒன்று-வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைக்கு புழங்கும் ‘மொத்த வியாபார’ கரன்சி (CBDC-W). மற்றொன்று- பொதுமக்கள் பயன்பாட்டுக்கான ‘சில்லரை வியாபார’ கரன்சி (CBDC-R). எதிர்காலத்தில் இன்னுமே பல்வேறு கரன்சிகளை நாம் உருவாக்கிக்கொள்ளலாம்.வங்கிக் கணக்கு, வங்கி சர்வீஸ் சார்ஜ், பணம் செலுத்த ஆகும் செட்டில்மெண்ட் சார்ஜ் போன்ற ‘மத்தியில் இருப்போர்’ எல்லாம் நீங்கி பணப் பரிவர்த்தனை எளிதாகவும், செலவற்றதாகவும் ஆகும். அரசு திட்டங்கள், மானியங்கள் போன்றவற்றை பயனாளர்களின் செல்போனுக்கே நேரடியாக அனுப்ப முடியும்.
சாதகமான விஷயங்களில் எப்போதும் பாதகமானவையும் கலந்திருப்பது போல இதிலும் அவ்வாறான சில விஷயங்கள் உள்ளன. டிஜிட்டல் கரன்சியை நாம் பயன்படுத்தினால் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் அந்தப் பணத்தை யார் செலவு செய்கிறார்கள், எதற்காக செலவு செய்கிறார்கள், எங்கே என்பது போன்ற விவரங்களைச் சேகரிப்பது மிக எளிதாகிவிடும்.
அதேபோல டிஜிட்டல் கரன்சியின் தொழில்நுட்பமும் கட்டமைப்பும் ஒரு மைய அதிகாரத்தின் கீழ் வரும் என்றால் தீவிரவாத சக்திகளுக்கும் அழிவு சக்திகளுக்கும் அதன் மீது சைபர் தாக்குதல் நடத்த இயலும். இதைப் பாதுகாக்க ஒவ்வொரு நாடும் மிகத்திறமையான சைபர் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவது இன்றியமையாதது. மேலும் இந்த கரன்சிகள் நாம் தேவையான வகையில் வடிவமைக்கவும் புரோகிராம் செய்யவும் ஏதுவானவை. உதாரணமாக, ஆறு மாதத்துக்குள் செலவு செய்யாவிட்டால் பயனில்லாமல் போய்விடும் கரன்சிகளை உருவாக்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு மட்டுமே (உதாரணம் - உணவு) செலவு செய்ய முடிகிற மாதிரி கரன்சியை உருவாக்கலாம். சொல்லி வைத்தது போல எல்லா நாடுகளும் ஒரே சமயம் இந்த டிஜிட்டல் கரன்சி திட்டத்தை முன்னெடுக்க இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
பிட்காயின், ஈதரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகளின் பரவலாக்கம் மற்றும் கிடுகிடுவென உயரும் மதிப்பு, உலகெங்கிலும் உள்ள அரசு கரன்சிகளுக்கு சவால் விடுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது,இந்த அச்சம் எவ்வளவு தீவிரமானது என்பதை புரிந்துகொள்ள இவைகளில் பயன்படுத்தப்படும் blockchain என்னும் தொழில்நுட்பத்தை புரிந்துகொள்வது மிகவும் அவசியம். பிளாக்செயின் என்ற தொழில்நுட்பம் distributed ledger என்ற கருதுகோளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அதை ஒரு உதாரணம் மூலம் விளக்கினால் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும்.
பாலுவும் வேலுவும் நண்பர்கள் என்று வைத்துக்கொள்வோம். பாலு வேலுவுக்கு 100 ரூபாயை தன் வங்கி மூலம் அனுப்புகிறார். அது வங்கி லெட்ஜரில் ஒரு பரிவர்த்தனையாக பதிவாகும். பாலுவின் கணக்கில் அந்த நூறு ரூபாய் கழிக்கப்பட்டிருக்கும். வேலுவின் கணக்கில் அந்த நூறு ரூபாய் சேர்க்கப்பட்டிருக்கும். இது அந்தந்த வங்கியின் லெட்ஜரில் பதிவாகிவிடும். அந்த பதிவுதான் இந்த பரிவர்த்தனைக்கான ஆவணம் (proof of transaction). இந்த பரிவர்த்தனை முடிந்தபின் இதை யாருமே மாற்ற முடியாது (immutable).
இன்னொரு வகையில் வங்கி என்பதே அந்த லெட்ஜர் பதிவு மீதான நம் நம்பிக்கை. அவ்வளவுதான். இதுதான் தற்போதைய நிலமை. பிளாக்செயின் தொழில்நுட்பம் புத்திசாலித்தனமாக இந்த நம்பிக்கையை தொழில்நுட்ப ரீதியாக உருவாக்கப் பார்க்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அது இந்த லெட்ஜரை டிஜிட்டல் வடிவில் பல காப்பிகளாக, யாரும் தன்னிச்சையாக மாற்றமுடியாதபடி ஒரு நெட்வொர்க்கில் இருக்கும் எல்லோருக்கும் அளித்து விடுகிறது.
அதை இப்படி விளக்கலாம் - பாலு வேலுவுக்கு 100 ரூபாய் கொடுத்தது லெட்ஜரில் ஒரு பதிவாக இருக்கிறது. அந்த பதிவின் கீழ் அந்த நெட்வொர்க்கில் இருக்கும் ஒவ்வொருவரும் (100 பேர் என்று கொள்வோம் ) கையெழுத்திடவேண்டும். முதலில் பாபுவே அதில் கையெழுத்திடுவார். அந்த கையெழுத்தை சரிபார்த்து உறுதி செய்து இன்னொருவர் கையெழுத்திடுவார். அந்த இருவரின் கையெழுத்தையும் சரிபார்த்து மூன்றாமவர் கையெழுத்திடுவார்.
இப்படி அந்த நெட்வொர்க்கில் இருக்கும் அத்தனை பேரும் சரிபார்ப்பார்கள். இந்த லெட்ஜரில் ஏதாவது ஒரு தகவலோ அல்லது கையெழுத்தோ ஃபோர்ஜரி செய்யப்பட்டால் மீண்டும் அத்தனை பேரும் அதை முதலில் இருந்து சரிபார்க்க வேண்டும். அப்படி சரிபார்க்க முடியாவிட்டால் அந்தப் பதிவு லெட்ஜரில் ஏற்றுக்கொள்ளப்படாது.
சரி, ஃபோர்ஜரி செய்வதை எப்படி கண்டுபிடிப்பது? ஒவ்வொருவரிடமும் இந்த லெட்ஜரின் காப்பி ஒன்று இருக்கும். ஒருவர் உண்மையிலேயே இதில் ஃபோர்ஜரி செய்ய வேண்டும் என்றால் அந்த மாற்றத்தை முதலில் ஒரு லெட்ஜரில் அந்த நூறு பேரிடமும் பேசி மாற்ற வேண்டும். பின் அந்த நூறு லெட்ஜரிலும் இதே மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
இப்படி ஒரு விஷயத்தை வெளிப்படையாக, எல்லோருக்கும் சம அளவு அதிகாரம் உள்ளதாக, பரவலானதாக மாற்றிவிட்டால் அதை ஒருவர் தன் தனிப்பட்ட நலனுக்காக மாற்றுவது என்பது சாத்தியமே இல்லை என்றாகிவிடும்.எளிய புரிதலுக்காக இதை உதாரணமாகச் சொல்கிறேன். இதன் பின்னிருக்கும் கணிதங்களும் அல்காரிதம்களும் சிக்கலானவை. ஆனால், ஒரு பயனராக நாம் அது குறித்து அறிந்திருக்க வேண்டியதில்லை.
இவை அனைத்துமே பிளாக்செயின் தொழில்நுட்பத்தில், டிஜிட்டல் வடிவில் தன்னிச்சையாக புரோகிராம் செய்தபடி நடக்கும்.
பிளாக்செயின் வழக்கில் இப்படி கையெழுத்திடும் ஒருவரை node என்றும், அந்த தனித்துவமான கையெழுத்தை HASH என்றும் சொல்கிறார்கள். இப்படி இரு சங்கிலி போல ஒருவர் கையெழுத்தை சரிபார்த்து, அதை ஒட்டி இன்னொருவர் கையெழுத்து இடுவதைத்தான் blockchain என்கிறார்கள்.
சரி. ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்... வங்கியில் ஒரு லெட்ஜரில் நேரடியாக ஒரு பதிவு செய்துவிட்டால் சிக்கலே இல்லையே என்று தோன்றலாம். இப்படி பிளாக்செயினில் இயங்கும் distributed ledger தொழில்நுட்பத்துக்கு மாறினால் நமக்கு வங்கி என்ற மத்தியஸ்தரின் தேவையே இல்லாமல் போய்விடும். இங்கு distributed ledger என்பதே ஒரு நம்பகமான சுயாதீன வங்கியைப் போல செயல்பட ஆரம்பித்துவிடும்.
இந்த வசீகரமான கான்செப்ட்டை முன்வைத்துத்தான் நாம் பிட்காயின் என்று அழைக்கும் கிரிப்டோ கரன்சி உருவாகி பிரபலமானது. இது ஒட்டுமொத்தமாக மரபான வங்கி மற்றும் நிதி வலைப்பின்னலுக்கு வெளியே சுயாதீனமாக இயங்கும் பரவலான பங்களிப்பு கொண்ட ஒரு நிதி அமைப்பு.
கிரிப்டோ கரன்சிகள் மையத்தில் குவியாத, எந்த ஒற்றை கட்டுப்பாட்டின் கீழும் வராதவை. இந்த தொழில்நுட்பத்தை யாரோ ஒருவர் உச்சியில் இருந்து கட்டுப்படுத்த முடியாது. இந்த அமைப்பில் மக்களிடையே புழங்கும் கிரிப்டோ கரன்சி மீது ரிசர்வ வங்கிக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. நாம் சுத்தமாக ரிசர்வ் வங்கியையே பண வரவு செலவு நிகழ்வுகளில் இருந்து விலக்கி வைத்துவிட முடியும்.
மேலும் கிரிப்டோ கரன்சிகள் மூலம் கருப்புப் பணம் வெள்ளையாக்கப்படுவதும், தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும் ரிசர்வ வங்கிகள் அச்சம் தெரிவிக்கின்றன. பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் சுயாதீனமாக தனியார் நிதிஅமைப்புகள் என்றால் டிஜிட்டல் கரன்சிகள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிதி அமைப்புகள்.இந்த ஆபத்தைப் புரிந்துகொண்ட மத்திய வங்கிகள் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிதிஅமைப்பின் மீதான தங்களின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முயல்கின்றன. அதுதான் டிஜிட்டல் கரன்சிக்கான முக்கிய தூண்டுகோல்.
கிரிப்டோ கரன்சி பிளாக்செயினில் யாரும் கலந்துகொண்டு யாரும் அந்த லெட்ஜரை ஒரு பிரதி எடுத்துக்கொண்டு சரிபார்க்கலாம். எனவே, அதன் அதிகாரம் என்பதும் உண்மையிலேயே பரவலானது, எல்லோருக்கும் சமமானது.
மத்திய வங்கிகள் இதில் ஒரு சிறிய மாற்றத்தை கொண்டு வருகின்றன. அவர்கள் அதே பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதில் யார் கலந்துகொள்ளலாம்,எவ்வளவுபேர் கலந்து கொள்ளலாம் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். இதை permissioned blockchain என்கிறார்கள். இது பிளாக்செயின் தொழில்நுட்பம் அளிக்கும் வசதியை பயன்படுத்திக்கொண்டு அதே சமயம் அதன் மீதான மைய கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக்கொள்ளும் அணுகுமுறை.
கிரிப்டோ கரன்சிகளுக்கும் டிஜிட்டல் கரன்சிகளுக்கும் இடையே நடக்கும் போட்டி தொழில்நுட்பப் போட்டி அல்ல. அது பரவலான நிதிஅதிகாரம் கொண்ட சுயாதீன அமைப்புக்கும், குவிக்கப்பட்ட நிதிஅதிகாரம் கொண்ட அரசு அமைப்புக்கும் இடையே நடக்கும் பலப்பரீட்சை. இந்த பரஸ்பர போட்டி தவிர்க்க முடியாமல் நம் நிதி அமைப்பை முற்றிலும் டிஜிட்டலாக இருக்கும் ஒரு புள்ளியை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கிறது. ஆனால், அப்படியான நகர்வு மிக அடிப்படையாக பல விஷயங்களைப் புரட்டிப் போடும் தன்மை கொண்டது.
நாட்டின் ஒட்டு மொத்த பண மதிப்பையும் டிஜிட்டலாக ஒரு அமைப்பில் உருவாக்கி வைத்தால், எதிரிகள் அதைத் தாக்கி அழிப்பதன் மூலம் ஒரு நாட்டை முற்றாக நிலைகுலையச் செய்யலாம். வெடிகுண்டுகளைப் போட்டு தாக்கி அழிப்பதை விட இது பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியது.
இதனால்தான் பல நாடுகள் இதை பரீட்சார்த்தமாக முயன்றாலும் முழுதும் டிஜிட்டலாக மாறத் தயங்குகின்றன. ஆச்சரியகரமாக சிங்கப்பூர் இந்த பரிசோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டு தங்களுக்கு இப்போதைக்கு இது அவசியமில்லை; தற்போது இருக்கும் பணப்பரிவர்த்தனை முறையே போதுமானதாக உள்ளது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
நவீன பின்உலகமய காலத்தில் நாம் பலவாறாக பிளவுபட்டிருந்தாலும் நிதி பரிவர்த்தனை, பரஸ்பர வியாபாரம் போன்றவை மட்டும் உண்மையில் உலகளாவிய ஒற்றை வலைப்பின்னலாக உருவாகியுள்ளது.
எனவே, டிஜிட்டல் கரன்சியின் மீதான தனிமனிதர்கள் உரிமை என்ன, வாடிக்கையாளர்களின் தனியுரிமைகள் (privacy) பாதுகாக்கப்படுவது எப்படி... என்பது குறித்தெல்லாம் தெளிவான சட்டங்களும் சுயாதீன கண்காணிப்பு அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.இல்லையென்றால் டிஜிட்டல் கரன்சி என்பது எளிதில் டிஜிட்டல் கண்ணியாகவும் , நாடுதழுவிய கண்காணிப்பாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.
கார்த்திக் வேலு
|