அரண்மனை குடும்பம் -44



‘‘டியர்...’’ என்கிற அழைப்போடு வந்து பேசிய கணேசராஜாவை மகிழ்ச்சியோடு பார்த்த மஞ்சு,‘‘அத்தான்... நீங்களா என்னை இப்ப டியர்னு கூப்ட்டீங்க?” என்று டிவியை அணைத்தபடியே கேட்டாள்.“ஏன் மஞ்சு... நான்தான் கூப்ட்டேன்... அதுக்கென்ன இப்போ?”“இல்ல... இப்படி நீங்க கூப்ட்டதே இல்ல... அதான்!”“உனக்கு பிடிக்கலேன்னா சொல்லிடு... கூப்பிடலை...” வேகமாக பதில் சொன்னான் கணேசராஜா. “நோ... நோ... நான் இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” மஞ்சுவும் வேகமாக மறுத்தாள்.

“குட்... சந்தோஷமாதான் எப்பவும் இருக்கணும். உனக்கென்ன குறை? அழகில்லையா, படிப்பில்லையா இல்ல சொத்து பத்துதான் இல்லையா? நீ கவலைப்பட எதுவுமே இல்லாதப்ப நீ சந்தோஷமாதானே இருந்தாகணும்..?”“உக்காந்து பேசுங்க அத்தான்... நீங்க இப்படி எல்லாம் என்கிட்ட பேசியே எவ்வளவு நாளாச்சு... எனக்கு இப்ப ரொம்பவே சந்தோஷமா இருக்கு...”
மஞ்சு பேசியபடியே திரும்பித் திரும்பி நாலாபுறமும் பார்த்தாள்.

அவன் தன்னோடு பேசுவதை சுந்தரவல்லியும், குலசேகர ராஜாவும் பார்க்காமல் எங்கோ போய் விட்டார்களே என்று தேடுவது போல் இருந்தது அவள் பார்வை.
நல்ல வேளையாக சுந்தரவல்லி அந்த அறைக்குள் யதார்த்தமாய் வரவும், “மம்மி... வா சீக்கிரம்! அத்தான் வந்திருக்கார் பார்...” என்று முகத்தில் மகிழ்ச்சி உணர்வை பல விதமாய் காட்டினாள்.
சுந்தரவல்லியும் வேகமாய் நெருங்கி வந்தாள். கணேசராஜா பதிலுக்கு சிரித்து “உக்காருங்க அத்தை...” என்றான்.“இருக்கட்டும் கணேஷ்... நீ இப்படி தானா எங்க அறைக்கு வந்து பேசறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?” என்றபடியே அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தாள் சுந்தரவல்லி.

“என்னன்னு தெரியல அத்தை... எனக்கு மஞ்சு ஞாபகமாவே இருக்கு. நான் மஞ்சுவை ரொம்பவே அலட்சியப்படுத்தி அன்னியப்படுத்திட்டா மாதிரி எல்லாமும் கூட ஒரு எண்ணம். அந்த எண்ணத்தை மாத்தி நானும் சந்தோஷமாகி, மஞ்சுவையும் சந்தோஷப்படுத்தத்தான் வந்தேன்.சாரி அத்தை... நான் உங்களை எல்லாம் ரொம்பவே அன்னியப்படுத்திட்டேன். ஐ ஆம் சாரி...” என்று எழுந்து சென்று சுந்தரவல்லியின் கைகளைப் பிடித்தான் கணேசராஜா.

“ஐய்யோ என்ன கணேஷ் இப்படி எல்லாம் பேசறே..? நாங்க என்ன அன்னியமா அசலா... எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. மன்னிப்பெல்லாம் கேக்கற அளவு நீ ஒரு தப்பும் பண்ணல...” என்று சுந்தரவல்லியும் மத்தாப்பானாள். அப்போது அவன் கை பேசி சிணுங்கவும் “சாரி அத்தை...” என்று விலகினான். அவன் விலகின நொடி “மம்மி... மருந்து நல்லா வேலை செய்யுதுதானே?” என்று எகிறிக் குதித்தாள் மஞ்சு.“ஆமாண்டி... என்னப் பாத்தாலே விரைச்சுகிட்டு போறவன் சாரியெல்லாம் கேக்கறானே..?

அந்த மருந்து நிஜம்தான் போலடி...” அகண்டது சுந்தரவல்லி விழிகள்.“அய்யோ... இப்ப பார்த்து டாடி எங்க போனார்? பார்த்தா அப்படியே உச்சி குளுந்துடுவாரு...”தோள்களைச் சிலிர்ப்பி உற்சாகமாய் பேசினாள் மஞ்சு. அப்போது திரும்பி வந்த கணேசராஜா, “ஆண்ட்டி, மஞ்சு... நான் அவசரமா ஆபீஸ் வரை போக வேண்டியிருக்கு. போய்ட்டு வந்துட்றேன். பை த பை நாம ஒண்ணா வெளிய போய் பல வருஷங்களிருக்கும்தானே?” அப்போது அவன் அப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று மஞ்சு, சுந்தரவல்லி இருவருமே எதிர்பார்க்கவில்லை.

“அ... ஆமா கணேஷ்...” என்றாள் சுந்தரவல்லி.“என்ன ஆமா... நாம வெளிய போனதேயில்லை...” என்றாள் மஞ்சு.“மஞ்சு சொன்னதுதான் சரி. ஆனா, நாம இன்னிக்கு வெளிய போறோம். ஏஆர்எஸ்ல ‘பொன்னியின் செல்வன்’ பாக்கறோம். அப்படியே பலாசியோல டின்னருக்கு போறோம்... ஓகே?”“ஓகே... டபுள் ஓகே...” மஞ்சு துள்ளினாள்.“ரெடியா இருங்க... வந்துட்றேன்...” என்று சில அடிகள் நடந்தவன் திரும்பி வேகமாய் வந்து “பை த பை... இந்த விஷயம் ரத்திக்கு தெரிய வேண்டாம்...” எனவும், மஞ்சு, சுந்தரவல்லி இருவரும் விக்கித்தே போயினர்.

இருந்தும் “ஏன் கணேஷ்?” என்று கேட்டாள் சுந்தரவல்லி.“அவ இப்ப மாசமா வேற இருக்கா. மசக்கை வேற... சொல்லப்போனா அவ தாய் வீடுன்னு ஒண்ணு இருந்தா பேக் பண்ணி அனுப்பிடுவேன். ம்... அவ அம்மா செத்து ஆறுமாசமாச்சாம்! இப்ப இங்க நானேதான் இவளைப் பாத்துக்கணும். என் தலையெழுத்து!” என்று நிஜமாலுமே தலையிலடித்து சலித்தும் கொண்டவன் “அதனாலதான் சொல்றேன்... அவளுக்கு தெரிய வேண்டாம். நீங்க மட்டும் வாங்க. நான் ஆபீஸ்ல இருந்து போன் பண்றேன். உங்க கார்ல ஆபீசுக்கு வந்துடுங்க. அங்க இருந்து என் கார்லயே தியேட்டருக்கு போயிடலாம்... என்ன?” என்று படபடவென்று பேசினான்.

“சரி கணேஷ்... அப்படியே செஞ்சிடலாம். ஆனா, ஒண்ணு...”“என்ன அத்தை..?”“நீ சந்தோஷமா இருக்க ஆசைப்பட்றே... இதுல நான் எதுக்கு? மஞ்சு மட்டும் வரட்டுமே..? அவரும் வேற இல்ல...” என்று மிக விவேகமாய் ஒரு பிட்டை போட்டாள் சுந்தரவல்லி.“சரி அத்தை... உங்களுக்கு விருப்பமில்லாட்டி விட்றுங்க. ஆனா, மஞ்சு கட்டாயம் வரணும். என்னமோ தெரியல என் மனசுக்குள்ள மஞ்சு விஸ்வரூபமெடுத்துக்கிட்டே போறா..! இன்ஃபாக்ட் இப்ப நீங்க என் கைல தாலிய கொடுத்து கட்டுடான்னா கட்டிடுவேன்... ஆனா, எனக்குதான் அதுக்கு முகமேயில்ல... ரொம்பவே இதுக்கு முந்தி எடுத்தெறிஞ்சு பேசிட்டேன்... இல்ல..?”

அவன் கேள்வி சுந்தரவல்லியை அப்படியே தூக்கி ஒரு பனிப்பள்ளத்தாக்கில் போட்டது போல் உணரச் செய்தது.“கணேஷ்... அப்படியெல்லாம் பேசாதே... இப்ப எது கெட்டுப் போச்சு..? நீ இப்படி சொன்னதே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு அத்தை... இது எனக்கு இவ்வளவு நாளா தெரியவேயில்லை.

போகட்டும்... மஞ்சு... நீ மட்டும்தான் வரப்போறேன்னா இப்பவே என் கூட வரலாமே?”“சரி அத்தான்... இதோ ஒரு நிமிஷத்துல உடைய மாத்திகிட்டு வந்துட்றேன்...”
“அப்ப நான் வெளிய கார்ல காத்திருக்கேன். நீ ஓசைப்படாம வந்து ஏறிக்கோ... ரத்தி கண்ணுல மட்டும் பட்டுடாதே...”அவன் சொல்லச் சொல்ல மஞ்சுவுக்கு உலகமே அவள் வயப்பட்டு விட்டது போல் இருந்தது.

படுவேகமாய் ஓடினாள். வாட்ரோபில் வவ்வால்களாய் தொங்கிக் கொண்டிருந்த ஆடைகளில் ஒன்றை வேகமாய் தேர்வு செய்து அணிந்தும் கொண்டாள்.அதே வேகத்தில் கண்ணாடி முன் சென்று அழகு பார்த்து, லிப்ஸ்டிக் தடவிக்கொண்டு வாசற்புறம் ஓடத் தொடங்க அதை ஹாலில் இருந்த கைலாச ராஜாவும் கஸ்தூரியும் கூட பார்த்தனர்.ஓரிடத்தில் பிளைவுட் டெகரேஷன் செய்தபடி இருந்த டிடெக்டிவ் வின்சென்டின் கையாளும் இருந்து பார்ப்பது தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரத்தி இதை எல்லாம் கவனிக்கிறாளா என்று பார்ப்பதற்காக சுந்தரவல்லி வந்தாள். அவளது அறைக் கதவு மூடியே இருந்தது, அப்பாடா என்று அவளைச் சொல்ல விட்டது.
மஞ்சு வெளியேறி காரில் ஏறப்போனபோது கார் முன்னே தியா கையில் பந்தோடு நின்று கொண்டிருந்தாள்! காரை எடுக்க தயங்கிய கணேசராஜா காரை விட்டு இறங்கி “தியா... உள்ள போய் விளையாடு...” என்று அவளைத் தூக்கிச் சென்று உட்பக்கம் விட்டான்.

“டாடி... நானும் உங்க கூட வரேன் டாடி...” என்றாள் தியா.“நோ... நோ... அப்பா ஆபீஸ் வேலையா போறேன்... உள்ள போ...” என்றவன் ஒரு வேலைக்காரனை அழைத்து “டேய்
ஆறுமுகம்... இவளை உள்ள இவங்கம்மா கிட்ட கொண்டு போய் விடு...” என்றான். அவனும் பணிவாக வந்து தியாவைத் தூக்கிக்கொண்டு சென்று அறைவாசலில் விட்டு பணிவாக கதவைத் தட்டினான். ரத்தியும் சோர்வாக கதவைத் திறந்தாள்.“பாப்பாவைப் பாத்துப்பீங்களாம்... ஐயா சொன்னாரு...” என்றான். தியாவும் உள் நுழைய கதவைத் திரும்ப தாழிட்டாள்
ரத்தி. மிகச் சோர்வாக இருந்ததால் முகத்தில் கூந்தல் கலைந்து விழுந்து மூடியது.

அப்போது “மம்மி... டாடி அந்த மஞ்சு ஆண்ட்டி கூட கார்ல எங்கயோ போறாங்க...” என்றாள் தியா. அடுத்த நொடியே சுருக்கென்றது ரத்திக்கு.“மஞ்சு ஆண்ட்டி கூடயா?” என்று அழுத்தம் கொடுத்து கேட்டாள்.“ஆமாம்... என்ன கூட்டிட்டு போங்கன்னேன். ஆனா, மாட்டேன்னுட்டாரு...” என்றாள்.ரத்தி அடுத்த நொடி கைபேசி வழி அவனைப் பிடிக்க முயன்றாள். ஸ்விட்ச் ஆஃப் என்று குரல் ஒலித்து அடங்கியது.மனதுக்குள்ளும் ஒரு பீதி மெல்ல உருவாகத் தொடங்கியது!

(தொடரும்)

அசோகமித்திரனின் பார்வை மண்ணாங்கட்டி சித்தரை விட்டு இம்முறை விலகவேயில்லை. வைத்த பார்வையை எடுக்காமல் அவரையே தொடரத் தொடங்கினார். உடன் வந்திருந்த சந்திரமௌலீஸ்வர கனபாடிகளையும் மறந்து விட்டார். அவருக்கும் அந்த வினாடிகளில் அசோகமித்திரன் மேல் கவனமில்லாமல் போனது.இவையெல்லாமே யதார்த்தமாய் நடப்பது போலவும் இருந்தது. ஒரு இனம்புரியாத சக்தி வழி நடத்துவது போலவும் இருந்தது.

மண்ணாங்கட்டிச் சித்தர் கூட்டத்தை விட்டு விலகி கோயிலையும் விட்டு விலகி கோயிலின் பின்புறமாய் ஒரு மதில் சுவரை முட்டிச் சென்று நின்றார். அங்கே ஒரு பவழமல்லிச்செடி வளர்ந்து மரமாகிட முயன்று கொண்டிருந்தது. அதன் பின்னே சென்றவரை மரம் மறைத்தது. அவரை கண் இமைக்காது தொடர்ந்து வந்த அசோகமித்திரனுக்கு சற்று அதிர்வாய் இருந்தது.வந்த வேகத்தில் செடியின் பின்புறம் சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. மிக ஏமாற்றமாகி விட்டது.

எப்படி இவ்வளவு வேகமாய் மறைந்தார் என்ற கேள்வியுடன் மேலும் கீழும் என்று நாலாபுறமும் பார்த்தபோது மதில் சுவருக்குக் கீழே ஒரு துவாரம்!
அந்த துவாரத்தில் ஒரு பாம்பின் வால் பகுதி மட்டும் தெரிந்து பின் அதுவும் மறைந்தது.

அந்தக் காட்சி ஒரு பகீர் உணர்வை உருவாக்கி குப்பென்று வியர்க்கவே வைத்து விட்டது.ஒருவேளை அந்த பாம்பு அவர்தானோ என்றும் தன்னிச்சையாகக் கேள்வி எழும்பியது. அந்த மதில் சுவரின் மறுபக்கம்தான் அந்த பாம்பும் சென்றிருக்க வேண்டும் என்று எட்டிப் பார்த்தார். பின்புறம் வயல்காடு! வரப்பில் மண்ணாங்கட்டிச் சித்தர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அடுத்த விநாடி தன்னிச்சையாக அசோகமித்திரனும் சுவரை எம்பிக் குதித்து அவரைப் பின்தொடரத் தொடங்கினார்.

அந்த வயல் வரப்பு நீண்டும் வளைந்தும் சென்று கண்மாய் கரை தென்னந் தோப்புக்குள் சென்று, பின் முன்பு சந்தித்த அந்த குடிசைப் பகுதியிடம் சென்று முடிந்தது.
அருகில் முன்பு கண்ட அதே சிவலிங்கம். அதற்கு பூஜை முடிந்திருந்ததை எரியும் விளக்கு முதல் புகையும் ஊதுபத்தி வரை சகலமும் உணர்த்தின.

அதற்கு அருகிலேயே ஒரு புலித் தோல் விரிந்திருக்க அதன் மேல் போய் மண்ணாங்கட்டியார் அமர்ந்து கொண்டார். சற்றுத் தள்ளி அவருக்கு நேர் எதிரில் ஒரு மான் தோல் விரிந்திருந்தது. அதைக் காட்டி அசோகமித்திரனை அமரும்படி சைகை காட்ட... அசோகமித்திரனும் அமர்ந்து கொண்டார்.

பார்வை விலகாமல் மண்ணாங்கட்டியார் மேலேயே இருந்தது. மண்ணாங்கட்டியார் ஒரு மெலிந்த சிரிப்பை உதிர்த்தவராக ‘‘என்ன... எல்லாமே பெரிய கண்ணாமூச்சியா இருக்கா?” என்று பேச ஆரம்பித்தார்.“ஆமாம் சாமி... எனக்கு சில நாட்களா நடக்கற எதையும் இதுக்கு முந்தி நான் கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை...”“அதுக்கு காரணம் உன் சூழல்தான். மனிதனோட மனமும் அறிவும் வளக்கப்பட்றதே சூழலாலதான். யார் வயித்துல பிறக்கறோமோ அவங்களே தாய் தந்தை... அவங்க மொழியே நம்ம மொழி. அவங்க இருந்த இடமே நம்ம பிறப்பிடம்... சுற்றி இருக்கற சூழல்தான் அறிவு வளர்வதற்கான களம்.

இந்தச் சூழல்ல எப்படிப்பட்டவங்க இருக்காங்களோ அவங்க உருவாக்கறதுதான் நம்மோட பட்டறிவு.நீ நகரத்துல பிறந்து நகரத்துலயே வளர்ந்தவன். எப்பவும் எதுக்காகவாவது நகர்ந்துகிட்டே இருக்கறவங்களால ஆன ஓர் இடத்தைத்தான் நகரம்னு சொல்றோம்.

கிரமப்படி... அதாவது இப்படித்தான் வாழணும்கற கிரமப்படி வாழற வாழ்க்கையை உடைய இடம்தான் கிராமம். எப்படியும் வாழ இடமிருக்கற இடம் நகரம். நீயும் நகரவாசி. உனக்கு இந்த நாகேந்திர நல்லூர் விசித்திரமாதான் தெரியும். அது தப்புமில்ல...’’ என்று பட்டறிவு பற்றி லேசாய் தொட்டுக் காட்டினார் மண்ணாங்கட்டியார்.

“நகரம், கிராமம் ரெண்டுக்குமான உங்க விளக்கத்தை நான் முன்பே உணர்ந்திருக்கேன். நீங்க சொல்றதும் வாஸ்தவம்தான். சூழல் சார்ந்ததே நம் அறிவு... இதை இப்ப எதுக்காக சொன்னீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”“சொல்றேன்... எப்படி மகாபெரிய இந்த உலகத்தை நம்மோட ரெண்டு சின்ன கண்ணால பாக்கறோமோ, அப்படித்தான் இந்த உலகத்தை நம்ம சின்ன மூளையால புரிஞ்சிக்கவும் முயற்சி செய்றோம்... சரிதானே?”“சரிதான்... இப்ப எதுக்கு இந்த கேள்வி?”

“சொல்றேன்... அப்படி புரிஞ்சிக்கிறதையே பகுத்தறிவுன்னும் சொல்லிக்கறோம். சரிதானே..?”“உம்...”“அப்படி புரிஞ்சிக்கிட்டதையே டிவா எடுத்துக்கலாமா?”“இதுக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியல சாமி...”“சரி... நான் என் கேள்விய நிறுத்திக்கறேன். இனி நீ கேள்வி கேள். அப்ப எல்லாமே புரியத் தொடங்கும்...”“சந்தோஷம் சாமி... என் முதல் கேள்வியே நீங்க யாருங்கறதுதான். எப்பவோ நீங்க இறந்துட்டதா... அதாவது சமாதியாயிட்டதா சொல்றாங்க. ஆனா, நீங்க நடமாடிக்கிட்டிருக்கீங்க... இது எப்படி?”

“ஒரு பூரணமான புலனடக்க சன்யாசி சக மனிதர்களைப் போல சாகமாட்டான். சாவுங்கறது அஞ்சு பூதமும் ஒரு உடம்பை விட்டு பிரிஞ்சு போற ஒரு நிகழ்வு. வாழ்வுங்கறது அஞ்சு பூதமும் ஒண்ணா கைகோத்து செயல்பட்ற ஒரு நிகழ்வு.ஒரு புலனடக்க சன்யாசி இந்த அஞ்சு பூதத்தை உடம்பை விட்டு பிரிஞ்சு போக விடாம செய்து, அதோட கூட்டுறவையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து தனக்குள்ள ஒரு துளி காற்றா வெச்சுக்கும் போது அவன் ரணம், மரணம்னு ரெண்டும் இல்லாதவனாகிறான்... நான் அப்படி ஒருத்தன்..!”
“சாமி... இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”

“இதுக்கு மேல எவ்வளவு வார்த்தைகள் கொண்டு சொன்னாலும் உனக்கு புரியாது. வார்த்தைங்கறது வெறும் சத்தம். அந்த சத்தத்தால ஆனதுதான் மனசுங்கற சித்தம். இந்த சித்தம் ஒரு நேர்கோடா இருந்தா அது அமைதி. வளைஞ்சு நெளிஞ்சா கவலை. முட்டி மோதிக்கிட்டா போராட்டம். இதை இல்லாமப் பண்ணுனா அதை மனோ நாசம்னு சொல்றோம்.

அப்படி மனோ நாசம் செய்ய முடிஞ்ச ஒருவனா நீ இருந்தாதான் என்னையும் உன்னால முழுமையா புரிஞ்சிக்க முடியும்...”அசோகமித்திரன் மண்ணாங்கட்டியாரின் பதிலால் மௌனமாகி அவர் சமாளிக்கிறாரா இல்லை குழப்புகிறாரா, அதுவுமில்லாமல் தெளிவுபடுத்துகிறாரா என்கிற மூன்று கேள்விக்குள்ளும் விழுந்தவராக அவரைப் பார்த்தார்.“நான் சமாளிக்கல... குழப்பவுமில்லை... தெளிவுதான் படுத்தறேன்...” என்று அதற்கொரு பதிலை உடனேயே அவர் சொல்லவும் அசோகமித்திரனிடம் திகைப்பு!

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி