ஒரே நேரத்தில் இரு படங்கள்! கெத்து காட்டும் எங்கேயும் எப்போதும் எம்.சரவணன்



ஏதோ ஒரு கதை எடுத்தோம்... நானும் படம் செய்கிறேன் பேர்வழியாக வருடத்துக்கு இரண்டு மூன்று படங்கள்  கொடுத்தோம் என்றில்லாமல் நீண்ட காலமானாலும் காத்திருந்து தனித்துவமான படங்கள் கொடுப்பவர் இயக்குநர் எம்.சரவணன்.‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’, ‘வலியவன்’ எனத் தமிழில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்தவர் இப்போது திரிஷா நடிப்பில் ‘ராங்கி’; மற்றும் தர்ஷன், மஹிமா நடிப்பில் ‘நாடு’ என இரு படங்களுடன் தயாராக இருக்கிறார்.எப்படி இருக்கீங்க..? மனசிலே நிற்கற மாதிரி படங்கள் கொடுத்திட்டு சட்டென சைலண்ட ஆகிட்டீங்களே..?

பொதுவாகவே என்கிட்ட ஒரு பழக்கம் உண்டு. சினிமாத்துறை நண்பர்கள் கிட்ட இருந்து மொத்தமாக விலகி இருப்பேன். கம்யூனிகேஷன் வளர்த்துக்க மாட்டேன். பார்ட்டி, நிகழ்ச்சிகள்ல கூட பெரிதா கலந்துக்க மாட்டேன். நல்ல கதை உருவாகற வரைக்கும் சைலன்ட்டா இருப்பேன்.எழுதுகிற கதை மேல ஒரு சின்ன ஸ்பார்க் உண்டானா தான் ஷூட்டிங் புராசஸ்க்கே போவேன். ‘ராங்கி’ படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. இடையிலே கொரோனா... ஊரடங்கு... காரணமா பட ரிலீஸில் தாமதம் ஆகிடுச்சு. தொடர்ந்து ‘நாடு’ படமும் முடிச்சாச்சு. பேட்ச் ஒர்க் போயிட்டிருக்கு.

‘நாடு’ எப்படிப்பட்ட படம்..?

கொல்லிமலை வட்டத்தில் இருக்கற எந்த கிராமத்தையும் ஊரையும் பொதுவா ஊர் அல்லது பட்டி, பேட்டைனு எல்லாம் சொல்ல மாட்டாங்க. அங்கிருக்கும் ஊர்கள் அத்தனையும் நாடுனுதான் முடியும். தேவநாடு, இழுப்புலி நாடு, கொடநாடு... இப்படி ஊர்களுடைய பெயர்கள் இருக்கும்.தவிர கொல்லிமலையை ஐந்து நாடு, ஏழு நாடுனு பிரிச்சிருப்பாங்க. அங்க இருக்கற ஒரு ஊர்ல நடக்கற கதைதான் ‘நாடு’ படத்தினுடைய ஒன் லைன்.

‘நாடு’ கதைக்களம் பற்றி சொல்லுங்க?

ரொம்ப உணர்வுபூர்வமான கதை. சமீப காலமா வருகிற எல்லா படத்திலும் ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப புத்திசாலித்தனமா, அதீத சிக்கல்கள் நிறைந்த கேரக்டர்களாதான் பார்க்க முடியுது. எளிய மனிதர்கள்... எதுவுமே தெரியாத மக்கள் பத்தி பேசக்கூடிய படங்களே இல்லாம இருக்கு.அப்படியான எளிமையான மக்களுடைய உணர்வுக் குவியலா ‘நாடு’ இருக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கொல்லிமலை போயிருந்தேன். அப்ப அங்கே கிடைத்த கதைதான் இது. லாக்டவுன் நேரத்துலதான் இந்த ஒன்லைனை படமா எடுக்கலாம்னு தோணுச்சு.

லொகேஷன்களை எப்படி தேர்வு செய்தீங்க?

கொல்லிமலை பகுதிகள்ல இதுவரைக்கும் படங்கள் எடுத்தாலும் ஒண்ணு ரெண்டு சீன்கள்தான் எடுத்திருக்காங்க. முதல் தடவையா முழுப் படத்தையும் கொல்லிமலை கிராமங்கள்ல எடுத்துருக்கோம். படத்தில் வருகிற கேரக்டர்கள் கூட அந்த ஏரியா பகுதி மக்கள்தான்.அவங்களுக்கு சினிமா மேக்கிங்னா என்னன்னு கூட தெரியாது. அந்த அளவுக்கு ரொம்ப வெகுளியான மக்கள். ஆறு மணி, ஏழு மணிக்கு ஷூட்டிங்னு சொன்னா, காட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு 9 மணிக்கு மேலதான் வருவோம்னு சொல்லுவாங்க. அப்படி யான வெகுளியான மக்களை இந்த படத்துல பயன்படுத்தி இருக்கோம்.

தர்ஷன் மற்றும் மஹிமா பற்றி சொல்லுங்க... படத்தில் மற்ற நடிகர்கள் யார் யார் இருக்காங்க..?

தர்ஷன் கதையின் நாயகனா... எனக்கு அருமையா பயன்பட்டார். கதையில் என்ன தேவையோ அதை யோசிக்காமல் அவர்கிட்ட இருந்து வாங்க முடிஞ்சது. கொட்டும் மழையில கூட அங்கே இருக்கற பள்ளத்தாக்குகள்ல அவரை சைக்கிள் ஓட்ட வைக்க முடிஞ்சது. எந்த டூப்பும் நாங்க பயன்படுத்தவே இல்ல. அந்த வகையில் தர்ஷன் இந்த படத்துக்கு ரொம்ப பிரமாதமா செட் ஆனார்.
அதே மாதிரிதான் மஹிமாவும். உதாரணத்துக்கு ‘ராங்கி’ படத்தில் திரிஷா கூட ஒர்க் பண்ணும்போது அவர்களை எப்படி கூப்பிடுறதுன்னு தெரியாம இருந்தேன். அவங்கள கூப்பிடணும்னா கூட என்னுடைய அசிஸ்டெண்ட்கிட்ட சொல்லிதான் ‘அவங்கள இங்க நிக்க சொல்லுங்க... அங்க நிக்க சொல்லுங்க’னு சொல்லுவேன்.

இந்த மாதிரியான தயக்கம் எனக்கு மஹிமா கிட்ட கிடையாது. ரொம்ப ஃப்ரெண்ட்லியா நிறைய விஷயங்கள் கேட்டு வாங்க முடிஞ்சது. சிங்கம் புலி சாருக்கு ஒரு முக்கியமான ரோல். ‘ராங்கி’ படத்தைப் பொறுத்த வரைக்கும் சிங்கிள் வுமன் ஆர்மி திரிஷாதான்.

பெண்ணியம் பேசப் போகிறதா ‘ராங்கி’?

திரிஷா பத்திரிகையாளரா வராங்க. இந்தப் படம் பெண்ணியம் பேசப் போகுதா... பெண் சுதந்திரம் பற்றி நிறைய விஷயங்களை சொல்லப்போகுதா... இப்படி எந்த கேள்விகளும் இல்லாமல் எந்த ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளயும் இந்தப் படம் அடங்காமதான் இருக்கும். என்னுடைய படங்களில் இருந்து இந்தப் படம் முழுமையா வேற படமா இருக்கும்.புது திரிஷாவை இந்தப் படத்துல பார்க்கலாம். நேச்சுரலா அழகா இந்த படத்துல காண்பிச்சிருக்கோம். அவங்களை மாதிரி ஒரு டெடிகேஷன் ஆர்ட்டிஸ்ட்டைப் பார்த்ததே கிடையாது. அவங்களுக்கு சீனே இல்லைன்னா கூட கேரவனுக்கு எழுந்து போற பழக்கம் எல்லாம் அவங்ககிட்ட இருக்காது.

‘நாடு’ மற்றும் ‘ராங்கி’ ரெண்டு படத்தின் டெக்னிக்கல் டீம் பற்றி சொல்லுங்க..?

ரெண்டு படத்துலயும் சக்திதான் சினிமாட்டோகிராபி. சத்யா இசை. ‘நாடு’ படத்தில் ஆர்ட் டைரக்டர் இளையான்குடி இளையராஜா, எடிட்டர் பி கே.‘நாடு’ ரிலீசுக்கு முன்பே ‘ராங்கி’ திரைப்படம் வெளியாக வேலைகள் போயிட்டிருக்கு. டிசம்பர், ஜனவரினு அடுத்தடுத்து பிளான் செய்திருக்கோம்.முன்பே சொன்ன மாதிரி வெகுளித்தனமான மக்கள், அவங்களுடைய உணர்வுக் குவியலா ‘நாடு’ இருக்கும். ‘ராங்கி’ எப்படி இருக்கும் என்பது சஸ்பென்ஸ்!

ஷாலினி நியூட்டன்