அரண்மனை குடும்பம் - 42
ரத்தி தனக்குள் ஏற்பட்ட பய உணர்வோடு மஞ்சுவைப் பார்த்தாள். மஞ்சுவும் பதிலுக்கு பார்த்தாள். மஞ்சுவின் இந்த அந்தர்பல்டியை எப்படி கணேசராஜா துளியும் சந்தேகிக்காமல் பேசுகிறான் என்று ரத்திக்குள் ஒரு ராட்சதக் கேள்வி.  அவனோ அப்போது தன் கைபேசி சிணுங்கவும், அழைத்தவரோடு பேசச் சென்று விட்டான். அந்த இடைவெளியில் மஞ்சு மும்முரமானாள்.“ரத்தி... நீ இப்ப நல்லா சாப்பிடணும். குறிப்பா ஃப்ரூட் ஜூஸ், அப்புறம் மட்டன் சூப் இதை எல்லாம் நிறைய சாப்பிடணும். நான் போய் உனக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்...” என்று அவளை சலனத்தில் விட்டுவிட்டு விலகினாள்.
 கணேசனும் கைபேசியில் பேசிவிட்டு திரும்பி அருகில் வந்தான். ரத்தி கலக்கமாய் ஏறிட்டாள். “என்ன ரத்தி... எங்க மஞ்சு?”“எனக்கு ஜூஸ் கொண்டு வரப் போயிருக்கா...”“ஓ... இவ என்ன பெரிய புதிரா இருக்கா... எப்ப எப்படி மாறுவான்னே தெரியலியே...” “ஆமாம் ஜீ... எனக்கு இப்பதான் ரொம்ப பயமா இருக்கு...” “ஏன் இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்பட்றே... என்னப் பார்... நான் பயப்பட்றேனா?” “அதான் ஆச்சரியமாவும் இருக்கு...”
“இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு... நாம நாமா இருக்கற வரை நம்பள யாரால என்ன செய்துட முடியும்? சொல் பார்ப்போம்...”அவன் தோரணையாகக் கேட்ட விதமே கம்பீரமாய் இருந்தது. அப்படி அவன் கேட்டதற்கு என்ன பதில் சொல்வதென்றும் தெரியவில்லை. மலங்க மலங்கப் பார்த்தாள்.
“என்ன பாக்கறே?” “என்ன சொல்றதுன்னு தெரியல ஜீ... அப்றம்...” “உம் சொல்லு...” “என் ஃபேமிலி பத்தி பேசினீங்க. ஆனா, அது பாதியில கட் ஆயிடிச்சு...” “ஆமால்ல... நீ இப்ப உண்டாயிருக்கற விஷயத்தைச் சொல்லி உன் அம்மாவை வரச்சொல்லட்டுமா?” “வருவாங்களா ஜீ..?”
“அதை நான் எப்படி சொல்வேன்... இன்னுமா மனசு மாறாம அவங்க உன்மேல கோபத்தோட இருப்பாங்க...” “நம்மமேலன்னு சொல்லுங்க...”“சரி... நம்ம மேல. நான் இப்ப உன் அம்மாவுக்கு போன் பண்ணட்டுமா?”
“வேண்டாம் ஜீ... நான் பண்றேன்...”“குட்... இப்பவே கூட பேசு. செல்போன்னு ஒண்ணு கைல இருக்கறவரை யாரும் தூரத்துல கிடையாது. கமான் இப்பவே பேசு...” கணேச ராஜாவும் ஊக்கப்படுத்தினான். ரத்தியும் தன் கைபேசியை எடுத்து மிக மெல்லமாக எண்களைச் சீண்டினாள். பலப்பல சிணுங்கல்களுக்குப் பிறகு ஒரு பெண் குரல் பதிலுக்கு ஒலிக்கத் தொடங்கியது.
“கோன்?” “மே ரத்தி...” (இனி தமிழில்)
“ஓ நீயா... என்ன அதிசயமா போன் பண்ணியிருக்கே..?” “என் அம்மாகிட்ட கொஞ்சம் கொடுங்க தீதி ஜீ...” “உன் அம்மாகிட்டயா? அவ ஞாபகம்லாம் கூட உனக்கு இருக்கா?” “தீதி ஜீ... என்ன சங்கடப் படுத்தாதீங்க. அம்மாகிட்ட கொடுங்க...” “இருந்தால்ல கொடுக்க..?” “என்ன சொல்றீங்க?”
“அவ செத்து ஆறு மாசமாச்சு... அவ சும்மாவும் சாகல! உன் மாமாவான என் புருஷனுக்கும் தனக்கு வந்த கொரோனாவைக் கொடுத்து கொன்னுட்டா...” “தீதி ஜீ... என்ன சொல்றீங்க? அம்மா, மாமா ரெண்டு பேருமே இப்ப உயிரோட இல்லையா..?” “அதை நீ ஆறுமாசம் கழிச்சு கேக்கறே பார்... பெரிய ஆளுடி நீ!”
“ஐயோ... நான் எப்ப கூப்ட்டாலும் அவங்க பேச விரும்பாதப்ப நான் என்ன செய்ய முடியும்?” “எப்படி பேசுவா? நீ செஞ்ச காரியம் மட்டும் யோக்யமா? நாமல்லாம் எப்படிப்பட்ட குலம்? நீயோ ஒரு மதராசி பின்னால போயிட்டே. நம்ம குல தர்மத்தை மீறிட்டு இப்ப தைரியமா பேசறியா?”
“தப்புதான்... அதுக்காக என்னை இப்படியா ஒதுக்கி வைக்கணும்? இந்தக் காலத்துல யார் காதலிக்கல?” “ஓ... இப்பவும் நீ உன் செய்கைக்கு நியாயம் கற்பிக்கப் பாக்கறியா?”
“உண்மைய சொன்னேன் தீதி ஜீ... கொஞ்சம் நான் சொல்றத கேளுங்க. நான் கல்யாணம் பண்ணிகிட்டவரும் யாரோ இல்ல... பெரிய ராஜ குடும்பம்...” “இதைத்தான் அப்பவே சொன்னியே..? நாமளோ நாகவம்சம்... இந்த உலகத்துலயே அபூர்வமான இனம். நம்மளவிடவா அந்த ராஜ குடும்பம் உனக்கு பெருசாயிடிச்சு?” “நான் ராஜகுடும்பம்னு சொன்னது நான் நல்லா இருக்கேன்னு சொல்றதுக்காக சொன்னேன் தீதி ஜீ. மத்தபடி நான் என் புருஷன் மனசைத்தான் பார்த்தேன். அவரும் என் மனசைத்தான் பார்த்தார்... நாங்க இப்ப நல்லாவும் இருக்கோம்...”“சரி இப்ப எதுக்கு போன் பண்ணே?”
“அதை நான் சொல்ல ரொம்ப ஆசையா இருந்தேன். ஆனா, அம்மா, மாமா ரெண்டு பேரும் செத்துட்டதா சொல்லி என்னை கலங்க வெச்சிட்டீங்களே..!” ரத்தி கரகரவென கண்ணீர் சிந்திட அருகில் நின்று கொண்டிருந்த கணேசராஜாவும் அவள் பேசுவதை வைத்தே புரிந்து கொண்ட நிலையில் அவள் போனில் ஸ்பீக்கரை ஆன் செய்தான். கச்சிதமாக கையில் ஜூஸோடு மஞ்சுவும் வந்து நின்றாள்.
மறுமுனையில் அந்த தீதி ஜீயின் பதில்...
“போதுண்டி... அழுது நடிச்சு பாசாங்கு பண்ணாதே. ஆறு வருஷமா இல்லாத பாசம் இப்பவந்துடிச்சா உனக்கு?” “தீதி ஜீ... என்ன வார்த்தைல கொல்லாதீங்க. நான் இப்ப கர்ப்பமா இருக்கேன். இது எனக்கு இரண்டாவது குழந்தை. இப்பவாவது என் அம்மாகூட இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சுதான் போன் செய்தேன்...”
“ஓ... உனக்கு அப்ப இரண்டு குழந்தையா? நாகவம்சம் திரிஞ்சு போய் அதுல இரண்டு வாரிசா... இதை என்னால நம்ப முடியலியே..?”“வாங்க... வந்து பாருங்க... இதுல நம்பமுடியாமப்போக என்ன இருக்கு?”“நம்ம இனம் பத்தி தெரியாமலே பேசறே... நாம நமக்குள்ளதான் கூடணும், சேரணும். அது மாறிப் போனா விபரீதம்தான் உருவாகும்...”“அப்படி எல்லாம் இல்ல... நான் இங்க நல்லா இருக்கேன் தீதி ஜீ...” “இது தற்காலிகம்... நீ நல்லா இருக்கவே முடியாது... நம்ம இனத்தை விட்டு விலகின யாரும் நல்லா இருந்ததே இல்ல...”“தீதி ஜீ... இப்படி எல்லாம் முட்டாள்தனமா பேசாதீங்க. நான் நல்லா இருக்கேன்... வந்து பாருங்க தெரியும்...”“ஹும்... நீ தப்பு செஞ்சதுமில்லாம என்னையும் அதுல கூட்டு சேர்க்கப் பாக்கறியா?”“கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தீதி ஜீ... எங்கள இனியும் பிரிச்சு வைக்காதீங்க...”“நான் எங்க வெச்சேன்.
நீதானே பிரிஞ்சி போனே? நீ பிறந்தப்பவே வீட்டு மேல இடி விழுந்தது. அதுக்கு அர்த்தம் இப்பல்ல தெரியுது...”அந்த தீதி ஜீயின் பேச்சை அதற்கு மேல் கேட்கப் பொறுக்காத கணேசராஜா, ரத்தியிடம் இருந்து போனை பிடுங்கி அதை அணைத்து விட்டு, “ரத்தி... இனியும் நீ இவங்க கூட எதுவும் பேசக் கூடாது. இவங்கல்லாம் சரியான பழைய பஞ்சாங்கம். திருந்தாத ஜென்மங்கள். நான் தெரியாம உன் பிறந்த வீட்டைப் பற்றி பேசிட்டேன். சாரி...” என்றவன் மஞ்சுளாவைப் பார்த்தான்.
அவள் முகத்தில் பலவிதமான உணர்வுகள். கையில் பிளேட் ஒன்றில் மாதுளம்பழ ஜூஸ்... கூடவே இரண்டு ரஸ்தாளி வாழைப் பழங்கள். அவன் பார்க்கவும் ஜூஸை நீட்டினாள். “உனக்கு எதுக்கு சிரமம் மஞ்சு... இதைச் செய்யத்தான் இங்க வேலைக்காரங்க இருக்காங்களே... எனிவே தேங்க்யூ வெரிமச்...” என்றபடி ஜூஸை எடுத்து ரத்தி முன் நீட்டினான்.“வேண்டாம் ஜீ... என் மனசே சரியில்ல...” என்றாள்.
“விடு ரத்தி... நீ ஆசைப்பட்ட மாதிரி நாம நாளைக்கு ஏற்காடு போறோம். நானும் உன் கூடவே இருக்கேன். உன் தீதி ஜீக்கு பதிலை நாம வாழ்ந்து காட்டித்தான் நிரூபிக்கணும். நாகவம்சம் அது இதுன்னு உளறிக்கிட்டிருக்கறவங்களுக்கு வார்த்தைல பதில் சொல்லக் கூடாது. வாழ்க்கைலதான் சொல்லணும்...” என்றான்.அவளும் ஜூஸை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள். அப்போது மஞ்சுவும், “அத்தான்... நீங்க வாழைப்பழத்தை எடுத்துக்குங்க...” என்றாள் மிக இதமான குரலில்.
“நோ... நோ... இதையும் ரத்தியே சாப்பிடட்டும். எனக்கு வேண்டாம்...” என்றான் அலட்சியமான குரலில்.“இது ஆர்கானிக் வாழை... சாப்பிட்டுப் பாருங்க. நாங்க எல்லாரும் சாப்ட்டோம். என்ன டேஸ்ட் தெரியுமா?”“வாழப்பழத்துலயும் ஆர்கானிக்கா... எங்க கொடு பாக்கலாம்...” என்று கணேசன் கேட்க, மஞ்சுவும் ஆவலாக பழத்தை எடுத்து உரித்தே தரலானாள். உள்ளே அந்த வசிய மருந்து!
(தொடரும்)
மணிமொழியனாரின் தூண்டல் அசோகமித்திரனுக்குள் மேலும் பல கேள்விகளை எழுப்பத் தொடங்கியது. “அய்யா... எனக்குள்ள இப்ப எவ்வளவோ கேள்விகள்... அந்த கேள்விகளுக்கு யாருக்கும் சரியா விடை தெரியல. எல்லாரும் ‘அந்த மண்ணாங்கட்டி சித்தர்கிட்டயே கேளு’ன்னு சொல்றாங்க. நீங்களும் அப்படியே சொல்றீங்க...
அவங்க சொன்னதுல எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்க சொல்றதுதான் ஆச்சரியமா இருக்கு. நான் பார்க்க நீங்க ஒரு பெரிய பகுத்தறிவுவாதி. ஆனா, இப்ப எனக்கு நீங்க அப்படி தெரியல.என் அனுபவங்கள் உங்களையும் மாத்திடிச்சா? இல்லை நான்தான் உங்கள தப்பா புரிஞ்சிக்கிட்டேனான்னும் தெரியல...”அசோகமித்திரன் அந்த நொடி மனதில் என்ன தோன்றியதோ அதைப் பேசினார்.
“உண்மைதான் அசோகமித்திரன்! நானும் கொஞ்சம் மாறிட்டேன்னுதான் சொல்லணும். மாற்றம்தானே மாறாதது? அந்த மாற்றம் எப்படின்னுதான் பாக்கணும்.
பகுத்தறிவுங்கறது உள்ளதை உள்ளபடி உணர்வது... அவ்வளவுதான்! அப்படி உணர நேரிடும்போது மாறித்தானே தீர வேண்டியிருக்கு..?”
“இங்க எனக்கு நேரிட்டுக்கிட்டிருக்கற அனுபவங்கள கேட்டா இந்த மாற்றம்?”“நிச்சயமா இல்லை... நீங்க இப்ப என் வரைல ஒரு ஆராய்ச்சியாளர். உங்களை நான் சோர்வடையாம வழி நடத்தறேன். அவ்வளவுதான்... அதே சமயம் நான் புதுசு புதுசா வாசிக்கற புத்தகங்கள், மற்றும் சில மனிதர்கள் எனக்குள்ள மாற்றங்கள ஏற்படுத்திகிட்டு வர்றாங்க...”
“அப்படி எந்த விஷயம் சார் உங்கள மாற்றினது..?” “கவிச்சக்ரவர்த்தி கம்பரை உங்களுக்கு தெரியும்தானே?”“நல்லா...” “அவரோட கம்ப ராமாயணத்துல ஒரு பாட்டு ரொம்பவே பிரசித்தி. அதுல ஒண்ணுதான் ‘அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆருயிர்காக்க ஏகி, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலான் ஊரில், அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்’கற பாட்டு. கேள்விப்பட்ருக்கீங்களா?”
“உம்... என் நண்பர் ஒருவர் அனுமாரை வணங்கும்போது இந்த பாட்டைத்தான் பாடுவார். கேள்விப்பட்ருக்கேன்...”“இந்த பாட்டுக்கு இரண்டுவித பொருள் இருக்கறத ஒரு நண்பர் சமீபத்துல சொன்னார். அஞ்சுங்கறது இங்க பஞ்ச பூதமான நீர், நிலம், காற்று, வெளி, நெருப்பைக் குறிக்குது. அதுல அனுமன் வாயுவோட அம்சம். இந்த வாயுவோட வகைல ஒண்ணுதான் அடர்த்தி குறைஞ்ச ஹீலியம்கற வாயு. இதைக்கொண்டே ராட்சத பலூன் தொட்டிகளைப் பறக்க வைக்கறாங்க.
அனுமன் பறக்க காரணமும் இதுதான். அந்த வாயுவை அவன் நிரப்பிக்கொண்டதாலதான் அவன் வாயும் பந்து போல இருக்கு. இந்த வாயுவை பயன்படுத்தியே அவன் பறந்தான்கறது உள்ளடக்கம். இதே அனுமன் தன் பால்ய வயதுல சூரியனை சிவந்த பழம்னு நினைச்சு அதை பறிக்க பறந்த சம்பவம் ஒண்ணும் அனுமன் கதைல உண்டு.
சூரியன் சிவந்த பழமா தெரியறதன் பின்னாலயும் ஹீலியம் வாயுவோட தன்மை இருக்கு. சந்திரசேகர்ங்கற விஞ்ஞானி இதைப்பற்றி விரிவாவே ஆராய்ச்சி செய்திருக்கார். அனுமனுடைய சாகசத்தை கவித்துவமா கம்பர் சொல்லியிருக்கற இந்தப் பாட்டுக்குள்ள, நம்மால மறுக்கமுடியாத பல விஞ்ஞான ரகசியங்கள் ஒளிஞ்சிருக்கறத அந்த நண்பர் எனக்கு விரிவா எடுத்துச் சொன்னார்.
அப்ப கம்பருக்கும் விஞ்ஞான மெல்லாம் தெரியுமான்னு ஒரு கேள்வி எனக்குள்ள எழுந்தது. அந்தக் கேள்வி இப்பவும் இருக்கு...அந்த நண்பர் திருமூலரோட அணு தொடர்பான ஒரு பாட்டையும் உதாரணம் காட்டினார்.
‘அணுவில் அணுவினை ஆதிப்பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே!’
இந்தப் பாட்டை 1000 வருஷத்துக்கு முந்தியே பாடிட்டார் திருமூலர். அந்தக் காலத்துல ஏது டெலஸ்கோப், ஏது மின்சாரம்? ஏது புத்தகங்கள்? பனை ஓலையும், எழுத்தாணியும்தான் எழுத்துக்கான களம். கண்ணாடி கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனா, இன்றைக்கு இருக்கற அணு ஆராய்ச்சி சிந்தனைக்கு நிகரா சிந்திச்சு அதை அழகா பாட்டாவும் பாடியிருக்கார் திருமூலர். அதுவும் போற போக்குல!இந்தப் பாடல்களோட களமா இறைச் சிந்தனை இருக்கறதால இதை மூடமா நினைக்கறது தப்புன்னு எனக்கும் தோணிச்சு.
நம்ம முன்னோர்கள் இப்ப நாம வாழ்ந்துகிட்டிருக்கற விஞ்ஞான வாழ்க்கைக்கு இணையாவோ இல்லை இதை விட மேலாவோ ஒரு வாழ்க்கை வாழ்ந்திருந்தாதான் இப்படி சிந்திச்சு எழுத முடியும்னு எனக்குத் தோணுது. நான் உதாரணத்துக்கு சில பாடல்களைச் சொன்னேன். பல பாடல்கள் இருக்குங்கறதுதான் உண்மை...”மணிமொழியனார் சொன்ன கருத்துகள் அசோகமித்திரனிடமும் ஒரு ஆச்சரிய அமைதியை உண்டாக்கி “அய்யா... உங்க பேச்சு எனக்கு ஒரு நல்ல தூண்டலைத் தந்துருக்கு.
நான் கூட இந்த பாம்பைப் பற்றின ஆராய்ச்சில அது தொடர்பான ஃபேன்டசிய எப்படி புரிஞ்சிக்கறதுங்கற குழப்பத்துல இருந்தேன். அதை பிளந்து பாக்கணும்னு நீங்க சொல்லாம சொல்லிட்டீங்க... சரிதானே?”“ஆமாம்... மேலோட்டமா ஒரு பொருள்... உள்ளடக்கமா வேறு பொருள். மேலோட்டத்துல இருக்கற நம்ப முடியாத விஷயங்கள பாத்து அதை அவசரப்பட்டு ஒதுக்கிடக் கூடாது. அந்த நம்ப முடியாத விஷயத்துக்குள்ளதான் ஒரு பெரிய நம்ப வேண்டிய உண்மையும் ஒளிஞ்சிருக்குன்னு நான் இப்ப நினைக்கறேன்...”“நானும் உங்க கருத்தை ஏற்று நடக்கறேன்யா... நாளைய பொழுது விடியட்டும். அந்த மண்ணாங்கட்டியாரை நான் விடப் போறதில்ல...”“இதான் சரியான சிந்தனை... ஏன் என்ற கேள்வி... கேட்காமல் வாழ்க்கை இல்லைங்கற கருத்தை மறந்துடக் கூடாது. அதே சமயம் ஒரு விஷயத்தை அணுகும்போது நாம ஒரு சார்பாவும் இருந்துடக் கூடாது. நம்ம இடம் மையமா இருக்கணும்.
மையமா இருந்தாதான் இருபுறமும் சம தூரம். எந்தப் பக்கம் விலகினாலும் ஒண்ணு கூடி ஒண்ணு குறைஞ்சு அதற்கேற்பதான் விடையும் கிடைக்கும். இந்த எச்சரிக்கை உணர்வும் அவசியம்...”மணிமொழியனார் அதோடு அன்றைய பேச்சை முடித்துக் கொண்டார். படுக்கைக்குச் சென்றபோது அசோகமித்திரனுக்கும் சற்று தெம்பாக இருந்தது.
இந்திரா செளந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|