நட்சத்திர டூரிசம்! ஆச்சரியப்படுத்தும் ஸ்டார்வோய்ர்ஸ்



‘I organise stargazing trips. Wanting to go on a stargazing trip?’ - இப்படிஒரு ஆர்வமூட்டும் வாசகத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும், டுவிட்டரிலும் ஸ்லோகனாக பதிவிட்டுள்ளார் பவணந்தி.

Stargazing trip எனப்படும் நட்சத்திரங்களைப் பார்வையிடும் பயணத்திற்கான அழைப்பு இது.
நட்சத்திரங்களைப் பார்வையிடும் பயணம் என்றதும் விண்வெளிப் பயணம் என நினைத்துவிட வேண்டாம். பூமியிலிருந்தே விண்வெளியை ரசிக்க வைக்கும் பயணம். மொட்டை மாடியில் படுத்துக்கொண்டே வானத்தில் ஒளிரும் நிலவையும் மின்னும் நட்சத்திரங்களையும் ரசித்திருப்போம் இல்லையா? ரம்மியமான ஓர் இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்று டெலஸ்கோப்பின் வழியே அதை தத்ரூபமாகக் காட்டும் அழகிய பயணம்.

ஆஸ்ட்ரோ டூரிசம் என உலகம் முழுவதும் வளர்ந்து வரும்  சுற்றுலாவான இதை நம்மூரில் பவணந்தி முன்னெடுத்திருக்கிறார். அந்தமானில் ஸ்டார்கேஸிங் ட்ரிப் முடித்து திரும்பியவரைச் சந்தித்தோம். ‘‘‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்’னு இதைச் சொல்லலாம். அப்படித்தான் இந்த ஆஸ்ட்ரோ ட்ரிப்பை ஆரம்பிச்சேன். இதை வெறும் சுற்றுலானு நான் பார்க்கல. அதைத்தாண்டி இதன்வழியா வானியல் அறிவியல் சார்ந்த கல்வி அறிவை ட்ரிப் வர்றவங்க கத்துக்கிறாங்கனு நினைக்கிறேன்...’’ என்கிற பவணந்தி  
சென்னையைச் சேர்ந்தவர்.  

‘‘நான் படிச்சு வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். லயோலாவுல பி.காம் முடிச்சேன். பிறகு ஒரு வங்கியில் வேலை செய்தேன். எனக்கு 2015ல்தான் நட்சத்திரங்களைப் பார்க்கிறதுல ஆர்வம் வந்தது. சென்னைக்குப் பக்கத்துல நாகலாபுரம்னு ஒரு இடம் இருக்கு. அங்க மலையடிவாரத்துல நானும் என் நண்பனும் ஒரு கேம்ப் பண்ணினோம்.
அவன்தான் எனக்கு வியாழன், சனிக்கோள்களைக் கண்களால் பார்க்கலாம்னு சொன்னான். அதுக்கு டெலஸ்கோப் எல்லாம் தேவையில்லனு அவன் சொன்னப்ப எனக்கு அது புதுசா இருந்தது. நான் முதல்ல நம்பல. அவன் சில போன் ஆப்களைக் காட்டி இது சனிக்கோள், இது வியாழன்னு சொன்னதும் எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அது எனக்குள் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துச்சு.

அப்புறம், ஒரு கட்டத்துல ஆஸ்ட்ரோ போட்டோகிராபியில் இறங்கிட்டேன். பால்வெளிதிரள்களை போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். தமிழ்நாட்டுல ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தேன். அடுத்து எனக்கு அதிக ஆர்வமாகி டிரிப் ஏற்பாடு பண்ணினேன். இரவு வானத்தைப் பார்க்கிற ட்ரிப், போட்டோகிராபி ட்ரிப்னு செய்தேன். அங்க நட்சத்திரங்களை போட்டோ எடுக்குறதுக்கு சொல்லித் தந்தேன். 2018ல் எனக்கு வேலை செய்திட்டே ட்ரிப் ஏற்பாடு செய்றது ரொம்ப கஷ்டமா இருந்தது.

அதனால, வங்கி வேலையை விட்டுட்டேன். இதுவே முழு நேரமாகப் பண்ணலாம்னு இறங்கினேன். ஆனா, என் நேரம், நான் இதுவே வேலைனு இறங்கி ட்ரிப் ஏற்பாடு பண்ணினப்ப யாரும் வரல. அதனால, ஒரு தவறான முடிவை எடுத்திட்டமோனு ரொம்ப வருத்தமாகிடுச்சு. அப்புறம், கோடநாடுல டிஸ்கவர்ஆல்பாஸ்னு ஒரு கேம்ப் ஸ்பாட் இருக்கு. அதன் உரிமையாளர் என் நண்பர். அவர் என்னுடைய கேம்ப் ஸ்பாட்ல வந்து தங்கி இங்க வர்றவங்களுக்கு ஸ்டார்கேஸிங் பத்தி சொல்லிக் கொடுனு சொன்னார்.  

அங்க போய்ச் சேர்ந்தேன். அப்ப 10 இஞ்ச் டாப்சோனியன் டெலஸ்கோப் வாங்கினேன். அதை வச்சு அந்த ஸ்பாட்டுக்கு வர்ற வாடிக்கையாளர்களுக்கு சொல்லித் தர ஆரம்பிச்சேன்...’’ என விறுவிறுப்பாகச் சொல்லும் பவணந்தியிடம் வணிகவியல் படித்துவிட்டு எப்படி வானியல் அறிவியல் என்றோம். ‘‘நான் பி.காம் மாணவன்தான். ஆனா, கடந்த ஆறு ஆண்டு
களாக ஆஸ்ட்ரோ சயின்ஸ்தான் படிச்சிட்டு இருக்கேன். இயற்பியலில் எனக்கு தேர்ந்த அனுபவம் இல்லன்னாலும் ஓரளவு தெரியும். பாப்புலரான அறிவியல் புத்தகங்கள் எல்லாம் படிச்சிருக்கேன். படிச்சிட்டும் வர்றேன்.

இப்ப என் ட்ரிப்புக்கு வர்றவங்களுக்குக் கூட நான் படிச்ச ஆஸ்ட்ரோ புத்தகங்களை கிஃப்ட்டா கொடுத்திருக்கேன். சமீபத்துல அந்தமானுக்கு என்னுடன் வந்தவங்களுக்கு ‘பிக் பாங்’னு சைமன் சிங் எழுதிய புத்தகத்தை கொடுத்தேன்...’’ என்கிறவர், சிரித்தபடி தொடர்ந்தார். ‘‘அப்புறம், ஏன் இதை ஒரு ட்ரிப்பா செய்யக்கூடாதுனு தோணுச்சு.

அதனால, டிஸ்கவர் ஆல்பாஸ்ல இருந்து வெளியே வந்து ட்ரிப் ஏற்பாடு செய்யும் வேலையை ஆரம்பிச்சேன். பிறகு, கடந்த ஜூன் மாசம் ‘Starvoirs’னு ட்ரிப்பிற்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ஸ்டார்கேஸிங் ட்ரிப் பண்றேன்.

இதுக்காக ஏழு கேம்ப் ஸ்பாட் வச்சிருக்கேன். ஏன்னா, ஸ்டார்கேஸிங் பண்ண ஒளி மாசு அடையாத இடம் வேணும். அப்பதான் நட்சத்திரங்கள், கோள்கள், பால்திரள்வெளியை நல்லா பார்க்கமுடியும். ஆனா, இந்த விஷயத்துல நாம் துரதிர்ஷ்டசாலிகள்னுதான் சொல்வேன். காரணம், நம்மூர்ல ஒளிவிளக்குகளை அவ்வளவு பயன்படுத்துறோம்.

இருந்தும் நம்மூர்ல சில ஸ்பாட்கள் ரொம்ப நல்லாயிருக்கும். அதுல ராமநாதபுரம் பக்கம் சாயல்குடி, சிதம்பரம் அருகே ஒரு ஸ்பாட், அப்புறம், கோடநாடு, ஊட்டி, கொடைக்கானல்ல பூம்பாறையில் சிறப்பா இருக்கும். இந்தியாவுல நாகலாந்துலயும், அந்தமான்லயும் ஸ்டார்கேஸிங் பண்ணிட்டு இருக்கேன். 

என்னுடைய வேலையில் இந்த நட்சத்திர பார்வையிடலுக்கு சரியான இடத்தைக் கண்டுபிடிப்பதும் முக்கியமானது. பொதுவா, கேம்ப் ஸ்பாட் எல்லாம் ஊரைத் தாண்டி ஒளி மாசு அடையாத இடமாகவே இருக்கும். இந்தமாதிரியான இடங்களை நான் தேர்ந்தெடுத்து மக்களைக் கூப்பிட்டுப் போய் நட்சத்திர பார்வையிடலைச் செய்றேன்.

இப்ப என் ஈவென்ட்ல 15 முதல் 18 பேர்களை அழைச்சிட்டு போறேன். இதுல குறைந்தது ரெண்டு குழந்தைகள் இருக்கணும்னு நினைப்பேன். இந்தக் குழந்தைகளுக்கு நான் கட்டணமா எதுவும் வசூலிக்கிறதில்ல. தங்குமிடம் மற்றும் உணவு செலவு மட்டும் அவங்க பார்த்துக்கணும். இப்ப நான் ஒரு ஐடி இளைஞருக்கு நட்சத்திரங்களைக் காட்டும்போது அவருக்கு ஒரு பொழுதுபோக்கா மாறும். அதுவே ஒரு குழந்தைக்கு காட்டும்போது நாளைக்கு அவங்க கேரியர் அதை நோக்கிக்கூட திரும்பலாம். அதனால, நான் குழந்தைகளை ஊக்கப்படுத்துறேன்...’’ என்றவரிடம், ட்ரிப் எப்படியிருக்கும்’ என்றோம்.

‘‘இப்ப என்னிடம் ஏழு டெலஸ்கோப் இருக்கு. நான் சொன்ன அந்த ஏழு கேம்ப் ஸ்பாட்லயும் ஒரு டெலஸ்கோப்னு வச்சிருக்கேன். இவை அங்குள்ள கேம்ப் ஸ்பாட் நண்பர்கள் வீட்டுல இருக்கும். ஒவ்வொன்றும் அறுபது கிலோ எடை கொண்டது. அதை டிராவல்ல தூக்கிட்டு அலையமுடியாது. இங்கிருந்து ட்ரிப் போகும்போது அதை அங்க பயன்படுத்துவோம்.
அப்புறம் என்னுடன் சரத்பிரபவ், தாமு, கௌதம்னு மூணு நண்பர்கள் இருக்காங்க.

இதுல சரத்பிரபவ் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்ல பிஹெச்.டி பண்ணிட்டு இருக்கார். தாமு வங்கியில் இருந்தாலும் டெலஸ்கோப் பயன்படுத்த தெரிஞ்சவர். எனக்கு டெலஸ்கோப் பத்தி சொல்லித் தந்தது அவர்தான். அடுத்து, கௌதம் இதுல ஆர்வமுள்ளவர். ஐடியில் பணி செய்றார். இரவு வானத்தை பார்ப்பதற்காக கொடைக்கானல்ல வீடு கட்டியிருக்கார். இப்ப இவங்க சில ட்ரிப்புகளை நடத்திக் கொடுக்கிறாங்க.

பொதுவா எங்க ட்ரிப்ல நட்சத்திரங்கள், கோள்கள், கேலக்ஸிகள் எல்லாம் காட்டுவோம். சமீபத்துல அந்தமான் போர்ட்பிளேயர்ல ஒரு ஈவென்ட் நடத்தினேன். அங்க சனி, வியாழன், செவ்வாய், சந்திரன் உள்ளிட்ட கோள்களைக் காட்டினேன். அப்புறம், ஆண்ட்ரோமேடா கேலக்ஸி, பின்வீல் கேலக்ஸி, நெபுலாஸ் எல்லாம் காட்டினேன்.

அடுத்து, நட்சத்திரங்கள் நிறைய காட்டினேன். குறிப்பா, Siriusனு சொல்லப்படுற பொலிவான நட்சத்திரத்தைக் காட்டினேன். ஒரு நட்சத்திரம் இறந்திட்டால் அது white dwarf; அதாவது வெண்குறுமீனாக மாறும். அல்லது நியூட்ரான் ஸ்டாரா இருக்கும். அல்லது பிளாக்ஹோல் ஆகும். இப்படி வொயிட் ட்வார்ஃப் ஆன நட்சத்திரத்தை டெலஸ்கோப்ல பார்க்கலாம்.

மக்கள் சனிக்கோளின் வளையத்தைப் பார்க்க ஆர்வமா இருக்காங்க. அப்புறம், வியாழன் கோள்ல உள்ள பட்டைகளைப் பார்த்து உற்சாகமாகறாங்க. அடுத்து நிலவுல உள்ள பள்ளங்களைப் பார்த்து சிலிர்க்கிறாங்க. ஆனா, ஆண்ட்ரோமேடா கேலக்ஸி மில்லியன் ஒளி கிமீ தூரத்துல இருக்குனு சொல்லி அதைக்காட்டினால், ‘என்ன ப்ரோ டல்லா தெரியுது’னு சொல்வாங்க. ஆனாலும் அவங்களுக்கு வெவ்வேறு கேலக்ஸிகளைக் காட்டி அது சம்பந்தமா பேசவும் செய்வோம்.

இதுதவிர, எங்க ட்ரிப்ல சில ஈவென்ட்டும் இருக்கும்படி செய்றோம். அதாவது வர்றவங்களுக்கு பகல்ல என்டர்டெயின்மென்ட் தர்றோம். சிதம்பரம் போனால் அங்க கயாக்கிங் இருக்கு. மாங்குரோவ் காடுகள்ல கயாக்ல பயணிக்கலாம். இரவு நட்சத்திரங்களைப் பார்க்கலாம்.இதேமாதிரி சாயல்குடியில் லைஃப் ஜாக்கெட் கொடுத்திட்டு பீச்ல குளிக்கச் சொல்வோம். அந்தமான்ல புதுப்புது நிலப்பரப்பைக் காட்டுவோம்.  இதுதவிர, இப்ப புதுசா இசையமைப்பாளர்களை அழைச்சிட்டு வரலாம்னு இருக்கோம். நிறைய பேர் இளையராஜா சார் பாட்டுடன் இரவு வானத்தை ரசிக்கிறது தனிசுகம்னு சொல்வாங்க. அதை சாத்தியமாக்கலாம்னு தோணுது.

இதுவரை அந்தமானுக்கு 2 முறையும், சாயல்குடிக்கு ஐந்து முறையும், சிதம்பரத்துக்கு ஒருமுறையும் ஸ்டார்கேஸிங்க்கு போயிருக்கோம். வர்ற டிசம்பர் அந்தமான், ஜனவரியில் நாகலாந்துனு பண்ணப் போறோம். என்னுடைய ஆசையெல்லாம் ஸ்டார்கேஸிங்ல ஆர்வமுள்ள  நண்பர்களை இதுக்குள்ள அழைச்சிட்டு வரணும் என்பதுதான். அதேபோல, பெண் வானியல் நிபுணர்களும் வரணும்னு நினைக்கிறேன்.  

சமீபத்துல இந்திய அரசு லடாக் பகுதியில் உள்ள ஹேன்லேனு ஒரு இடத்தை டார்க் ஸ்கை ரிசர்வ்னு அறிவிச்சிருக்கு. ஆஸ்ட்ரோ டூரிசம் செய்யவே அப்படி அறிவிச்சாங்க. இதனால, அந்த இடத்துல செயற்கை விளக்குகளை ஊக்கப்படுத்தமாட்டாங்க. நம்மூர்லயும் இதுமாதிரி ரிசர்வ் பகுதிகள் கொண்டு வரணும்னு ஆசைப்படுறேன்...’’ என்கிறார் பவணந்தி.

பேராச்சி கண்ணன்