சர்தார்
மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற தியரிக்கு வலுசேர்க்கும் படமே ‘சர்தார்’.எப்படி ‘இரும்புத்திரை’ படத்தில் டீடெயிலிங் அசத்தியதோ அப்படி இந்திய உளவாளிகள் தொடர்பான நடைமுறைகளும், தண்ணீர் தொடர்பான செய்திகளும் ‘சர்தாரி'ல் அதிர வைக்கின்றன. அந்த வகையில் இயக்குநர் மித்ரன், கவனிக்க வைக்கிறார்.
 அப்பா - மகன் என கார்த்திக்கு இரட்டை வேடங்கள். மகனை விட அப்பாவின் கம்பீரம் கண்முன்னால் நிழலாடுகிறது. அனைத்து நடிகர்களுமே தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், ரூபனின் படத்தொகுப்பும் படத்துக்கு வலு சேர்க்கின்றன.
எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் படமான ‘என் அண்ணன்’ படத்தின் கதையாடலில் ‘சர்தார்’ கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் லாஜிக் மிஸ்டேக்கும், கதையை விட்டு விலகும் காட்சிகளும் நெளிய வைக்கின்றன.முக்கியமான பிரச்னையை அழுத்தமாகப் பேசியிருக்கிறது ‘சர்தார்’.
ப்ரின்ஸ்
 தேசமா, காதலா, காதல் தேசமா..?
இதற்கான விடைதான் ‘ப்ரின்ஸ்’.சொந்த சாதிக்குள் காதலிக்கக் கூடாது என்ற தந்தையின் கட்டளையை ஏற்று வேறு நாட்டுப் பெண்ணை மகன் காதலிக்கிறார். ஆனால், சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனான தந்தை, ஆங்கிலேயப் பெண் தன் வீட்டுக்கு மருமகளாக வரக் கூடாது என்று தடை போடுகிறார். இந்நிலையில் காதலர்கள் இணைந்தார்களா என்பதே ‘ப்ரின்ஸ்’. சிவகார்த்திகேயனுக்கு என்றே தைக்கப்பட்ட சட்டை.
ஆனால், அதே சட்டையை தொடர்ந்து படத்துக்குப் படம் அணிகிறாரோ என்று எண்ணும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருப்பது பெரும் குறை. வலுவான வில்லன் இல்லாததால் நகைச்சுவை டிவி ரியாலிட்டி ஷோவின் துணுக்குத் தோரணமாகவே படம் எஞ்சுகிறது.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, தமனின் இசை... என டெக்னீஷியன்கள் இயக்குநர் அனுதீப்புக்கு கைகொடுத்திருக்கிறார்கள்.ஆங்காங்கே சிரிக்க வைக்கும் ஒன்லைனர்களுடன் வலுவான கதையும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளும் கலந்திருந்தால் ‘ப்ரின்ஸ்’, ‘கிங்’ ஆக அமர்ந்திருப்பார்.
குங்குமம் விமர்சனக் குழு
|