விண்வெளியில் நடிக்கப்போகும் முதல் நடிகர்!



ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை எல்லா பட்டி தொட்டிகளிலும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஹாலிவுட் நடிகர், டாம் குரூஸ். இவர் நடித்த ‘மிஷன் இம்பாசிபிள்’, ‘டாப் கன்’ போன்ற படங்கள் வசூலில் சாதனை படைத்தவை. மூன்று முறை சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். தவிர, ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவரே. ரசிகர் பட்டாளம், வசூல், விருது, சம்பளம், புகழைத் தாண்டி இன்னொரு மகுடத்தைத் தன்வசமாக்கப்போகிறார் டாம்.

ஆம்; சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே உள்ள பால்வெளியில் நடக்கப்போகும் முதல் நடிகர் மற்றும் முதல் குடிமகன் என்ற மகுடத்தை விரைவில் சூடப்போகிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பெயரிடப்படாத ஒரு படத்தில் டாம் குரூஸ் நடிக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. கொரோனாவின் தாக்கத்தால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இப்போது அந்தப் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

இப்படத்துக்கான ஐடியா டாம் குரூஸுடையது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஐடியாவை வைத்து டக் லீமனும், கிறிஸ்டோபர் மெக்குயரியும் திரைக்கதை எழுதியிருக்கின்றனர். டக் லீமன் படத்தை இயக்குகிறார். இவர் முன்பே டாம் குரூஸின் நடிப்பில் வெளியான ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ படத்தை இயக்கியிருந்தார்.பெயரிடப்படாத படத்தின் முக்கிய பகுதிகள் சர்வதேச விண்வெளி நிலையத்திலும், அதற்கு வெளியேயும் நடப்பதாக கதை எழுதப்பட்டிருக்கிறது.

நிஜமாகவே விண்வெளியில் படப்படிப்பு நடத்தினால் நன்றாக இருக்கும் என்று டாம் குரூஸும், படக்குழுவினரும் முடிவு செய்திருக்கின்றனர். இதற்காக எலன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மற்றும் நாசாவின் உதவியை நாடியிருக்கின்றனர் படக்குழுவினர். அவர்களும் பச்சைக்கொடி காட்ட, விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தப்போகும் முதல் படம் என்ற சிறப்பைப் பெறுகிறது இந்தப் படம்.

இதில் நடிப்பதின் மூலம் முதன் முதலாக விண்வெளியில் நடிக்கப்போகும் முதல் நடிகன் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே நடக்கப்போகும் முதல் குடிமகன் என்ற மகுடங்களைத் தன்வசமாக்கியிருக்கிறார் டாம். இதன் பட்ஜெட் 1,650 கோடி ரூபாய். டாம் குரூஸ் மற்றும் எலன் மஸ்க்குடன் சேர்ந்து நான்கு பேர் படத்தை தயாரிக்கின்றனர். யுனிவர்சல் பிக்சர்ஸ் விநியோகம் செய்கிறது.

த.சக்திவேல்