உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி இவர்தான்!
தலைமை நீதிபதியாகும் சந்திரசூட்
உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்க இருக்கிறார் டி.ஒய். சந்திரசூட் என்னும் தனஞ்ஜெய ஒய். சந்திரசூட். அப்பா யெஸ்வந்த் விஷ்ணு சந்திரசூட் இதே நீதிமன்றத்தில் 78 முதல் 85 வரை தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்ஜெய சந்திரசூட் தில்லியில் பொருளாதாரம், சட்டத்தில் இளங் கலைகளை முடித்தவர். பிறகு அமெரிக்காவின் ஹார்வர்டு சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
 பிறந்தது மும்பை என்பதால் படித்து முடித்ததும் மும்பை நீதிமன்றத்தில் 2000 முதல் 2013 வரை நீதிபதியாகப் பதவி வகித்தவர். பின்னர் 2013 முதல் 16 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார். 2016 முதல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகச் செயல்பட்டு வந்தார். இப்பொழுது தற்காலிக தலைமை நீதிபதியான லலித்தின் பதவிக் காலம் முடியும் தருவாயில் அவரது சிபாரிசின் பேரில் தலைமை நீதிபதியாக சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் முதல் இந்தப் பொறுப்பை 2 வருடம் வகிக்கப் போகிறார்.
ஒருகாலத்தில் மன்னர் விதித்ததுதான் சட்டமாக இருந்தது. ஆனால், இன்றைய மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சிக்குத்தான் முதலிடம். இந்த அடிப்படையில் இந்தியாவின் ஆன்மா அரசியல் சாசனத்தில்தான் (கான்ஸ்டிடியூஷன்) உள்ளது.
மன்னரே தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் உரிமை சட்டத்துக்கும் அதைப் பேணும் நீதிமன்றத்துக்கும்தான் உண்டு.அந்த வகையில் தனஞ்ஜெய சந்திரசூட் இதுவரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பல்வேறு அமர்வுகளில் (பென்ச்) முத்திரை பதித்திருக்கிறார்.
‘‘சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்ற வழக்குக்கு எதிராக வழக்காடியவர், ஆதாருக்கு எதிராகப் போராடியவர், ஆதாரை மையமாக வைத்து அரசு தனிநபர் உரிமையில் தலையிட்டபோது தனி நபர் உரிமைக்காக குரல் கொடுத்தவர், பீமா கொரேகான் வழக்கில் 5 பேரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தபோது அதற்கு எதிராக போராடியவர்... என்று பெயர் எடுத்தவர் சந்திரசூட்...’’ என்று பேசத் தொடங்கினார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அரி பரந்தாமன்.
‘‘அண்மையில் சமூக செயல்பாட்டாளரான சாய்பாபா விடுவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து வழக்காடும்படி அரசு இவரிடம் கோரிக்கை வைத்தது. சந்திரசூட் மறுத்துவிட்டார். இப்படி பெரும்பான்மை வழக்குகளில் அவர் அடிப்படை உரிமைகளுக்காக நின்றார் எனும்போது அவர் தலைமை நீதிபதியாக உயர்ந்திருப்பது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது...’’ என்கிறார் அரி பரந்தாமன்.
டி.ரஞ்சித்
|