உலகம் கொண்டாடும் தமிழ் பெளத்த பைபிள்!



பைபிள் என்றால் ஒன்றே ஒன்றுதான். அது கிறிஸ்தவ மதத்தினர் வைத்திருக்கும் மத நூல் என்றுதானே நாம் நினைக்கிறோம்? ஆனால், அண்மையில் பெளத்த மதத்திற்கும் ஒரு பைபிள் உருவாகியிருக்கிறது. அதுவும் தமிழில்! இதை உருவாக்கியிருப்பவர் ஓ.ரா.ந. கிருஷ்ணன். பெளத்தம் தொடர்பாக இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி
யிருக்கும் இவரது இந்த நூல், உலக பெளத்தர்கள் மத்தியில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

வழுவழு மொட்டைத் தலையுடன் தோன்றும் கிருஷ்ணனைப் பார்த்தால் ஒரு பெளத்த பிக்குவைத் தரிசிப்பது போலவே தோன்றுகிறது. சுமார் 700 பக்கங்கள்... ரூ.900 விலையில் இந்த ‘பெளத்த பைபிள்’ நூலை மெத்தா பதிப்பகம் பதிப்பித்துள்ளது. ‘‘பலரும் இந்தப் புத்தகத்துக்கு ‘பெளத்த  பைபிள்’ என்று பெயர் வைத்ததும் பைபிள் என்ற வார்த்தை ஏன் என்றுதான் என்னிடம்
கேட்டார்கள்.  பைபிள் என்ற வார்த்தையை 1956ம் ஆண்டு பல லட்சம் மக்களோடு, தானும் பெளத்தத்துக்கு மாறிய அம்பேத்காரின் எழுத்துக்களில் இருந்துதான் பெற்றேன்.

அம்பேத்கார் இந்த நிகழ்வுக்கு சில ஆண்டுகளுக்கு முன் புத்தரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். அந்த புத்தகத்தின் பெயர் ‘புத்தரும் அவரது போதனைகளும்’ (Buddha and his teachings). இதில்தான் அம்பேத்கார் கிறிஸ்தவர்களின் பைபிள் மாதிரி சாதாரண மக்களுக்கு புத்தரின் அடிப்படை போதனைகளை நம் மொழியில் சொல்லக்கூடிய ஒரு எளிய புத்தகம் இல்லையே என்று குறைப்பட்டிருந்தார்.

இந்த வாசகத்தைப் படித்தபோதுதான் அந்த பைபிள் என்ற வார்த்தை என்னை ஆட்கொண்டது. அம்பேத்கார் பின்னர் ‘புத்தரும் அவரது தம்மமும்’ (Buddha and his dhamma) என்ற தன் இரண்டாவது புத்தகத்தையும் எழுதினார். இதனையடுத்து சிலர் அம்பேத்கார், தான் முதல் புத்தகத்தில் குறைப்பட்டதை இந்த இரண்டாவது நூலில் சரிசெய்யவே எழுதியிருப்பதாவும், எனவே இதுதான் பெளத்த பைபிளாக இருக்கவேண்டும் என்றும் நினைத்தனர்.

இந்தக் கருத்து விவாதத்துக்கு உரியது. காரணம் இந்த தம்ம புத்தகத்தில் அம்பேத்கார் புத்தரது சமயக் கொள்கைகள், சமூக நீதிகளை மட்டுமே பேசுகிறார். ஆகவே அம்பேத்கார் குறைப்பட்டதைப் போல் இனி யாரும் வருந்தக் கூடாது... அதற்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்றே இந்தப் புத்தகத்தை எழுதினேன்...’’ புன்னகைக்கும் கிருஷ்ணன், புத்தகத்தின் உப
தலைப்பாக ‘தேரவாதம்’ இருப்பது குறித்து விளக்கினார்.

‘‘பெளத்த  மதத்தில் ஹீனயானம், மஹாயானம், வஜ்ராயனம் என பல பிரிவுகள் தோன்றின. ‘யானம்’ என்றால் வாகனம், வழி என்று பாலி மொழியில் அர்த்தம். புத்தர் மக்கள் மொழியான பாலியில்தான் தன் போதனைகளைச் செய்தார். பண்டிதர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர் தவிர்த்தார். ‘ஹீனயானம்’ என்றால் சிறுவழி; ‘மஹாயானம்’ என்றால் பெரிய வழி என்று பெளத்தர்கள் அர்த்தம் கொடுக்க ஆரம்பித்தார்கள். பிறகு காலப்போக்கில் ‘ஹீனயானம்’ என்ற இந்த சிறுவழி, கீழான வழி, கேவலமான வழி... என்று தேரவாதத்தை மட்டம் தட்டினர். தமிழில் ‘ஹீனப் பய’ என்று சொல்வோமே... அதுமாதிரி.

உண்மையில் இந்த ஹீனயானம் என்பது தேரவாதத்தின் ஒரு பெயர். தேரவாதம் என்பது புத்தரது போதனைகள், பிக்குகளின் அன்றாட நடவடிக்கைகள், மற்றும் போதனைகளின் தத்துவார்த்த அடிப்படைகள் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. இந்த மூன்று பிரிவையும் சேர்த்துதான் ‘திரிபிடகம்’ என்பார்கள். ‘திரி’ என்றால் மூன்று. ‘பிடகம்’ என்றால் கூட்டு, கூடை என்று அர்த்தம் வரும்.புத்தர் இறந்த பிறகு பெளத்தம் என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கு ஏற்பட்டது. இந்த நேரத்தில் புத்த சங்கம் கூடியது. அந்தக் கூட்டத்தில் புத்தரோடு இருந்த அனந்தர், உபாலி போன்ற மிக நெருக்கமான சீடர்கள் இருந்தார்கள். அங்கு புத்தரது போதனைகளை பதிவு செய்யலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அனந்தர் புத்தரது போதனைகளைப் பதிவு செய்ய, உபாலி பெளத்த பிக்குகளின் அன்றாடக் கடமைகளைப் பதிவு செய்வது மற்றும் பலர் புத்தரது போதனைகளுக்கு தத்துவார்த்த விளக்கம் சொல்வது என செயல்பட்டனர். இப்படித்தான் மூன்று கட்ட பதிவு முறை ஆரம்பமானது. போதனைப் பிரிவுக்கு ‘சுத்த பிடகம்’ என்றும்; கடமை, அன்றாட நடவடிக்கைப் பிரிவுக்கு ‘வினய பிடகம்’ என்றும்; தத்துவார்த்த பிரிவுக்கு ‘அபிதம்ம பிடகம்’ என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த மூன்று பிடகமும் சேர்ந்ததுதான்
திரிபிடகம்.

இந்தப் பதிவுகளை சங்கத்தினர் எல்லோரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். ‘சுத்த’ என்றால் சூத்திரம் என்று அர்த்தம் வரும். அதாவது புத்தரது போதனைகள் இதில் ஒரு சூத்திரமாக, மந்திரமாக ஒரு சுருக்க வடிவில் இருக்கும். ‘வினய’ என்றால் நடவடிக்கைகள் என்று அர்த்தம். ‘அபிதம்ம’ என்றால் விளக்கம் என்று அர்த்தம். இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த தேரவாதம்தான் பின்பற்றப்படுகிறது. ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் மஹாயானம் பின்பற்றப்படுகிறது...’’ என்ற கிருஷ்ணனிடம், தேர
வாதத்தை ஏன் மஹாயானர்கள் தள்ளிவைத்தனர் என்று கேட்டோம்.

‘‘புத்தர் இறந்ததும் முதலில் தோன்றிய பதிவு இந்த தேரவாதம் எனும் திரிபிடகம்தான். அதன்பின் புத்த மதத்தில் பல்வேறு பிரிவுகள் தோன்றின. பிற்பாடு வந்தவை எல்லாம் முன் தோன்றிய தேரவாதத்தைக் காட்டிலும் புத்தரை ஒரு கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்தின. தேரவாதம் புத்தரை இரத்தமும், சதையுமான ஒரு மனிதராக மட்டுமே காட்டியது.

இதை மறுத்துதான் மஹாயானம் போன்ற பெளத்த பிரிவுகள் சண்டை போட்டன. ஆனால், எல்லா பிரிவுக்கும் புத்தரது போதனைகள் ஒரு முக்கியமான அடிப்படையாக இருக்கிறது...’’ என்று சொல்லும் கிருஷ்ணன், பெளத்தராக தீட்சையும் பெற்றிருக்கிறார்.‘‘பெளத்தத்தில் பிக்கு, பிக்குனி என்னும் துறவறத்துக்கு அடுத்து திருமணமானவர்களும் தீட்சை பெறும் ஒரு வழக்கம் இருக்கிறது. இவர்களை உபாசகர், உபாசகை என்பார்கள்.

பிரசாரகர்கள் என்று அர்த்தம். ஆண் என்றால் உபாசகர். பெண் என்றால் உபாசகை...’’புன்னகைக்கும் கிருஷ்ணன், புத்தரது போதனைகள் சுமார் 85 ஆயிரம் சூத்திரங்களாக இருப்பதாகவும் அதில் சுமார் 300 - 400 சூத்திரங்களை மட்டுமே இப்புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாகவும்; ‘பெளத்த பைபிள்’ என்னும் பொதுத் தலைப்பின் கீழ் உப தலைப்புகளாக தொடர்ந்து ஹீனயானம், வஜ்ராயனம்... என அடுத்தடுத்து தொகுத்து வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். மகத்தான இந்த சாதனையை நிகழ்த்தும் ஓ.ரா.ந.கிருஷ்ணனுக்கு வயது 89தான்!

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்