தொடரும் பெண்கள் மீதான வன்முறை ரக்ட் பாய்ஸ்... சாக்லெட் பாய்ஸ்...



‘இன்றைய இளைஞர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் கொடூர மனநிலைக்குச் செல்கிறார்கள்...’
கடந்த வாரம் மதுரை உயர்நீதிமன்றம், காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியைக் கொலை செய்த வழக்கின் மேல்முறையீட்டில் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில்கூட சென்னை பரங்கி மலை ரயில்நிலையத்தில் மாணவி சத்யப்ரியாவை சதீஷ் என்ற இளைஞர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். காதல் நிராகரிப்பால் பெண்கள் கொலை செய்யப்படும் போக்குகள் தொடர்வது வேதனையளிக்கின்றன.

இதுஒருபுறம் என்றால் இன்னொருபுறம், பெரும்பாலான பெண்களுக்கு Rugged boys எனப்படும் முரட்டுத்தனமான பையன்களே பிடிக்கிறது என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் ட்ரோலாகிக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் பெண்கள் கொல்லப்படுகிறார்கள் என்கிற வாதமும் நடக்கின்றன.Rugged boys எனப்படும் இந்த முரட்டுத்தனமான பையன்களை இளம்பெண்களுக்கு ஏன் அதிகம் பிடிக்கிறது... இன்றைய இளைஞர்கள் ஏன் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருக்கின்றனர்... பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்வது ஏன்... நிபுணர்களிடம் பேசினோம்.

‘‘கொஞ்சம் தைரியமா தெனாவட்டாக இருக்கிற, ரிஸ்க் எடுக்குற, எதிர்மறையா இருக்குற, எந்தவித சட்டதிட்டங்களுக்கும் உட்படாமல் திரிகிற பசங்களைத்தான் நாம் ரக்டு பாய்ஸுக்கான குறியீடாக வச்சிருக்கோம். பொண்ணுங்களுக்கு இவங்கள ஏன் பிடிக்குதுனா மற்ற பசங்கள்ல இருந்து வித்தியாசமா இருக்கிறதாலதான்...’’ என ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கமாகப் பேச ஆரம்பித்தார் மருத்துவ உளவியல் நிபுணரான டாக்டர் சுனில்குமார்.‘‘என்னிடம் கவுன்சிலிங்குக்கு வந்த ஒரு பொண்ணு எனக்கு அந்தப் பையனைப் பிடிக்கும்னு சொன்னதும், ஏன் பிடிக்குதுனு கேட்டேன். ‘அவன் வண்டி வேகமாக ஓட்டுவான். அவன்கூட போனால் பாதுகாப்பாக உணர்றேன்’னு சொன்னாள்.

‘என்ன பாதுகாப்பு’னு கேட்டேன். ‘யாராவது என்னை கிண்டல் செய்தால் அவன் அடிச்சிடுவான்’னு சந்தோஷமா சொன்னாள்.இது உளவியல் ரீதியான ஒரு விஷயம். பொதுவா, நம்மகிட்ட இல்லாத ஒன்று அடுத்தவங்ககிட்ட இருந்தால் அவங்க மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படும். இப்ப நீங்க கோழையா இருந்தீங்கன்னா, தைரியமா உள்ள பெண்ணை பார்த்தால் ஈர்ப்பாகிடுவீங்க. அதுபோலதான் ரக்டு பாய்ஸ் மேல பெண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு.

நம்ம சமூகத்துல ஒரு பெண் தன்னுடைய மன அபிலாஷை களை முழுமையாக வெளிப்படுத்த முடியாதபோது, அதை அந்தப் பையன் முழுமையாக வெளிப்படுத்தும்போது அவன்மீது ஈர்ப்பு அதிகமாகிடுது.பொதுவா, நம் சமூகத்தில் ஒரு பெண் பலமாக இல்ல. அப்ப பலமாக இருக்கிற பையனுடன் நாம் இருந்தோம்னா பலமாக இருக்கலாம்னு நினைக்கிறாங்க. இப்படியான சூழல் சமூகத்திலிருந்தே உருவாகிறது. அதேநேரம், இந்த பொண்ணுக்காக அவன் எங்க சண்டைபோடுறானோ அங்க இந்தப் பொண்ணுக்கு பாதுகாப்பு பிரச்னை அதிகரிக்குமே தவிர குறையாது. இந்த புத்தி அந்தப் பொண்ணுக்கு வர்றதில்ல. அப்புறம், நாளைக்கு இந்த அடி நமக்கும் விழும் என்கிற எண்ணமும் தோண்றதில்ல.

ரக்டு பாய்ஸ்கிட்ட பொண்ணுகளால் நீண்டநாட்கள் உறவு பேணுவது கொஞ்சம் கஷ்டமானதுதான். இவங்களுக்கு குற்றஉணர்ச்சி குறைவாக இருக்கும். குற்றஉணர்ச்சி உங்களுக்குள் இருந்தால்தான் நீங்க ஓரளவு நல்லவனாக இருக்க முடியும். உங்களுக்கு எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லைனா நல்ல செயல்கள்ல ஈடுபடமுடியாது. இவங்க அடிக்கடி சண்டை போடுவாங்க. எமோஷன்ஸ் கட்டுப்பாட்டுல இருக்காது. அடுத்தவங்க ஃபீலிங்கிற்கு முக்கியத்துவம் தரமாட்டாங்க. பெரும்பாலான ரக்டு பாய்ஸ் கிரிமினல் ரிக்கார்ட்ஸ் உள்ளவங்களா இருப்பாங்க. இதெல்லாம் ஒரு பொண்ணுக்கு சிக்கல் தரக்கூடிய விஷயங்கள்.

அப்புறம், இன்றைய இளைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்களானு கேட்டால் ஆம்னுதான் சொல்வேன். இன்றைய இளைஞர்கள் நிறைய கவனச் சிதறலுக்குள் தள்ளப்படுறாங்க. குறிப்பாக இந்த கொரோனாவிற்குப் பிறகு அவங்க செல்போனுடன் செலவிடும் நேரம் அதிகரிச்சிடுச்சு. அதனால, அவங்க மூளை நரம்புகள் சுயகட்டுப்பாட்டை இழந்து வேலை செய்யுது. எப்பனாலும் தூங்கலாம், எப்பனாலும் எழுந்திருக்கலாம், எப்பனாலும் டிவி பார்க்கலாம்னு இருக்காங்க.

அதேமாதிரி எமோஷனல் கட்டுப்பாடுனு ஒண்ணு இருக்கு. அதை எங்க வெளிப்படுத்தணுமோ அங்க தேவையான அளவு வெளிப்படுத்தணும். அதன் ரெகுலேஷன் நம்ம கையில் இருக்கணும். இந்தக் காலமாற்றங்களால் மூளை பழையபடி ரிலாக்ஸ்டாக இல்ல. அதனால, உடனே கோபத்தை வெளிப்படுத்துறது, சின்ன விஷயத்துக்கும் சந்தோஷப்படுறது, கோபம் வந்தால் பெரிசா படுறது... இந்த எமோஷன்களை ஒழுங்குபண்ணத் தெரியாததால எளிதில் உணர்ச்சிவசப் படுகிறவர்களாக இருக்காங்க...’’ என்கிற டாக்டர் சுனில்குமார் பெண்கள் மீதான வன்முறை பற்றித் தொடர்ந்தார்.  

‘‘சமீபத்துல 2022ம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை வெளியானது. ஒவ்வொரு நாட்டிலும் ஆண்-பெண் இடைவெளி எந்தளவுக்கு இருக்குனு ஆய்வு பண்ணி வெளியிடுவாங்க. 146 நாடுகள்ல நடந்த இந்த ஆய்வுல இந்தியா 135வது நாடாக வந்திருக்கு.நம் பக்கத்து நாடுகளான பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடானைவிட மோசமாக இந்தியா இருக்கு. இதுமட்டுமல்ல; ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த இடைவெளி சீராக இன்னும் 132 ஆண்டுகள் ஆகும்னு சொல்றாங்க.

அப்புறம் உலக சுகாதார நிறுவனம்  மூன்றில் ஒரு பெண் 15-49 வயது முடிகிறவரை இடைப்பட்ட காலத்தில் தன் வாழ்நாள்ல ஏதோ ஒரு இடத்துல வன்முறைக்கு ஆளாகிறாள்னு சொல்லுது. அது உடல்ரீதியானதாகவோ, மனரீதியானதாகவோ, பாலியல் ரீதியானதாகவோ இருக்கலாம்னு தெரிவிக்குது.  இங்க ஒரு ஆண், ஒரு பெண்ணை கொலை செய்திட்டான் அல்லது துன்புறுத்துறான் என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பிரச்னையா பார்க்கிற போக்கு இருக்கு. அதைப் பெரும்பாலும் தனிமனித பொறுப்பாக ஆக்கிடுறோம். அவன் சைக்கோ கொலைகாரன், மனநோயாளி, பொம்பளை பொறுக்கினு ஒரு தனிமனித செயலாகப் பார்க்கிறோம்.

ஆனா, பெண்களுக்கு எதிராக இருக்கிற வன்முறையை வரலாறு ரீதியாக பார்த்தோமானால், சமமற்ற அதிகாரத்தால் உருவாவதுதான். ரக்டு பாய்ஸை பெண்களுக்கு பிடிக்க இதுவும் ஒரு காரணம். சமஉரிமை பெண்களுக்கு இல்லாதபோது, சுதந்திரமா, தான்தோன்றித்தனமா திரிகிற ரக்டு பாய்ஸை இயல்பாகவே பிடிக்கும்தானே. அதனாலதான் நான் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையைக் குறிப்பிட்டேன். அந்த இடைவெளி தீராத வரைக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை நிற்காது. இதை மனித உரிமை மீறலாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. மனித உரிமை மீறலில் இந்த விஷயத்தைக் கொண்டுவந்தால் அது அரசாங்கத்தின் பொறுப்பாக மாறும்.

ஆனா, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடுனு நாடாளுமன்றத்துல சட்டம் வந்தும் அதை நாடாளுமன்றத்திேலயே நிறைவேற்ற முடியாமல் சட்டம் தூங்கிட்டு இருக்கு.
பெண்கள் அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வுக்கு வரணும். அப்பதான் பாலிசி லெவல்ல மாற்றங்கள் நடக்கும். பெண்களின் நிலை மேம்படும். பெண்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும்.  
இதைவிடுத்து சைக்கோக்களை சுடலாம், பிறப்புறுப்புகளை அறுக்கலாம், கொலை செய்யலாம்னு நினைக்கிறதும்; ‘பெண்கள் ஏன் அந்த நேரத்துக்கு அங்க போகணும், அந்த உடையை ஏன் போட்டுக்கணும், ஏன் வாயாடணும், அதனாலதான் இவ்வளவு பிரச்னை, அந்தக்காலத்துல இதுமாதிரியெல்லாம் இல்ல, இவங்க சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு திமிர் வந்திடுச்சு’னு பேசறதும் நம் கவனத்தை நாமே திசை திருப்புகிற செயல்தானே தவிர வேறெதுமில்ல...’’ என்கிறார் டாக்டர் சுனில்குமார்.

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரான கீதா நாராயணன், ‘‘பாலியல் கல்வியை பள்ளிக் கூடத்தில் கட்டாயமாகக் கற்றுத்தரணும்னு ரொம்ப நாளாக சொல்லிட்டு வர்றேன்...’’ என்று ஆரம்பித்தார்.‘‘அதாவது, பாலியல் கல்வியில் பாலுறவைத் தாண்டி வாழ்க்கைத் திறன் பயிற்சினு இருக்கு. இதுல பத்து திறன்கள் வச்சிருக்காங்க. அதைச் சொல்லித் தரும்போதே பல பிரச்னைகள் தீரும்.  பிரச்சினைகளுக்கு சரியான தீர்வைக் கண்டறிதல், முடி வெடுக்கும் திறன், படைப்புச் சிந்தனை, தன்விழிப்புணர்வு,விமரிசன சிந்தனை, அனுதாப உணர்வு, பிறருடன் நல்லுறவை வளர்த்தல், தகவல் பரிமாற்றத் திறன், மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறன், உணர்வுசார் நுண்ணறிவு-இந்த 10 வாழ்க்கைத் திறன்களோடு பாலின சமத்துவக் கல்வி, பாலியல் கல்வி அளிக்கப் பட வேண்டும்.

அதனால ரக்டு பாய்ஸ், சாக்லெட் பாய்ஸ்னு பேசறதுல எந்த பிரயோசனமும் இல்ல. நீங்க முரட்டுத்தனமான ஆளாக இருக்கிறதைவிட, அடிபணிந்து போகிற நபராக இருப்பதைவிட, assertiveனு சொல்ற தெளிவான, நம்பிக்கையான நபராக இருக்கணும். அதுதான் முக்கியம். இன்னொண்ணு என்னனா, நமக்கு மாடல்ஸ் முழுவதும் சினிமாவுல இருந்துதான் வராங்க. நம் ஊர்ல ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட புரொபோஸ் பண்றான். முதல்ல அந்தப் பொண்ணு பயந்து விலகிப் போகும். ஒருவேளை இந்தப் பையன் டைம் கொடுத்தால் அந்தப் பொண்ணு யோசிச்சிட்டு கூட சொல்லலாம். ஆனா, இந்தப் பையன் அந்தப் பொண்ணு சொல்ற ‘நோ’ங்கிற பதிலை எடுத்துக்கவே மாட்டான்.

ஏன்னா, இவங்க அடிமனசுல ‘பார்க்கப் பார்க்க பிடிக்கும்’ என்கிற வார்த்தைதான் வந்துபோகும். அதனால, தொடர்ந்து பின்தொடர்றது நார்மல் மாதிரி நம் கலாசாரத்துல இருக்கு. ஆண், பெண் உறவு சரிசமமானதுனு காட்டுகிற மாதிரியான மீடியா மாடல் எதுவும் இங்க கிடையாது. ஹீரோயின் வீட்டுக்கு முன்னாடி நின்னு பாட்டுப் பாடுகிற கூட்டம் நம்முடையது.
பெண்களை மதிக்கவே மதிக்காத ஒரு கலாசாரம்... அந்தமாதிரி சூழல்ல ரக்டு பாய்னா என்ன? சாக்லெட் பாய்னா என்ன? அந்த மாடலே தவறு. நமக்கு தேவை நட்புடன் இருக்கிற பையன்; நட்புடன் இருக்கிற பொண்ணு.

அதனாலதான் பள்ளிகள்ல வாழ்க்கைத்திறனை கற்றுத் தரணும்னு சொல்றேன். அதுல முடிவு எடுக்கும் திறன், பிரச்னையைத் தீர்க்கும் திறன் எல்லாம் இருக்கு. ஒரு பிரச்னை வந்தால் அதன் விளைவுகள் பற்றி யோசிக்கிறது எப்படினு கற்றுத் தர்றதும்; முரட்டுத்தனமாகவும் இருக்கக்கூடாது; பயந்தும் போகக்கூடாது. நிதானமாக எப்படி கொண்டுபோறதுனும், ஒரு குழுவுடன் இணைந்து வேலை செய்வது எப்படினு படிக்கிற பயிற்சியும் அதுல இருக்கு.

தவிர, அதுல இன்டர்ஜெண்டர் பிஹேவியர்னு இருக்கு. எது நட்பு, எது காதல், எது காமம், எதை எங்கே நிறுத்தணும்னு சொல்லித் தரும் விஷயங்கள். அப்புறம், எமோஷனல் இன்டலிஜன்ஸ்னு சொல்வோம். அதாவது எப்படி எல்லா விஷயத்திலும் எமோஷனல் ஆகாமல் சமநிலையைக் கடைப்பிடிக்கணும் என்கிற பயிற்சி. இதெல்லாம் வாழ்க்கைத்திறன் பயிற்சியில் இருக்கு. அதை பள்ளிக்கூடத்திலேயே கற்றுத் தரும்போது பெண்களை சரிசமமாக பார்க்கிறதும், காதல் நிராகரிக்கப்படும்போது அதை பக்குவமாக எடுத்துக்கிறதும், எளிதில் உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறதும் நடக்கும். பிரச்னைகளும் தீரும்...’’ என்கிறார் கீதா நாராயணன்.

பேராச்சி கண்ணன்