சினிமா... சீரியல்... மியூசிக்...கலக்கும் நடிகர் எஸ்எஸ்ஆரின் பேரன் ஆர்யன்



இசை, நடனம், பாட்டு, பரதம், சிலம்பம் எனப் பன்முகக் கலைகளில் கைதேர்ந்தவராக மிளிர்கிறார் ‘மகராசி’ சீரியலின் நாயகன் ஆர்யன். இவர், பழம்பெரும் நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன். சினிமாவிலிருந்து சீரியலுக்குள் வந்திருக்கும் ஆர்யன் முதல் சீரியலிலேயே நல்ல பெயர் பெற்றிருக்கிறார்.
‘‘இயற்பெயர் பங்கஜ் குமார். சினிமாவுக்காக ஆர்யன்னு மாற்றி வச்சுக்கிட்டேன். ஆனாலும், ‘மகராசி’ சீரியல்ல வர்ற புவியரசன் கேரக்டர்தான் மக்கள் மனசுல நிற்குது. எங்க போனாலும் புவினு கூப்பிட்டு என்னை நெகிழ வைக்கிறாங்க. அவங்க செலுத்துற அன்பு, ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது...’’ உற்சாகமாகச் சொல்கிறார் ஆர்யன்.

‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். அப்பா ராஜேந்திரகுமார், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆரின் ரெண்டாவது மகன். அம்மா நிர்மலா. தங்கை துர்கா. சின்ன வயசுலயே பாட்டு, டான்ஸ், ஸ்டன்ட்னு எல்லா வகுப்புகளுக்கும் சென்றிருக்கேன். கலா மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டேன். கர்நாடிக் பாட்டும், பரதநாட்டியமும் பயின்றேன். அப்புறம், சிலம்பம் ராம்போ ராஜ்குமார் மாஸ்டர்கிட்ட படிச்சேன்.

அம்மாதான் என்னையும் தங்கச்சியையும் ஒவ்வொரு இடமா கூப்பிட்டுபோய் இந்தக் கலையெல்லாம் கத்துக்க வச்சாங்க. எங்களுக்காகவே டிரைவிங் கத்துக்கிட்டாங்க. அப்பாவும் நிறைய சப்போர்ட் பண்ணுவார். அவங்க ரெண்டு பேரின் சப்போர்ட்டும் இல்லனா என்னால் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது.

அப்புறம், சின்ன வயசுல இருந்தே சினிமா என் கூட இருந்தது. ஆனா, சினிமாவுக்கு வரணும்னு நினைச்சு இந்தக் கலைகளையெல்லாம் ஆரம்பத்துல கத்துக்கல. ஒரு ஆர்ட்டா நினைச்சே கத்துக்கிட்டேன். அதனாலதான் லயோலாவுல விஸ்காம் படிச்சேன்.

அனிமேஷன், போட்டோஷாப், வீடியோ எடிட்டிங்னு எல்லாமே எனக்குத் தெரியும். எனக்கு எந்த ஜன்னல் திறக்கும்னு தெரியாது. படிச்சு முடிச்சபிறகு ஒரு டெக்னீஷியனாகவோ, ஆக்டராகவோ, இல்லனா ஒரு பாடகராகவோ, டான்ஸராகவோ ஆகலாம்.  

ஆனா, சினிமா சார்ந்து இருக்கணும்னு மட்டும் ஓர் ஆசை இருந்துச்சு. ஒருவேளை சினிமாவுக்குள்ள நேரடியா நுழைய முடியலனாலும் சினிமா தியேட்டர் நாற்பது ஆண்டுகளாக நடத்திட்டு இருந்ததால அந்த பிசினஸ் உள்ளே போக வேண்டிவரும். எப்படி இருந்தாலும் எனக்கு சினிமா தேவைப்படும். அதுக்காக என் திறமையை வளர்த்துக்கிட்டே இருந்தேன்.

கலா மாஸ்டர் ட்ரூப்ல இருக்கும்போது நான் சின்னப் பையன். அப்ப ‘ஒருவன்’னு ஒரு படம் வந்தது. சரத்குமார் சார் நடிச்சது. அந்தப் படத்துல குட்டிப்பசங்க சேர்ந்து ஆடும்போது அந்த குரூப்ல ஆடியிருக்கேன். அப்புறம், ‘முகவரி’ படத்துல ‘ஓ நெஞ்சே...’ பாடல்ல குட்டிப்பசங்க ஆடுவாங்க. அதுலயும் ஆடியிருக்கேன். ஆக்ட்டிங்னு பார்த்தால் சுசி
கணேசன் சார் இயக்கத்துல வந்த ‘விரும்புகிறேன்’தான் முதல் படம். அதுல பிரசாந்த சாரின் கடைசி தம்பியா படம் முழுவதும் வருவேன். அப்ப நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சேன்.

அப்புறம், 2008ல் ‘மதுரை பொண்ணு சென்னை பையன்’ படத்துல ஹீரோவாக பண்ணினேன். அப்புறம், 2009ல் ஒரு புரொஜெக்ட் ஆரம்பிச்சோம். அது தொடங்கல. பிறகு, இசைத்துறைக்குள் வந்துட்டேன். நான் சிங்கர் கிடாரிஸ்ட். அதாவது, பாடிக்கிட்டே கிடார் வாசிப்பேன். நிறைய இசைக்குழுக்கள்ல வாசிச்சிருக்கேன். மாயானு ஒரு ஃபியூஷன் இசைக்குழு வச்சிருந்தோம். அதன்வழியாக, 2010ல் ஐஐடி சாராங்ல நடந்த லைட் மியூசிக்கில் நாங்க வெற்றி பெற்றோம்.

அப்புறம், இசை சார்ந்து பயணிக்க ஆரம்பிச்சேன். 2019ல் ‘கருத்துக்களை பதிவு செய்’னு ஒரு படத்தில நெகட்டிவ் ரோல் வாய்ப்பு வந்தது. சவாலான அந்தக் கேரக்டரை சிறப்பா செய்தேன்...’’ என்றவரிடம் சீரியல் என்ட்ரி எப்படி என்றோம். ‘‘நடிகர் சங்கத்துல விஷால் அண்ணன், கார்த்தி அண்ணனுடன் சேர்ந்து ஆக்ட்டிவ்வா இருந்தேன். நடிகர் சங்க வெப்சைட்டை என் சகோதரர்தான் டிசைன் பண்ணி பராமரிக்கிறார். அந்த வேலை விஷயமாக போயிட்டு வரும்போது ஹேமச்சந்திரன் ‘சிற்றம் தயாரிப்பு’ல இருந்து பேசினார். ‘மகராசி’னு ஒரு புரொஜெக்ட் பண்றோம், பண்றீங்களா’னு கேட்டார்.

அப்ப நான், ‘தொலைக்காட்சி சீரியல்ல ஹீரோவாக பண்ணினதில்ல’னு தயக்கமா சொன்னேன். அவர், ‘இப்ப எல்லாமே மாறிடுச்சு. ஓடிடி பிளாட்ஃபார்ம், வெப்சீரிஸ்னு நிறைய வந்திடுச்சு. முன்னாடி மாதிரி கிடையாது. நீங்க கதை கேட்டுப்பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும்’னு நம்பிக்கையா சொன்னார். கேட்டேன். பிடிச்சது. 2019ல் இருந்து நடிக்கிறேன். கொரோனாவுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச சீரியல். இப்ப 800வது எபிசோடைத் தொட்டிருக்கோம்...’’ என உற்சாகமானவர், தன் தாத்தா எஸ்எஸ்ஆர் பற்றித் தொடர்ந்தார்.

‘‘தாத்தா எஸ்எஸ்ஆர் ரொம்ப ஃப்ரண்டலியானவர். சினிமாவிலும், அரசியலிலும் நிறைய சாதிச்சிருக்கார். அவர் நிறைய கதைகளை அப்பாவிடம் சொல்லும்போது நான் உட்கார்ந்து கேட்டுட்டு இருப்பேன். தாத்தாவை நடிகராகத்தான் பலருக்குத் தெரியும். ஆனா, அவர் சிறந்த பாடகரும்கூட. ‘புதுமைப்பெண்’ படத்துல கே.வி.மகாதேவன் இசையில் அவரே நடிச்சு அவரே பாடியிருக்கார்...’’ என்கிற ஆர்யன், அந்தப் பாடலை நமக்காக பாடிக்காட்டினார். 

‘‘‘செந்தமிழ் நாட்டு கைத்தறி நெசவு சேலைகள், வேட்டிகள் வாங்குவேன்; திராவிட நாட்டினர் சேமம் வேண்டி சிங்கார ஆடைகள் வாங்குவேன்’னு ஒரு பாடல். ரொம்ப அருமையாகப் பாடியிருப்பார். அவரின் தமிழ் உச்சரிப்பு அப்படியிருக்கும். அதேபோல குரலும் கணீர்னு இருக்கும். அந்தக்குரல்தான் அவரை அரசியலில் உயர்த்தியது. எம்எல்ஏ, எம்பியாக அமர வைத்தது.  

தாத்தாவிற்குப் பிறகு அப்பா எம்பியாக 1991ல் இருந்து 1996ம் ஆண்டு வரை இருந்தார். நான் சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா இருக்கும்போது டெலிவிஷன்ல நடிச்சிருக்கேன். என் சித்தப்பா இயக்குநர்தான். நிறைய சீரியல்கள் பண்ணியிருக்கார். அதிலெல்லாம் நடிச்சிருக்கேன். அப்ப தாத்தா, ‘நான் நாடகத்துல இருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவுல இருந்து மறுபடியும் நாடகம் நடிச்சேன். மேடை என்பது ஒன்றுதான். சினிமா ஆடியன்ஸ், சீரியல் ஆடியன்ஸ்னு ஒண்ணு கிடையாது. ரெண்டும் ஒண்ணுதான். உனக்கு எங்க மேடை கிடைக்குதோ அங்க முகத்தை காட்டிட்டு இரு. அது எந்த மேடையாக வேணாலும் இருக்கலாம்’னு ஊக்கப்படுத்தினார்.

அதனால, சீரியலுக்கு வந்திட்டால் சினிமாவுக்குப் போகமுடியாது என்பதெல்லாம் கிடையாது. இப்ப எனக்கு டெலிவிஷன், வெப்சீரிஸ் ஆஃபர்ஸ் வந்திட்டே இருக்கு. ஆனா, என்னால் இங்கிருந்து நகரமுடியாது. ஏன்னா, ‘மகராசி’ சீரியல் ரொம்ப சக்சஸ் ஃபுல்லா சன் டிவியில் போயிட்டு இருக்கு...’’ என்கிற ஆர்யன் ‘மகராசி’யின் ரீச் பற்றி பகிர்ந்தார்.

‘‘நான் சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா இருந்து பிறகு ஹீரோவாகவும் நடிச்சேன். இருந்தும், என் முகம் யாருக்கும் பதிவாகல. ஆனா, ‘மகராசி’ அவ்வளவு ரீச்சாகி என்னை கவனிக்க வச்சிருக்கு. என்னை பார்த்ததுமே புவி சார்... புவி சார்னு கொண்டாடுறாங்க. இதை எதிர்பார்க்கவேயில்ல. இந்த நாடகத்துல நான் மூணு கெட்அப் போட்டிருக்கேன். தாடி, விக்கை வச்சு ஒரு கெட்அப் இருக்கும். அதைக் கிண்டல் பண்ணி நிறைய மீம்ஸ் போட்டாங்க. யூடியூப்ல கூட என் கெட்அப்பை போட்டு கிண்டல் பண்ணினாங்க. இப்படி கிண்டல் பண்ணி கிண்டல் பண்ணியே என் கேரக்டர் வைரலாச்சு.

கொரோனா நேரத்துல மெடிக்கல் ஷாப்பிற்கு கேப், கண்ணாடி, மாஸ்க் எல்லாம் போட்டுட்டு போயிருந்தேன். அங்க மருந்து வாங்கிட்டு இருந்த ஒருத்தர் என்னைப் பார்த்திட்டு, ‘சார் நீங்க ‘மகராசி’ சீரியல்ல வர்ற புவிதானே’னு கேட்டார். ‘ஆமாங்க’னு சொன்னேன். அவர், ‘சார், என்னை யார்னே உங்களுக்குத் தெரியாது. நானே உங்களை அடையாளம் கண்டுபிடிச்சிட்டேன். தாடி வச்சிட்டு வந்தால் உங்க மனைவிக்கு நீங்க யார்னு தெரியாதா’னு கேட்டார்!

அவருக்கு என்ன பதில் சொல்லனு தெரியாமல் சிரிச்சிட்டு வந்தேன். அப்பதான் மக்கள் எப்படி இந்த சீரியலை ரசிக்கிறாங்கனு தெரிஞ்சது. ரொம்ப சந்தோஷமா இருந்தது...’’ என்கிறவருக்கு இசையில் சிறகடிக்க வேண்டும் என்பதே கனவு.

‘‘என் பாடும் திறமையையும், கிடார் திறமையையும் உலகத்துக்கு தெரியப்படுத்தணும்னு ஆசைப்படுறேன். மியூசிக் இண்டஸ்ட்ரியில் ஒரு ரவுண்ட் வரணும்னு நினைக்கிறேன். அதாவது, மியூசிக் டைரக்‌ஷன் பண்ணணும்னு ஆர்வம் இருக்கு. அதுக்கான வொர்க் பண்ணிட்டு இருக்கேன். இப்ப இண்டிபெண்டன்ட் மியூசிக் நிறைய ரீச்சாகிட்டு இருக்கு.  ‘என்ஜாமி’ பாடல் எல்லாம் வந்தது இல்லையா, அதுமாதிரி.

ஒரு வீடியோ பாடல் பண்ணி, அதை யூடியூப் மாதிரி ஆன்லைன் பிளாட்ஃபார்ம்ல ரிலீஸ் செய்வாங்க. அதுக்கு வியூஸ் நிறைய வரும். அதைப்பார்த்திட்டு யார் டைரக்டர் பண்ணினாங்க, யார் மியூசிக் பண்ணினாங்கனு கேட்டு சினிமா வாய்ப்புகள் வரும்.

வெளிநாடுகள்ல ரொம்ப காலமா இருக்குது. அங்க பெரிய பெரிய இசையமைப்பாளர்கள் எல்லாம் இண்டிபெண்ட்ன்ட் மியூசிக்லதான் தொடங்குறாங்க. நம்மூர்ல இப்பதான் அந்தக் கலாசாரம் வளருது. அதனால, சீக்கிரமே இசையில் என் திறமைைய நிரூபிப்பேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் ஆர்யன்.

பர்சனல் பக்கம்...

பிடிச்ச உணவு: பிரியாணி.
பிடிச்ச உடை: கேஷுவல் உடைகள்.
பிடிச்ச நடிகர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பிடிச்ச நடிகை: த்ரிஷா.
பிடிச்ச இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்.
பிடிச்ச விஷயம்: நான் ஃபுட்டீ. நிறைய இடங்களுக்கு தேடித் தேடிப் போய் சாப்பிடுறது ரொம்பப் பிடிக்கும். அப்புறம், டிரைவிங் ரொம்பப் பிடிக்கும். எங்க போனாலும் நானே டிரைவ் பண்ணிட்டு போகணும்னு நினைப்பேன்.
பிடிக்காத விஷயம்: தனிமை பிடிக்காது. எப்பவும் என்னைச் சுத்தி நண்பர்கள், குடும்பத்தினர் இருந்திட்டே இருப்பாங்க.
அடிக்கடி முணுமுணுக்கிற பாடல்...: ‘தென்றல் வந்து என்னைத் தொடும்...’
ஃப்ரீ டைம் இருந்தால்...: கிடார் வாசிப்பேன்.
பாசிட்டிவ்: எதையும் பர்சனலா எடுத்துக்க மாட்டேன். எமோஷனல் ஆகமாட்டேன். பிராடிக்கல்லா யோசிப்பேன். அதுதான் என் பாசிட்டிவிட்டி.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்