பறவையை காப்பாற்றினால் வெள்ளத்திலிருந்து தப்பிக்கலாம்! பள்ளிக்கரணை அதிசயம்



ஒருகாலத்தில் அடையாறு முதல் கோவளம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருந்தது. ஆனால், காலம் செல்லச் செல்ல இந்த சதுப்பு நிலம் சுருங்கிப் போனது. இதோடு சென்னையின் குப்பைத் தொட்டியாகவும் பள்ளிக்கரணை நாற்றமடிக்க ஆரம்பித்தது. பள்ளிக்கரணை பறவைகளுக்கு மட்டுமல்ல, நமக்கும்தான் தேவை என்று வாதிடுகிறார் திருநாரணன். சென்னையில் இயங்கும் ‘தி நேச்சர் டிரஸ்ட்’ என்னும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகி இவர்.

தமிழக அரசு வனத்துறை மூலம் செயல்படுத்தும் பல திட்டங்களில் ஒரு பயணியாக பயணிக்கிறார் திருநாரணன். ‘‘பள்ளிக்கரணை ஒருகாலத்தில் பரந்து விரிந்திருந்தது. உதாரணமாக 1930களில் இந்த சதுப்பு நிலம் சுமார் 6000 ஹெக்டேராக இருந்தது என்பார்கள். ஆனால், வளர்ச்சி, கட்டடங்கள் என்று உருமாறி கடைசியில் 317 ஹெக்டேராக சுருங்கியது.

இதை எல்லாம் வைத்து இனி ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்வது மூடத்தனம். உதாரணமாக தமிழக அரசு, அதன் வனத்துறை எல்லாம் சேர்ந்து சிறுகச் சிறுக இந்த நிலத்தை விரிவாக்கி இந்த நிலங்களை இன்று 700 ஹெக்டேராகக் கொண்டுவந்திருப்பது பெரிய தொண்டு. இந்த வருடம் சிறந்த சதுப்பு நிலங்களில் ஒன்று என்று ஈரானின் ராம்சார் விருதும் கிடைத்திருப்பது இந்த பள்ளிக்கரணையின் சீரமைப்புக்கு கிடைத்த வெற்றிதான்...’’ என்று சொல்லும் திருநாரணன் பள்ளிக்கரணை சிலகாலமாக கண்டுகொள்ளப்படாததற்கான காரணங்களையும் விவரித்தார்.

‘‘பள்ளிக்கரணையின் முக்கியத்துவம் பலபேருக்குத் தெரியவில்லை. இதனால்தான் பல மத்திய அரசு நிறுவனங்கள் இந்த இடத்தில் பல்வேறுவிதமான அரசு நிறுவனங்களைத் திறந்தன. பள்ளிக்கரணை இருக்கும் தென் சென்னைப் பகுதிதான் ஐடியில் வளர்ச்சி பெற்றது. இத்தோடு மக்கள் தொகை வளர்ச்சி, வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் சேர்த்துதான் இந்தப் பிரதேசத்தை சுருங்கச் செய்தது. இதனால்தான் குப்பை போடும் இடமாகவும் மாறியது.

ஆனால், இந்த குப்பைகளை மாற்று வழி மூலம் அப்புறப்படுத்தவும் இந்த அரசு முயன்று வருகிறது...’’ என்று சொல்லும் திருநாரணனிடம் பள்ளிக்கரணையின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கேட்டோம்.‘‘பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒரு கழிமுகம். ‘எஸ்ச்சுவரி’ (Estuary) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது கடலின் உப்பு நீரும், நிலத்தின் நன்னீரும் கலக்கும் இடம் பள்ளிக்கரணை. பள்ளிக்கரணையைச் சுற்றி சுமார் 32 ஏரிகள் இருக்கின்றன. ஏரி நிரம்பிவிட்டால் வீணாகும் நீர் பள்ளிக்கரணைக்குத்தான் வரும்.

ஏனெனில் பள்ளிக்கரணை ஒரு சதுப்பு நிலம். அது எவ்வளவு நீரையும் சேமிக்கக்கூடியது. உதாரணமாக 2015களில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது இப்பகுதி மக்களைக் காப்பாற்றியது இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம்தான். சென்னையின் மற்ற பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டபோது இந்தப் பகுதி காப்பாற்றப்பட்டது.

வரும் நீரை மீண்டும் கடலில் சேர்க்கக்கூடிய திறன் சதுப்பு நிலத்துக்கு இருந்ததால்தான் வெள்ளத்தால் இந்தப் பகுதி மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை...’’ என்று சொல்லும் திருநாரணன், இந்த நீர் மேலாண்மைகளோடு பறவைகளுக்கான சொர்க்கபுரியாகவும் பள்ளிக்கரணை விளங்குவதற்கான காரணங்களை அடுக்கினார்.

‘‘கடல் நீரும், நன்னீரும் கலந்திருப்பதால் இங்கே பூச்சி, புழுக்கள் அதிகம். இதுதான் பறவைகளுக்கான சிறப்பான உணவு. அதனால்தான் பள்ளிக்கரணையைத் தேடி பறவைகள் வருகின்றன.

அதேபோல் பள்ளிக்கரணையின் ஒருபகுதியான பெரிய நன்னீர் தேக்கமான பெரும்பாக்கம் ஏரியையும் அரசு சிறப்பான முறையில் நிர்வகித்து வருகிறது. இதெல்லாம்தான் பறவைகளுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பறவைகள் இங்கே இல்லை என்றால் பூச்சிகளின் தொல்லை இருக்கும்.

2010 முதல் அரசின் வனத்துறையோடு இணைந்த பள்ளிக்கரணை பாதுகாப்பு அமைப்போடு (CAPML) பயணிக்கிறோம். எங்களது முக்கிய பணி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வரும் பறவைகளைக் கண்காணிப்பதும், கணக்கிடுவதும். உதாரணமாக 2020 ஜனவரியில் நாங்கள் எடுத்த ஒரு கணக்கீட்டின்படி இங்கு பறவைகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 41849.

2010 முதல், அதாவது கடந்த 12 வருடங்களாக இங்கே காணக்கிடைக்கும் பறவைகளின் வகைகள் சுமார் 190. இந்த 190ல் 72 வகைகள் வலசைப் பறவைகள். வலசை என்றால் கண்டம்விட்டு கண்டம் தாண்டி இங்கே வரும் பறவைகள். பறவைகளை உள்ளூர் (ரெசிடெண்ட்) வகை, வலசை (மைக்ரேட்டரி) என பிரிக்கலாம். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 4ம் தேதி இங்கே மஞ்சள் வாலாட்டி (Western Yellow Wagtail) எனும் வலசைப் பறவையைக் காணலாம். அதேமாதிரி ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதமும் 28ம் தேதியில் சாம்பல் தலை ஆட்காட்டி (Grey Headed Lapwing) பறவையை இங்கே காணலாம்.

தமிழகத்துக்கு வடமேற்கு மழைக் காலம் தொடங்கும்போதுதான் பொதுவாக இந்தப் பறவைகள் - செப்டம்பர், அக்டோபரில் - வரத் தொடங்கும். இந்த வருடம் தென்மேற்கு மழை ஓரளவு வட மாவட்டமான சென்னை போன்ற இடங்களில் விட்டுவிட்டு பெய்து வருவதால் இந்தப் பறவைகள் ஆகஸ்டில் இருந்தே வரத்தொடங்கிவிட்டன...’’ என்று சொல்லும் திருநாரணன் பள்ளிக்கரணை சீசன் ஆரம்பிக்கும் முன்பே வந்துள்ள மேலும் சில பறவைகள் பற்றிக் கூறினார்.

‘‘பொதுவாக பள்ளிக்கரணைக்கு அக்டோபரில் இருந்துதான் பறவைகள் வரும். முதலில் உள்ளான் வகைப் பறவைகள், பிறகு வாத்துகள், கடைசியில் வல்லூறுகள் என்று வரிசையாக வரும்.

உள்ளான்கள் என்றால் சிட்டுக் குருவிகளைவிட கொஞ்சம் பெரியது என்று வைத்துக்கொள்ளலாம். இத்தோடு ரெசிடெண்ட்(Resident) என்று சொல்லப்படும் உள்ளூர் பறவைகளும் தொடர்ச்சியாக வரத் தொடங்கியுள்ளதால் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது பறவைகள் மேலும் குவியும்.

உள்ளூர் பறவைகள் இங்கேயே முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும். உதாரணம், பெலிகன் எனப்படும் கூழைக்கடா, ஸ்டோர்க் எனப்படும் நாரைகள். ஆனால், வலசைப் பறவைகள் உணவுக்காகவும் இடத்துக்காகவும்தான் இடம்பெயரும். காட்டு வாத்துகளும், பெரிய ராசாளி போன்ற வல்லூறுகளும் பல மைல் தூரத்தில் இருந்து வந்திருக்கின்றன. வாத்து என்றால் வல்லூறுகளுக்கு வேட்டைதான். பள்ளிக்கரணைக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை, வகையினத்தை வைத்து சென்னையின் இயற்கை குறியீட்டை சுலபமாகக் கணக்கிடலாம்.

பறவைகள் கோலாகலமாக இருந்தால் நாமும் பூச்சி, புழுக்கள், வெள்ளம் போன்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆகவே, மறைமுகமாக பறவைகளைக் காப்பாற்ற நாம் செய்யும் முயற்சிகள் நம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கான முயற்சிதான்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் திருநாரணன்.

டி.ரஞ்சித்