92 வருடங்களாக சமையல்...இது நளபாகத்தின் கதை



92 வருடங்களாக சமையல்...  தேவர் மகன், தளபதி என 122 படங்களுக்கு சமையல்...தனுஷ் திருமணத்துக்கு சமையல்... ரூ.90 ஆயிரம் தங்கத் தட்டில் சமையல்...

எளிய மக்களுக்கு சமையல்..! இது நளபாகத்தின் கதை


ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடியவர், நடைபாதை வாசியாக மிகச் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த ஒரு சாமான்யன், பிற்காலத்தில் சென்னையில் பல லட்சம் மக்களுக்கு நளபாகக் கலைஞனாக விருந்து பரிமாறினார் என்பதைக் கேட்கும்போது சினிமாவில் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்கத்தோன்றும்.90 களில் கோலிவுட்டில் நளபாகம் மீனாட்சி என்ற பெயரைத் தெரியாத சினிமா கம்பெனிகளே இல்லை. ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நளபாக உபசரிப்பு மீனாட்சியின் கைப் பக்குவமே.  

நான்கு தலைமுறைகளாக சமையல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் மீனாட்சியின் வாரிசாக இப்போது ஹரீஷ் தன் தந்தையோடு சேர்ந்து பிசினஸை கவனித்து வருகிறார். ‘‘சமையலுக்கும் எங்கள் குடும்பத்துக்குமான பந்தம் 92 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் காலச் சக்கரத்தின் பாகையை 1930களுக்கு திருப்ப வேண்டும்.

எங்களுக்கு பூர்வீகம் கும்பகோணம். கொள்ளுத் தாத்தா எளிமையான ஒரு சமையல்காரராகத்தான் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார். மைசூர்பா, லட்டு, பாதுஷா என்று வழக்கமான ஸ்வீட் வகைகள் மத்தியில் தாத்தா ‘ஐஸ் பன்’ என்ற புதுவகை ஸ்வீட்டை அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த ஸ்வீட் எங்களுடைய சிக்நேச்சர் ஸ்வீட்டாக இருந்ததாம். நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்தபோது நடைபெற்ற கொண்டாட்டங்களுக்கு பல்வேறு சமையல்காரர்களுடன் சேர்ந்து என்னுடைய தாத்தாவும் சமைத்துக் கொடுத்துள்ளாராம். அப்போது லட்சக்கணக்கான மக்களுக்கு இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடும் விதத்தில் விருந்து படைக்கப்பட்டதாம்.

என்னுடைய தாத்தா ராஜா மணியுடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். பொடிக்கடை பிரதர்ஸ் என்று அழைப்பதுண்டு. என்னுடைய அப்பா மீனாட்சிசுந்தரம் 1982ல் சமையல் துறையில் அடியெடுத்து வைத்தார். மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் கிளீனராக வாழ்க்கையைத் தொடங்கியவர் ஒரு கட்டத்தில் தாத்தாவின் சமையல் பிசினஸை கவனிக்க ஆரம்பித்தார்.
பிறகு, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக எடுத்துக்கொண்டு சென்னைக்கு ரூட்டை மாற்றியுள்ளார். சென்னைக்கு வரும்போது அப்பாவுக்கு 18 வயது.

தங்குவதற்கு இடமில்லாமல் நடைபாதையில் படுத்துத் தூங்கியுள்ளார். ஆரம்பத்தில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வேலை செய்தவர் சினிமாவில் சமையலுக்கான தேவை அதிகம் இருப்பதை
அறிந்துகொண்டு கவனத்தை சினிமா பக்கம் திருப்பியுள்ளார். சினிமா யூனியனில் உறுப்பினராகி சினிமா படப்பிடிப்புகளுக்கு சமைக்க ஆரம்பித்துள்ளார்.‘தளபதி’, ‘பாட்ஷா’, ‘தேவர்மகன்’ உட்பட இதுவரை 122 படங்களுக்கு அப்பா சமையல கலைஞராகப் பணியாற்றியுள்ளார். ‘தேவர்மகன்’ படப்பிடிப்பு சமயத்தில்தான் நான் பிறந்ததாகவும் அப்பா சொல்லியுள்ளார்.

கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஏவிஎம், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி உட்பட ஏராளமான பிரபலங்களின் படங்களுக்கு அப்பா சமையல் செய்துள்ளார். இயக்குநர் கே.பாலசந்தர், அப்பாவின் சேவையைப் பாராட்டும் விதத்தில் அப்பா பெயருக்கு முன் ‘நளபாகம்’ என்ற அடைமொழி கொடுத்தார்.90களில் சினிமா படப்பிடிப்புடன் சேர்த்து ‘ஜனனி கேட்டரிங்’ தொடங்கி திருமண நிகழ்ச்சிகளுக்கும் சமைக்க ஆரம்பித்தார். அப்போதும் சினிமா பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்களுக்கு சமைக்க ஆரம்பித்துள்ளார். தனுஷ் சார் திருமணத்துக்கும் அப்பா சமையல் செய்துள்ளார். கமல் சார் இல்ல நிகழ்ச்சிகளுக்கும் அப்பா சமையல் செய்துள்ளார்.

நளபாக ஊழியர்கள் சங்கத்தில் அப்பா செயலாளராகவும், பெப்சியில் இணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். ஒரு கட்டத்தில் வெளியே சொல்ல முடியாத சில காரணங்களால் சினிமாவை விட்டு வெளியே வந்து,  திருமணம், வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் சமைக்க ஆரம்பித்தார்...’’ என்று முன்னோர்களின் வெற்றி வரலாற்றை மூச்சுவிடாமல் சொல்லி முடித்த ஹரீஷ், தண்ணீர் பருகியவாறு மீண்டும் தொடர்ந்தார்.‘‘சமையல் குடும்பம் என்பதால் சின்ன வயதிலேயே அப்பாவுடன் நானும் சமையல் வேலைகளில் ஆர்வமாகப் பங்கு எடுப்பேன். சாப்பாட்டுப் பந்திக்கு சில்வர் டம்ளர் வைத்து தண்ணீர் ஊற்றுவது என்னுடைய வேலையாக இருக்கும்.

எனக்கிருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அப்பா, இந்தத் தொழிலுக்கு வருவதாக இருந்தால் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எச்சில் இலையை எடுப்பதில் ஆரம்பித்து சமையல்கட்டில் உணவு வகைகளைத் தயாரிப்பது வரை கற்றுக்கொடுத்தார். நானும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டதோடு ஹோட்டல் மேனேஜ்மெண்டும் படித்தேன்.

2012ல் முழு அளவில் இந்த தொழிலுக்குள் வந்துவிட்டேன். எங்களுடைய ‘யுஎஸ்பி’ என்பது பத்து சாப்பாடு என்றாலும் முக்கியமான ஆர்டர், 100 சாப்பாடு என்றாலும் முக்கியமான ஆர்டர் என்ற கண்ணோட்டத்தில் இருப்பதுதான். எங்களுடைய அந்த சிந்தனைக்கு பலனாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.சினிமா, திருமணம் என்று சமைத்து வந்த நாங்கள் அடுத்த பரிணாமமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சமைக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் 40 பேருக்கு சமைக்க ஆரம்பித்தோம். பிசினஸ் கொடி கட்டிப் பறக்கும் சமயத்தில் கோவிட் வந்தது.

கோவிட் சமயத்தில் மாநகராட்சி, தொண்டு நிறுவனங்களுக்கு சேவை அடிப்படையில் சமையல் செய்து கொடுத்தோம். அதில் மளிகை, எரிவாயுவென எங்களுடைய பங்களிப்பாகக் கொடுத்தோம். தினமும் 500 பார்சல் செய்து கொடுத்தோம். அப்போது கிட்டத்தட்ட 50,000 பார்சல்கள் சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் கொடுத்தோம்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் ஜப்பான் கம்பெனி, லைகா புரொடக்‌ஷன் சிஸ்டர் நிறுவனங்களான லைகா டெல், லைகா மொபைல் உட்பட நான்கு கம்பெனிகள், சென்னையில் இயங்கும் பிரபல சோப் கம்பெனி உட்பட ஏராளமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை பண்ணுகிறோம். மத்திய அரசு நிறுவனத்துக்கும் உணவு சப்ளை பண்ணுகிறோம்.எங்களுடைய இந்த சமையல் பணியில் மறக்க முடியாத நிகழ்வாக டிரேட் சென்டரில் நடைபெற்ற உலக அக்குபங்க்ச்சர் மருத்துவர்கள் மாநாட்டுக்கு சமைத்ததை சொல்லலாம்.

ஒரு வேளைக்கு 25,000 பேருக்கு சமைக்க வேண்டும். மொத்தம் மூன்று நாளைக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேருக்கு சமைத்தோம். இதில் ஹைலைட்டான விஷயம், பல்வேறு தேசங்களில் இருந்து பிரதிநிதிகள் வந்ததால், இந்தியன், ஆசியன், தாய், இத்தாலி, மெக்சிகன் என பல நாடுகளின் உணவு வகைகளை சமைத்தோம். அந்த சமயத்தில் ஸ்டார் ஹோட்டல்
களில் செஃப்பாகப் பணிபுரியும் என்னுடைய  நண்பர்கள் உதவினார்கள்.

இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தினமும் 2500 பேருக்கு மூன்று வேளை சமைத்துக் கொடுக்கிறோம். அந்த வகையில் எங்கள் கிச்சன் அணையா அடுப்பு என்று சொல்லலாம்.
திருமண நிகழ்ச்சிகளில் ‘மெனு’ அறிவிப்பு உணவுக் கூடத்துக்கு முன் ஒரு பேனரில் வைத்திருப்பார்கள். நாங்கள் அப்படி இல்லாமல் ஒவ்வொரு இலைக்கு பக்கத்திலும் மெனு கார்டு வைப்போம். புது டிஷ் நிறைய தயாரித்துக் கொடுக்கிறோம்.

வெஜ் மாக் மிக்ஸ்னு ஒரு டிஷ். ஈரல் சுவையில் இருக்கும். அதே மாதிரி வெஜ் மட்டன், வெஜ் சிக்கன், வெஜ் கிராப் லாலி பாப் என்று வித்தியாசமான டிஷ்ஷஸ் கொடுக்கிறோம். எல்லாமே சைவ வகைகள். ஸ்வீட் வகைகளில் மைதா, டால்டா என்றில்லாமல் பழங்களை மூலப் பொருளாக வைத்து தயாரிக்கிறோம். கவுனி அரிசி அல்வா எங்களுடைய ஸ்பெஷல் ஸ்வீட். கருப்பட்டி, தேங்காய்ப்பால், வெல்லம் கலந்து தயாரிப்போம். பிரபல ஸ்வீட் கடைகளில் கூட இந்த ஸ்வீட் இருக்குமா என்பது சந்தேகம். இதுல முந்திரி, பாதாம் அரைத்து ஊற்றுவோம்.
ஏன் இந்த ஸ்வீட் கடைகளில் இருக்காது என்றால் இதன் வேலிடிட்டி ஓரிரு நாள் மட்டுமே. விலை அதிகம் என்பதும் ஒரு காரணம். சர்க்கரை நோயால் ஸ்வீட் தவிர்த்தவர்களும் இந்த ஸ்வீட் வகையை ருசிக்கலாம்.

திருமண விருந்தில் முதல் முறையாக பதார்த்த வகைகள் அனைத்தும் பரிமாறுவார்கள். இரண்டாவது முறை அதை சுவைக்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவ்வளவு சுலபமாக இலைக்கு வந்து சேராது. அதற்காக டிராலி சிஸ்டம் கொண்டு வந்தோம். அந்த டிராலியில் அனைத்து உணவும் இருக்கும். விருந்தினர் கேட்கும் டிஷ் பரிமாறுவோம்.திருமண நிகழ்ச்சிகளில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் இருக்கிறது. பிரபல நகைக்கடையின் முதலீட்டாளர் திருமண நிகழ்ச்சிக்கு சமைத்ததை அதில் ஒன்றாகச் சொல்லலாம்.

அந்தத் திருமணத்துக்கு தங்கத் தட்டு பயன்படுத்தினோம். ஒரு தட்டின் விலை ரூ.90 ஆயிரம். அந்தத் தட்டை தமிழ்நாட்டில் இல்லை, ஐதராபாத்தில் இருந்து வரவழைத்தோம். ஒரு இலையின் விலை நான்காயிரம் ரூபாய். தீம் வெட்டிங்காக நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை டைனிங் ஹாலில் முத்து மணி மாலை அணிவித்து உட்கார வைத்தோம்.

காஸ்ட்லி பட்ஜெட் என்றில்லாமல் பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாகவும் பண்ணுகிறோம். கஸ்டமைஸ்டு மெனுவும் தருகிறோம். மெனு ஃபிக்ஸ் பண்ணும்போது வாடிக்கையாளர்கள் எங்களை நோக்கி வராமல் நாங்கள் வாடிக்கையாளர்களைத் தேடிச் சென்று சேவை செய்கிறோம். ஒரு முகூர்த்தத்திற்கு ஒரு ஆர்டர் மட்டும் எடுப்பது எங்கள் வழக்கம். இதை கொள்கையாகவே கடைப்பிடிக்கிறோம். இந்தோனேஷியா, கேரளா, ஆந்திரா என்று வெளியிடங்களுக்கும் சமைத்துள்ளோம்.

என்னுடைய மனைவி சந்தானலட்சுமி. எம்பிஏ பட்டதாரியான அவர் நிர்வாக விஷயத்தில் உதவியாக இருக்கிறார்.இந்தத் தொழிலின் அடுத்த கட்ட நகர்வாக ஒரு உணவகம் திறந்து ஆர்கானிக் உணவு வகைகளை குறைந்த விலையில் கொடுக்க உள்ளோம்...’’ என்கிறார் ஹரீஷ்.

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்