பயோடேட்டா-கால்பந்து



பெயர் : கால்பந்து, இங்கிலாந்தில் ஃபுட்பால், அமெரிக்காவிலும், கனடாவிலும் சாக்கர்... என ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படுகிறது.

பிறந்த இடம் : கால்பந்தின் பிறப்பிடம் சீனா என்று விளையாட்டு ஆய்வாளர்கள் சொல்கின்றனர். கி.மு 476ல் சீனாவில் கால்பந்து விளையாடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அப்போது கியூஜு என்ற பெயரில் கால்பந்து விளையாட்டு அழைக்கப்பட்டிருக்கிறது. கால்பந்து விளையாட்டை சீனா கண்டுபிடித்திருந்தாலும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தர வரிசைப் பட்டியலில் சீனாவின் ஆண்கள் கால்பந்து அணி 78 வது இடத்தில் உள்ளது. ஆரம்ப காலங்களில் வீரர்கள் கைகளில் பந்தை எடுத்துக்கொண்டு போய் கோல் போடுவார்கள்.

உலகக்கோப்பை : சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் சார்பாக நான்கு வருடங்களுக்கு ஒரு முறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும். 1930லிருந்து நடக்கும் இந்த கால்பந்து திருவிழா இரண்டாம் உலகப்போரின் காரணமாக 1942 மற்றும் 1946ல் மட்டும் நடக்கவில்லை. தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் மோதும். இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்ற ஒரே அணி பிரேசில்தான்.

இதுவரை எட்டு நாடுகள் மட்டுமே உலகக்கோப்பையைத் தன்வசமாக்கியிருக்கின்றன. பிரேசில் ஐந்து முறையும்; ஜெர்மனியும், இத்தாலியும் நான்கு முறையும; அர்ஜெண்டினா, ஃபிரான்ஸ், உருகுவே இரண்டு முறையும்; இங்கிலாந்து, ஸ்பெயின் ஒரு முறையும் உலகக்கோப்பையை வென்றிருக்கின்றன. தவிர, உலகில் அதிகமாக பார்க்கப்படும் ஒரு விளையாட்டு நிகழ்வும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிதான். 2018ல் ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை 350 கோடிப்பேர் பார்த்திருக்கின்றனர்.

குறிப்பாக ஃபிரான்ஸுக்கும், குரேஷியாவுக்கும் இடையில் நடந்த இறுதிப்போட்டியை மட்டும் 100 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதில் பிரான்ஸ் வென்றது.
1930 மற்றும் 1950ல் நடந்த உலகக்கோப்பை போட்டிகளைத் தவிர்த்து மற்ற எல்லா உலகக்கோப்பை போட்டிகளிலும் ஏதாவது ஒரு ஐரோப்பிய நாடு இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். அடுத்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் இந்த நவம்பரில் நடைபெறவுள்ளது.

பிரபலம் : உலகளவில் பிரபலமான ஒரே விளையாட்டு கால்பந்துதான். உலகம் முழுவதும் ஆண்கள், பெண்கள் என சுமார் 27 கோடிப்பேர் கால்பந்து விளையாடி வருகின்றனர்.
உலகக்கோப்பை முதல் உள்ளூர் போட்டிகள் வரை எந்த கால்பந்து போட்டியாக இருந்தாலும் நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 400 கோடியைத் தாண்டும்.

முதல் சர்வதேச போட்டி : 30-11-1872ல் ஸ்காட்லாந்தில் உள்ள ஹேமில்டன் கிரசண்ட் எனும் கிரிக்கெட் மைதானத்தில் முதல் சர்வதேச கால்பந்து போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்தும் , ஸ்காட்லாந்தும் மோதின. இந்தப் போட்டியை 4 ஆயிரம் பேர் பார்த்தனர். வெற்றி , தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

நேரம் : ஒரு கால்பந்து போட்டியின் மொத்த நேரம் 90 நிமிடங்கள். 45 நிமிடங்கள் முதல் பகுதியாகவும், மேலும் 45 நிமிடங்கள் அடுத்த பகுதியாகவும் நடக்கிறது. இடையில் 15 நிமிட இடைவேளை உள்ளது.வீரர்களுக்கு அடிபடுதல், இடைவெளி என ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை பிரேக் உள்ளது.

உற்பத்தி : உலகின் சிறந்த கால்பந்துகளை உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது பாகிஸ்தான். 1982லிருந்து உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பயன்படுத்தப்படும் கால்பந்துகள் பாகிஸ்தானின் சயில்கோட் நகரில் உற்பத்தியாகின்றன. இங்கே முக்கியமான போட்டிகளில் பங்குபெறும் பந்துகள் கைகளாலேயே தைக்கப்படுவது சிறப்பு. மட்டுமல்ல, உலகின் 80 சதவீத கால்பந்துகளை உற்பத்தி செய்யும் நாடும் பாகிஸ்தானே.

ஓட்டம் : ஒவ்வொரு கால்பந்து போட்டியின் போதும் கோல் கீப்பரைத் தவிர்த்து, சராசரியாக ஒவ்வொரு வீரரும் 9.5 கிலோமீட்டர் தூரம் ஓடுகின்றனர்.

மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை : போட்டியின்போது விளையாட்டு விதிமுறைகளை மீறினாலோ அல்லது எதிரணி வீரருடன் மோசமான முறையில் நடந்து கொண்டாலோ அல்லது தவறான வார்த்தைகளைப் பிரயோகித்தாலோ நடுவர் அந்த வீரருக்கு மஞ்சள் அட்டையைக் கொடுத்து எச்சரிக்கை விடுப்பார்.அதையும் மீறி  மோசமாக நடந்துகொண்டால் அந்த வீரருக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை கொடுக்கப்படும். ஒரே போட்டியில் இரண்டு மஞ்சள் அட்டைகள் பெற்ற வீரருக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு, மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

கால்பந்து கலவரங்கள் மற்றும் மரணங்கள் : சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியின்போது ரசிகர்களுக்கிடையேயான மோதலில் 187க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விளையாட்டுப் போட்டியின் போது நிகழ்ந்த மோசமான அழிவுகளில் ஒன்றாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. கால்பந்து போட்டிகளில் ரசிகர்களுக்கிடையே கலவரங்கள் வெடிப்பது புதிதல்ல. கால்பந்து ரசிகர்களுக்கிடையேயான மோதல் காவல்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான மோதலாக மாறுவது இதன் இன்னொரு துயரம்.

இந்தோனேஷியாவில் ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான மோதலும், கூட்ட நெரிசலும்தான் அதிக உயிரிழப்புக்குக் காரணம். 1995 முதல் 2018 வரை இந்தோனேஷியாவில் நடந்த கால்பந்து போட்டிகளில் ஏற்பட்ட மோதல்களில் 70 பேர் இறந்திருக்கின்றனர். பதினான்காம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்தில் கிராமங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளின் போது பிரச்னைகள் உருவாகி, சமூகத்தின் அமைதி சீர்குலைந்திருக்கின்றது. அதனால் அப்போது இங்கிலாந்து மன்னராக இருந்த இரண்டாம் எட்வர்டு 1314ம் வருடம் கால்பந்து விளையாட்டுக்குத் தடை விதித்தார்.

பெருவின் தலைநகரான லிமாவில் 1964ம் வருடம் மே 24ம் தேதியன்று ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கு அர்ஜெண்டினாவும், பெருவும் மோதின. இதில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 300 பேர் இறந்தனர். 500க்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர். கால்பந்து வரலாற்றில் மோசமான அழிவாகக் கருதப்படுகிறது இந்நிகழ்வு.  

1924 முதல் 2010 வரை அர்ஜெண்டினா விளையாடிய போட்டிகளின்போது ஏற்பட்ட மோதலில் மட்டும் 245 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பெருவில் நடந்த அழிவு சேர்க்கப்படவில்லை.
ஆகஸ்ட் 16, 1980ல் கொல்கத்தாவைச் சேர்ந்த மோகன்பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகளின் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறையில் 16 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர். கொல்கத்தா காவல்துறையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுபோக போட்டியின்போது ஸ்டேடியம் மற்றும் சுவர் இடிந்து விழுதல், கூட்ட நெரிசலில் ஏராளமானோர் மரணமடைந்துள்ளனர்.

முதல் கிளப் : இங்கிலாந்தில் உள்ள ஷெஃப்பீல்டு ஃபுட்பால் கிளப்தான் உலகின் முதல் ஃபுட்பால் அணியாகும். அக்டோபர் 24, 1857ல் தொடங்கப்பட்ட இந்த கிளப் இப்போதும் போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

மிகப்பெரிய போட்டி : 1999ல் செகண்ட் பாங்காக் லீக் செவன் - ஏ- சைட் காம்படிசன் கோப்பைக்காக 5,098 அணிகள் மோதின. 35 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

த.சக்திவேல்