இயற்கை உணவுகளால் தயாராகும் ஐஸ் கிரீம்!



பண்டிகை நாட்களில் என்ன பலகாரம் செய்யலாம் என்று அம்மாக்களின் தலைமுறை சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த தலைமுறையினரோ என்ன பலகாரம் வாங்கலாம் என்று ஆலோசித்தார்கள். இந்தத் தலைமுறை இவற்றையெல்லாம் கடந்து மாற்றி யோசிக்கிறது. இதற்கு உதாரணம் சென்னையைச் சேர்ந்த முக்தா சாபூ. ஆம். மக்களுக்காகவே இயற்கை உணவுகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை வழங்கி வருகிறார்.

‘‘பண்டிகைனா ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடுவதுதான் வழக்கம். இதுக்காகவே சிறப்பு இனிப்புகளை அழகா கிஃப்ட் பாக்சில் பேக் செஞ்சு எல்லா இனிப்புக் கடைகளிலும் விற்பனை செய்வாங்க.எல்லா முறையும் இனிப்புதான் வழங்கணுமா? கொஞ்சம் மாற்றி ஐஸ்கிரீம் கேக், வாஃபில்ஸ் போன்ற இனிப்புகளையும் வழங்கலாமேனு தோணிச்சு.

என்னைப் பொறுத்தவரை ஐஸ்கிரீமை கொண்டாட்டத்துக்கு மட்டுமில்லாம எல்லா நாட்கள்லயும் சாப்பிடணும்னுதான் இந்த ஐஸ்கிரீம் பார்லரை தொடங்கினேன்...’’ புன்னகைக்கிறார் முக்தா.
இவர் சென்னை ஷெனாய் நகரில் ‘கெல்வின் ஸ்கேல்’ என்ற பெயரில் பிரான்சைசி முறையில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.‘‘நான் எம்சிஏ பட்டதாரி. எனக்கு பலவிதமான உணவுகளை ருசி பார்க்கப் பிடிக்குமே தவிர உணவுத் தொழிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. சொல்லப்போனா நான் உணவு சார்ந்த தொழில் செய்வேன்னு நினைச்சுக் கூட பார்த்ததில்ல. வீட்ல சின்னதா கேக் பேக் மட்டும் செய்வேன்.

இந்த சூழல்ல பட்டப்படிப்பு முடிச்சுட்டு சில காலம் வேலைக்கு போனேன். இடைல எனக்கு திருமணமாச்சு. வீடு, குழந்தைனு கடமை இருந்ததால, வேலையை ராஜினாமா செய்தேன். என் கணவர் கார்டன் பாக்ஸ் பிசினஸ் செய்து வந்ததால, அவருடைய தொழிலுக்கு உதவியா இருந்தேன். என் மகனுக்கு எட்டு வயசாச்சு. தனியா ஒரு தொழில் செய்யலாமேன்னு தோணுச்சு. கணவர்கிட்ட டிஸ்கஸ் செய்தேன். உன்னுடைய பலம் என்னனு யோசி. அதை செய்னு சொன்னார்.

எனக்கு இனிப்பு உணவுகள்னா ரொம்பப் பிடிக்கும். அதனால பேக்கிங் செய்ய ஆரம்பிச்சேன். வீட்ல பேக்கிங் செய்யறதை பார்த்த கணவர் கேக் ஷாப் ஆரம்பிக்கலாமேன்னார்.
ஆனா, எனக்கு அதுல உடன்பாடில்ல. காரணம், சென்னைல எக்கச்சக்கமான கேக் ஷாப்ஸ் இருக்கு. சாதாரண பேக்கரில ஆரம்பிச்சு ஹைஎண்ட் பேக்கரி வரை எல்லாமே இருக்கு. தவிர பேக்கரி ஆரம்பிச்சா முழுநேரமும் கிச்சன்ல இருப்பது மாதிரி தோணும்.

பேசிக்கா எனக்கு கஸ்டமர்ஸோடு பேச பிடிக்கும். அவங்க விருப்பத்தைக் கேட்டு அதுக்கு தகுந்த மாதிரி உணவுகளை வழங்கணும்னு நினைப்பேன்; நினைச்சேன்; நினைக்கறேன். அதனாலயே பேக்கரி தொழில் வேண்டாம்னு முடிவெடுத்தேன்...’’ என்றவர் ஐஸ்கிரீம் பார்லரைத் தேர்வு செய்த காரணம் பற்றி விவரித்தார்.‘‘சென்னைல இருக்கும் ஐஸ்கிரீம் பார்லர்ல கிடைக்கும் ஐஸ்கிரீம், எல்லா கடைகள்லயும் கிடைக்கும். சுவை மட்டுமே மாறும். மத்தபடி சாக்லெட், வெனிலா, ஸ்ட்ராபெரி, பிளாக்கரன்ட்... இப்படி ரகங்கள் மாறாது.

இதையே நாமும் கொடுக்கக் கூடாதுனு தீர்மானிச்சேன். ஆரோக்கியமா, அதே சமயம் இயற்கை சார்ந்ததா இருக்கணும்னு முடிவெடுத்தேன். தவிர சென்னைல இயற்கை சார்ந்த ஐஸ்கிரீம் கடைகளும் இல்ல.கோவிட்டுக்கு அப்புறம் மக்கள்கிட்ட ஆரோக்கியம் - இயற்கை உணவுகள் சார்ந்த விழிப்புணர்வு அதிகரிச்சிருக்கு. சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை, சிறுதானிய உணவுகள்னு கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு.

அதனால இயற்கை முறைல தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் குறித்து ஆய்வு செய்ய ஆரம்பிச்சேன். எந்த ஊருக்குப் போனாலும் அங்கு விற்கப்படும் ஐஸ்கிரீமை சாப்பிடுவேன். எங்கயுமே குறிப்பிட்ட பழங்கள், உணவுப் பொருட்களின் சுவையை நான் உணர்ந்ததில்ல. இந்த நேரத்துல ஒரு நிகழ்ச்சிக்காக பெங்களூரு போனேன்.

அங்கதான் ‘கெல்வின் ஸ்கேல்’ ஐஸ்கிரீம் பார்லரை பார்த்தேன். பெயரே வித்தியாசமா இருந்தது. ஐஸ்கிரீமுக்கும் இந்தப் பெயருக்கும் என்ன பொருத்தம்னு யோசிச்சப்பதான் கெல்வின் ஸ்கேல் என்பது செல்சியஸ், ஃபாரன்ஹீட் போல தட்பவெப்ப நிலையைக் கணக்கிடும் அளவுனு தெரிஞ்சது. சொல்லப்போனா 0 டிகிரி.

வெளிய இயற்கை முறைல தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்னு குறிப்பிட்டிருந்தாங்க. சாப்பிட்டுப் பார்த்தேன். ஒவ்வொரு ஐஸ்கிரீமும் ஒவ்வொரு சுவை. பெயருக்குத் தகுந்த மாதிரி அந்தந்த பழங்களின் சுவை.அந்த செகண்டே இதுதான் நம்ம பிராண்டுனு முடிவு செய்தேன்.

சம்பந்தப்பட்டவங்களை தொடர்பு கொண்டு பேசினேன். ஐடி துறைல வேலை பார்த்த நான்கு நண்பர்கள் இந்த ஐஸ்கிரீம் பார்லரை தொடங்கியிருந்தாங்கனு தெரிஞ்சது. அதுல ஒருத்தர் முழுநேரமா இந்த பிசினஸ்ல இருந்தார். பிரான்சைசி முறைல பார்லர் தொடங்கற விருப்பத்தோடு அவங்க இருந்தது புரிஞ்சுது.

உடனே அவங்க ஐஸ்கிரீம் தயாரிக்கற இடத்துக்கு போனேன். எப்படி தயாரிக்கறாங்கனு இன் அண்ட் அவுட் பார்த்தேன். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமாகவும் தயாரிக்க அவங்க மெனக்கெடுவதை கண்கூடா பார்த்தேன்.

அவங்க முழுக்க முழுக்க இயற்கை முறைலதான் ஐஸ்கிரீம்களை தயாரிக்கறாங்க. எந்தப் பழமா இருந்தாலும் அதிலுள்ள விதைகளை நீக்கி விழுதா அரைச்சு பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் ஃபிரஷ்கிரீம், சர்க்கரை சேர்த்து ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மிக்சர்ல கலக்கறாங்க. எல்லாம் ஒண்ணு சேர்ந்து திக்கான ஐஸ்கிரீமா மாறுது.

ஒவ்வொரு பழத்தையும் தனித்தனியா ஐஸ்கிரீமா தயாரிக்கறாங்க. கொய்யா, அல்போன்சா மாம்பழம், ஸ்ட்ராபெரி, சீதாபழம், இளநீர், காபி, லிச்சி, வாழைப்பழம், பேஷன் பழம், சப்போட்டா, ப்ளூபெரி, கிரான்பெரி, ஆரஞ்ஜ், நவாப்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம்... இப்படி அந்தந்த சீசன்ல கிடைக்கக் கூடிய பழங்களை வைச்சு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுது.

இதுல நாம விரும்பும் டாப்பிங்ஸ் சேர்த்து சாப்பிடலாம். எந்தவிதமான பிரிசர்வேடிவ்வும் சேர்க்கப்படுவதில்லை. அதனால இரண்டு மாதங்கள் வரை நல்லா இருக்கும். அதுக்குப் பிறகு பயன்படுத்தக் கூடாது.

நான் பிரான்சைசி முறைல நடத்தறதால இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பெங்களூர்ல இருந்து அனுப்பிடறாங்க. அதனால ஃப்ரெஷ் ஐஸ்கிரீம்ஸ்தான் விக்கறோம்.
முழுக்க முழுக்க இயற்கையான முறைல தயாரிக்கப்படுவதால் மழை, குளிர்காலங்கள்ல கூட சாப்பிடலாம். எந்த தீங்கும் ஏற்படுத்தாது.

இங்க ஐஸ்கிரீம் மட்டுமில்லாம மில்க்‌ஷேக், திக் மில்க்‌ஷேக், வாஃபில்ஸ், ஐஸ்கிரீம் கேக், சாண்ட்விச் ஐஸ்கிரீம், பாக்கெட் வாஃபில்ஸ்னு எல்லாம் உண்டு. பொதுவா மத்த கடைகள்ல ஐஸ்கிரீம் கேக்குகளை முழுமையாதான் வாங்க முடியும். அதனாலயே பலரும் பிறந்தநாள் மாதிரியான விசேஷங்களுக்கு மட்டுமே ஐஸ்கிரீம் கேக்குகளை வாங்கறாங்க. ஒரேயொரு ஸ்லைஸ் சாப்பிட்டா போதும்னு நாம நினைச்சாலும் கிடைக்காது.

நாங்க சின்னச் சின்ன ஸ்லைசாகவும் கொடுக்கறோம். இரண்டு வாஃபில்ஸ் இடையே விரும்பும் ஃபிளேவர்களை ஒரு ஸ்கூப் வச்சு கொடுப்பதுதான் சாண்ட்விச் ஐஸ்கிரீம். அப்படியே சாப்பிடும் போது சுவையா இருக்கும். அடுத்து மில்க்‌ஷேக்... இது ஐஸ்கிரீமை பாலில் அடிச்சு அதுல ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் சேர்த்து தருவோம். இதுவே திக் மில்க்‌ஷேக்னா பால் சேர்க்காம ஐஸ்கிரீம் மட்டுமே அடித்து தருவோம். இதனை ஸ்பூனால்தான் எடுத்து சாப்பிட முடியும்.

அப்புறம் வாஃபில்... இதுல மாப்பில் பட்டர், ஹனி பட்டர், சிம்பிள் காராமெல், டெய்ரி மில்க், கிட்கேட், பவுண்டி... இப்படி பலவித ஃபிளேவர்கள் உண்டு...’’ என்றவர் அவ்வப்போது ஃபிளேவர்கள் மாறுபடும் என்கிறார்.‘‘எல்லா ஃபிளேவர்களும் எல்லா நேரங்களிலும் இருக்கும்னு சொல்ல முடியாது. ஏன்னா, பழங்கள், கோக்கோ பீன்ஸ், வெனிலா பீன்ஸ் கொண்டுதான் தயாரிக்கப்படுது. அதனால அந்தந்த சீசன்ல என்ன பழங்கள் கிடைக்குதோ அதை வைச்சுதான் அந்த நேரத்துக்கான ஐஸ்கிரீம் ஃப்ளேவர் தயாராகும்.

வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான இயற்கை ஐஸ்கிரீம் ஃபிளேவர்களை கொடுக்கணும் என்பது என் விருப்பம். இப்ப வேகன், சுகர் ஃப்ரீ மற்றும் பாப்சிகல்ஸ் போன்ற ஐஸ்கிரீம்களையும் வழங்க முடிவெடுத்திருக்கோம். அதற்கான ஆய்வு நடக்குது...’’ என்கிறார் முக்தா சாபூ.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்