சிறுகதை-உதர வழிப் பயணம்
‘‘ரொம்ப அழுத்திக் கட்டாத... பூவெல்லாம் அவிஞ்சுரும்...’’ சரவணன் கத்தினான்.சுதாரித்த செல்வி பூ மூட்டையை மெல்லமாக கட்டினாள்.எப்படியாவது கேரள போலீஸ் கண்ணில் மாட்டாமல் பூவை கொண்டுபோய் விற்றுவிட வேண்டும். நாளை மறுநாள் ஓணம். பூ நிறைய விலைக்கு போகும்.மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, கேந்தி, சம்பங்கி போன்ற எல்லாப் பூக்களும் சேர்ந்து கலவையாக ஒரு மணம் வீசத் தொடங்கியது.
 சரவணன் பூ மூட்டைகளை டிவிஎஸ் 50ன் பின்சீட்டில் கட்டிவிட்டான். செல்வி பெட்ரோல் டேங்க் பக்கத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டாள். வண்டி கோம்பை ரெங்கநாதர் கோயில் மலையடிவாரத்தை நோக்கிக் கிளம்பியது.செல்விக்கு இந்த கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சவால் சொல்லி மாளாது. வாழ்வின் வசந்தத்தின் ஒரு நன்னாளில் சரவணனின் விரல் பற்றி நடந்தவளுக்கு இக்காலம் கொடுங்கோடை. பெருஞ்சாபம். வீட்டில் அரிசி தீர்ந்து போனாலும் நம்பிக்கை தீர்ந்து போகாது காலத்தின் பின் சென்று உழைப்பின் துணை கொண்டு ஒவ்வொரு நாளும் வாழ்வை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.
 சரவணன் தேனியில் ஆங்கிலப்பள்ளி ஒன்றில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தான். உலகத்துக்குள் கொரோனா வந்தது. அவனுக்கு வேலையும் போனது.பிறகு பிழைப்புக்கு காய்கறி வியாபாரம், பழ வியாபாரம் எல்லாம் செய்தாகி விட்டது. இருந்தாலும் வறுமையை வெல்ல முடியவில்லை.சரவணன் மெதுவாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். செல்வியின் நினைவு கானா விலக்கு ஆஸ்பத்திரியை நோக்கிச் சென்றது.போனவாரம் தாத்தாவை கானாவிலக்கு பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். ஏதோ வலிப்பு மாதிரி வந்ததாம். சொந்தக்காரர் உதவியுடன் ஆஸ்பத்திரி வந்திருக்கிறார்கள். தாய் தகப்பனில்லாத செல்விக்கு தாத்தாவும் பாட்டியும்தான் உயிர்.
அரசு ஆஸ்பத்திரி. ஆனாலும் வார்டை கண்டுபிடித்து தாத்தாவின் படுக்கையைக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. அம்மாச்சி குத்துக்காலிட்டு பெட்டுக்கு கீழே நாடியில் கைவைத்த மேனிக்கு உட்கார்ந்து கொண்டிருந்தது. செல்விக்கு பிறந்ததிலிருந்து பார்க்கும் இந்த உலகத்தின் கதவைத் திறந்து காட்டியவர்கள் தாத்தாவும் பாட்டியும்தான்.செல்வியைப் பார்த்தவுடன் அம்மாச்சி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. செல்வி அம்மாச்சியைக் கட்டி தோளோடு அணைத்துக்கொண்டாள்.‘‘யப்பேய்...’’ அழுதாள் அம்மாச்சி.
‘‘ச்சீ... வாயை மூடு...’’ அம்மாச்சியை அமட்டிய தாத்தா, ‘‘செலுவீ...’’ என்றழைத்தவாறே எழுந்து உட்கார்ந்தார்.‘‘ஏன் தாத்தா ஆஸ்பத்திரி போறேன்னுட்டு ஒத்த போனப் போட்டு சொல்லக்கூடாதா..?’’‘‘நம்மூரு ஆஸ்பத்திரிக்கு மொதல்ல போனோம். அவுகதே கானாவிலக்குக்கு அனுப்பி விட்டாக. ஒண்ணுமில்லத்தா சரியா போச்சு. இன்னைக்கி இல்ல நாளைக்கி வீட்டுக்கு அனுப்பிருவாக. உங்களுக்கு போன போட்டு உங்க பொழப்பு தலப்பை கெடுக்க வேணாணுட்டுதே சும்மா இருந்துட்டேன்...’’‘‘எனக்கு உங்கள விட்டா யாரு நாதி இருக்கா தாத்தா..?’’ செல்வி உடைந்து அழுததும் தாத்தா ஆடித்தான் போனார். அவருக்கும் நா தழுதழுத்தது.
அம்மாச்சி முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.‘‘நம்ம பிள்ளைங்கபோயி தான இவளுக்கு இப்புடி ஈரக்குலை துடிக்குது...’’ பெருமூச்சு விட்டுக்கொண்டே அம்மாச்சி சத்தமாய் புலம்பினாள்.தாத்தாவையும் பாட்டியையும் பார்த்துக்கொண்டே சரவணன் அசையாது நின்றான்.அம்மாச்சி தூக்குவாளியை எடுத்துக்கொண்டு டீ வாங்க கிளம்பினாள்.
“நீ இரு அம்மாச்சி. நா போயி வாங்கி வாறேன்...’’ சரவணன் டீ வாங்க ஓடினான். தாத்தா செல்வியை உத்துப் பார்த்துக்கொண்டே ‘‘உம் புருசனுக்கு பொழப்பு எப்படி போகுது..?’’ என்றார். ‘‘ம்ம்... ம்ம்... போகுது தாத்தா...’’‘‘தெரியுது... காதுல இருந்த தோட்டை காணோமே. பித்தாளையல்ல போட்டிருக்கா...’’ இது அம்மாச்சி.நல்ல வேளை அம்மாச்சி கை விரலைப் பார்க்கவில்லை. பார்த்தால் சரவணனுடன் ஆற்றில் குளிக்கப்போனபோது தொலைந்துபோன மோதிரத்தைப் பற்றியும் கேட்டிருப்பாள்.
‘‘அவருக்கும் வேலை இல்ல... காய்கறி வியாபாரம், தேங்காய் வியாபாரம்னு என்னத்தையோ பண்றோம். கொஞ்சம் செரமம்தே தாத்தா. அடுத்த மாசத்துல பள்ளிக்கூடம் தெறந்துரும்னு பேசிக்கிறாக... இன்னும் சரியா தெரியல. தெறந்தா சம்பளம் வரும்...’’ ‘‘உன் வீட்டுக்காரன் இப்ப ஒழுங்கா இருக்கானா..?’’‘‘அவரு நல்லாத்தே இருக்காரு... நம்ம கெரகம்தே சரியில்ல...’’‘‘பதினஞ்சுகுழி நிலமிருக்கு... கெட்டி காரை வீடிருக்கு... மாடு கன்டிருக்குன்னு சொல்லி ஒன்னைய பொண்ணு கேட்டு கட்டிட்டு போனானே உன் மாமனாரு... அவென் ஏதும் தரலயா..?’’‘‘இல்ல தாத்தா... கேட்டதுக்கு இப்பயெல்லாம் எதுவும் கேட்டு வந்துராதீக... காசு பணம் சொத்து எதுவும் கெடயாது.
எல்லாம் என்னோட கண்ணுக்கு பெறகு, காலத்துக்குப் பெறகுதேன்னு சொல்லி விட்டாரு... அவரும் மல்லுக்கட்டி பாத்தாரு... கிழவன் அசிங்கசிங்கமா வஞ்சு விரட்டி விட்டாரு...’’பேத்தியின் முகத்தைப் பார்க்கப் பார்க்க கிழவனுக்கு மனசு என்னவோ செய்தது. வேட்டியின் இடுப்பு மடிப்பிலிருந்து ரப்பர் பேண்ட் போட்டு சுருட்டி வைத்திருந்த ரூபாய்க்கட்டை தூக்கிப் போட்டார். ‘‘எம்புட்டு இருக்குன்னு எண்ணிப்பாரு...’’செல்வி எண்ணினாள். ‘‘மூவாயிரம்...’’‘‘இதை இப்பதைக்கு வச்சிக்க. வீட்டுக்குபோனதும் இன்னும் தாறேன்...’’‘‘எதுக்கு தாத்தா?’’ கண்கலங்கினாள் செல்வி.
“இருக்கட்டும் வச்சுக்க...’’‘‘தாத்தா... ஆஸ்பத்திரிலருந்து என்னோட வீட்டுக்கு வந்து கொஞ்ச நா இருந்து போலாம்ல...’’‘‘அதெல்லாம் சரிப்படாது. நாங்க காட்டுக் குடிசைக்கே போறோம்...’’‘‘ஏன் தாத்தா... நா சிரமப்படுவேன்னு பாக்கறேகளா..? நித்தம் கறிக்கஞ்சி இல்லன்னாலும் ரசக்கஞ்சியாவது ஊத்தமாட்டனா நானு..?’’‘‘அங்க வாறத்துக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு... எனக்கு இன்னும் ரத்தம் செத்துப் போகல. இந்தா பாராத்தா... நா முந்தி போனா அம்மாச்சிய கூட்டிட்டு போயி கஞ்சி ஊத்து. அவ முந்தி போனான்னா எனக்குத் தோணுறப்ப உன்ட்ட வாறேன். கொஞ்சம் காசும் நகையும் சேர்த்து வச்சிருக்கேன். அதையெல்லாம் என்னப் போல நம்பகமான ஒருத்தர்கிட்ட குடுத்து வச்சுருக்கேன். அவரு எனக்கு பெறகு உன்கிட்ட தந்திருவாரு...’’செல்வியின் தலையை தாத்தா வருடினார்.
‘‘தாத்தா இன்னொரு விஷயம்...’’‘‘சொல்லுய்யா...’’‘‘நம்ம காட்டுக்கு மேல மலை இருக்குல்ல..? அது வழியா கேரளாவுக்கு பூக்கொண்டு போயி வித்தம்னா நல்ல காசு... ஓணம் சீசன்ல... குமுளி, கம்பம் மெட்டு பாதைலாம் மூடிட்டாக... இப்ப எப்புடியாவது கேரளாவுக்கு உள்ள கொண்டுட்டு போனம்னா நல்ல லாபம் கிடைக்கும். எனக்கும் உங்களுக்கும் பழக்கப்பட்ட மலங்காடுதான...’’ ‘‘நல்ல யோசனைதான்... ஆனா, கவருமெண்டு தடை போட்டுருக்கே...’’‘‘என்னாத்த செய்ய..? நம்ம பஞ்சம் அப்புடி இருக்கே...’’தாத்தா ஒப்புக்கொண்டார். வரும் வியாழக்கிழமை பூ மூட்டை போட்டு கேரளா போக முடிவாயிற்று.அதற்குள் சரவணன் டீ வாங்கி வந்து எல்லோருக்கும் ஆத்திக் கொடுத்தான்.
இப்பொழுது வண்டி டானா தோட்டம் தாண்டியிருந்தது. இன்னும் ஒரு வளைவு திரும்பினால் குடிசை வந்துவிடும்.செல்விக்கு மனசு குதூகலித்தது. இந்த மேற்குத்தொடர்ச்சி மலையைப் பார்க்கும்போதெல்லாம் ஓர் இனம் புரியாத சந்தோசம் வந்து ஒட்டிக் கொள்கிறது.பகலோ இரவோ மலை விழித்துக்கொண்டு தானிருக்கிறது. சிறு வயதில் அது செல்வியைப் பார்த்து ‘‘இந்தா பாரு... நான் எவ்வளவு உயரம் பார்த்தியா..?’’ என்று கேட்பது போல இருக்கும். அதற்கு செல்வி, மலையுச்சியில் ஏறி நின்று ‘‘இப்போ பாரு நீ என்னோட காலடியில் தானே கிடக்கிற...’’ என்று கெக்கலி கொட்டிச் சிரிப்பாள். ம்ம்... அதெல்லாம் பழைய காலம்.
பவுர்ணமி நெருங்கி வருவதால் நிலவொளி அட்டகாசமாக இருந்தது. மலையையும் குடிசையையும் பார்க்க மிக அற்புதமாக இருந்தது.வண்டிச் சத்தம் கேட்டு வெளியில் வந்த தாத்தா இவர்களை உள்ளே அழைத்துக் கொண்டார். ‘‘விடியக்கருக்கல் மூணு மணிக்கெல்லாம் கிளம்பிறணும். தெக்குப்பாதை வேணாம். யானை நிக்குதாம்...’’‘‘சரி தாத்தா... வடக்குப் பாதை கோயில் பாதையில் ஏறிருவோம். கொஞ்சம் கஷ்டம். ஆனா, ஒரு மணி நேரத்துல மேல போயிரலாம்... சரி... எல்லாரும் ஒறங்குங்க...’’தாத்தா தடியையும் டார்ச் லைட்டையும் வைத்துக்கொண்டு குடிசைக்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டார். மற்றவர்கள் உள்ளே படுத்துக் கொண்டார்கள்.
‘‘மாமா...’’
‘‘என்ன செல்வி..?’’ சரவணன் கேட்டான்.‘‘செமைய சுமந்து மலை ஏறிருவயா? எனக்கு செமந்து பழக்கம் இருக்கு. ஒனக்கு இல்லல்ல...’’‘‘அதெல்லாம் செமந்துறலாம்...’’அதிகாலை மூன்று மணிக்கே எழுந்த அம்மாச்சி மூவருக்கும் கடுங்காப்பி போட்டுக் கொடுத்தாள். அது குளிருக்கு இதமாக இருந்தது.
இருப்பதில் கனமான மூட்டையை செல்வி தன் தலையில் வைத்துக்கொண்டாள். லேசானதை சரவணன் தன் தலையில் வைத்துக்கொண்டான். தாத்தா டார்ச்சும் தடியையும் எடுத்துக்கொண்டு முன்னே நடந்து போனார்.
நிலா வெளிச்சத்தில் பாதை ஓரளவு தெரிந்தது. வண்டு பூச்சிகளின் ஒலி இரவின் குரலாய் ஒலித்தது. செல்விக்கு இதெல்லாம் பழக்கம்தான். சரவணனுக்குதான் மனதில் கொஞ்சம் கிலி. பாதை என்பது பாதையாகவே இல்லை. வெறும் கற்களும் பாறைகளுமாகவே இருந்தது. மேலே ஏற ஏற சரவணனுக்கு மூட்டையின் கனம் கழுத்து வலித்தது.
‘‘செல்வி அந்தா ரெட்டைப் பாறை தெரியுதா..?’’‘‘ஆமா தாத்தா... குமரி புள்ளைக கோயில்தான..?’’செல்வி சட்டென சிறுவயதில் அம்மாச்சி சொன்ன கதையில் மூழ்கிப் போனாள். அது ஒரு கோயில். இரண்டு பாறைக்கு நடுவில் ஒரு குகை இருக்கும். பின்னால் ஒரு ஆலமரம் நின்றிருக்கும். சின்ன வயசில் அம்மாச்சியும் செல்வியும் இந்த பாறை மேல் உட்கார்ந்துதான் களாக்காய் தின்பார்கள். அப்போது அம்மாச்சி ரெண்டு குமரிக்கதை சொல்லும்.
ஊரில் இருக்கும் பெண்பிள்ளைகள் சில பேர் காட்டில் சுள்ளி பொறுக்க இந்த மலைப்பக்கம் வந்தார்கள். அதில் அம்மியம்மாளும் பொம்மியம்மாளும் அடக்கம். பொம்மியம்மாள் குயவர் வீட்டுப்பெண். அம்மியம்மாள் வேறு சாதிப் பெண்.
இவ்விருவரும் உயிர்த் தோழிகள். அதில் பொம்மியம்மாள் சூளையில் இடாத பச்சைப் பானையில் கஞ்சி கொண்டு வருவாளாம். மண் கரையாதாம். பானை உடையாதாம்.இப்படியிருக்கையில் பெண்கள் எல்லோரும் காட்டில் விறகு பொறுக்கும் போது ஒரு ஒற்றை யானை பிளிறிக்கொண்டே துரத்த ஆரம்பித்தது. எல்லோரும் ஓடி விடவே அம்மியம்மாளும் பொம்மியம்மாளும் இந்த பாறையிடுக்கில் ஒளிந்து கொண்டனர்.
மறுநாள் இவர்களைத் தேடிப்போய் பார்த்தபோதுஅவர்கள் இருவரும் சிலையாய் நின்றிருந்தனர். கனவில் தோன்றி நாங்களே உங்கள் குல சாமி என்று வாக்கு சொல்லிப் போனார்களாம். அந்தக் கோயில்தான் இது.
நினைவை அசைபோட்டுக்கொண்டே வரும்போது கோயில் வந்துவிட்டது. இருவரும் சுமையை இறக்கி வைத்து கொஞ்சம் இளைப்பாறினர்.
தாத்தா உட்கார்ந்து மூக்குப்பொடியைத் திணித்துக்கொண்டிருந்தார். திடீரென்று தாத்தா செல்வியின் காதில் கிசுகிசுத்தார். ‘‘உனக்கு வாசம் வருதா..?’’ செல்வி ‘‘இல்லையே...’’ என்று பதறினாள்.
‘‘அங்க நிக்குது பாரு பெரிய சீவாத்தி...’’ என்று காட்டிய திசையில் கருங்குன்று ஒன்று மெலிதாக அசைந்து கொண்டிருந்தது.‘‘ஆத்தீ... யானைல நிக்குது...’’ செல்வி அதிர்ந்து போனாள்.‘‘ஓடுங்க... ஓடுங்க... குகைக்குள்ள மறைஞ்சு நிப்போம்... யானை போகந்தண்டியும் யாரும் வெளில வர வேணாம்...’’ தாத்தா கட்டளையிட்டார்.மூன்று பேரும் குகைக்குள் ஒளிந்து கொண்டனர்..சரவணனுக்கு அடிவயிறு சில்லிட்டது. குகைக்குள் கை வைத்த இடமெல்லாம் தவளை தவ்வியது. ‘தவளை இருந்தால் பாம்பு இருக்கும் என்பார்களே...’ சரவணனுக்கு மேலும் பயம் வந்தது.
‘‘இப்படி யானைகிட்டே மாட்டிக்கிட்டமே தாத்தா...’’ செல்வி ஆற்றாமை தாங்காமல் அரற்றினாள். நேரமானால் பூ வாடிவிடும்... வாழ்வின் ஒரு பெரும் சேமிப்பு வீணாய் போய் விடும்...
‘‘எப்பவும் யானை இந்தப் பக்கம் வராது. இதோட பாதைய மறிச்சு கேரளாக்காரன் ரிசார்ட் கட்டிக்கிட்டுருக்கான்... அதான் இது பாதை மாறி வந்து நிக்கிது நம்மள மாதிரி... நேர்வழில போக முடியாம குறுக்கு வழில போறோம்ல... அந்த மாதிரி. தப்பெல்லாம் நம்முதுதான். எப்ப வேணா தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கு...’’கொஞ்ச நேரத்தில் யானை நகரும் சத்தம் கேட்டது. சரவணனுக்கு பிடரி வலி உயிர் போனது.
“சீவாத்தி நகந்துருச்சு... மூட்டைய தூக்குங்கப்பா. விடியமுன்ன போயி சேர வேணாமா..?” செல்விதான் சரவணனுக்கு மூட்டையைத் தூக்கிவிட்டாள். செல்விக்கு தாத்தா மூட்டையைத் தூக்கிவிட்டார். அனைவரும் வெளியே வந்தார்கள்.இப்போது தாத்தா இவர்கள் இருவரையும் முன்னுக்கு அனுப்பி பின்னால் வந்தார்.சரவணனுக்கு எதிர்பாராத விதமாக மூக்கில் அரிப்பு எடுத்தது. அது தொடர் தும்மலாய் வெளிப்பட்டது.
இதைப் பார்த்தவண்ணம் புதரில் ஒளிந்திருந்த யானையை யாரும் கவனிக்கவில்லைஅது துதிக்கையைத் தூக்கிக்கொண்டே பிளிறலுடன் சரவணனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தது. சரவணனும் செல்வியும் மூட்டையைக் கீழே போட்டு விட்டு பக்கவாட்டில் ஓட ஆரம்பித்தனர்.
செல்வி சரவணனை சரியாக ஓடவைத்தாள். நிலைமையைப் புரிந்துகொண்ட கிழவர் கைத்தடியை யானையைப் பார்த்து வீசினார். ‘‘ஆய் ஊய்’’ என்று சத்தமிட்டார்.யானை சட்டென சரவணனை விட்டு கிழவரைத் துரத்த ஆரம்பித்தது.மறுபடியும் வனத்தினுள் சில்வண்டு மௌனம் வந்து சேர்ந்தது. யானை சத்தத்தையும் காணவில்லை. தாத்தா சத்தத்தையும் காணோம்.
சரவணனும் செல்வியும் செய்வதறியாது திகைத்து நின்றனர். செல்வி சுமந்து வந்த மூட்டையை குகைக்குள் வந்து வைத்தாள். மறுபடியும் சரவணனின் மூட்டையையும் கொண்டு வந்து வைத்தாள்.சரவணன் பேய் அறைந்தாற்போல பின்னால் வந்தான். இருவரும் விடியும் வரை குகைக்குள் இருந்தனர்.
யானை தாத்தாவை விரட்டும்போது தாத்தா கத்தியது அப்படியே செல்வியின் காதுக்குள் கேட்டது. யானை ஒருவேளை தாத்தாவைக் கொன்றிருக்குமோ... செல்விக்குள் பயப்பந்து உருண்டது. இருந்தாலும் மனசை கொஞ்சம் தைரியமாக்கிக்கொண்டாள். மணி ஐந்தரை ஆனது. எப்படியும் யானை உள் காட்டுப்பக்கம் நிச்சயம் போயிருக்கும். அச்சத்தை மீறி உடல் அசத்தியதில் சரவணன் தூக்கக் கலக்கத்தில் இருந்தான்.
கொண்டையை முடிந்து கொண்டு அக்கம்மாளையும் பொம்மியம்மாளையும் வேண்டிக்கொண்டு திருநீறு பூசிக்கொண்டாள் செல்வி. ‘‘மாமா விடிஞ்சிருச்சு... வேகமா கிளம்புவோம்...’’சரவணன் புத்துணர்வோடு மூட்டையை தலையில் வைத்துக்கொண்டான். செல்வி வேகமாக எட்டு வைத்து நடந்தாள். சரவணன் பின் தொடர்ந்தான்செல்விக்கு தாத்தாவைப் பற்றிய கவலை மட்டும்தான். மலை உச்சி வந்துவிட்டது. முயல் வளையில் இருந்து வெளியில் வருமே அது போல செல்வியும் சரவணனும் உச்சியில் வெளிப்பட்டனர்.
எதிர் டீக்கடையில் தாத்தா சிரித்துக்கொண்டிருந்தார். செல்விக்கு நெஞ்சிலிருந்து ஒரு பலூன் வெடித்துச் சிதறியது மாதிரி இருந்தது. பளபளவென்று கண்ணில் நீர் திரண்டது. இதற்குள் சேட்டன்களும் சேச்சிகளும் பூ மூட்டையைப் பார்த்து ஓடி வந்தனர். இவ்வளவு களேபரத்துக்கு நடுவே சரவணனின் மனசாட்சி செல்வியிடமிருந்து திருடி விற்ற மோதிரத்தை திரும்பக் கொடுக்க உறுதி மேற்கொண்டது.பூக்களின் கலவையான மணம் அந்தப் பகுதியை நிறைக்கத் தொடங்கியது.
- கிஷ்கிந்தா பாலாஜி
|