சதீஷ் எனக்கு கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடுத்திருக்கார்! ஹீரோ ஹர்பஜன் சிங் கலகல



‘‘வணக்கம்... நல்லா இருக்கீங்களா..? கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்...’’ தமிழில் பேசி அசத்துகிறார் கிரிக்கெட் வீரரும் நடிகருமான பாஜி  ஹர்பஜன்சிங்.தமிழில் டுவீட், தமிழில் கமெண்ட் என தொடர்ந்து அசத்திக் கொண்டிருக்கும் ஹர்பஜன்சிங், ‘டிக்கிலோனா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

இப்போது டைரக்டர் ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா இயக்கத்தில் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். உடன் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் என பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
தமிழும், தமிழ் சார்ந்தவருமாகவே மாறிட்டீங்களே..?

தமிழ் மக்களுடைய அன்பும் அவர்களுடைய ஆதரவும் எனக்கு எப்போதும் ஆச்சரியமாகவே இருக்கும். ஒருத்தர் மேல அன்பு வெச்சிட்டா, ஏன், எதுக்கு, எப்படினு கேள்வியே இல்லாம அன்பு செலுத்துறாங்க.
சென்னை சூப்பர் கிங்ஸ், தல தோனி... என அவங்க காட்டுற அன்பு அவ்ளோ ஆச்சர்யமா இருக்கு. இந்த நேரம்தான் சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாட எனக்கும் சந்தர்ப்பம் கிடைச்சது. தமிழ் மக்கள் கிட்ட நேரடியா என்னுடைய உணர்வை வெளிப்படுத்த நினைச்சேன். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த தமிழ் டுவீட்.
உங்கள் தமிழ் டுவீட் ரகசியம் சொல்லுங்க?

அத்தனைக்கும் காரணம் சின்னாளப்பட்டி இன்ஜினியர் சரவணன்தான். நான் 2001ல் ஹாஃப் ஸ்பின்னராக டெஸ்ட் மேட்ச்சில் விளையாடிய காலம் முதலே சரவணன் எனக்கு மிகப்பெரிய ரசிகன். ஒருமுறை என்னை நேரில் சந்திக்க வந்தவர், தன்னை அறியாமல் அழ ஆரம்பிச்சிட்டார்.
தொடர்ந்து எங்க பந்தம் தமிழ் டுவிட்டர் சார்ந்து வளர ஆரம்பிச்சு அவரையே என்னுடைய அட்மினாகவும் மாத்திட்டேன். தமிழ் சினிமா, தமிழ்நாடு என என்ன நடந்தாலும் அது சார்ந்த முழுக் கதையும் என்கிட்ட சொல்லி அதற்கான டுவீட் இப்படி போட்டால் நல்லா இருக்கும்னு கேட்டு அனுமதி வாங்கித்தான் டுவீட் போடுவார். அந்த தமிழ் டுவீட்ஸ்தான் இன்னைக்கு என்னை தமிழ் சினிமாவில் நடிகனாகற அளவுக்கு மாத்தி இருக்கு.

உங்களுக்கு திருக்குறள் கூட தெரியுமாமே..?
ஆமா. எல்லாத்துக்கும் காரணம் சரவணன்தான். இப்ப ‘பிரண்ட்ஷிப்’ படம் மூலம் நடிகர் சதீஷ் கூட சில தமிழ் வார்த்தைகள் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதில் சில வார்த்தைகள் கெட்ட வார்த்தைகள்! அதெல்லாம் வெளியே சொல்லவே முடியாது. கபிலனுடைய சைக்கிளில் ஒரு ரவுண்டு கேட்டீங்களே... கிடைச்சதா? சீக்கிரம் கிடைக்கும்னு நம்பறேன்! ‘சார்பட்டா பரம்பரை’ படம் பற்றியும் அந்த சைக்கிள் வாத்தியார் டிரெண்டு பத்தியும் என்கிட்ட சொல்லி சரவணன்தான் அந்த  டுவீட் போட்டார். ஒவ்வொரு டுவீட்டுக்கு முன்னாடியும் சரவணன் என்கிட்ட பலமுறை ஆலோசனையும் அனுமதியும் கேட்டுதான் பண்றார்.தமிழ் சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியபோது உங்களுக்கு எப்படி இருந்தது..?   

‘நாம ஏன் இந்தப் படத்துக்கு’ என்கிற கேள்விதான் முதல் முறையா எனக்கு தோணுச்சு. இருந்தாலும் சமீப காலமாக கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தவிர பெரிதாக எந்த போட்டியும் விளையாடுவதில்லை. ஸோ, ஒரு வாய்ப்பு வருது... முயற்சி செய்து பார்ப்போமேனு ஓகே சொன்னேன்.

‘பிரண்ட்ஷிப்’ படம் பற்றியும் உங்கள் கதாபாத்திரம் பற்றியும் சொல்லுங்க...எனக்கு இருபத்தி ஐந்து நாட்கள் படப்பிடிப்பு. காதல் + நட்பு கதைதான் ‘பிரண்ட்ஷிப்’. படத்தில் எனக்கு அர்ஜுன் வில்லன், சதீஷ் நண்பன், எனக்கு ஜோடி லாஸ்லியா. டைரக்டர் ஜான் பால்ராஜ் & ஷாம் சூர்யா முழுக் கதையும் என் கிட்ட சொல்லிதான் ஓகே வாங்கினாங்க.தொடர்ந்து நடிக்க ஏதேனும் ரூல்ஸ் இருக்கிறதா..?

தமிழ் டுவீட்டுகள் கொடுத்த வாய்ப்புதான் இந்த தமிழ்ப் படங்கள். ரூல்ஸ் ஏதும் பெரிதாகக் கிடையாது. இதுவும் ஒரு வாய்ப்பு, தொடர்ந்து முயற்சிப்போம். ஆனா, பங்க்ச்சுவாலிட்டில நான் ரொம்ப கண்டிப்பானவன். நேரத்தை எக்காரணம் கொண்டும் வீணடிக்கக் கூடாது. இதில் நான் கறாரா இருப்பேன். அது மட்டும்தான் ஒரே ரூல்.
தமிழில் பிடித்த நடிகர்கள் யார்?

தலைவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘வாத்தி கம்மிங்’ தளபதி விஜய். தமிழகத்தில் பிடித்த விஷயங்கள் என்னென்ன..?இங்கே இருக்கிற மக்களுடைய அன்பு, கலாசாரம் இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். கூடவே தோசை, இட்லி சாம்பார் என்றால் ஒரு பிடி பிடிப்பேன். தமிழ் சினிமா பற்றி உங்கள் பார்வை?ரியாலிட்டி படங்கள் இங்கேதான் எடுக்கறாங்க. நடிகர்கள் ஒவ்வொருவரும் மெனக்கெட்டு நடிப்பதைப் பார்க்கும் போது வியப்பா இருக்கு.

ஷாலினி நியூட்டன்