நீரின்றி அமையாது உலகு...



5. ஒரு கைபேசி தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகிறது..?

‘‘சார்... டீ குடிச்சுட்டு வந்துடறேன்...’’
‘‘வாங்க சார்... டீ சாப்பிடலாம்...’’
இப்படி பல பேர் சொல்லும் போது நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால், அதேநேரம் -
‘‘சார்...  தண்ணி குடிச்சுட்டு வந்துடறேன்...’’
‘‘வாங்க சார்... தண்ணி சாப்பிடலாம்...’’
- என்று சொல்லும்போது அல்லது யாராவது அழைக்கும்போது ஜெர்க் ஆவோம்.

ஆனால், இதுதான் நிதர்சனமான உண்மை. தண்ணீரை பலவகைகளில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லா உணவுப் பொருள்களிலும் தண்ணீர் மறைந்து இருக்கிறது. இதைத்தான் ‘மறை நீர்’ என்கிறோம்.ஒரு கிலோ அரிசியை அதிகபட்சமாக 55 அல்லது 60 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். இது இயல்பாகவும் இருக்கிறது. அதுவே ஒரு கிலோ அரிசி ரூ.2000 என்றால் தலைசுற்றி மயக்கமடைவோம் இல்லையா? ஆனால், இதுதான் உண்மை. ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய சுமார் 3000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு, ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் என்று கணக்கிட்டால் அதுதான் அரிசியின் உண்மை நிலை.

இப்படி தண்ணீருக்கு மதிப்பைக் கொடுத்து ‘மறை நீர்’ பொருளாதாரத்தைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் - 2008’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.பொதுவாக, இயற்கையில் கிடைக்கும் தண்ணீருக்கு நாம் விலை வைப்பதில்லை.

ஆனால், புட்டிகளில் விற்கும் தண்ணீர் ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் குடிக்கிறோம். வீடுகள், அலுவலகங்களில் 25 லிட்டர் தண்ணீர் குடுவைகளை  30 முதல் 50 ரூபாய் வரை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால், அதே தண்ணீரை உற்பத்திப் பொருட்களுக்கு பயன்படுத்தும்போது அதன் விலையை நாம் தருவதில்லை.

இப்படி ஒரு பொருளின் உற்பத்திக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நீர்தான் மறைநீர். ‘என்னடா இது... உங்களோட வம்பா போச்சு...’ என்று நீங்கள் முணுமுணுக்கலாம். ஆனால், அப்படித்தான் பொருளாதாரத்தை நாம் பார்க்க வேண்டும். ஒரு சிறு குண்டூசி தயாரிப்பதற்கு சில நூறு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதேபோல ஒரு டன் எடை கொண்ட காரை உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ‘‘இதெல்லாம் வேலைக்காகாது, வாய்ப்பே இல்லை ராஜா, வாய்ப்பே இல்லை...’’ என்று நீங்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்தாலும் நிதர்சனம் இதுதான்.

இப்படி மறைந்து இருக்கும் நீரை மனிதத் தேவைகளுக்காக தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வரும்போது அதன் பற்றாக்குறை எதிர்காலத்தில் எதிரொலிக்கும். வருங்காலத் தலைமுறை என்பது யாரோ, எவரோ என்று நீங்கள் சும்மா இருந்துவிட முடியாது. உங்களுடைய மகனும், மகளுடைய குழந்தைகளும் அல்லது அவர்களுடைய குழந்தைகளும்தான் இந்த பூமியில் எதிர்காலத்தில் வாழப் போகிறார்கள். 16 தலைமுறைக்கு சொத்து சேர்க்க நினைக்கும் நாம் இந்த இயற்கை வளத்தைச் சேர்ப்பது குறித்து எப்போதாவது நினைத்திருக்கிறோமா?

உலக நாடுகள் அனைத்தும் இப்போது மறைநீர் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இதை வைத்து ஏற்றுமதி-இறக்குமதி செய்யும் பொருட்கள் குறித்து சிந்திக்க ஆரம்பித்துள்ளன.

இந்தியா உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன், பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. 2019ம் ஆண்டு சுமார் 1.29 இலட்சம் கோடி ரூபாய், உணவு உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மாறிவரும் காலச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கண்மூடித்தனமான ஏற்றுமதி - இறக்குமதிகளை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். அந்நியச் செலாவணி கிடைக்கிறது என்பதற்காகவும், உற்பத்தியைப் பெருக்கி அதிக அளவில் பொருள் ஈட்ட வேண்டும் என்பதற்காகவும் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இங்குள்ள இயற்கையின் நீர்வளத்தை பல மடங்கு சுரண்டுகிறோம் என்பதை உணர வேண்டும்.

2014 - 15ம் ஆண்டுகளில் 37.1 இலட்சம் டன் பாசுமதி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. நிலத்தை செம்மைப்படுத்துவதிலிருந்து, நெல் விளைய நீர்  பாய்ச்சி அறுவடை செய்து, அதன்பின் சுத்தப்படுத்தப்பட்டு, பேக்கிங் செய்யப்படுவது வரை வாய்க்கால், குளத்து நீர் மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்தளவு அரிசிக்காக எத்தனை லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்பட்டுள்ளது தெரியுமா?  சுமார் பத்து ட்ரில்லியன் லிட்டர்! இந்த தண்ணீர் இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட அரிசியின் வழியே வெளிநாடுகளுக்குச் செல்கிறது.

இங்குள்ள நீர் வளம் இப்படி எல்லாம் வெளியேறுவது குறித்து நாம் இனியாவது சிந்திக்க வேண்டும். ஒரு பொருளின் விலை என்பது அதன் உற்பத்திக்கு போடப்படும் அனைத்து உள்ளடக்கப் பொருள்களையும் உள்ளடக்கியது. ஆனால், தண்ணீர் மட்டும் அந்தக் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.நீர் சுழற்சி அளவானது இந்தியாவில் குறைந்துகொண்டே வருகிறது. இது 1962ம் ஆண்டில் 4,083 கியூபிக் மீட்டரிலிருந்து 2002ம் ஆண்டில் 1753 கியூபிக் மீட்டராகக் குறைந்து, 2014ம் ஆண்டில் 1,458 கியூபிக் மீட்டருக்கு வந்திருக்கிறது. இது 2025ம் ஆண்டில் 1200 கியூபிக் மீட்டராகக் குறைந்து 2050ல் 1000 கியூபிக் மீட்டரை விடக் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அவ்வளவு ஏன்... காலையில் எழுந்ததும் சுவைத்துக் குடிக்கும் ஒரு கிளாஸ் காபிக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது தெரியுமா? 132 லிட்டர்! ஒரு கிலோ வாழைப்பழம் உற்பத்தி செய்ய 790 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இவை எல்லாம் சைவ உணவு கணக்குத்தானே என்று நினைக்காதீர்கள். அசைவ உணவுக்கும் தண்ணீர் கணக்கு இருக்கிறது. ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு 5521 லிட்டர் செலவாகிறது. மாட்டுக்கறிக்கு 15415 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை ருசித்து விதவிதமாய் சாப்பிடும் ஒரு கிலோ சிக்கனுக்கு 4323 லிட்டர் தண்ணீர் தேவை.

ஒரு முட்டை உற்பத்தியாக எவ்வளவு தண்ணீர் தேவை தெரியுமா? அதிகமில்லை ஜென்டில்மேன்... வெறும் 196 லிட்டர்தான்உணவு மட்டுமல்ல, உடுத்தும் உடைக்கும் ஏராளமான தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ பருத்தியாடை தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுகிறது.சும்மா, சும்மா நீங்கள் தலை குனிந்து தடவிப் பார்த்துக்கொண்டு இருக்கும் கைப்பேசி தயாரிக்க பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை மறக்காதீர்கள்.இப்படி நம்மைச் சுற்றி நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் பொருட்களில் மறைந்து நிற்கிறது மறைநீர்.

இனிமேல், நீங்கள் இட்லி, தோசை, சமோசா சாப்பிடும் போது இது தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்பட்டது என்ற எண்ணம் மனதில் எழவேண்டும். அதேபோல ஏதேனும் பொருட்களை வாங்கும் போது இது நமக்குத் தேவைதானா என்று இருமுறை யோசிப்பது நல்லது. ஒருவேளை வாங்கியே ஆகவேண்டும் என்றால் இதற்கு எத்தனை லிட்டர் தண்ணீர் செலவானதோ என்று சிந்திக்க வேண்டும்.

ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற  விளம்பரத்திற்கு மயங்கி தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். இதனால் பணத்தை இழப்பதுடன் நமது  சுற்றுச்சூழலை நாம் சுரண்டி எதிர்காலத் தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை உருவாக்குகிறோம் என்பதை நாம் உணரவேண்டும்.இந்த உண்மை நிலையை நீங்கள் படிப்பதுடன் மற்றவர்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

(தொடரும்)

பா.ஸ்ரீகுமார்