மீனவர்களை இருட்டடிப்பு செய்கிறதா சார்பட்டா?



சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், மற்றொரு பக்கம் வட சென்னையின் குத்துச்சண்டை விளையாட்டில் முக்கிய வீரர்களாக இருந்த மீனவர்களைத் தவிர்க்கிறது; ஒரு சார்பான அரசியல் பேசுகிறது; ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப் பிடிக்கிறது போன்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதுகுறித்த உண்மைகளை அறிய பா.வீரமணியை அணுகினோம். வடசென்னையில் குத்துச்சண்டையைத் தோற்றுவித்தவரும், சார்பட்டா பரம்பரையின் முதல் வீரருமான கித்தேரி முத்து முதல் புகழ்பெற்ற வீரர்களின் சண்டைகளை நேரடியாகப் பார்த்தவர் இவர். தமிழ் முதுகலை, பி.லிட் மற்றும் தமிழ் புலவர் பட்டம் பெற்றவர். சார்பட்டா உட்பட பல பரம்பரைகள் குறித்த தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார் வீரமணி.

‘‘இராயபுரம்தான் எனக்கு பூர்வீகம். சிறு வயதில் பாக்சிங் பக்கம் போக நினைத்து பயிற்சி எல்லாம் எடுத்தேன். ஆனால், படிப்பின் மேல் இருந்த ஆர்வம் அதை தடுத்துவிட்டது. இப்போது எனக்கு வயது 75. இங்கே முதல் முறையாக கித்தேரி முத்து சண்டை செய்து சாம்பியன் ஆன போட்டியை நான் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. ஆங்கிலோ - இந்தியரான டெர்ரியை வீழ்த்திதான் கித்தேரி பட்டம் வென்றார் என்று அந்தப் போட்டியைப் பற்றி பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கித்தேரிக்கு முன்பு வரை டெர்ரிதான் சாம்பியன். கித்தேரியுடன் அவர் தோற்பதற்கு முன்பு அருணாச்சலம் என்ற வீரரை தோற்கடித்திருந்தார். அந்தப் போட்டியில் அருணாச்சலம் இறந்துவிட்டதாகக் கூட சொல்வார்கள். இதை மனதில் வைத்து தான் டெர்ரியை வீழ்த்திய கித்தேரியைப் பார்த்து மக்கள் ஆர்ப்பரித்தார்கள்; டெர்ரியை சாத்தும்படி கோஷமிட்டார்கள் என்றும் சொல்வார்கள். என்னுடைய அப்பா கித்தேரியின் பயிற்சிகளில் சண்டை போடுபவராக இருந்தார். ஆனால், அப்பா ஒரு தொழில்முறை பாக்ஸர் இல்லை. பிறகு 1952 முதல் 1955 வரை கித்தேரி பங்குபெற்ற பிரபல சண்டைகள் உட்பட பல போட்டிகளைப் பார்த்தேன்.

அவரது உடல் மிகப் பருமனாக இருக்கும். அத்துடன் அவர் தமிழ் பாக்சிங் செய்தவர். அதாவது வெறும் கையில் முகத்தில் குத்துவது தமிழ்க் குத்து. இப்படி வடசென்னையில் கித்தேரி பங்கேற்ற பல போட்டிகளும் தமிழ்க் குத்து சார்ந்ததே...’’ என்று ஆரம்பித்த வீரமணி, குத்துச்சண்டை தமிழிலிருந்து எப்படி ஆங்கிலத்துக்கு மாறியது என்ற வரலாற்றையும் விவரித்தார்.
‘‘கித்தேரிக்குப் பிறகு சார்பட்டா பரம்பரையில் சுந்தர்ராஜ்தான் பெரிய சாம்பியன். இவர் போட்ட குத்துச்சண்டை கித்தேரியில் இருந்து மாறுபட்டது. அதாவது ஆங்கிலக் குத்து முறை. கீழே தொப்புள் வரை குத்தலாம். அத்துடன் கையில் கிளவுஸ், காலில் ஷூ போன்றவை போட்டியாளரைக் கவர்ச்சிக்குள்ளாக்கியது.

சுந்தர்ராஜ் என்னுடைய உறவினர். அதனால் அவர் பங்கேற்ற அனைத்து போட்டிகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கித்தேரி பருத்த உடல் என்றால் சுந்தர்ராஜின் உடல் குறுகி, கச்சிதமாக இருக்கும். தவிர, எதிராளியை நோக்கிச் சென்று சண்டைபோடும் ஸ்டைலைப் பின்பற்றினார் சுந்தர்ராஜ். இது டிஃபன்ஸ் செய்து எதிராளியை பலவீனமாக்கி சண்டையிடும் முறையில் இருந்து வேறுபட்டது. ஆரம்பத்திலேயே அடிக்கும் முறையைப் பின்பற்றியதால் சுந்தர்ராஜுடன் சண்டைபோடுபவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 1955 முதல் 1963 வரை ஹெவி வெயிட் குத்துச்சண்டையில் முடிசூடா சாம்பியனாக சுந்தர்ராஜ் திகழ்ந்தார். இந்தக் காலங்களில் மீடியம், லைட் வெயிட்டுகளில் சார்பட்டா, இடியப்ப நாயக்கர் பரம்பரைகளில் பலரும் இருந்தார்கள். ஆனால், ஹெவி வெயிட்டில் சுந்தர்ராஜ்தான் ஒரே சாம்பியன்...’’ என்கிற வீரமணி, இரு பரம்பரைகளிலும் இருந்த முக்கிய வீரர்களைப் பற்றியும் பேசினார்.

‘‘கித்தேரியின் காலத்தில் இடியப்ப பரம்பரையில் சூளை பரமசிவ நாடாரும், ஆரிய வீர சீனனும் இருந்தனர். இருவரும் கித்தேரியிடம் தோற்றவர்கள். அதிலேயே சூளை ஜி.மாணிக்கம் இருந்தார். லைட் ஹெவி ஃபைட்டர் இவர். சுந்தர்ராஜ் மாதிரி சண்டையிடுபவர். ஒரு கட்டத்தில் மாணிக்கத்தை தோற்கடித்தார் சார்பட்டாவின் ராமதாஸ். 1963 முதல் 1964 வரை சார்பட்டாவில் அந்தோணி ஜோசப் நல்ல வீரராக இருந்தார். ரேவ் எனப்படும் ஹார்பர் பகுதியைச் சேர்ந்த மாலுமி இவர்.

அந்தோணியின் சண்டை வித்தியாசமாக இருந்தது. இதை ‘டாட்ஜி’ ஸ்டைல் என்பார்கள். அதாவது எதிராளியின் கைக்குள் தனது தலையைக் கொண்டு சென்று எதிராளியையே திணறடிப்பதுதான் இதில் விசேஷம். இந்தக் காலங்களில் பலவகையான எடைகளில் இடியப்ப பரம்பரையில் பல வீரர்கள் இருந்தார்கள். இந்த வீரர்களில் பக்தவச்சலம், ரவனையா, டில்லிபாபு, கே.ஜி. சண்முகம் போன்றவர்கள் பிரபலம். இதில் டில்லிபாபு டெக்னிக்கல் பாக்சராக இருந்தார். சண்முகமும் கடைசி காலத்தில் இடியப்ப பரம்பரையில் பெயர் பெற்றிருந்தார்...’’ என்கிற வீரமணி, ‘சார்பட்டா’ படம் மீனவர்களைத் தவிர்த்ததாக எழும் விமர்சனங்களுக்கு வந்தார்.

‘‘அந்தக் காலத்தில் மீனவர்கள், தலித்துகள் என்று பிரிந்து நின்று சண்டை போட்டது கிடையாது. இரண்டு தரப்பிலும் சிறப்பான வீரர்கள் இருந்தார்கள். உதாரணமாக ரேவ்(ஹார்பர்) பகுதியிலிருந்துதான் அதிக தலித் வீரர்கள் வந்தார்கள். இவர்களில் பலர் ஹார்பர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வேலை செய்தனர். தலித் வீரர்களில் எம்.எம்.முருகேசன், வண்ணையம்பதி முருகேசன், அந்தோணி ஜோசப், பி.கிருஷ்ணன், அவரது தம்பி துரைராஜ், ராமதாஸ், பன்னீர்செல்வம் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இவ்வளவு பேர் சார்பட்டா பரம்பரையில் இருந்ததால், அந்தப் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரை நாயகனாகக் காண்பித்து, அந்த சமூகத்தை உயர்த்திடவேண்டும் என்று ஓர் இயக்குநர் நினைத்திருப்பதை நாம் எப்படி குறை சொல்லமுடியும்? தலித்தான் கதாநாயகன் என்றாலும் ஒரு மீனவரால்தான் அந்த நாயகன் ஜெயிப்பதாகக் காட்டியிருப்பது இரு சமூகத்துக்குமான நல்லுறவையே பிரதிபலிக்கிறது... அத்தோடு இராயபுரம் மீனவ சமூகம் ஒரு சாதி மட்டும் கொண்டது அல்ல. அது தலித்துகளையும் உள்ளடக்கியது ’’ என்ற வீரமணி, ‘சார்பட்டா’ பேசும் அரசியலையும் பகிர்ந்தார்.

‘‘சென்னை குத்துச்சண்டை 1963லேயே இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. இந்தக் கால கட்டத்தில்தான் போட்டிகளைக் காண லட்சக்கணக்கானவர்கள் கூடினார்கள். அப்போது கித்தேரி முத்து, சுந்தர்ராஜ் மற்றும் இடியப்ப பரம்பரையில் இருந்த மீடியம் மற்றும் லைட் வெயிட் வீரர்கள் வெகு பிரபலம். ஆனால், சார்பட்டா பரம்பரையில்தான் வீரர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் மீனவர்கள், தலித்துகள் என்று இரு பிரிவும் சரிசமமாக இருந்தது. மீனவரான சுந்தர்ராஜ் இராயபுரம் பனமரத்தொட்டியைச் சேர்ந்தவர். இந்தப் பகுதியில் இருந்து வந்த வீரர்கள் மிகத் திறமையாக இருந்தார்கள்.

1970க்குப் பிறகு பெரிய போட்டிகள் இல்லை. சிறிய அளவில் ஆங்காங்கே போட்டிகள் நடந்தன. அதுவும் 3000, 4000 பார்வையாளர்களைக் கொண்ட ‘கண்ணப்பர் திடல்’ போன்ற இடங்களில்தான் நடந்தது. திரைப்படத்தில் வரும் எமர்ஜென்சி காலத்தில் குத்துச்சண்டை, இருக்கைகளைத்  தூக்கி எறிவது போன்ற சம்பவங்கள் எல்லாம் குத்துச்சண்டை ஜேஜே என நடந்த எங்கள் காலங்களில் நிகழவில்லை. அதிலும் வீரர்கள் சாராயம் காய்ச்சினார்கள், சில கட்சிகளை பரம்பரைக்காக உயர்த்திப் பேசினார்கள் என்பதை எல்லாம் நாங்கள் பார்த்ததில்லை.

ஒரு சில வீரர்கள் கட்சிகளில்கூட இருந்தார்கள். ஆனால், கட்சியைப் பரம்பரையில் கொண்டு கலக்கவில்லை. உதாரணமாக சுந்தர்ராஜ் திமுகவில் இருந்தார். ஆனால், கட்சியைப் பரம்பரையில் இணைக்கவில்லை. எமர்ஜென்சி மற்றும் அதன் பிறகு நடந்த சிறிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளை, வடசென்னையின் லட்சக்கணக்கானவர்கள் பார்த்து குதூகலித்த குத்துச்சண்டையுடன் இணைத்துப் பேசுவது அநியாயம்...’’ என்று அழுத்தமாக முடித்தார் வீரமணி.

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆர்.சி.எஸ்,ஆ.வின்சென்ட் பால்