ரசாயனம் வேண்டாம்... தாவரங்கள், பாறைக் கற்கள், மண் இவற்றிலிருந்தே கலர்ஸை தயாரிக்கலாம்!
‘‘நாம் பயன்படுத்துற வண்ணங்கள் எல்லாமே செயற்கையானது. வீட்டுல அடிக்கிற பெயிண்ட்ல இருந்து ஓவியங்களுக்குத் தீட்டும் வண்ணங்கள் வரை எல்லாமே ஆய்வகத்துல கெமிக்கல் ரியாக்ஷன் மூலம் உருவாக்கப்படுது. பள்ளிக் குழந்தைங்க பயன்படுத்துற ஸ்கெட்ச், கலர் பென்சில், கிரேயான்ஸ், வாட்டர் கலர் எல்லாமே ரசாயனம் கலந்ததுதான். அதனால, வண்ணங்களை இயற்கை முறையில் உருவாக்கி அதை கேட்குறவங்களுக்கு கொடுக்குறேன். தவிர, இதை எப்படி உருவாக்கலாம்னு வகுப்புகளும் எடுக்குறேன்...’’ மெல்லிய குரலில் யதார்த்தமாக பேசுகிறார் நந்திதா.
அதென்ன இயற்கை வண்ணங்கள்?
‘‘அதாவது தாவரங்கள், பாறைக் கற்கள், மண் இவற்றிலிருந்து வண்ணங்களை பிரித்தெடுக்க முடியும். உதாரணத்திற்கு, அவுரிச் செடியிலிருந்து நீல நிறம் எடுக்கலாம். மஞ்சள், சாமந்திப் பூ ஆகியவற்றிலிருந்து மஞ்சள் நிறம் பண்ணலாம். செம்மண்ல இருந்து சிவப்பு வண்ணத்தை பிரித்தெடுக்கலாம். கடுக்காய்ல இருந்து பச்சை நிறம் கிடைக்கும். புரசு மரத்தின் பூவிலிருந்து ஆரஞ்சு நிறம் எடுக்கலாம். மாவுத்தன்மை அதிகமுள்ள சில கற்கள்ல இருந்து நிறங்கள் கிடைக்கும்.
இப்படி நம்மைச் சுத்தி இருக்கிற இயற்கையான தாவரங்கள், கற்கள், மணல் ஆகியவற்றிலிருந்து வண்ணங்களை எடுக்க முடியும். இவை இயற்கையானது. நம் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாதது. வண்ணங்களும் ரொம்ப அருமையா இருக்கும். அந்தக் காலத்துல நம் முன்னோர்கள் எல்லோரும் இயற்கை வண்ணங்களைத்தான் பயன்படுத்தி ஓவியங்கள் வரைஞ்சாங்க. அஜந்தா, எல்லோரா ஓவியங்களை எடுத்துக்கோங்க. நம்மூர் தஞ்சை பெரிய கோயில்லயும், சித்தன்னவாசல்லயும் வரையப்பட்ட ஓவியங்களைப் பாருங்க. எல்லாமே இயற்கை வண்ணங்களால் தீட்டப்பட்டவைதான். இப்பவும் காலத்தால் அழியாத ஓவியமா ஒளிர்ந்திட்டு இருக்கு...’’ என்கிற நந்திதா, சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருந்தவர். அதிலிருந்து வெளியேறி இயற்கை வண்ணங்களை நோக்கி பயணித்து வருகிறார்.
‘‘நானும் கணவர் ராமநாதனும் பெங்களூர்ல ஐடி வேலையில் இருந்தோம். ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் திருப்பூர். எனக்கு சிறுவயசுல இருந்தே இயற்கையைப் பாதுகாக்கணும்கிற எண்ணம் உண்டு. ஆனா, அதை ஒரு கேரியரா எடுத்திட்டு போகிற அளவுக்கு தெரியல. திருமணமாகி தனியா போனப்ப, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும்போதே எவ்வளவு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துறோம்னு தெரிஞ்சது. அதனால, ரசாயனம் கலக்காத பொருட்களைப் பயன்படுத்தணும்னு நினைச்சேன். நம் வீட்டுல இருந்து வெளியே போகிற நீர் பூமியை பாதிக்கக்கூடாது, மாசு ஏற்படுத்தக்கூடாது. அதனால, நானும் என் கணவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை மேற்கொண்டோம்.அந்நேரம், வேலையில் மனசு ஒட்டல. 2017ல் வேலையை விட்டுட்டேன். வீட்டிலிருந்தே மனசுக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது பண்ணலாம்னு இருந்தேன். கணவரும் உனக்கு பிடிச்ச மாதிரி பண்ணுனு ஊக்கப்படுத்தினார். அவருக்கும் இயற்கையில் அதீத ஆர்வம்.
சரி, இயற்கை சார்ந்து பண்ணுவோம்னு முடிவெடுத்தேன். ஆனா, என்ன பண்ணணும்னு தெரியல. சின்ன வயசுல நிறைய பெயிண்ட்டிங் பண்ணுவேன். அப்புறம், எப்படியோ அதை மறந்துட்டேன. வேலையை விட்டபிறகு வீட்டுல சும்மா இருந்த நேரம் பெயிண்ட் பண்ணினேன். அப்பதான் ஓவியம் வரைய பயன்படுத்துற வண்ணங்கள்ல ரசாயனம் நிறைய இருக்குமேனு ஒரு எண்ணம் வந்துச்சு. உடனே, இயற்கை வண்ணங்களை யாராவது தயாரிக்கிறாங்களா... விற்பனை செய்றாங்களானு தேடிப் பார்த்தேன். எதுவும் கிடைக்கல. அப்பதான் நாமே இயற்கை வண்ணங்களைத் தயாரிக்கலாமேனு தோணுச்சு...’’ என்கிறவர் தொடர்ந்தார்.
‘‘பிறகு, எப்படி தயாரிக்கலாம்னு இணையத்துல தேடி படிச்சேன். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள்ல இன்னமும் இயற்கை வண்ணங்களை தயாரிச்சு பயன்படுத்துறாங்க. அவங்க எழுதின புத்தகங்கள்ல இருந்து பல விஷயங்களை கத்துக்கிட்டேன். சிலர் பிளாக்ல எழுதுவாங்க.
அதிலிருந்து சிலவற்றை தெரிஞ்சுகிட்டேன். அவங்கள சுத்தி இருக்கிற தாவரங்கள்ல இருந்து என்ன இயற்கை வண்ணங்கள் கிடைக்குமோ அதை சொல்லியிருப்பாங்க. நம்மூர்ல செய்முறை இல்ல. ஆனா, எந்தெந்த செடி என்னென்ன வண்ணங்கள் கொடுக்கும்னு புத்தகங்கள் இருக்கு. அதையும் படிச்சேன். அப்புறம், நானே முயற்சி செய்து பார்த்தேன்.
எல்லாவற்றுக்கும் ஒரு செய்முறை இருக்கு. சில வண்ணங்களை தண்ணீர்ல ஊறவச்சு எடுக்கணும். சிலவற்றை சூடுபடுத்தி பிரிக்கணும். சிலதை எடுக்க பத்து நாட்களுக்கு மேல் தண்ணீர்ல ஊறப்போடணும். அப்புறம், தாவரங்கள்ல சில வண்ணங்களை எடுக்க அமிலத்தன்மை, காரத்தன்மை கொண்ட பொருட்களைச் சேர்க்க வேண்டியிருக்கும்.இப்ப சுண்ணாம்பை எடுத்து மஞ்சள்ல சேர்த்தால் சிகப்பு கலர் வந்திடும்.
ஏன்னா, சுண்ணாம்புல காரத்தன்மை இருக்கு. இதேபோல சோடா உப்பிலும், சாம்பலிலும் காரத்தன்மை இருக்கு. வினிகரும், படிகாரமும் அமிலத்தன்மை கொண்டது. இதெல்லாம் போடும்போது ரெண்டு மூணு வண்ணங்கள் கிடைக்கும்.
உதாரணத்திற்கு பட்டர்புரூட் பழத்தின் கொட்டையை தண்ணீரில் போட்டால் லேசான பிங்க் கலர் வரும். அதுல சாம்பலோ, சோடா உப்போ போட்டால் நல்ல சிவப்பு கலர் கிடைக்கும். மஞ்சட்டி வேர்னு இருக்கு. உடல்நலத்திற்கு ரொம்ப நல்லது. அதுல படிகாரம் போட்டு கொதிக்க வச்சால் பளீர் சிவப்பு வரும்.
இந்தப் படிகாரமும், சோடா உப்பும் ஆய்வகத்துல செயற்கையா உருவாக்கப்படுறதுதான். இந்தியாவுல இயற்கையா கிடைக்கிற படிகாரம் இல்ல. அதனால, வண்ணங்களுக்கேற்ப கொஞ்சம் செயற்கை படிகாரத்தைப் பயன்படுத்துறேன். ஆனா, இது கடைகள்ல கிடைக்கிற கலர்ஸைவிட ரொம்ப சிறப்பானது. சூழலுக்கும் கேடு விளைவிக்காதது.
இந்தத் தாவரங்களை எல்லாம் எப்படி கையாளணும்னு நமக்கு போகப் போக புரிபடும். இப்ப நான் என்ன புரிஞ்சுகிட்டேன்னா, ஒரு செடி கீழ விழுந்து, காய்ஞ்சு போனபிறகும் அதன் நிறம் மாறாமல் இருந்தால் அது நல்ல வண்ணங்களைக் கொடுக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். உதாரணத்துக்கு, கடுக்காய் எப்பவோ பறிச்சு கடைகள்ல விற்கிறாங்க. அப்பவும் பச்சையாகவே இருக்கு.
அதனால, அதன் வண்ணம் சிறப்பா இருக்கும். அதேமாதிரி சாமந்திப்பூ. அது எவ்வளவு ஆண்டுகளானாலும் அதன் வண்ணம் மஞ்சளாகவே இருக்கும். அப்ப அதன் வண்ணமும் ரொம்ப நல்லா வரும். இதே ரோஜாப்பூ காய்ஞ்சதும் அதன் வண்ணம் ப்ரவுனா மாறிடும். அப்ப அதிலிருந்து ரொம்ப நாள் இருக்கக்கூடிய நிறங்கள் கிடைக்காது. ஆக, நீண்டநாட்களா ஒரு நிறம் அப்படியே இருக்கணும்னா, அதன் தன்மை மாறாமல் இருக்கிற தாவரங்கள்தான் சிறப்பா இருக்கும். இதைப் பயன்படுத்தி வீட்டுச் சுவர்ல ஓவியங்கள் தீட்டலாம். காகிதத்துல வரையலாம். அப்புறம், இந்த இயற்கை வண்ணங்களை சுண்ணாம்பு கலந்து சுவருக்கு அடிக்கலாம். ஆயில் கலந்து அடிச்சால் அது ஆயில் பெயிண்ட்டிங்கா மாறிடும். அதையே மரப்பசையுடன் கலந்து அடிச்சால் வாட்டர் கலர் பெயிண்ட்டாகும். நாட்டுக் கருவேல மரத்துல இருந்து கோந்து மாதிரி ஒரு பிசின் வரும். அதை தண்ணீர்ல ஊறவச்சு மரப்பசை தயாரிக்கலாம். பிறகு, முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து அடிக்கலாம். இதை டெம்ப்ரானு சொல்வாங்க. மெழுகு கலந்தோம்னா அது கிரேயான்ஸா மாறிடும்.
அதனால, என்ன மீடியம் பயன்படுத்துறோம் என்பதைப் பொறுத்து மாறும். இதையெல்லாம் நான் நடத்துற வொர்க் ஷாப்லயும் சொல்லிக் கொடுக்குறேன்...’’ என்கிற நந்திதா, இப்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் வசித்து வருகிறார். ‘‘இப்ப நானும் கணவரும் இயற்கையுடன் வாழணும்னு சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதிக்கு வந்திட்டோம்.
ஆறு மாசமா இங்கதான் இருக்கோம். சுயசார்பா இருக்கணும்னு நினைக்கிறோம். அவரும் இப்ப வேலையை விட்டுட்டார். இங்க ரெண்டு ஏக்கர்ல இடம் பார்த்திருக்கோம். அதுல காடு மாதிரி உருவாக்கி அங்க மண் வீடு கட்டி வாழணும்னு ஆசை. அப்படியே இயற்கை வண்ணத்திற்கான செடிகள், மரங்கள் நடலாம்னு இருக்கோம். அதிலிருந்து இயற்கை வண்ணங்கள் தயாரிக்கிற ஐடியா! இந்த வண்ணங்களின் விற்பனையை கடந்த ரெண்டு மாசமாதான் செய்திட்டு இருக்கேன். இதுக்கு ‘ஹேப்பி டெரா’னு பெயர் வச்சிருக்கேன். இதுக்கு மகிழ்ச்சியான பூமினு அர்த்தம். முதல்ல எல்லோருமே சொந்தமா தயாரிக்கணும்னுதான் வொர்க் ஷாப் எடுத்தேன். அதுல சிலர் நீங்க சொல்லித் தர்றதைவிட செஞ்சு கொடுத்தால் நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. ஏன்னா, சிலருக்கு செய்வதற்கு ஆர்வம் இருக்காது. சிலருக்கு நேரம் இருக்காது.
அதனால, இப்ப எனக்கு நேரம் இருந்ததால செய்தேன். ஒரு செட்ல ஐந்து வண்ணங்கள் இருக்கும். விலை ஐநூறு ரூபாய். தினமும் பயன்படுத்துறவங்களா இருந்தால் ஓராண்டு வச்சுக்கலாம். பொழுதுபோக்கா வரையிறவங்களுக்கு ஐந்தாண்டுகள் வரை வரும். இப்ப நான் கேட்குறவங்களுக்கு மட்டுமே கொடுக்குறேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல யாருக்கெல்லாம் வேணும்னு கேட்பேன். அவங்களுக்கு தயாரிச்சு இங்குள்ள போஸ்ட்ஆபீஸ்ல இருந்து போஸ்ட் பண்றேன்.
என்னுடைய குறிக்கோள், இயற்கை வண்ணங்கள் எவ்வளவு அழகானதுனு நிறைய பேருக்கு எடுத்துச் சொல்லணும் என்பதுதான். இந்தியாவுல இயற்கை வண்ணங்களை வச்சு வேலை செய்றவங்க ரொம்பக் குறைவு. துணிகளுக்கு போடுகிற வண்ணங்கள்ல கூட ஓரளவு விழிப்புணர்வு இருக்கு. ஆனா, கலர்ஸ்ல இல்ல. நம்ம குழந்தைங்க இந்தக் கலர்ஸை ஆர்வமா வாங்கி அதைத் தொட்டுத் தொட்டே வரையிறாங்க. அதுல விளையாடுறாங்க. அவங்களுக்கு இந்த இயற்கை வண்ணங்களைக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். எல்லோருமே இயற்கை வண்ணங்களுக்கு மாறணும் என்பதே என் விருப்பம்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் நந்திதா.
பேராச்சி கண்ணன்
|